Published:Updated:

``சிட்டி, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, நார்த் ஆற்காடு... ஆல் ஆர் விஸ் ஃபார் வடிவேலு!"

தார்மிக் லீ
``சிட்டி, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, நார்த் ஆற்காடு... ஆல் ஆர் விஸ் ஃபார் வடிவேலு!"
``சிட்டி, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, நார்த் ஆற்காடு... ஆல் ஆர் விஸ் ஃபார் வடிவேலு!"

நடிகர் வடிவேலு பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

தமிழ்நாடு பல புயல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தப் புயலால் பல்லாயிரக்கணக்கான வாய்களுக்கும் வயிறுகளுக்கும் சிரித்தே வலி தந்திருக்கிறது. அதுதான், நம் 'வைகைப் புயல்' வடிவேலு. ஒரு சில கலைஞர்கள், அவர்கள் தமிழ் சினிமாவை பாக்கியமென நினைத்துப் பணியாற்றி வருவார்கள். ஆனால், இவரைப்போல மிகச் சில கலைஞர்களைப் பெற தமிழ் சினிமாதான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட இது அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் கதைதான். 'இந்த மனிதனைக் கடக்காமல் நம்முடைய ஒருநாள் நகராது' என சூடம் ஏற்றியே சத்தியம் செய்யலாம். அந்தளவுக்கு அன்றாட வாழ்வில் நம்மோடு பயணப்பட்டுக்கொண்டிருக்கும், வடிவேலுவுக்கு இன்று பிறந்தநாள்.   

``சிட்டி, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, நார்த் ஆற்காடு... ஆல் ஆர் விஸ் ஃபார் வடிவேலு!"

பொதுவாக ஒரு படத்திற்கு ஹீரோதான் எல்லாமே என்பார்கள். ஆனால், இவர் ஒரு படி மேலேறி, 'சில இடங்களில் ஹீரோக்களைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது நகைச்சுவையும், நகைச்சுவை நடிகர்களும்தான்!' என்பதை நிரூபித்துக் காட்டியவர், வடிவேலு. பல அட்ரஸ் இல்லாத படங்களுக்கு, அட்ரஸ் கொடுத்தவரும் இவர்தான். இவரை நகைச்சுவை நடிகர் என்ற வட்டத்துக்குள் சுருக்குவதும் கடினம். அதையும் தாண்டி தான் ஒரு நல்ல நடிகர் என்பதையும் பல படங்களில் நமக்குப் புரிய வைத்திருக்கிறார். படம் நெடுக குணச்சித்திர கதாபாத்திரத்தில் வடிவேலு தன்னை நுழைத்திருக்கும் படம், 'தேவர் மகன்'. இன்னமும் அந்தப் படத்தைப் பற்றி அவரே பல இடங்களில் நெகிழ்ந்துகொண்டிருப்பார். 

ஒரு படத்தில் இவரைப் பார்த்ததைப்போல், வேறு படத்தில் இவரைப் பார்க்க முடியாது. நடிப்பிலும் சரி, கெட்டப்பிலும் சரி. வெவ்வேறு பரிமாணங்களை வெளிக்காட்டக் கூடியவர். போலீஸ் கதாபாத்திரத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்தான். ஆனாலும், முந்தைய படத்தைவிட அதற்குப் பிறகு நடித்த படத்தில் வெளிப்படுத்தும் நடிப்பிலும், உடல்மொழியிலும் வித்தியாசத்தைக் காட்டியிருப்பார்.

இவர் நடிப்பில் தன்னை நுழைத்துக்கொண்ட காலகட்டமும் சற்று சுவாரஸ்யமானதே!. கவுண்டமணி - செந்தில் என இரு கூர்வாள்கள், தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த காலம். இருட்டில் இருந்த தமிழ் சினிமா நகைச்சுவையை, மெல்ல மெல்ல வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததில் இந்த இருவருக்குமே மிகப்பெரிய பங்குண்டு. இந்த இருவரும் நகமும் சதையுமாக ஒட்டிக்கொண்டு, நகைச்சுவை வாயிலாக தமிழ் சினிமாவை ஆண்டுகொண்டிருந்தார்கள். இதே காலகட்டத்தில் எவ்வித ஆரவாரமுமின்றி, 'என் ராசாவின் மனசிலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வருகை தந்தார், வடிவேலு. அதே படத்தில், 'போடா போடா புண்ணாக்கு' பாடலையும் பாடி, வெகுஜன மக்களிடையே தன்னைப் பதிவு செய்யத் தொடங்கினார். அதற்கு அடுத்த வருடமே, 'சின்னக் கவுண்டர்' படத்தில் விஜயகாந்திற்கு குடை பிடிக்கும் பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார். செந்திலோடு சேர்ந்து இவரும் கவுண்டமணியிடம் அடிவாங்கினார். 

``சிட்டி, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, நார்த் ஆற்காடு... ஆல் ஆர் விஸ் ஃபார் வடிவேலு!"

நகைச்சுவை நடிகர்களைப் பொறுத்தவரை தனித்துவம் இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். ஆனால், ஹீரோக்களைப் பொறுத்தவரை தனித்துவம்தான் அவர்களுக்குப் பலம், பலவீனம் எல்லாம். ஆரம்பத்தில் அவர்களிடம் ஈர்க்கும் அதே விஷயம், பிற்காலங்களில் கலாய்ப்பதற்காகவும் பயன்பட்டு வந்தது. உதராணத்திற்கு, 'என் நெஞ்சில் குடியிருக்கும்...' என்று விஜய் பேச ஆரம்பித்தால், சிலிர்த்துபோய் சில்லறைகளை விட்டெறிந்த கூட்டம், பின்னாள்களில் அதை வைத்தே கலாய்க்கவும் செய்தது. அதேபோல், 'என்னைய எவ்வளவோ பேர் முதுகுல குத்திருக்காங்க' என அஜித் பேசிய வசனமும், பின்னாள்களில் கலாய்க்கப் பயன்பட்டது. இந்த விமர்சனக் கனைகளும் நடிகர்களுக்குப் புதிதல்ல. ஆனால், ஒரு நகைச்சுவை நடிகர் இங்குதான் வேறுபடுவார். தனக்கென்ற தனித்துவம் இல்லாவிட்டால், காணாமல் போய்விடுவார். ஆனால், இவரோ தான் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு, தான் ஒரு நிலைக்கு வந்தவுடன் போண்டா மணி, வெங்கல் ராவ், 'கிரேன்' மனோகர், முத்துக்காளை, பெஞ்சமின், 'அல்வா' வாசு போன்ற பல நடிகர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.

'காமெடி இஸ் எ சீரியஸ் பிசினஸ்'. ஹியூமர் சென்ஸ் எனும் உணர்வு, அவ்வளவு எளிதில் ஒருவருக்குக் கிடைத்துவிடாது. அதை முழுமையாகப் பெற்ற மனிதர்களை ரசிகர்கள் கொண்டாடத் தயங்கமாட்டார்கள். சார்லி சாப்ளின், லாரல் அண்ட் ஹார்டி, பஸ்டர் கீட்டன், ஜிம் கேரி, ரோவன் ஆட்கின்சன் (மிஸ்டர்.பீன்) போன்ற பல ஹாலிவுட் கலைஞர்களில் தொடங்கி, என்.எஸ்.கிருஷ்ணன், சந்திர பாபு, நாகேஷ், மனோரமா போன்ற பல தமிழ் சினிமா கலைஞர்கள் வரை அனைவரையும் இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பல்வேறு விதத்தில், பல்வேறு தளத்தில் நகைச்சுவைகளை வழங்கிவிட்டுச் சென்ற இதே இடத்தில்தான், இப்படியும் காமெடிகளை வழங்க முடியும் என கவுன்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களும் களமாடினார்கள்.   

நகைச்சுவை செய்யும் இவர்களை வெறுப்பவர்களே இருக்க முடியாது. பல கல் நெஞ்சக்காரர்களைக் கரைத்துவிடும் மாயமந்திரங்களைக் கற்றவர்தான், வடிவேலுவும்!. துள்ளிக் குதித்தோடும் ஜல்லிக்கட்டு காளையைப்போல்தான் அக்காலகட்டத்தில் தமிழ் சினிமா திமிரியெழுந்தது. ஆனால், மதுரைக்காரன் என்பதாலோ என்னவோ தமிழ் சினிமாவின் திமிலை இறுக்கிப் பிடித்துக்கொண்டு நெடுதூரம் வெற்றி நாயகனாகப் பயணித்தார், வடிவேலு. இவரை எவ்வளவு கொண்டாடினாலும் போதவே போதாது. அத்தனை சாதனைகளை நிகழ்த்திக்காட்டிய மனிதர். பொதுவாக மற்ற இயக்குநர்களின் படங்களில் கமல் நடித்தால், அவரின் ஆதிக்கம்தான் அதில் அதிகமாக இருக்கும். 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் ஆரம்பித்து 'அன்பே சிவம்' படம் வரை... நிறைய படங்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். அதேபோல்தான் வடிவேலுவும். இவர் நடிக்கும் படங்களில், இவரின் ஆதிக்கம்தான் அதிகளவில் இருக்கும். இந்தக் காரணத்தினாலோ என்னவோ, இருவரும் பெரிதாக ஜோடி சேரவில்லை. 

``சிட்டி, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, நார்த் ஆற்காடு... ஆல் ஆர் விஸ் ஃபார் வடிவேலு!"

'வின்னர்', 'கிரி', 'தவம்', 'எங்கள் அண்ணா', 'மருதமலை', 'லண்டன்', 'ஆதவன்' என இன்னும் ஏராளமான படங்களில் வடிவேலுவை நீக்கிவிட்டு படத்தைப் பார்த்தால், சுவாரஸ்யமே இருக்காது. மேற்கூறிய படங்களில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை எடுத்துப் பார்த்தாலும், வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவர், சிரிப்பு போலீஸ், பிரபல சீட்டிங் சாம்பியன், வழக்கறிஞர், வீட்டு வேலைக்காரன், பேக்கரி ஓனர், பஸ் நடத்துநர், குங்ஃபூ மாஸ்டர், போஸ்ட்மேன் எனப் பல்வேறு வேரியஷன்களைக் காட்டி காமெடி செய்திருப்பார். இதுதான் இவரது வெற்றிக்கு முக்கியக் காரணம். இப்படிப் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்தாலும், எந்த இடத்திலும் திகட்டாமல் தன்னை மக்களிடையே அடையாளப்படுத்திக்கொண்டார். 

வடிவேலுவின் மற்றொரு சாதனை, இவர் எந்த பெரிய நடிகரோடு நடித்தாலும், அவர்களுக்கேற்ப தன்னை மாற்றியமைத்துக்கொள்வார். ரஜினி, சத்யராஜ், சரத்குமார், பார்த்திபன், பிரசாந்த், அர்ஜூன், விஜயகாந்த், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு... எனப் பல முன்னணி நடிகர்களுடன் கூட்டு சேர்ந்து சூப்பர் டூப்பர் காமெடிகளை வழங்கியிருக்கிறார். ஏன், அவர்களின் ஹீரோயிஸத்தை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு, காமெடியில் கதகளியே ஆடியிருப்பதற்குப் பல படங்கள் சாட்சி. இவரது வசனங்களுக்கு 'வடிவேலு பொன்மொழிகள்' என்றே பெயர் சூட்டலாம். பேச்சு வழக்கு வார்த்தைகள்கூட இவர் வாயிலிருந்து வரும்போது, டிரெண்டிங் வார்த்தைகளானது. எந்தவொரு சூழலுக்கும் அதைப் பொருத்திப் பார்த்ததுதான், கூடுதல் சிறப்பு. வாயைத் திறந்து பேசாமல் உடல்மொழியில் நடிப்பதுகூட நம்மை குபீரென சிரிக்க வைக்கும். இந்த இரண்டும்தான் 'மீம்' என்ற விஷயத்துக்கே வழிவகுத்தது. பல மீம் கிரியேட்டர்களையும், மீம் பேஜ்களையும் உருவாக்க வழிவகுத்தவர், வடிவேலு. சுருங்கச் சொன்னால், 'மீம் கிரியேட்டர்களின் கடவுள்' என்றுகூட வடிவேலுவிற்குப் பெயர் சூட்டலாம். மீம் கிரியேட்டர்களும் இவரை குல தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். 'வடிவேலு ஃபார் லைஃப்' என்று புகழாரமும் சூட்டியிருக்கிறார்கள். இவையனைத்திற்கும் வடிவேலு தகுதியுடைய ஆள்தான். 

``சிட்டி, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, நார்த் ஆற்காடு... ஆல் ஆர் விஸ் ஃபார் வடிவேலு!"

இப்படி இவர் வாயைத் திறந்து பேசினால், நாம் வாயை மூடாமல் சிரித்துக்கொண்டிருக்கலாம். தற்போதுதான் டிவி பார்ப்பது குறைந்திருக்கிறது. முன்பெல்லாம் இரவு 10 மணிக்கு மேல் ஆனாலே காமெடி சேனலில் இவரது காமெடிகள் சூழ் உலகாகத்தான் ஒட்டுமொத்த தமிழ்நாடுமே இயங்கிக்கொண்டிருக்கும். இந்தக் கட்டுரையை அவர் படிக்க நேர்ந்தால், 'டேய்... என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே' எனக் கேட்டாலும் கேட்பார். பத்தி பத்தியாக டைப் பண்ணி 'நானும் எவ்வளவு நேரம்தான் கை வலிக்காத மாதிரியே நடிக்கிறது?!'. நீங்களும் 'வொய் பிளட்... ஹான் சேம் பிளட்..!' எனக் கலாய்க்க வேண்டாம். 'சிட்டி, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, கோயம்பத்தூர், நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு, எப்.எம்.எஸ் வரைக்கும் பார்த்த நம் தலைவனுக்கு நீங்களும் கமென்ட் டப்பாவில் வாழ்த்துகள் சொல்லலாமே?!

அடுத்த கட்டுரைக்கு