தன்னம்பிக்கை
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

மூடுபனி

மூடுபனி
பிரீமியம் ஸ்டோரி
News
மூடுபனி

நினைவோவியம்சந்தோஷ் - விக்னா - ஓவியம் : ஷண்முகவேல்

`இந்த வாரம் யாரையும் சந்திக்க முடியல. ஸ்கிப் பண்ணிடலாமா?’ என்று விக்னாவின் மெசேஜ் செல்திரையில் ஒளிர்ந்தது.

`வேண்டாம். ரேகாவைச் சந்திக்கலாம்’ என்று பதில் அனுப்பினேன்.

`எந்த ரேகா?’ என்று விக்னாவிடமிருந்து கேள்வி.  

மூடுபனி

`உளவியல் சம்பந்தமான ஒரு டாக்குமென்டரி பார்த்தேன். அதில் பேசிய ஒரு பெண் உளவியல் மருத்துவரின் முகம், எங்கோ பார்த்ததுபோல் இருந்தது. பனியில் மங்கலாகத் தெரியும் உருவம்போல அந்த முகம் எனக்கு ஞாபகத்தில் வந்தது. 37 வருடங்களுக்கு முன்னர் பார்த்த முகம் அது’ என்று நான் விஷயத்தை அனுப்பியதும் விக்னா உற்சாகமானாள்.

`இப்போ எங்க இருக்காங்க ரேகா. பெங்களூரு?’ என்றாள் விக்னா.

`இல்லை. ஊட்டி’ என்றேன்.

ட்டியில் இப்போதுதான் சீசன் மெள்ள ஆரம்பித்திருக்கிறது.  பருவநிலை மாற்றத்தால் கூட்டம் குறைவாக இருந்தது. ரேகா இ-மெயிலில் சொன்ன இடம், ஊட்டி அசெம்பிளி ரூம்ஸ் தியேட்டர் தாண்டி இடதுபுறம் திரும்பினால் வரும் Sacred Heart Cathedral. அதன் அழகிய நீண்ட படிக்கட்டில் உட்கார்ந்து ரேகாவை அழைத்தோம்.  ஊட்டி வரிக்கியின் பாக்கெட்டைப் பிரித்து சாம்பிள் ருசி பார்த்தபடி எனக்கும் ஒன்றை நீட்டினாள் விக்னா. அந்திநேர மங்கல வெயிலில் தேவாலயத்தின் நிழல், மென்மையாகச் சரிந்த புல்வெளிகளில் விழுந்துகொண்டிருந்தது. மெல்லிய திரைபோல பனி படர ஆரம்பித்ததைக் காண முடிந்தது. படிக்கட்டு முடியும் சாலையோரத்தில் ஒரு வின்டேஜ் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி படிக்கட்டுகளில் ஏறி பனித்திரை ஓவியம்போல ரேகா வருவதைப் பார்த்தோம். நெருங்கி வந்தபோதுதான் அந்த முகம் தெளிவாகத் தெரிந்தது. 55 வயதிருக்கலாம். ஆனால், அதே முகம். நமது ஞாபகத்தில் உறைந்துபோன இளமையான முகம்.

``வணக்கம். மன்னிக்கவும், எனது க்ளினிக்குக்கு வரச் சொல்லாமல் இங்கே ஏன் சந்திக்கலாம் என்று சொன்னேன் தெரியுமா?” என்றார் ரேகா.

விக்னாவும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்.

``தினமும் விதவிதமான ஆட்களைப் பார்க்கிறேன். வெவ்வேறு வாழ்க்கைகள், வெவ்வேறு மனங்கள், புதிய புதிய கதைகள். வழக்கமாக, மற்றவர்களின் கதைகளை திறந்த மனதுடன் கேட்பதுதான் எனது மருத்துவத்தின் முக்கியமான சிகிச்சையே. ஆனால், எனது கதையைக் கேட்க நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றதும் லொக்கேஷனையாவது மாற்றலாம் என நினைத்துக் கொண்டேன்” என்று புன்னகைத்தார்.

``வாங்க, கதீட்ரலின் பார்க் நன்றாக இருக்கும்... அங்கே அமர்ந்து பேசலாம்” என்று படிகளில் ஏறினார்.

``ரவி இப்போது என்ன செய்கிறார்?” என்றாள் விக்னா. அந்தக் கால நடிகர் பானுசந்தரின் முகம் ரவிக்கு. ஆகவே, மறக்க முடியாத முகம்.

``அவர் அவங்க அப்பாவுக்குப் பிறகு பெங்களூரு  போலீஸ் டிபார்ட்மென்டில்தான் இருந்தார். இப்போது வாலன்டரி ரிட்டையர் மென்ட் வாங்கிக்கொண்டு இங்கே வந்து விட்டார்.”

குளிர்ந்த, விக்டோரியன் டிசைன் உள்ள உலோக பெஞ்சில் அமர்ந்துகொண்டோம். குளிர் உலோகம் வழியாக உடலில் பரவியதை உணர்ந்தேன்.

ரேகா தன் கம்பளிச் சால்வையை மேலும் இறுக்கிப் போத்தியபடி எங்களைப் பார்த்தார். கேட்க விரும்பிய கேள்வி. ஆனால், நாங்கள் மென்று முழுங்கியதைப் பார்த்ததும் ரேகாவே, ``சந்துரு பற்றித்தானே யோசிக்கிறீங்க?” என்றார்.

`ஆமாம்’ என்று அவசரமாகத் தலையசைத்தோம்.

``ஆக்சுவலி சீரியல் கில்லரான அவரை வழக்கமான குற்றவாளியைப்போல் அல்லாமல் ஒரு மனநோயாளியாகத்தான் இன்ஸ்பெக்டராக இருந்த எங்கள் மாமா ரகுநாத் பார்த்தார். தண்டனைக் காலம் முழுக்க மென்டல் அசைலமில்தான் கழித்தார். அவர் ஏன் அப்படி ஆனார் என்பதற்கு அவருடைய குழந்தைப்பருவத்தின் கசப்பான அனுபவங்கள்தான் காரணம் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்மீது முதலில் எல்லோருக்கும் தோன்றியது ஒருவகையான எம்பத்திதான் (empathy).”

``ஆமாம், அவர் உங்கள் மாமனாரின் கால்களைக் கட்டிக்கொண்டு குழந்தைபோல அழுததை மறக்க முடியாது” என்றோம்.

``அந்தச் சம்பவங்கள்தான் என்னை உளவியல் நோக்கி நகர்த்தின. மனித மனங்களின் ஆழங்களை அறிந்துகொள்ளும் ஆவலை எனக்குத் தூண்டியது. ரவியுடனான திருமணத்துக்குப் பிறகு முறையாக உளவியலையே பாடமாக எடுத்துப் படித்தேன். நான் முழுநேர உளவியலாளரான பிறகு, என் மாமாவின் அனுமதியுடன் சிகிச்சையில் இருந்த சந்துருவை சிலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். உளநல சிகிச்சை, அவரை மெள்ள மெள்ள மீட்டெடுத்தது. தண்டனைக்காலம் முடிந்து வெளியே வரும்போது கனிவான ஒரு மனிதராக அவரைக் கண்டோம். பிறகு, இங்கே ஊட்டியில்தான் இருந்தார். பைபிள் வாசித்துக்கொண்டிருப்பதாக ஒருமுறை சொன்னார். மரிய மக்தலீனாவைக் கனிவுடன் அணுகிய கிறிஸ்து, சந்துருவுக்கு வாழ்வியல் பற்றிய ஒரு புதிய பார்வையைக் கொடுத்திருக்கலாம் என யூகிக்கிறேன்” என்றார் ரேகா.

``இவ்வளவு வருடங்களாக உளவியல் சார்ந்து வேலைசெய்கிறீர்கள். அது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்றாள் விக்னா.

``முன்பைவிட இப்போது மனநலம் சார்ந்த புரிதல் அதிகரித்திருக்கிறது. உடல் உபாதைக்காக மருத்துவரை அணுகுவதுபோல, மனநலப் பிரச்னைகள் குறித்து சைக்கியாட்ரிஸ்ட்டை அணுக வெட்கப்படத் தேவையில்லை என்ற மனோபாவம் வந்துவிட்டது. மேலும், பத்துப் பேரில் ஒருவருக்காவது உளவியல் சிக்கல் இருக்கிறது. முதல்படி, அவர்களோ அவர்களைச் சுற்றியிருப்பவர்களோ அதைக் கண்டறிவது. அடுத்தது, மனநல மருத்துவரை அணுகுவது. கடைசியாக, நாங்கள் தரும் சிகிச்சையை சரிவரப் பின்பற்றுவது. எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறார்களோ, அவ்வளவு சுலபமாகிறது எங்கள் வேலை.”

``எதனால் உளவியல் பிரச்னைகள் ஏற்படு கின்றன?” எனக் கேட்டேன்.

``குறிப்பிட்ட காரணம் எதுவும் சொல்ல முடியாது. தற்போதைய சூழலில் அதிகப்படியான கண்டிப்புக்கு ஆளாகும் குழந்தைகள் பலரும் தன்னம்பிக்கை குறைவான, மிகுந்த பயம்கொண்ட மனிதர்களாகவோ அல்லது உள்ளூர மிருகத்தன்மை கொண்டவர்களாகவோ மாறுகிறார்கள். ஆகையால், எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் பெற்றோரைப் பார்த்தாலும், நான் திரும்பத் திரும்பச் சொல்வது இதுதான். உங்கள் எதிர்பார்ப்புகளைப் பிள்ளைகள்மீது திணித்து, அவர்களின் பால்யத்தை,  மகிழ்ச்சியைக் கெடுத்து விடாதீர்கள். எதற்கும் நேரம் கொடுங்கள். உங்கள் குழந்தை எல்லாவற்றையும் அவசர அவசரமாகக்  கற்கவேண்டியதில்லை என்ற புரிதலுக்கு வாருங்கள். கற்றலை இனிதாக்கினால் போதும், அவர்கள் திறமையான மனிதர்களாக உருவாவார்கள்.”

``வேறு என்ன மாதிரியான பிரச்னைகளோடு வருகிறார்கள்?” - விக்னா கிட்டத்தட்ட தொலைக்காட்சி நெறியாளராகவே மாறியிருந்தாள்.

``இளைஞர்கள், சோஷியல் மீடியா அடிக்‌ஷனி லிருந்து விடுபடவேண்டி வருகிறார்கள். நேரத்தை எடுத்துக்கொள்வது தாண்டியும் பல வகைகளிலும் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் வலைதளங்களின் தாக்கம் அதிகம் உள்ளது.  சென்ற வருட உலகத் திரைப்பட விழாவில் ஒரு படம். பெயர் நினைவில்லை. ஆப்கானிஸ் தானில் சண்டையிட்டுத் திரும்பும் அமெரிக்கப் போர் வீரர்கள். அவர்களை அப்படியே ஊரில்கொண்டு இறக்கிவிடாமல், மூன்று நாள்கள் இயற்கை எழில் கொஞ்சும் சின்னஞ்சிறிய தீவு ஒன்றில் நட்சத்திர உல்லாச விடுதியில் தங்கவைக்கிறார்கள்.

சுமார் நூறு வீரர்களைக்கொண்ட அந்த `பேட்ச்’சில் பெண்களும் உண்டு. நாயகியாக வருபவர், தனக்குப் படிப்பில் ஆர்வமில்லாததாலும் குடும்பச்சூழல் காரணமாகவும் ராணுவத்தில் சேர்ந்து விட்டதாகச் சொல்கிறார். அழகான பெண்ணான அவரை வசீகரிக்க, சக ஆண் வீரர்கள் முனைகிறார்கள். எனினும் அவர்கள்மீது ஆர்வமில்லாமல் இருக்கும் அவளுக்கு, அதே தீவில் உள்ள ஓர் ஆணின் மீது விருப்பம் ஏற்படுகிறது. பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மீறி, அவனோடு இணைந்து பிறகு இருப்பிடத்துக்கே திரும்புகிறாள்.

அந்த மூன்று நாள்களில் போரின் குரூர மனநிலையிலிருந்து விலகி, சகஜமான விளையாட்டுகள், கேளிக்கைகள், மனோதத்துவ உதவி எனப் பலவும் வீரர்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. அத்தனையும் அனுபவித்துக்கொண்டே அந்த வீரர்கள் அங்கு இருக்கும் நட்சத்திர விடுதிப் பணியாளர்களைத் துன்புறுத்து கிறார்கள். மற்ற விருந்தினர்களை வம்புக் கிழுக்கிறார்கள். தங்களுக்குள் கடுமையாகச் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். முடிவில், ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்.

விமானத்தில் அனைவரும் ஊர் திரும்பும் இறுதிக்காட்சியில், நாயகி அருகில் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் தான் வேலையை விடப்போவதாகச் சொல்கிறாள். காரணமாக அவள் சொல்வது இதுதான், `you always need an enemy to live!’ ராணுவத்தில் இருந்தால், எப்போதும் எதிரியைத் தேடும் மனநிலை வந்துவிடுகிறது. 

சமூக வலைதளங்களில் மிகுந்த நேரம் செலவிடும் இளைஞர்கள் கிட்டத்தட்ட இதேபோல், எப்போதும் எதிரியைத் தேடும் மனப்பாங்கை அடைந்துவிடுகிறார்கள். அரசியல், இலக்கியம், சினிமா, விளையாட்டு என, துறை சார்ந்த தனக்கு ஒவ்வாத பிரபலங்களை மனதளவில் வெறுக்கத் தொடங்கி, அதை வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறார்கள். அதேபோல், அவர் தம் ரசிகர்களையோ அல்லது வேறு கட்சித் தொண்டர்களையோ அல்லது வேறு சாதிக்காரர்களையோ அல்லது எதுவும் கிடைக்காவிட்டால் பீட்சா தின்பவர்களையோ எதிரிபோல் பாவித்து ஹார்மோன்கள் எகிற எகிற வார்த்தைப் போரில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தைத் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

விமர்சனத்தைத் தாண்டிய தனிநபர் வன்மம், எந்த இடத்திலுமே ஆரோக்கியமானதில்லை. தான் எழுதியவற்றை  பத்து வருடங்கள் கழித்து எடுத்துப்படித்தால், பத்தில் எட்டுப் பேர் வெட்கித் தலைகுனியக்கூடும்.  நிஜ வாழ்வில் அமைதியான சூழலில் இருப்பவர்கள்கூட இணையத்தில் `வெர்ச்சுவல் எனிமி’யைத் துரத்தி, துன்புறுத்தி இன்பம் காணும் பரிதாபத்தைக் காண முடிகிறது.

யார் பேசிய/எழுதியதிலிருந்தாவது ஒரு வரியை மட்டும் எடுத்துக்கொண்டு மணிக்கணக்காக மாவு அரைப்பதுதான் சமூக வலைதளங்களின் தற்போதைய அடையாளம். ஒன்றிரண்டு பேர் என்றால், அதைப் பற்றிப் பேசவே தேவையில்லை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விருப்பத்தோடு இயங்கும் இடமாகிவிட்ட ட்விட்டரோ, ஃபேஸ்புக்கோ தற்போது உதாசீனப்படுத்த முடியாத காலத்தின் குரல். அறிவைப் பின்தள்ளி, உணர்ச்சிகளைக்கொண்டு முன்னேறிய சமூகம் என்று வரலாற்றில் எதுவுமில்லை. தன்னிகரில்லாத டைனோசர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டு முடிவைத் தேடிக்கொண்டன. இந்த மானுட இனமும் ஃபேஸ்புக்கைத் தன் கோரைப்பல்லாக முன்னிறுத்தி, தனக்கான எதிரிகளைத் தேடி அலைகிறது.
 
`ஏங்க, நான் ஜெயில் வார்டன் இல்லைங்க. ஹாஸ்டல் வார்டன்' என்பார் வடிவேலு. `அதெல்லாம் தெரியாது. வார்டன்னா அடிப்போம்’ என்பதாக ஒரு படத்தில் வசனம் இடம் பெறும். இந்த வலைதளக் கும்பல் மனப்பான்மையின் அடித்தளமும் இதுதான். தனக்குப் பிடிக்காத, ஒவ்வாத கருத்துடையவர்களை எதிரிபோலக் கருதுவது, அவர் என்ன சொல்லியிருந்தாலும் தனக்குச் சாதகமாக அதை மாற்றிப் பரப்பிவிடுவது, நின்று நிதானமாக ஆராய நேரமில்லாத, அவசியமில்லாத கூட்டத்திடம் `சென்சேஷனலாக’ எது சொன்னாலும் எடுபடும். அப்படி ஒரு கூட்டத்தின் அங்கமாக இருக்கத்தான் வேண்டுமா... யாருடைய காழ்ப்பு உணர்வோ, வன்மமோ ஏன் என்மூலம் வெளிப்பட வேண்டும்? ஒவ்வொருவரும் யோசிக்க ஆரம்பித்தால் போதும். ஆயிரம் `லைக்’ சேர்ந்தால், பொய்யைக்கூட நிஜமாக்கிவிடலாம்தான். எனினும் இது இரு பக்கக் கத்தி. பிடித்தவனையும் கிழிக்காமல் விடாது என்பதே உண்மை.

கூட்டத்தோடு கூட்டமாகக் கைதட்டுவதும், கும்பலிலிருந்து கல் எறிவதும் சுலபமானவை. அங்கே சிந்தனைக்கே இடமில்லை. ஆயினும் மனம் சற்றே சமநிலைகொண்டால், இந்த மூளையைக் கழற்றிவிட்டு எல்லாவற்றுக்கும் உடனடி எதிர்வினையாற்றும் மந்தை ஓட்டத்திலிருந்து வெளியேறிவிடலாம். தேவை என்னவோ, ஒரு கணம் நிதானம் மட்டும்தான்.”

கிட்டத்தட்ட கவுன்சலிங் தருவதைப் போன்ற ரேகாவின் நீண்ட பேச்சு முடியும் போது நேரமாகியிருந்தது. பனி மெள்ள அடர்த்தியாகிவருவதுபோல் தோன்றியது. மெல்லிய இருள் எங்களை நிழல் உருவங்கள் போலத் தோன்றச் செய்தது.

``கிளம்பலாமா?’’ என்றார் ரேகா.

கதீட்ரலின் கருங்கல் சுற்றுச்சுவரைக் கடந்து படியை நோக்கிக் கீழிறங்கிக்கொண்டிருந்தபோது, சரிவில் நீர்வண்ண ஓவியங்களில் வருவது போன்ற கல்லறைத் தோட்டத்தைக் கண்டோம். அமைதியான மூடுபனி அங்கே படர்ந்திருந்தது.

``சந்துரு இப்போது…” என்று இழுத்தேன்.

புன்னகையையே பதிலாகத் தந்துவிட்டு, படிகளில் இறங்க ஆரம்பித்தார் ரேகா.

தேவாலயத்தின் மணி முழக்கம் அதிர்ந்து, எங்களைக் கடந்து அடர்த்தியான பனியில் கரைந்து மறைந்தது.

மூடுபனி  வெளியான ஆண்டு: 1980

நடிப்பு: ஷோபா, பிரதாப் போத்தன், பானுசந்தர்

இயக்கம்: பாலு மகேந்திரா

மூடுபனி

இளமைக்குக்  காரணம் இளையராஜா!

`மூ
டுபனி' ரவி பாத்திரமாகவே வாழ்ந் திருந்த பானுசந்தரிடம் இந்தக் கற்பனை குறித்துப் பேசினோம். அவரிடமும் கைவசம் இருந்தது ஒரு கற்பனைக் குதிரை.

எப்படி இருக்கீங்க இன்ஸ்பெக்டர் சார், ரேகா எப்படி இருக்காங்க?

ரேகாவும் நானும் திருமணம் செய்துகொண்டோம். ரேகா எப்பவும் போல அதே வெகுளித்தனத்தோடு இருக்கிறாள். ரேகாதான் எனக்கும் குழந்தைகளுக்கும் உலகம். வயதாகிக்கொண்டே வருகிறதே தவிர வேறு ஒரு குறையுமில்லை.  மனதளவில் இளமையாக இருக்கிறோம். இதற்கெல்லாம் காரணமாக இளையராஜா இசை இன்னும் இருக்கிறது. அப்பா பெங்களூரில் ஓய்வு வாழ்க்கையை அனுபவித்துவருகிறார். சந்துருவின் பெரிய ஆறுதலே அப்பாதான்.

பசங்க வளர்ந்திருப்பாங்களே... என்ன பண்றாங்க?

எங்களுக்கு இரண்டு குழந்தைகள்.பெரியவர் இப்போ டாக்டர், இளையவர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். இதில் என்ன விசேஷம் என்னன்னா காப்பகத்தில் நடந்த விழா ஒன்றுக்கு சந்துருவைப் பார்க்க மூத்தவனை அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது, சந்துருவுடன் பேசிக்கொண்டிருந்த என் மகன். `அப்பா... இவரை ஏன் அம்மாவுக்குப் பிடிக்காது எனச் சொல்கிறார்கள்... நல்லாத் தானே பழகுறாங்க' என்றான். என்ன சொல்வது?

ரேகா, சந்துருவைப் பற்றி விசாரிப்பாரா?

சந்துருவை ரேகா நேரில் பார்ப்பதில் எனக்கும் அப்பாவுக்கும் ஆர்வமில்லை. அது ரேகாவுக்கும் தெரியும். எப்போதாவது எங்களுக்குள் பிரச்னை ஏற்படும்போது `நான் சந்துருவையே திருமணம் செய்திருக்கலாம்' என்று பொய்யாகக் கூறி என்னை வெறுப்பேற்றுவதில் அவருக்கு மகிழ்ச்சி!

- அலாவுதின் ஹுசைன்