Published:Updated:

`` ‘பார்ட்டி’ ரிலீஸ் ஏன் லேட் ஆகுதுன்னா..?" - மிர்ச்சி' சிவா

`படத்தோட ரிசல்ட்டைப் பார்த்துட்டு எங்க மாமா எனக்கு கால் பண்ணி, இனிமேல் நீ ஸ்கிரிப்ட் கேட்கும்போது என்னையும் கூப்பிடு, நாம சேர்ந்து ஸ்கிரிப்ட் செலக்ட் பண்ணுவோம்’னு சொன்னார்."

`` ‘பார்ட்டி’ ரிலீஸ் ஏன் லேட் ஆகுதுன்னா..?" - மிர்ச்சி' சிவா
`` ‘பார்ட்டி’ ரிலீஸ் ஏன் லேட் ஆகுதுன்னா..?" - மிர்ச்சி' சிவா

ஆர்.ஜே-வில் தொடங்கி அகில உலக சூப்பர் ஸ்டார் ஆனது வரை சிவாவின் வளர்ச்சி, ஒரு சூறாவளி கிளம்பியதே’ பாடல் போல அவ்வளவு சீக்கிரமாக நடந்தது இல்லை. சென்னை 28’, கலகலப்பு’, தமிழ்ப்படம்’ என மூன்று படங்களின் இரண்டாம் பாகத்தில் நடித்த ஒரே தமிழ் நடிகர் சிவாதான். தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் சிவாவை, ஒரு மாலை வேளையில் சந்தித்துப் பேசினேன்.

உங்களுக்குள்ள ஒரு சீரியஸ் முகம் இருக்கு; ஆனால், அதை ஏன் வெளியில காட்டிக்கக் கூடாதுனு நினைக்கிறீங்க..?

``எல்லாருக்குள்ளும் ஒரு சீரியஸ் முகம் இருக்கத்தான் செய்யும். அது நம்ம வாழ்க்கையோட ஒரு பகுதிதான். அதை நாம வெளிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இசைஞானி இளையராஜாக்குள்ள எத்தனை கஷ்டங்கள் இருக்கும்; அதையெல்லாம் எப்போதாவது அவர் பேசியிருக்கிறாரா? அது நமக்குத் தேவையில்லை. நான் எவ்வளவு சீரியஸா இருந்தாலும், சிரிக்காத நாள் இல்லை.''

சினிமாவில் பிஸியாக இருக்கும்போது, ஃபேமிலிக்காக எந்த அளவுக்கு நேரம் ஒதுக்குவீங்க..?

`ஷூட்டிங்குக்குப் போனேன்னா என் மனசு எல்லாமே அந்தப் படத்து மேலதான் இருக்கும். அந்த டைம் அந்தப் படத்துக்கு நான் உண்மையா இருப்பேன். அதே சமயம், வீட்டுக்கு வந்துட்டா ஷூட்டிங் பற்றியெல்லாம் பேசக்கூட மாட்டேன். நான் வீட்டில் இருக்கிற நேரமும், அவங்களுக்காகச் செலவழிக்கிற நேரமும், அவங்களுக்கு மட்டும்தான். அந்தச் சமயத்தில் நான் படங்களைப் பற்றியெல்லாம் பேச மாட்டேன். இதை நான் ஆரம்பத்திலிருந்து ஃபாலோ பண்றனால எந்தப் பிரச்னைகளும் எனக்கு வந்தது இல்லை.''

உங்களுடையப் படங்களைப் பார்த்துட்டு உங்க வீட்டுல இருக்கிறவங்க ஏதாவது அட்வைஸ் கொடுப்பார்களா..?

''அந்த மாதிரி எந்த அட்வைஸும் அதிகமா வந்தது கிடையாது. ஆனால், ஒரே ஒரு முறை எங்க மாமா ஒருவர் சொன்ன விஷயம் எனக்குப் பயங்கர ஷாக்கா இருந்தது. `வ’ படத்தோட ஸ்கிரிப்ட்டைப் படிச்சதும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது; புதுசா இருந்தது. அதுனால அந்தப் படத்தில் நடிச்சேன். ஆனால், அந்தப் படம் நாங்க நினைச்ச அளவுக்குப் போகலை. இந்தப் படத்தோட ரிசல்ட்டைப் பார்த்துட்டு எங்க மாமா எனக்கு கால் பண்ணி, இனிமேல் நீ ஸ்கிரிப்ட் கேட்கும்போது என்னையும் கூப்பிடு, நாம சேர்ந்து ஸ்கிரிப்ட் செலக்ட் பண்ணுவோம்’னு சொன்னார். எனக்கு தூக்கிவாரிப் போட்டுடுச்சு. அவருக்கு ஸ்கிரிப்ட் பற்றி எதுவுமே தெரியாது; அவர் இதைச் சொல்லும்போது எனக்கே ஒரு மாதிரி இருந்துச்சு. மத்தபடி, `இந்த மாதிரி படம் பண்ணுங்க’னு யாரும் அட்வைஸ் பண்ண மாட்டாங்க.''

பார்ட்டி படத்தோட ரிலீஸ் ஏன் தாமதமாகுது..?

'' 'பார்ட்டி' படத்துக்கு அப்பறம்தான் நான் ’கலகலப்பு - 2’, ’தமிழ்ப்படம் - 2’ கமிட்டானேன். அந்தப் படங்களெல்லாம் ரிலீஸாகியும் `பார்ட்டி’ இன்னும் ரிலீஸாகாம இருக்கிறதுக்குக் காரணம், அது ஒரு பெரிய புராஜெக்ட். பல சீனியர் நடிகர், நடிகைகள் நடிச்சிருக்காங்க. அதனாலதான் அந்தப் படம் கொஞ்சம் லேட்டாகுது.''

வெங்கட் பிரபுவோட 'பார்ட்டி' படம் எப்படி இருக்கும்னு ரிலீஸானதும் நாங்க பார்த்துப்போம். வெங்கட் பிரபு கொடுக்குற பார்ட்டி எப்படி இருக்கும்?

`நீங்க நினைக்கிற மாதிரி எந்தப் பார்ட்டியும் நடக்காது. வெங்கட் பிரபு, பிரேம் ஜி எல்லாம் காலையில 6 மணிக்கு எந்திரிச்சு தியானம் பண்ணக்கூடிய ஆட்கள். ஆனால், அவங்களோட பெயர் வெளியில தப்பா பேசப்படுது.''