Published:Updated:

'முகவரி' முதல் '96' வரை... காதல்தான் தோல்வி; படம் மாஸ் ஹிட்! #LoveMovies

'முகவரி' முதல் '96' வரை... காதல்தான் தோல்வி; படம் மாஸ் ஹிட்! #LoveMovies
'முகவரி' முதல் '96' வரை... காதல்தான் தோல்வி; படம் மாஸ் ஹிட்! #LoveMovies

'முகவரி' முதல் சமீபத்தில் வெளியான '96' படம் வரை... காதல் தோல்வியானாலும், வெற்றியடைந்த படங்கள் இவை.

காதல் என்றால் வெற்றி பெற்றுத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் சினிமாவிற்கு உண்டு. ஆனால், நிஜ வாழ்க்கையில் அப்படியில்லை. சினிமாவில் ஹீரோ - ஹீரோயின் சேர்வதுபோல மட்டுமில்லாமல், பிரிவதும்கூட 'காதல்தான்' என எடுத்துச்சொன்ன படங்கள் சில, பெரு வெற்றியைப் பெற்றுள்ளது. அவற்றின் பட்டியல் இதோ! 

ஆட்டோகிராஃப் 

செந்தில் - கமலா - லத்திகா - திவ்யா 

தனது திருமணத்திற்கு, தன் வாழ்வில் பயணப்பட்ட அனைவருக்கும் பத்திரிகை கொடுத்து அழைக்கப் புறப்படும் சேரன், தன்னுடைய பள்ளி, கல்லூரி காதல்களை நினைத்துப் பார்ப்பதே கதை. சேரனின் வாழ்வில் வந்த மல்லிகா, லத்திகா, திவ்யா என்ற மூன்று பெண்களைப் பற்றியே கதை அமைந்திருக்கும்.'பிரேமம்' படத்தின் முன்னோடி இது.

முகவரி 

ஸ்ரீதர் - விஜி

சினிமாவில் இசையமைப்பாளார் ஆகவேண்டும் எனக் கடுமையாக உழைக்கும் அஜித், தன் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக வரும் ஜோதிகாவைக் காதலிக்க, பின் அந்தக் காதலே அவர் குறிக்கோளிற்குத் தடையாக நிற்கும். இருவரும் பரஸ்பரம் பேசிப் பிரிவார்கள். வாழ்வை பிராக்டிகலாகப் பார்க்க வேண்டும் என்பதைச் சொல்லித்தந்த படம் இது. 

பூ 

தங்கராசு - மாரி

சிறுவயது முதல் ஸ்ரீகாந்த் மீது காதல் கொள்ளும் பார்வதி மேனன், அந்தக் காதலை ஸ்ரீகாந்திடம் சொல்லாமல் காத்துக்கொண்டு இருக்கிறார். சொல்லலாம் என்று முடிவெடுக்கும்போது, ஸ்ரீகாந்திற்குத் திருமணம் ஆகிவிடுகிறது. ஒரு பெண்ணின் முன்பருவக் காதல் தான், 'பூ'.

உன்னாலே உன்னாலே 

கார்த்திக் - ஜான்சி 

காதலிக்கும் பையனோடும் சரி, பெண்ணோடும் சரி... சேர்வது மட்டுமே காதல் இல்லை. சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காகப் பிரிய நேர்ந்தாலும், அதுவும் காதலே என்ற புதிய தத்துவத்தைச் சொன்ன படம். வினய், சதா இருவரும் காதலித்து, ஒருவருக்கு ஒருவர் செட்டாகது என்பதை உணர்ந்து கடைசியில் பிரிந்துவிடுவார்கள். 

விண்ணைத்தாண்டி வருவாயா 

கார்த்திக் - ஜெஸ்ஸி

இன்ஜினியரிங் முடித்துவிட்டு, சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர், கார்த்திக். அவரது மாடி வீட்டில் வசிப்பவர், த்ரிஷா. முதல் முதலாகப் பார்க்கும்போதே சிம்பு, த்ரிஷா மீது காதல் கொள்கிறார். இரு பிரச்னை வருகிறது. ஒன்று, த்ரிஷா சிம்புவைவிட ஒரு வயது மூத்தவர். இரண்டாவது, இருவரும் வெவ்வெறு மதத்தை சார்ந்தவர்கள். த்ரிஷா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பைக் காட்ட இறுதியில் காதலில் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதைக் கதையாக்கியிருப்பார், கெளதம் மேனன். தமிழுக்கும், தெலுங்குக்கும் தனித் தனி க்ளைமாக்ஸ் வைத்திருப்பார். தமிழில் பிரிவதுபோலவும், தெலுங்கில் சேர்வதுபோலவும் அமைந்திருந்தது, இப்படத்தின் க்ளைமாக்ஸ்.

சில்லுன்னு ஒரு காதல் 

கவுதம் - ஐஸ்வர்யா

சூர்யா - ஜோதிகாவிற்குத் திருமணமாகி, ஐஸு என்ற குழந்தை உள்ளது. மகிழ்ச்சியாகப் போகும் வாழ்வில், ஒருநாள் எதார்த்தமாக சூர்யா எழுதிய பழைய டைரி ஒன்று ஜோதிகா கையில் கிடைக்க, அதைப் படிக்கிறார். அதன்மூலம் சூர்யாவின் பழைய காதலை அறிகிறார். பழைய காதலியான பூமிகாவைக் கண்டுபிடிக்கிறார். ஆல்டைம் ஹிட் லவ் மூவிஸ் பட்டியலில் இந்தப் படத்திற்கு முக்கியமான இடம் உண்டு.

ராஜா ராணி 

சூர்யா - ரெஜினா 

காதல் தோல்வியோடு வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. ஒவ்வொரு காதலுக்குப் பிறகும் இன்னொரு காதல் இருக்கிறது, இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்பதுதான், இப்படத்தின் கதை. 'மௌன ராகம்' படத்தின் நியூ வெர்ஷன். தங்களது பெற்றொர்களுக்காக திருமணம் செய்துகொள்ளும் ஆர்யா - நயன்தாரா ஜோடி, இல்லற வாழ்க்கையில் தடுமாற, தங்களின் முந்தைய காதலைப் பற்றி இருவரும் அறிந்துகொள்கிறார்கள். பிறகு இவர்களுடைய தடுமாற்றம் நீடித்ததா அல்லது புரிந்துகொண்டு இணைந்தார்களா என்பதுதான் திரைக்கதை. ஆர்யாவின் காதலில் நஸ்ரியா விபத்தில் இறந்துவிட, நயன்தாராவின் காதலில், தன் அப்பாவின் பேச்சைக் கேட்டு வேறொரு திருமணம் செய்கிறார், ஜெய்.

மீசைய முறுக்கு 

ஆதி - நிலா 

இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு காணும் ஆதி, ஒரு தலையாக ஆத்மிகாவைக் காதலிக்கிறார். கல்லூரியில் இருவரும் காதலிக்கத் தொடங்க, ஆத்மிகாவின் வசதியான குடும்பப் பின்னணியாலும், ஆதியின் இசை லட்சியத்தாலும், ஏகப்பட்ட இன்னல்களைச் சந்தித்து... இறுதியில் இணைகிறார்களா இல்லையா என்பதைக் கதையாகச் சொல்லியிருப்பார்கள். ஹீரோ ஆதி இசையமைப்பாளர் ஆவதாகவும், ஹீரோயின் ஆத்மிகா வேறொருவரைத் திருமணம் செய்துகொள்வதாகவும் அமைந்திருந்தது படத்தின் க்ளைமாக்ஸ். 

96 

கே.ராமச்சந்திரன் - ஜானகி தேவி

பயணப் புகைப்படக் கலைஞர் கே.ராமசந்திரன் (விஜய் சேதுபதி), சொந்த ஊரான தஞ்சாவூருக்கு எதார்த்தமாக வருகிறார். தான் படித்த பள்ளியைப் பார்த்த தருணத்தில் இருந்து, அவருடைய பால்ய காலக் காதல் நினைவுக்கு வருகிறது. உடனே தன்னுடன் பள்ளியில் படித்த அனைவரையும் பார்க்க ஆசைப்படுகிறார். ரீ-யூனியனுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். ராமசந்திரந்திரனைப் பார்ப்பதற்காகவே சிங்கப்பூரில் இருந்து சென்னை வருகிறார், த்ரிஷா. இருவரும் சந்தித்துக்கொள்ளும் நெகிழ்வான தருணங்களே இது. 90'ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஆக மாறியுள்ளது இப்படம்.

இவ்வாறு காதலில் தோல்வி அடைந்தாலும், படமாக வெற்றிபெற்ற படங்கள் உங்கள் நினைவுக்கு வந்தால், அதைக் கமெண்டில் பதிவு செய்யலாமே ஃபிரெண்ட்ஸ்!

அடுத்த கட்டுரைக்கு