Published:Updated:

''ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க... நானும் 'த்ரிஷா' கெளரியும் அப்படிலாம் இல்ல!" - '96 ஆதித்யா பாஸ்கர்

`96 படத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யாவின் சிறப்புப் பேட்டி.

''ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க... நானும் 'த்ரிஷா' கெளரியும் அப்படிலாம் இல்ல!" - '96 ஆதித்யா பாஸ்கர்
''ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க... நானும் 'த்ரிஷா' கெளரியும் அப்படிலாம் இல்ல!" - '96 ஆதித்யா பாஸ்கர்

பிரேம்குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் `96. விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்திருக்கும் ஆர்ப்பாட்டமான வெற்றியைக் கண்டிருக்கிறது. பள்ளிப் பருவக் காதலை அழகாகச் சொல்லியிருக்கும் இப்படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்தவர், நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர். முதல் படத்திலேயே அப்லாஸ் அள்ளியிருக்கும் அவரைச் சந்தித்தோம். 

``சின்ன வயசுலே இருந்தே அப்பாவோட நடிப்பைப் பார்த்து வளர்ந்த பையன் நான். அவருடைய நடிப்பில் `மொழி’ படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எந்தக் கேரக்டரா இருந்தாலும், அப்பா பிச்சு எடுத்திடுவார்'' அப்பாவைப் பற்றிய பெருமிதத்தோடு ஆரம்பிக்கிறார் ஆதித்யா. 

``நான் பேஸிக்காவே கொஞ்சம் கூச்ச சுபாயம் உள்ள பையன். அறிமுகமில்லாதவங்க யார்கிட்ட பேசினாலும், ரொம்பவே கூச்சப்படுவேன். பத்தாவது படிச்சுக்கிட்டிருந்த சமயத்துல சினிமாவுல நடிக்கணும்னு ஆசை வந்துச்சு. அம்மாகிட்டதான் அதை முதல்ல சொன்னேன். 'நீ அநியாத்துக்கு வெட்கப்படுற பையன். நீ எப்படிடா நடிப்ப?'னு என்னைக் கிண்டல் பண்ணாங்க. அதை முதல்ல மாத்திக்கணும்னு நினைச்சு, அன்றையிலேர்ந்து கூச்சத்தை விட்டேன். இப்போ வரை... யார்கிட்டேயும் கூச்சப்படாம பேசுவேன். நடிப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதனால, கண்ணாடி முன் நின்னுட்டு, நானே நடிச்சுப் பார்ப்பேன், சிரிப்பேன், கோபப்படுவேன். சுருக்கமா சொன்னா, என்னை நானே வளர்த்துக்கிட்டேன்.

ஹீரோக்களில் எனக்கு அஜித் சாரை ரொம்பப் பிடிக்கும். அவருக்கும் எனக்கும் பல ஒற்றுமை இருக்கு. அவரோட பிறந்தநாளும் என்னோட பிறந்தநாளும் ஒரே நாள். அவருக்கு கார் ரேஸ்னா, உயிர். எனக்கும் கார் ரேஸ் ரொம்பப் பிடிக்கும். 

விஸ்காம் படிச்சுக்கிட்டு இருக்கும்போதுதான் '96 பட வாய்ப்பு வந்தது. ஆனந்த விகடன் இதழ்ல என் போட்டோவைப் பார்த்துட்டு பிரேம்குமார் சார் ஆபீஸ்லயிருந்து, அப்பாவுக்குப் போன் பண்ணி நடிக்கிறது சம்பந்தமா பேசியிருக்காங்க. அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். அவரே என்னை பிரேம் சார் ஆபீஸ்ல விட்டுட்டுப்போனார். எனக்கு ஆடிஷன் நடந்தது. படத்துல வர்ற ஒரு சீன் சொல்லி, நடிக்கச் சொன்னாங்க; நடிச்சேன். பிறகு படத்துல நடிச்ச கெளரி, நித்யா, சூர்யா எல்லோரையும் சேர்த்துவெச்சு ஒரு வொர்க் ஷாப் நடத்தினாங்க. அப்போ இருந்து, இப்போ வரை... நடிச்ச நாங்க எல்லோரும் நண்பர்கள் ஆயிட்டோம்.

பலரும் படத்துல என்கூட நடிச்ச கெளரியும் நானும் லவ்வர்ஸ்னு செய்திகள் பரப்புறாங்க. நாங்க நல்ல நண்பர்கள் மட்டும்தான். நடிச்ச கொஞ்சநாள்ல நண்பர்கள் ஆயிட்டோம். அதனாலதான் இன்ஸ்டாகிராம்ல போட்டோ போட்டேன். அதைத்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டு லவ்வர்ஸ்னு சொல்றாங்களானு தெரியலை. எங்க ரெண்டுபேருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. அதை மத்தவங்க புரிஞ்சுக்கணும். நானும் கெளரியும் மட்டுமில்ல... இந்தப் படத்துல நடிச்ச சூர்யா, தேவதர்ஷினி மேடமோட பொண்ணு நித்யா.. எல்லோருமே நல்ல நண்பர்கள். படத்துல வாட்ஸ்அப் மூலமாதான், 96 ரியூனியன் நடக்கும். அதுமாதிரி, இந்தப் படத்துல ஸ்கூல் எபிசோட்ல நடிச்ச நாங்க எல்லோரும் ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச்சு பேசிக்கிற அளவுக்கு நண்பர்கள் ஆயிட்டோம். இருக்கோம். அடிக்கடி வெளியே மீட் பண்ணிப் பேசிக்கிறோம்.  

கும்பகோணத்துல ஷூட்டிங். ரொம்ப ஜாலியா இருந்தது, இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட். இயக்குநர் பிரேம் சார் இந்தக் கதையை என்கிட்ட சொன்னப்பவே, இந்தப் படம் பெரிய ஹிட் ஆகும்னு தோணுச்சு. படத்துல நான் நடிக்கிறது பற்றி நெருங்கிய நண்பர்கள்கிட்ட மட்டும்தான் சொன்னேன். இப்போ, என் நடிப்பைப் பார்த்துட்டு பலரும் போன் பண்ணிப் பாராட்டுறாங்க. படத்தோட சக்ஸஸ் மீட் அப்போ, விஜய் சேதுபதி அண்ணா என்னைக் கட்டிப்பிடிச்சு பாராட்டினார். த்ரிஷா மேடமும் என்கிட்ட 'நல்லா நடிச்சிருக்கடா'னு பாராட்டினாங்க. இந்தப் பாராட்டுகளையெல்லாம்விட, எனக்கொரு காதலி இருந்தா. சில காரணங்களால நாங்க பிரிஞ்சுட்டோம். ரொம்பநாளா நாங்க பேசிக்கவே இல்ல... திடீர்னு அவகிட்ட இருந்து அழைப்பு. படம் பார்த்து, என் நடிப்பு ரொம்ப நல்லா இருக்கிறதா பாராட்டினாங்க. அவளோட வாழ்த்து எனக்கு ரொம்ப ஸ்பெஷலா இருந்தது. இந்தப் படத்துல நடிக்கும்போது, பல இடங்களில் அவளை நினைச்சுதான் நடிச்சேன். அதனாலதான், படத்துல வாழ்ந்த மாதிரியே இருக்குனு நினைக்கிறேன்.

படத்தோட ப்ரிவியூ ஷோவுக்கு குடும்பத்தோட போனோம். நான் படத்தைப் பார்க்காம, எங்க அம்மா, அக்கா முகத்தைத்தான் பார்த்துக்கிட்டு இருந்தேன். அவங்க என் முகத்தைத் திரையில பார்க்கும்போது, ரொம்ப எமோஷனலா இருந்தாங்க. இந்தப் படம் எனக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்திருக்கு. காலேஜ் முடிச்சுட்டு சினிமாவுக்குள்ள வரலாம்னு நினைச்சேன், வாய்ப்பு கிடைக்கிறது கஷ்டம்னு நினைச்சேன். ஆனா, அதுக்குள்ள ஒரு நல்ல படத்துல அறிமுகம் ஆயிட்ட சந்தோஷம். இனி என் வாழ்க்கை சினிமாதான்னு முடிவு பண்ணிட்டேன்" என்கிறார் ஆதித்யா.