Published:Updated:

சுஜாவோட கடைசிப் பேச்சுலர் பிறந்தநாள் இதான்... சீக்கிரமே விசேஷம்!'' - சிவாஜி பேரன் சிவக்குமார்

சுஜாவோட கடைசிப் பேச்சுலர் பிறந்தநாள் இதான்... சீக்கிரமே விசேஷம்!'' - சிவாஜி பேரன் சிவக்குமார்
சுஜாவோட கடைசிப் பேச்சுலர் பிறந்தநாள் இதான்... சீக்கிரமே விசேஷம்!'' - சிவாஜி பேரன் சிவக்குமார்

`பிக் பாஸ்' போட்டி மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர், சுஜா வருணி. இன்று சுஜாவுக்குப் பிறந்தநாள். அவருக்கு சர்ப்ரைஸ் செய்யும் விதமாக வருங்கால கணவர் சிவக்குமார், தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், நவம்பர் 19-ம் தேதி சுஜாவுக்கும் தனக்கும் திருமணம் நடக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்தும் அவர்களின் காதல் குறித்தும் அறிய, அவருடன் பேசினேன்.

``எனக்கு எங்க அம்மாதான் உயிர். சின்ன வயசிலிருந்தே எனக்கு என்ன செட்டாகும்னு பார்த்துப் பார்த்துப் பண்ணுவாங்க. எல்லா விஷயத்திலும் எனக்கு அம்மாதான் ஃபுல் சப்போர்ட். எல்லா ஆண்களுக்குமே அம்மா மாதிரி மனைவி அமையணும்னு ஆசை இருக்கும். எனக்கும் அப்படித்தான். என் அம்மாவே இன்னோர் உருவமா சுஜா மூலமா கிடைச்ச உணர்வு. அம்மா எப்படி என்னைப் பார்த்துக்கிட்டாங்களோ அதே கேரிங்கை சுஜாகிட்டேயும் பார்த்தேன்'' என்று ஆரம்பிக்கும்போதே காதலில் உருகுகிறார் மனிதர். 

`முதலில் யார் காதலைச் சொன்னது?' எனக் கேட்டதும் சிரிக்கிறார்.

``ஆரம்பத்திலேயே அவங்க மேலே எனக்குக் காதல் இருந்துச்சு. ஆனால், ஃப்ரெண்ட்டாகவே பேசிட்டிருந்தோம். நான்தான் முதல்ல லவ் ப்ரபோஸ் பண்ணினேன். அப்போவெல்லாம் சுஜாவுக்கு எதுக்கெடுத்தாலும் கோபம் வரும். நான் லவ்வைச் சொன்னதும், `செருப்பு பிஞ்சிடும்'னு திட்டிப் போனை வெச்சுட்டாங்க. நான் படிச்சதெல்லாம் பசங்க ஸ்கூல்ல. அதனால், பொண்ணுங்ககிட்ட பேசவே பயப்படுவேன். சுஜா வேற திட்டினதில் அப்புறம் அவங்க பக்கமே தலை வைக்கலை. கொஞ்ச நாள் கழிச்சு `ஃப்ரெண்ட்டாவே இருப்போம்'னு பேச ஆரம்பிச்சோம். அவங்களுக்கும் என்கிட்ட பேசாம இருக்க முடியலை. நான் பேசவும் அவங்களும் பேசிட்டாங்க. மறுபடியும் லவ் ப்ரபோஸ் பண்ணினேன். உடனே ஓகே சொல்லிட்டாங்க. இப்படித்தாங்க எங்க காதல் ஆரம்பிச்சது'' என்கிறார் சிவக்குமார்.

``11 வருட காதலில் சண்டையே வந்ததில்லையா சார்?''

``அவங்களும் நானும் ஒரே மாதிரிதான். ரெண்டு பேருக்கும் அதிகமாகக் கோபம் வரும். ஆரம்பத்தில் அடிக்கடி சண்டைபோடுவோம். லவ்வர்ஸுக்குள் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகள் எல்லாமே எங்களுக்குள்ளும் இருந்துச்சு. 5 வருஷத்துக்கு முன்னாடி பிரேக்அப் லெவலுக்குப் போயிட்டோம். 8 மாசம் பேசாமலேயே இருந்தோம். அவங்க பிறந்தநாள் அன்னைக்கு மீட் பண்ணலாம்னு வடபழனி கோயிலுக்கு வரச் சொன்னேன். அங்கே என்னைப் பார்த்ததும் எமோஷனலாகி அழுதுட்டாங்க. நானும் அழுதுட்டேன். இனிமே நாம பிரியவே கூடாதுன்னு சத்தியம் செஞ்சுகிட்டோம். அப்புறம் ஏதாவது சண்டை வந்தாலும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்க ஆரம்பிச்சுட்டோம்.

சுஜாவுக்கு நடிப்புத்திறமை இருக்கு. அவங்களால் நடிப்பில் பெரிய இடத்தைத் தொட முடியும்னு அடிக்கடி சொல்வேன். கல்யாணத்துக்கு அப்புறம் நடிக்கிறது அவங்க விருப்பம். என்னைப் பொறுத்தவரை, திருமணமும் குடும்பமும் வேற; கேரியர் வேற. யாருக்காவும் கேரியரை விட்டுடக் கூடாது. இப்போ பெயரிடப்படாத படத்தில் நான் நடிச்சுட்டிருக்கேன். பெரிய பெரிய நடிகர்களுடன் களம் இறங்க, காமெடி என்டர்டெயினரா ஒரு படம் ரெடியாகிட்டிருக்கு.

சுஜா சின்ன வயசிலிருந்தே ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க. அப்பா இல்லாத ஃபீலை, தினமும் அனுபவிக்கிறாங்க. என்னால் முடிஞ்ச அளவுக்கு அவங்களைச் சந்தோஷமா வெச்சுப்பேன். அவங்க ரொம்ப ஸ்வீட்டான பர்சன். அதேநேரம் போல்டான கேரக்டர். ஹார்டு ஒர்க் பண்றதுக்கு யோசிக்கவே மாட்டாங்க. மூணு வருஷத்துக்கு முன்னாடியே எங்களுக்குக் கல்யாணம் ஆகியிருக்கணும். என் அம்மா தவறிட்டாங்க. அவங்க இழப்பிலிருந்து வெளியில வர ரொம்பவே கஷ்டப்பட்டேன். இதுக்கப்புறமும் தள்ளிப்போட வேண்டாம்னு மேரேஜ் பிக்ஸ் பண்ணினோம்'' என்கிறார் உற்சாகத்துடன்.

``சுஜாவுக்கு உங்க பிறந்தநாள் சர்ப்ரைஸ் என்ன?''

``எனக்கு ஷூட் இருக்குன்னு அவங்களுக்குத் தெரியும். அதனால், பிறந்தநாளுக்கு வரமாட்டேன்னு நினைச்சுட்டிருந்தாங்க. நான் நைட்டே கேக் வாங்கிட்டு அவங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் உட்கார்ந்துட்டேன். நான் வருவேன்னு அவங்க எதிர்பார்க்கவே இல்ல. சரியா 12 மணிக்குப் பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட கேக் கொடுத்து அனுப்பி, கேக் கட் பண்ணும்போது கத்தி வீட்டுக்குள்ளே நுழைஞ்சேன். என்னைப் பார்த்ததும் ரொம்ப ஹேப்பி ஆகிட்டாங்க. நான் சின்னச் சின்னதா நிறைய சர்ப்ரைஸ் பண்ணுவேன். `புதுப் பொண்ணு பேச்சுலரா கொண்டாடும் கடைசிப் பிறந்தநாள் வாழ்த்துகள்'னு சொன்னதும் வெட்கப்பட்டாங்க. இப்போ, கல்யான வேலைகள் ஆரம்பிச்சாச்சு. பத்திரிகை, டிரஸ்னு பரபரப்பா இருக்கோம். எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க. உங்க எல்லோரின் ஆசிர்வாதமும் எங்களுக்குத் தேவை'' எனப் புன்னகைக்கிறார் சிவக்குமார்.