Published:Updated:

க்ளைமாக்ஸில் ஹீரோ இறந்தாலும் இந்தப் படங்கள் எல்லாம் ஹிட்டு பாஸ்..!

க்ளைமாக்ஸில் ஹீரோ இறந்தாலும் இந்தப் படங்கள் எல்லாம் ஹிட்டு பாஸ்..!
க்ளைமாக்ஸில் ஹீரோ இறந்தாலும் இந்தப் படங்கள் எல்லாம் ஹிட்டு பாஸ்..!

மிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த சினிமாவில், கதாநாயகனை திரையில் காணும் ரசிகர்கள், `கதாநாயகன் எதிரிகளை வீழ்த்த வேண்டும், க்ளைமாக்ஸ் பாசிட்டிவ்வாக இருக்க வேண்டும்’ என்றுதான் நினைப்பார்கள். `ஒரு போதும் கதாநாயகன் இறந்துவிட வேண்டும்' என்று நினைக்க மாட்டார்கள். இதற்கு மாறாக வரும் சினிமாக்களை அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டி கதாநாயகன் இறந்து போனாலும் அதைத் தாங்கிக் கொண்டு ரசிகர்கள் ஹிட் ஆக்கிய படங்கள் ஏதாவது இருக்கிறதா என நாம் தேடியபோது நமது கண்களுக்கு அகப்பட்ட படங்களின் தொகுப்புதான் இது. 

ரமணா: 

`கேப்டன் பிரபாகரன்' வரிசையில் விஜயகாந்த்துக்கு மிகப்பெரிய க்ளாஸிக் சினிமாவாக `ரமணா'  படம் அமைந்தது. மேலும், `ரமணா'வை உருவாக்கும்போது மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தில் இருந்தார் விஜயகாந்த். அவர் இறப்பதுபோல ஒரு காட்சியை க்ளைமாக்ஸில் வைக்கவே ஒரு துணிச்சல் வேண்டும். கதையை கேட்ட விஜயகாந்தும் பிரேமலதாவும்  க்ளைமாக்ஸை ஏற்றுக்கொள்ளவில்லையாம். பின்பு, அந்தக் காட்சியின் அவசியத்தை எடுத்துக் கூறி, அவர்களை சம்மதிக்க வைத்து `ரமணா'வை  மாபெரும் வெற்றிப்படமாக்கினார் முருகதாஸ்.

பருத்திவீரன்:

கலப்புத் திருமணம் செய்து கொண்ட பருத்திவீரனின் அம்மா-அப்பாவின் வாழ்க்கையைப்போல் பருத்திவீரனின் வாழ்க்கையிலும் சாதி எப்படிப் பழிவாங்குகிறது என்பதுதான் `பருத்திவீரனின்' கதை. முத்தழகுவின் மானம் காப்பதற்காக, வானளவு ஆசை கொண்ட முத்தழகுவை, கொன்று அவளது தந்தை கழுவத்தேவனின் மீதான பழியைத் தீர்த்ததாகச் சொல்கிறான் பருத்திவீரன். கழுவத்தேவனின் ஆட்கள் தடியால் வீரனை அடித்துக்கொல்கிறார்கள். இப்படிப் பார்வையாளர்களை உறைய வைத்த அந்த க்ளைமாக்ஸ், சொல்ல வரும் `சேதி'  மிகப்பெரியது. `பருத்திவீரன்’ வெளியான சமயத்தில் படத்தைப் பார்த்த கலைஞர், ரஜினி, கமல், பாரதிராஜா என அன்றைய அனைத்து ஆளுமைகளும், ஏன் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இப்படி ஒரு படம் தந்ததற்காக அமீரையும் பருத்திவீரனையும்  தூக்கி வைத்துக் கொண்டாடியது. 

சுப்ரமணியபுரம்:

காதலி துளசி மூலமாகவே அழகர் பிணமாகிறான். அழகரின் நண்பன்  பரமன், இப்போது கனகுவைக் கொலைசெய்கிறான். படத்தின் இறுதியில், காசி நட்புக்கு துரோகம் இழைத்து, பரமனை பலியாக்குகிறான். இப்படி சுப்ரமணியபுரத்தின் க்ளைமாக்ஸ் காட்சி, தமிழ் சினிமா அதுவரை பார்க்காத பதறவைக்கிற பயங்கரமாக இருந்தது. எண்பதுகளில் மதுரையையும் சித்தன் சவுண்ட் சர்வீஸையும் வேலை வெட்டி இல்லாமல் சுற்றித்திரியும்   இளைஞர்களின் வாழ்க்கையை  இயல்பு மீறாமல் `சுப்ரமணியபுரத்தில்' பதிவு செய்திருப்பார் இயக்குநர் சசிக்குமார். 

நாயகன்:

`நீங்க நல்லவரா, கெட்டவரா...’ என்ற கேள்வியை கிண்டலாக நிச்சயம் எல்லோருமே கடந்திருப்போம். `நாயகன்' படத்திலும் வேலுநாயக்கரை இந்தக் கேள்வி துரத்திக் கொண்டேயிருக்கும். மும்பையில் வாழ்ந்த வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வேலு நாயக்கரின் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்டது. தனது அப்பாவைக் கொன்ற வேலு நாயக்கரை நீதிமன்ற வளாகத்திலேயை வைத்துச் சுட்டு விடுகிறான் ஒருவன். தன், மகள் மற்றும் பேரக்குழந்தையின் கண் முன்னே இறந்து விடுகிறார் வேலு நாயக்கர். 1987 ல்  மணிரத்னம் இயக்கத்தில், பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் வெளியானது `நாயகன்’ திரைப்படம். வசனங்களை எழுத்தாளர் பாலகுமாரன் எழுதினார். டைம் இதழ் வெளிட்ட சிறந்த 100 படங்கள் வரிசையில் நாயகனும் ஒன்று.

நந்தா:

அம்மா தனக்கு ஊட்டுவது விஷம் என்று தெரிந்திருந்தும்கூட, பல வருடங்கள் கழித்து அம்மாவின் கையில் சாப்பிடுவது பெரும்பாக்கியம் எனக் கருதி அதை மறுக்காமல் உண்டு இறந்து போகிறான் `நந்தா’. முதல் படத்தைப் போலவே இரண்டாவது படத்திலும் பார்வையாளனை உறைய வைக்கும் வகையில் க்ளைமாக்ஸ்ஸை உருவாக்கியிருந்தார் இயக்குநர் பாலா.

திருட்டுப்பயலே:

`ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையில் திருடன்தானடா!’ என்பதுதான் ஒன் லைன். மேலோட்டமாகப் பார்த்தால் உபதேசம் செய்யும் திரைப்படம் போல தோன்றும். ஆனால், அதையே ஜாலியான கலர்ஃபுல் படமாகத் தந்தார் இயக்குநர் சுசி கணேசன். தனது குடும்ப ரகசியங்களைத் தெரிந்துகொண்டதற்காக தொழிலதிபர் சிவராஜ் ஆள் வைத்து மாணிக்கத்தைக் கொலை செய்து விட, தனக்காகக் காத்திருக்கும் காதலியைக் கைவிட்டபடியே இறந்து விடுகிறான் மாணிக்கம். இப்படி, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உருவாகிற திருட்டுத்தனங்களைத் தோலுரித்துக் காட்டும் அழுத்தமான கதைக் களத்தை த்ரில்லர் பாணியில் படு சுவாரஸ்யமாகச் சொல்லியது இந்த `திருட்டுப்பயலே'. 

பாரதி கண்ணம்மா:

தமிழ் சினிமாவில் சாதி பெருமைகளைப் பேசிய படங்கள், நூற்றுக்கணக்காக இருக்கின்றன. ஆனால், அதே தமிழ் சினிமாவில் சாதி மறுப்பை  வலிமையாக, நேரடியாகக்  காட்சிப்படுத்திய படங்கள் மிக மிக சொற்பம்தான். அப்படித் தென்தமிழகத்தில் காலந்தொட்டு இருக்கும் சாதிவெறி குறித்து பேசிய திரைப்படம்தான் `பாரதி கண்ணம்மா'. தனது காதலி கண்ணம்மாவின் உடல் இடுகாட்டில் எரிந்து கொண்டிருக்கிற நேரத்தில், அவள் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தில் அந்த நெருப்பில் பாய்ந்து சாம்பலாகி போகிறான் பாரதி. தன்னுடைய முதல் படமான `பாரதி கண்ணம்மா' என்கிற  காதல்கதையில் தன்னால் முடிந்தளவு சாதிவெறி குறித்தும் பதிவு செய்தார் இயக்குநர் சேரன். 

டிமான்டி காலனி:

முக்கால்வாசி படம், ஓர் அறைக்குள் நடக்கிறது. படத்தில் கதாநாயகி இல்லை; ``டேய்ய்ய்ய்... டூய்ய்ய்’ என்னும் வெற்று அலறல்கள் இல்லை; பயத்துக்கு பதில் சிரிப்பு வரவைக்கும் அகோர கிராபிக்ஸ் முகங்கள் இல்லை. ஆனாலும், திடுக் திடுக்கெனப் பார்வையாளனை தூக்கிப்போடும் ஆச்சர்யமான சினிமா இந்த `டிமான்டி காலனி'. டிமான்டி பேயிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் மாடியிலிருந்து கீழே குதிக்கும்பொழுது ஆணியில் மாட்டி இறந்துவிடுகிறார் சீனி. `பாழடைந்த பங்களாவுக்குள் புகுந்தால் பேய் அடிக்கும்’ என்ற ஆதிகாலத்துக் கதைதான். ஆனால், அதை ஒற்றை அறைக்குள்ளேயே வைத்து திகிலோடு சொன்னது மூலம், அறிமுகப் படத்திலேயே பல்வேறு தரப்பினரையும் கவர்ந்தார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

பிதாமகன்:

தனது முதலாவது மற்றும் இரண்டாவது பட கதாநாயகர்களான விக்ரம் மற்றும் சூர்யாவோடு மூன்றாவது படமான பிதாமகனில் இணைந்தார் இயக்குநர் பாலா. கோமதி கதாபாத்திரத்துக்கு முதலில் சிம்ரனைத்தான் அணுகினார் பாலா. சிம்ரனும் சம்மதிக்க அழைப்பிதழில் பெயர் போட்டு அனைத்தும் தயார் நிலையில் இருக்க, கடைசி நேரத்தில் திருமண வேலைகள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறி படத்திலிருந்து வெளியேறினார் சிம்ரன். ஆனால், அதற்கு மாற்றாக 3 நாள்கள் கால்ஷீட் தந்து சிறப்புத் தோற்றத்தில் வந்தார் சிம்ரன். தியேட்டரில் படம் பார்த்துவிட்டு திரும்பி வரும்பொழுது மகாதேவனால் குத்துப்பட்டு இறக்கிறான் சக்தி. சக்தியின் இறப்பைத் தாங்க முடியாமல் மகாதேவனை படுகோரமாகக் கொலை செய்கிறான் சித்தன். மயானத்திலே பிறந்து அங்கேயே வளரும் ஒரு விநோத மனிதனின் கண்ணீர்துளியாக பிதாமகனை படைத்தார் இயக்குநர் பாலா.

விசாரணை:

``இத்திரைப்படத்தில் வரும் சம்பவங்களும் காட்சிகளும் பொதுவான நிலைமை சார்ந்த புனைவுகளே தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல" என்று ஆரம்பிக்கும் டைட்டில் கார்டில் இருந்து அதிகாரத்தின் கோரக்கரங்களில் யார் வேண்டுமானாலும் சிக்கலாம். இதில் அப்பாவி, போலீஸ் என்ற பாகுபாடு கிடையாது என்ற கசப்பான உண்மையைக் கொண்டு படத்தை முடிப்பது வரை உண்மையை எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் `விசாரணையாக' படமாக்கியிருப்பார் இயக்குநர் வெற்றிமாறன். 

ஆந்திர போலீஸாரால் வேட்டையாடும் பல மனிதர்களில் ஒருவராகப் படத்தின் இறுதியில் இறந்து விடுகிறார் பாண்டி. அதுவரையில் நாம் அனைவருமே காவல்துறையின் விசாரணை பற்றி கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால், அந்த விசாரணைக்குப் பின்னர் எந்தளவுக்கு முகம் தெரியாத அரசியலும், அதிகாரமும் மறைந்து இருக்கிறது என்பதை `விசாரணை’ படத்தின் மூலம் துல்லியமாக வெளிச்சம் போட்டுக் காட்டினார் இயக்குநர் வெற்றிமாறன்.

மேற்குறிப்பிட்ட படங்கள் மட்டுமல்லாது, `காதல் கொண்டேன்’, `குருதிப்புனல்’, `ராவணன்’, `மைனா’, `முதல் மரியாதை’, `வைதேகி காத்திருந்தாள்’, `வாழ்வே மாயம்’, `வரலாறு’, `ஆறிலிருந்து அறுபது வரை’, `குணா’, `இரயில் பயணங்களில்...’ எனப் பல திரைப்படங்களில் கதாநாயகன் இறுதியில் இறந்து போனாலும் படம் மிகப்பெரிய ஹிட் அடித்திருக்கிறது. இதுபோல உங்களுக்குத் தெரிந்த படங்களை கமென்ட் செய்யுங்களேன்.