
கல்யாணத்துக்கு ரெடி... பொண்ணு இன்னும் முடிவாகலை!கமலைப் பார்த்தாச்சு, ரஜினியையும் சந்திப்பேன்நடிகர்களுக்குச் சம்பளத்தைத் தூக்கிக் கொடுக்காதீங்க!ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்
‘‘நூறு ரூபாய் செலவுல விவசாயி விதைக்கிறான். அதைவிட நூறு மடங்கு விலையில் அந்த விளைபொருளை நுகர்வோர் வாங்குறான். ஆனா, விவசாயிக்கு அசல்கூட மிஞ்சுறது இல்லை. இன்னைக்கு உள்ள தயாரிப்பாளர்களுக்கும் அந்த விவசாயிகளோட நிலைமைதான். தயாரிப்பாளர்கள் தயாரிக்கிற சினிமா, அவங்களைத்தவிர இன்னைக்கு மற்ற எல்லாருக்கும் பயன்தருது. அந்தப் பலன் தயாரிப்பாளருக்கும் கிடைக்க வழிவகை செய்றதுக்காக நாங்க எடுத்துவைக்கிற கடைசி அடிதான் இந்த வேலைநிறுத்தம்” - விஷாலின் வார்த்தைகளில் அத்தனை ஆதங்கம். ‘இரும்புத்திரை’ ரிலீஸுக்கு ரெடி. ‘சண்டக்கோழி-2’ படத்தின் 60 சதவிகித படிப்பிடிப்பு முடிந்தது. இடையில் மருத்துவச்சிகிச்சை... ஆனாலும் சங்க நிர்வாகிகளுக்கு வேலைநிறுத்தத்தின் அவசியத்தைப் புரியவைக்கும் கூட்டங்கள், விவாதங்கள் என்று பரபரப்பாக இருந்தவரை ஒரு மாலையில் சந்தித்தேன்.
“தயாரிப்பாளர் சங்கம் Vs க்யூப் நிறுவனம் என்றிருந்த இந்தப் பிரச்னை இன்னைக்கு வேலை நிறுத்தம் வரை வளர்ந்திருக்கே?”
“ஒரு குறிப்பிட்ட வங்கியில் ஒப்பந்தம் போட்டு மாதத்தவணையில் நான் ஒரு கார் வாங்குறேன். அந்தத் தவணைத் தொகை முழுசா கட்டி, அந்தக் கார் எனக்குச் சொந்தமான பிறகும் தொடர்ந்து தவணை கட்டிட்டே இருந்தா, நான் முட்டாளா இல்லையா? டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர்களிடம் கடந்த 12 வருஷங்களுக்கும் மேலாக அதைத்தான் நாங்க பண்ணிட்டுருக்கோம். தமிழ்நாட்டில் மொத்தம் 1112 தியேட்டர்கள். அதில் ஈ சினிமா, டி சினிமானு ஒருசில முறைகள்ல படங்கள் திரையிடப்படுது. அதுக்காக தியேட்டர் ஓனர்கள் க்யூப் உள்ளிட்ட சில சர்வீஸ் புரொவைடர்கள்ட்ட அக்ரிமென்ட் போட்டு புரொஜெக்டர்களை நிர்மாணிச்சிருக்காங்க. 3K, 4Kனு புரொஜெக்டர்களோட தரத்தைப் பொறுத்து அதோட விலை ஆறு லட்சத்துல இருந்து 20 லட்சம் வரை இருக்கு. இப்படி தியேட்டர்கள்ல புரொஜெக்டர்களுக்குப் பண்ணின செலவுக்காக நாங்க ஏன் தவணை மாதிரி ஒவ்வொரு படத்துக்கும் பணம் கட்டணும்? இனியும் தொடர்ந்து கட்டக் கூடாது என்பதுதான் எங்க பக்கம் உள்ள நியாயம். தவிர இப்ப சன்செட் கிளாஸ்னு இன்னொரு டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர் எங்ககிட்ட வந்திருக்காங்க. ‘அதே புரொஜெக்டர், அதே சேவை. ஆனால், பாதி விலை கொடுத்தா போதும். அதுவும் மூணு வருஷத்துக்கு மட்டுமே. பிறகு விபிஎஃப் கட்டணமே தேவையில்லை’னு சொல்றாங்க.”

“உங்களோட வேற கோரிக்கைகள் என்னென்ன?”
“டிக்கெட் விற்பனையைக் கணினிமயமாக்கணும். ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுல எத்தனை பேர் படம் பார்த்திருக்காங்க, எவ்வளவு வசூல்னு தெரியணும். அப்பத்தான் உண்மையான நிலவரத்தைத் தெரிஞ்சுக்க முடியும். இதன்மூலம், ‘விஷால், உன் படத்துக்கு இவ்வளவுதான் வசூல். அதனால உனக்கு இவ்வளவுதான் சம்பளம்’னு சொல்லலாம். இல்ல, ‘என் வசூல் இவ்வளவு இருந்திருக்கு. ஆனா இத்தனை நாளா அதை மூடிமறைச்சு குறைச்சுக் காட்டியிருக்கீங்க. அதனால என் சம்பளத்தை உயர்த்துறேன்’னு நானும் சொல்லலாம். இப்படிச் சரியான விவரங்கள் எல்லாமே ஆவணங்கள்ல இருந்துச்சுன்னா, நாங்க ஏன் ஃபைனான்ஸியர்கள்ட்ட போய் வட்டிக்குப் பணம் வாங்குறோம்? இதை வெச்சு வங்கியிலயே கடன் வாங்கிப் படம் பண்ணுவோமே?”
“இதுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் என்ன சொல்றாங்க?”
“ `நிச்சயம் கனிணிமயமாக்குறோம்’னு சொல்றாங்க. ஆனா, செய்ய மாட்டேங்குறாங்க. அதேபோல டிக்கெட் விலையைக் குறைக்கணும் என்பதும் எங்க முக்கியமான கோரிக்கை. ஜிஎஸ்டி, உள்ளாட்சி வரினு இரட்டை வரி விதிப்புக்குப்பிறகு கடந்த மூணு மாசங்களா தியேட்டர்களுக்கு வர்ற ரசிகர்கள் குறைஞ்சிட்டாங்க. ஒரு பெரிய ஹீரோ படத்துக்கும் நேற்று அறிமுகமான ஹீரோ படத்துக்கும் அதே 150 ரூபாய் டிக்கெட் வெச்சா ரசிகர்கள் எப்படி தியேட்டருக்கு வருவாங்க... சின்ன பட்ஜெட்ல வர்ற நல்ல படங்கள் எப்படி ஓடும்!? சின்னபட்ஜெட்னா அதுக்கு 50 ரூபாய்னு டிக்கெட் ரேட்டை கம்மி பண்ணுங்க. உதாரணமா என் படம் ‘இரும்புத்திரை’க்கு 80 ரூபாய்னு ஃபிக்ஸ் பண்ணுங்க போதும். இப்படிக் குறைச்சா 100 பேர் படம் பாக்குற இடத்துல 300 பேர் வருவாங்க. சென்னை மல்டி ஃப்ளெக்ஸ்ல விக்கிற அதே ரேட்ல தேனியில உள்ள ஒரு தியேட்டர்லயும் டிக்கெட் விக்கிறது அநியாயம்தானே? இதுக்குமேல ஆன்லைன்ல புக் பண்றவங்களுக்கு இன்னும் கூடுதலா 30 ரூபாய் பிளஸ் ஜி.எஸ்.டி வசூல் பண்றதெல்லாம் மிகப்பெரிய கொடுமை”
“இந்த வேலைநிறுத்தம் எப்ப முடிவுக்கு வரும்?”
“சீக்கிரமே... இன்னைக்கு அமேஸான், நெட்ஃபிளிக்ஸ், டிடிஎச், ரிலீஸ் அன்னைக்கே வீட்ல இருந்தே படம் பார்க்க ஹோம் வீடியோனு சினிமாவைக் கொண்டுபோய்ச் சேர்க்க வெவ்வேறு வகையான மீடியம்கள் வந்துடுச்சு. தியேட்டர் ஓனர்கள் எங்களை அந்த மீடியம்களை மட்டுமே நாடுற அளவுக்கு இக்கட்டான சூழலுக்குத் தள்ளமாட்டாங்கனு நம்புறோம்.”
“நல்லா ஓடின படங்களே தயாரிப்பாளருக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்குனு சொல்றாங்களே?”
“உண்மைதான். தெளிவில்லாமல் படம் எடுக்க வர்றதுதான் அதுக்குக் காரணம். நாளைக்கே 15 கோடிகூட எனக்கு சம்பளமா கேட்பேன். காசு இருக்கிறதால தூக்கிக் கொடுத்துடக் கூடாது. இவருக்கு இவ்வளவு கொடுத்தா அது திரும்பி வருமானு அலசிப் பார்க்கணும். 60 நாள்தான் ஷூட்டிங், இவ்வளவுதான் செலவு பண்ணமுடியும். ஹீரோவுக்கு இவ்வளவுதான் மார்க்கெட். இவ்வளவுதான் சம்பளம் தரமுடியும்னு டைரக்டரும் தயாரிப்பாளரும் திட்டம் போட்டுட்டுத்தான் படப்பிடிப்புக்கே போகணும். அப்பத்தான் தெளிவு இருக்கும்.”

“ `நடிகர் சம்பளம் கேட்கத்தான் செய்வார். நீங்க புரிஞ்சு பண்ணுங்க’னு சொல்றீங்க. ஆனா, தொடர்ந்து படம் பண்ணணும்னு அதிக சம்பளம் கொடுத்து ஹீரோவைத் தக்கவெச்சுக்கத் தயாரிப்பாளர்கள் முயற்சி பண்றாங்களே?”
“பழைய பட பாக்கியிலிருந்து தற்காலிகமாக விடுபடத்தான் தயாரிப்பாளர்கள் உடனடியா தேதி கொடுங்கனு பெரிய நடிகர்களை அதிக சம்பளத்துக்கு புக் பண்றாங்க. திடீர்னு ஒரு புராஜெக்ட் ஆரம்பிச்சு ஒரு வெள்ளிக்கிழமை அதை ரிலீஸ் பண்ணி எப்படியாவது அதை ஓட வெச்சு எப்படியாவது முந்தின கடனை அடைச்சிடணும்... அப்படித்தான் இங்க ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு ரிலீஸ் நடக்குது. ஆனால், நடிகர்கள் சம்பளம் உள்பட அனைத்தும் வெளிப்படையா பேசவேண்டிய சூழல்ல இருக்கோம். பேசுவோம்”
“50 ஆண்டுகளைத் தாண்டி சினிமாவில் தொடரும் சீனியர் கலைஞர் கமல். அரசியலுக்குப் போயிருக்கார். சமீபத்துல அவரை சந்திச்சுட்டு வந்தீங்க. என்ன சொன்னார்?”
“வேலை நிறுத்தத்தில் என்னென்ன விஷயங்களை முன்னிலைப்படுத்தறீங்கனு கேட்டார். கோரிக்கைகளைச் சொன்னோம். அவர் அட்வான்ஸ் திங்கிங் உள்ளவர். விஸ்வரூபம் வந்த சமயத்திலேயே டிடிஎச் வரணும்னு சொன்னவர். அதுக்கு முன்னாடியே அவர் அப்படி யோசிச்சிருக்கார். அன்னைக்கு அவரைத் திட்டித்தீர்த்தாங்க. ஆனால், அவர் சொல்வதில் எப்பவுமே ஆழமான அர்த்தம் இருக்கும். அவரை அரசியல்வாதின்னு போய்ப் பார்க்கலை. தமிழ் சினிமாவின் லெஜெண்டு, அவரிடம் சொல்லவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கு. ரஜினிசாரையும் பார்ப்பேன். அவரிடமும் சொல்வோம்.”
“அரசே ஏகப்பட்ட பிரச்னையில் இருக்கு, அவங்க எந்தளவுக்கு இதைத் தீர்க்க முன்வருவாங்கனு நினைக்கிறீங்க?”
“பார்க்கிங் கட்டணம் குறைப்பு அரசு சொன்னதால்தானே நடந்தது. அதேபோல இந்த விஷயத்திலும் அரசு தலையிட்டு ‘கம்ப்யூட்டரைஸிங் டிக்கெட்’ பண்ணியே ஆகணும்னு விதிமுறை போடணும். ஜிஎஸ்டி, லோக்கல்பாடி வரினு இரட்டை வரிவிதிப்பு எந்த மாநிலத்திலும் இல்லாத விஷயம். நாங்க கட்டமாட்டோம்னு சொல்லலை. கட்ட முடியாத சூழல்ல இருக்கோம்னு சொல்றோம். அதையும் மக்கள்மேல திணிச்சு சினிமாவை அழிச்சிடக் கூடாது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி இருவரோடும் தொடர்பில் இருக்கோம். முதல்வரையும் சந்திப்போம். ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் புழங்குற இண்டஸ்ட்ரி. மிகப்பெரிய தொகை அரசுக்கு வரியா போயிட்டிருக்கு. அவங்களுக்கும் தெரியும். நிச்சயம் வருவாங்க, பண்ணுவாங்க.”
“ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்ல உங்க வேட்புமனு நிராகரிப்புக்குப்பிறகு எந்தளவுக்கு அரசியல்ல ஈடுபாட்டோட இருக்கீங்க?”
“ஒரு எம்.எல்.ஏவைவிட அதிகமா சம்பாதிக்கிறேன், அவர்களைவிட அதிக பாப்புலாரிட்டியோட இருக்கேன். இருந்தும் மக்களின் குரலை எதிரொலிக்கணும்னு நினைச்சேன். போனேன். 2015 வெள்ளத்திலிருந்து வடசென்னையைக் கவனிக்கிறேன். அங்க உள்ள மக்களோட பிரச்னைகள் எனக்குத் தெரியும். உதாரணம், அங்க உள்ள மீன்மார்க்கெட்... அவ்வளவு கேவலமா இருக்கும். நிறைய பெண்கள் அங்க வியாபாரம் பண்றாங்க. ஆனால், குடிக்க நல்ல தண்ணி வசதி கிடையாது. டாய்லெட், பாத்ரூம் வசதி கிடையாது. இன்னைக்கு என்னை அனுமதிச்சாங்கன்னா ஒரே நாள்ல அந்த மார்க்கெட்டைச் சுத்தம் பண்ணிடுவேன். ஆனால், அரசைச் செய்ய வைக்கணும். என்னைவிட அந்தத் தொகுதியோட தேவையை அறிஞ்சவர் தினகரன் சார். நிச்சயம் நல்லது செய்வார். கட்சி ஆரம்பிப்பேனா இல்லையாங்கிற என் அரசியல் நிலைப்பாட்டை 2019 தேர்தல் காலகட்டத்துல சொல்லுவேன்.”
“சினிமா டூ அரசியல் வருகை ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு அதிகரிச்சுருக்கு. அவங்க இல்லை என்ற தைரியம்தான் அதுக்குக் காரணமா?”
“வெற்றிடம்னு ரஜினி சார் சொன்னாரே, அதுதான் காரணம். அதுதான் என் பதிலும். உண்மையிலேயே வெற்றிடம் இருக்கு. கலைஞரய்யா இருக்கும்போது ஜெயலலிதாம்மா வந்தாங்க. கலைஞர்-ஜெயலலிதானு இருவரும் சரிசமமா இருக்கும்போது விஜயகாந்த் அண்ணன் வந்தார். ஒவ்வொரு காலகட்டத்துக்கும் இப்படி நடந்துகிட்டே இருக்கும். கமல் சார், ரஜினி சார் வர்றதும் அப்படித்தான். அம்மா உயிரோடு இருந்திருந்தா கண்டிப்பா இவங்க வந்திருக்க மாட்டாங்க. வெற்றிடம் இருக்கும்போது அதை நிரப்ப முன்வர்றது தவறில்லையே. இருவரும் மக்களின் நம்பிக்கையை உணர்ந்து நிச்சயம் நல்லது செய்வாங்க.”
“திமுகவில் கலைஞரின் ஓய்வுக்குப் பிறகு ஸ்டாலின் அந்த இடத்தைத் தன் தலைமையால் நிரப்புறார். அப்படி இருக்கையில் வெற்றிடம்னு எப்படிச் சொல்ல முடியும்?”
“எல்லாமே மக்கள் தீர்மானிக்கிறதுதான். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஐடியாலஜி இருக்கும். ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல்... தமிழ்நாட்டின் கேம் சேஞ்சரா நிச்சயம் இருக்கும். ‘போதும்டா சாமி’னு மக்கள் வெறுப்பில் இருப்பது, அவங்க புது அரசியல்வாதிகளை வரவேற்பதில் இருந்தே தெரியுது.”

“நடிகர் சங்கக் கட்டடத்தைக் கட்டி முடிச்சபிறகுதான் கல்யாணம்னு சொன்னீங்க. கட்டட வேலைகள் எந்தளவுல இருக்கு?”
“வரும் டிசம்பர் அல்லது அடுத்த வருஷ ஜனவரியில் நடிகர் சங்கக் கட்டடத் திறப்பு விழா இருக்கும். கலைநிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர்கள் கொடுத்த பணத்தைவச்சு இப்ப பேஸ்மென்ட் தாண்டி கட்டடம் அடுத்த லெவலுக்கு வந்துட்டுருக்கு. ஆடிட்டோரியம், பெரிய கல்யாண மண்டபம், ஒரு ஆம்பி தியேட்டர்னு ஒரு கலாசார மையமா இருக்கணும்னு நினைச்சு இதைக் கட்டிட்டிருக்கோம். இதன்மூலமா வர்ற வருமானத்தை வெச்சு முதிர்ந்த நாடக, சினிமா கலைஞர்களுக்குத் தர்ற பென்ஷனை அதிகமாக்கப் போறோம். கட்டடம் திறந்தபிறகு வர்ற முதல் முகூர்த்தத்துல அங்கே என் கல்யாணம் நடக்கும்.”
“கல்யாணப்பெண்ணை நீங்களே பாக்குறீங்களா, வீட்ல பாக்குறாங்களா?”
“வீட்ல பொண்ணு பார்த்துப் பார்த்து டயர்டாகிட்டாங்க. என்னை மற்ற கல்யாண ரிஷப்ஷனுக்குக் கூப்பிடுறாங்கன்னா, எனக்கு அவங்க பார்த்திருக்கிற பெண் அந்த இடத்துல எங்கயோ இருக்காங்கனு புரிஞ்சுப்பேன். ஒரு கட்டத்துல, ‘நடிகர் சங்கக் கட்டடம் கட்டி முடிக்கிற வரை என்னை விட்டுடுங்க’னு நானே சொல்லிட்டேன். இதை நீங்க பைத்தியக்காரத்தனமா நினைக்கலாம். `பெர்சனல் லைஃப் பாதிக்குது.
40 வயதாகுது’னு சொல்றாங்க. நோ ப்ராப்ளம். அந்தக் கட்டடத்துலதான் என் கவனம்.”
“கல்யாணத்துல ஆர்யா உங்களை முந்திடுவார்னு நினைக்கிறோம். போட்டி வெச்சுப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறாரே?”
“அந்த நிகழ்ச்சி மூலமா ஆர்யா கல்யாணம் பண்ணுவானானு தெரியலை. அப்படிப் பண்ணிட்டா நல்லது. ஆனா ஒரே விஷயம், கோட்டையெல்லாம் அழி. மறுபடியும் 16 பெண்களைத் தேர்ந்தெடுத்து அதுல இருந்து ஒரு பெண்ணை செலக்ட் பண்றேன்னு அவன் ஆரம்பிக்காமப் பார்த்துக்கணும்.”
“மீண்டும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுறீங்களா?”
“நிச்சயமா. கட்டடம் கட்டி முடிக்கிறது எங்களோட பொறுப்பு. அதைப் பாதியில் விட்டுட்டு ஓட முடியாதே. தனியா ஓடினா பிராக்டிஸ். சேர்ந்து ஓடினாதான் காம்படிஷன். அது யாரா இருந்தாலும் சரி. வாங்க. ஒரு கை பார்த்துடலாம்!”
