Published:Updated:

"வெள்ளரிக்கு காவல் இருந்தப்போ, கதை சொன்னார் மாரி செல்வராஜ்!" - 'பரியன் அப்பா' தங்கராஜ்

சனா

சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள `பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்திருக்கும் தங்கராஜ், படம் குறித்தும், தன் சினிமா பயணம் குறித்தும் பேசியிருக்கிறார்.

"வெள்ளரிக்கு காவல் இருந்தப்போ, கதை சொன்னார் மாரி செல்வராஜ்!" -  'பரியன் அப்பா' தங்கராஜ்
"வெள்ளரிக்கு காவல் இருந்தப்போ, கதை சொன்னார் மாரி செல்வராஜ்!" - 'பரியன் அப்பா' தங்கராஜ்

மீபத்தில் வெளியான படம், `பரியேறும் பெருமாள்'. திருநெல்வேலி மாவட்டத்தின் புளியங்குளம் மக்களின் வாழ்வியலைச் சொன்ன இந்தப் படம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்க, இயக்குநர் ராமின் உதவி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமான படம். புளியங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார சமூகத்தின் வாழ்வியலை திரையில் அனைவரும் ரசிக்கும்படி காட்டியிருக்கும் மாரிக்குப் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். படத்தின் நன்றி அறிவிப்பு விழா நடந்தபோது, அந்த நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்தவர், பரியனின் தந்தையாக நடித்த, தங்கராஜ். இவரது காலில் நடிகர் மாரிமுத்து விழா மேடையிலேயே விழுந்து வணங்கினார்.  

நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போதும், ``படத்தில் நிர்வாணமாக நடித்த தங்கராஜ் ஐயாவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனச் சொல்லி வெகுவாகப் புகழ்ந்து பேசினார். எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய தங்கராஜிடம் பேசினோம்.  

``என் சொந்த ஊர் திருநெல்வேலி பக்கத்துல வண்ணாரப்பேட்டை. பெரிய குடும்பம். அப்பா மிலிட்டரியில இருந்தார். ரொம்ப கண்டிப்பானவர். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுகூட, சொந்த ஊரில் பஸ் டிரைவராக வேலை பார்த்தார். என்னை நல்லாப் படிக்க வெச்சார். எனக்குத்தான் படிப்பு ஏறலை. 7வது படிக்கும்போதே படிப்பைப் பாதியில விட்டுட்டேன். அப்பா, வொர்க் ஷாப் வெச்சுப் பொழச்சுக்கோனும் சொன்னார். ஆனா, என் அறிவுக்கு அதுவும் ஏறலை. அதையும் பாதியில விட்டுட்டேன். விவசாயக் கூலி வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்துல ஒருத்தர், ``குரூப் டான்ஸ் ஆடுறதுக்கு வர்றீயானு கேட்டார். அவரே எனக்கு சொல்லியும் கொடுத்தார். ஆனா, கொஞ்சநாள்ல அவர் அதைப் பாதியில விட்டுட்டுப் போயிட்டார். அப்புறம், நானே ஒவ்வொரு ஆளா தேடிப்போய் டான்ஸ் கத்துக்கிட்டேன். கூடவே வசனம் பேசவும் கத்துக்கிட்டு, நாடகமும் போட்டேன்.  

நான் ஆடாத ஊரே கிடையாது. எல்லா ஊர் திருவிழாவுலேயும் ஆடியிருக்கேன். என் கால் படாத ஊரே இல்லை. என் உடம்பைப் பார்த்தா ரொம்ப எளிமையா, எடை குறைவா இருக்கும். ஆனா, மனசளவுல நான் ரொம்ப பலசாலி. நானொரு ஆணா இருந்தாலும், பெண் வேடம் போட்டுதான் டான்ஸ் ஆடுவேன். பெண் போலத்தான் வசனமும் பேசுவேன். என் குரல் இயற்கையாவே அப்படிதான்.

பெண் வேடமிட்டு டான்ஸ் ஆடும்போது சுத்தியிருக்கிற மக்கள் என்னைக் கேலி பண்ணி சிரிப்பாங்க. அதுக்காக நான் கவலைப்பட்டது கிடையாது. ஏன்னா, என்னோட வேலையே அதுதானே... அதுல என்ன வருத்தம்னு விட்ருவேன். எனக்கு நாடகம் போடுறது பிடிக்கும். ஆனா, சினிமா பற்றிய அறிவு கிடையாது. படங்களும் அதிகமா பார்த்தது கிடையாது. அப்படி இருந்த சூழல்லதான், இயக்குநர் மாரி செல்வராஜ் `பரியேறும் பெருமாள்' படத்துக்காகப் பெண் வேடமிடும் ஒருவரைத் தேடிக் கொண்டிருந்திருக்கிறார். என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு, வந்து பார்த்தார்.  

அவர் என்னை வந்து பார்த்த நேரம் நடுஜாமம். வெள்ளரிக்காய் தோட்டத்தில் காவல்காரனா கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தேன். இவங்க வந்து எழுப்பியதும், வெள்ளரிக்காய் திருட வந்துட்டாங்கனு பதறியடிச்சு எந்திருச்சேன். மாரி தம்பி அவரை அறிமுகப்படுத்திக்கிட்டு ஒப்பாரி பாட்டு ஒண்ணு பாடச் சொன்னார். நான் தலையை விரிச்சுப்போட்டு, அரைமணி நேரம் பாடினேன். `நீங்க என் படத்துல நடிக்கணும்'னு சொல்லிட்டுப் போயிட்டார். 

வீட்டுல இந்த விஷயத்தைச் சொன்னதும், `நடிச்சிருவீங்களா?'னு ஆச்சர்யமா கேட்டாங்க. எனக்கும் பதற்றமாதான் இருந்தது. ஆனா, ஏதோ ஒரு நம்பிக்கையில சரினு சொல்லிட்டேன். கேமரா முன்னாடி நிற்கும்போது இருந்த பதற்றம், நடிக்க ஆரம்பிச்ச பிறகு போயிடுச்சு. 5 நாள் ஷூட்டிங் எனக்கு. நிர்வாணமா ஓடுற காட்சியில நடிக்கும்போதுதான் கொஞ்சம் தயக்கமா இருந்தது. ஏன்னா, எனக்கு ஒரு பெண் பிள்ளை இருக்கா... டீச்சருக்குப் படிக்கிற. நான் நிர்வாணமா ஓடுறதை என் பொண்ணு பார்த்தா என்ன நினைப்பானு யோசிச்சேன். இதை மாரிகிட்டேயும் சொன்னேன். அவர், `முழுக் கதையையும் கேளுங்கண்ணே. அப்புறம் முடிவு பண்ணுங்க'னு கதை சொன்னார். பெண் வேடமிட்டு நடிக்கிறவங்களோட வலி அதுல இருந்தது. உடனே, சரினு சொல்லிட்டேன். 

படத்தைப் பார்த்துட்டு, என் நடிப்பு நல்லா இருக்குனு எல்லோரும் சொல்றாங்க. நான், இன்னும் படம் பார்க்கல. என் பொண்ணு குமாரி லீவுக்கு ஊருக்கு வருவா... அவகூட சேர்ந்து பார்க்கலாம்னு இருக்கேன். படத்துல பரி என்னை அப்பானு கூப்பிடவே வருத்தப்படுவார். ஆனா, என் பொண்ணு குமாரி அப்படியில்ல. என் பொண்ணுனு சொல்லிக்க ரொம்பவே சந்தோஷப்படுவா. என் ஊர் மக்களும் படத்தைப் பார்த்துட்டுப் பாராட்டினாங்க. இப்போகூட திருநெல்வேலியில வெள்ளரிக்காய் வித்துக்கிட்டு இருக்கேன். மாரி செல்வராஜ் அம்மா, `என்னய்யா. ஊருக்குள்ள உன்னை எல்லோரும் தேடிக்கிட்டு இருக்காங்க. நீ இங்கே உட்கார்ந்து இருக்க'னு கேட்டாங்க. என்னைக்கும் என் தொழில் வெள்ளரிக்காய் விற்கிறதும், கோயில் திருவிழாவில் சலங்கை கட்டுறதும்தான்!'' எனச் சிரிக்கிறார், தங்கராஜ்.