Published:Updated:

இந்தியாவுக்கு இன்னொரு ஆஸ்கர்..! ஈஷா ஷுக்லாவின் க்யூட் ‘பரிசு’

இந்தியாவுக்கு இன்னொரு ஆஸ்கர்..! ஈஷா ஷுக்லாவின் க்யூட் ‘பரிசு’
இந்தியாவுக்கு இன்னொரு ஆஸ்கர்..! ஈஷா ஷுக்லாவின் க்யூட் ‘பரிசு’

இந்தியாவுக்கு இன்னொரு ஆஸ்கர்..! ஈஷா ஷுக்லாவின் க்யூட் ‘பரிசு’

இந்தியாவுக்கு இன்னொரு ஆஸ்கர் கிடைத்திருக்கிறது. இந்த முறை... ஜுனியர் ஆஸ்கர். அதாவது ஸ்டூடன்ட் அகாடமி அவார்ட். ஆரவாரமில்லாமல், ‘இந்தியாவின் பெருமை’ போன்ற அடைமொழிகள் இல்லாமல், சர்வதேச அரங்கில் இந்த நிமிடம் இந்தியர்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் பல்வேறு பெரும் சாதனைகளின் ஒரு துளி சான்றாக மிளிர்கிறார்,  22 வயது ஈசா ஷுக்லா.

உலகக் கவனம் ஈர்ப்பதால், திரைப்படத் துறையினரின் உச்சபட்ச விருதாகக் கருதப்படுவது, ஆஸ்கர் விருதுகள்.  அதே ஆஸ்கர் கமிட்டி, கடந்த 45 ஆண்டுகளாக 'ஸ்டூடன்ட் அகாடமி அவார்ட்ஸ்' எனப்படும் மாணவர் அகாடமி விருதுகளை வழங்கிக்கொண்டிருக்கிறது.
அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் அமைப்பின் சார்பாகக் கடந்த 1973 முதல், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான அகாடமி விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அமெரிக்க திரைப்படக் கல்லூரிகள் மற்றும் சர்வதேச திரைப்படக் கல்லூரிகளுக்கும் சேர்த்து, 7 பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள்  அறிவிக்கப்படுகின்றன. வெற்றிபெறும் படங்கள், 2019 -ம் ஆண்டின் அகாடமி விருது போட்டியில் கலந்துகொள்ளத் தகுதிபெறும் என்பது கூடுதல் சிறப்பு.

2018-ம் ஆண்டுக்கான 45-வது ஸ்டூடன்ட் அகாடமி அவர்ட்ஸ் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள  புகழ்பெற்ற கோல்ட்வின் திரையரங்கில், அக்டோபர் 11-ம் தேதி நடைபெற்றது. இதில், சர்வதேச அளவில் (டொமெஸ்டிக்) அமெரிக்க திரைப்படக் கல்லூரிகளுக்கான பிரிவில், சிறந்த அனிமேஷன் படமாக ஈசா ஷுக்லா எழுதி இயக்கிய,  Re-Gifted (ரீ- கிஃப்டட்) என்ற 2.30 நிமிட படம் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

ஈசா ஷுக்லா, நவி மும்பையில் பிறந்தவர். அப்பா என்ஜினீயர், அம்மா ஹவுஸ் வைஃப். கலைத் துறை தொடர்பு பெரிதும் இல்லாத குடும்பத்தைச் சார்ந்தவர். சிறு வயதில்  கார்ட்டூன் மீதிருந்த காதலையே தன் கனவாக்கி, இன்று தன் முதல் முயற்சியிலேயே முத்திரை பதித்திருக்கிறார். பள்ளிப் படிப்பை நவி மும்பை டெல்லி பப்ளிக் ஸ்கூலில் முடித்துவிட்டு, அமெரிக்காவின் ரிங்லிங் ஆர்ட்ஸ் அண்டு டிசைன் கல்லூரியில்  அனிமேஷன் மேற்படிப்பு படிக்கிறார்.

வசனங்கள் இல்லாமல் மெல்லிய இசையுடன் நகரும் 2.30 நிமிட Re-Gifted படம், மனதுக்குள் உண்டாக்கும் தாக்கம் அபாரமானது. அலங்காரமாக இருக்கும் ஒரு பரிசுப் பொருள் அது. அதற்கு உயிர் இருப்பது போல சித்தரிக்கப்படுகிறது. அழகாக இருக்கிறதே என அது பரிசளிக்கப்படுகிறது. அங்கு அது பயன்படுத்தப்படாமல், மீண்டும் வேறொவருக்கு பரிசளிக்கப்படுகிறது. அப்படியே அது கை மாறி, இடம் மாறிக்கொண்டே போகிறது. அல்லது ஸ்டோர் ரூம் இருளில் முடங்கியிருக்கிறது. எந்த அர்த்தமும் இல்லாத அந்த பரிசுப் பொருளின் பயணம், ஓர் இடத்தில் தடைபடுகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பது, மனதை அழுத்தமாகத் தைக்கும் உண்மை!  

போட்டியில் கலந்துகொண்ட 1582 படங்களில் இருந்து, வெற்றியாளராகத் தேர்வுசெய்யப்பட்ட 19 பேரில், ஒரே இந்தியர் என்ற பெருமையைத் தாங்கி நிற்கும்  ஈசா ஷுக்லாவிடம் பேசியதிலிருந்து...

மாணவராக இருக்கும்போதே அகாடமி விருது எப்படி உணர்கிறீர்கள் ? 

“என்னுடைய மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்வது கடினம். மிகவும் பரவசமாக இருக்கிறேன். திரைப்படத் துறையின் லெஜண்ட்டுகளோடு ஒரு மேடையில் நிற்பதைப் பெருமையாக உணர்கிறேன். இது, நான் எதிர்பார்க்காதது.”

இந்த வெற்றியை எப்படிக் கொண்டாடுகிறீர்கள்?

“ என் குடும்பத்தார், நண்பர்கள், கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள் அனைவரும் என்னுடன் இணைந்து இந்த வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். சமீபத்தில், அகாடமி அமைப்பு ஏற்பாடுசெய்திருக்கும் 'அகாடமி வாரம்' என்ற நிகழ்ச்சியில், என் சக வெற்றியாளர்கள் 19 பேருடன் கலந்துகொண்டேன். நிறைய அகாடமி உறுப்பினர்களைச் சந்தித்தது, ஹாலிவுட் ஸ்டூடியோக்களைப் பார்வையிட்டது என அது பெரும் அனுபவமாக இருந்தது. அந்த அனுபவங்களைத்தான்  கொண்டாட்டமாக நினைக்கிறேன்!’’  

அனிமேஷன் துறையில் ஆர்வம் எப்படி வந்தது ?

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான், என் தாத்தா, பாட்டி செல்லத்தில்  நிறைய டி.வி பார்ப்பேன், டிஸ்னி திரைப்படங்கள், கார்ட்டூன்கள், அனிமேஷன் திரைப்படங்களெல்லாம் பார்த்துதான் வளர்ந்தேன். படங்களில் பார்ப்பதை அப்படியே வரைந்து பார்ப்பதும் என் விருப்பமான பொழுதுபோக்கு. பெரிய கருத்துகளை  அனிமேஷன் திரைப்படங்கள்  எளிமையாகச் சொல்லிவிடுவது ஆச்சர்யமாக இருந்தது. அதனால்தான்,  அதேபோல என் கதைகளை அனிமேஷன் வழியாகச் சொல்ல விருப்பப்பட்டேன்.”

வெற்றிபெற்ற   ரீ-கிஃப்டட் குறும்படம் பற்றி..? 

“எமோஷனலாக அனைவராலும் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகின்ற கதையாக என்னுடையது இருக்க வேண்டும் என்று நினைத்தேன். கதை தேர்வுக்காக நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது, இங்கு கிருஸ்துமஸ் சமயம், ஒருவருக்கு அளிக்கும் கிருஸ்துமஸ் பரிசுகள் அவரிடமிருந்து அப்படியே இன்னொருவருக்குக் கைமாறுவது வழக்கமாக நடப்பது. ஒருவேளை அந்த பரிசு பொருளுக்கு  உயிர் இருந்திருந்தால், அது எப்படி வருந்தியிருக்கும் என்ற கற்பனையில் உருவானதே இந்தக் கதை.”

இப்படம் உங்கள் மனநிலையைப் பிரதிபலிக்கிறதா ?

“நிச்சயமாக! என் வாழ்வில் நான் ஒதுக்கப்பட்டதாக, தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்த சில நேரங்களில், இருந்த மனநிலையை இதில் உணர்த்த முயற்சிசெய்திருக்கிறேன். சில சமயம், வெளியே தோற்றத்தினால் வெறுக்கப்படும் விஷயங்களுக்கு, உள்ளே நிறைய அழகு இருக்கும் என்று சொல்ல விரும்பினேன். ஒவ்வொருவரும் 'நான்  ஸ்பெஷல்'  என அவர்களே நம்ப வேண்டும் என்பதே படத்தின் கரு.”

எதிர்காலத்  திட்டம் என்ன ?

“இந்த விருது  ஓர் ஆரம்பமே. ஒரு இந்தியப் பெண்ணாக இந்த வெற்றி என்பது உலகையே வென்றதுபோல உள்ளது. இனி ,எதிர்காலமும் வரும் வாய்புக்களைப் பொருத்தே அமையும் என்று நம்புகிறேன்.இந்த வெற்றியைப் பயன்படுத்தி,  அனிமேஷன் துறையில் என் பங்களிப்பைத் தொடர்ந்து அளித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது மட்டுமே எனது விருப்பம்.”
 

ஸ்டூடன்ட் அகாடமி விருது வென்ற அந்தக் குறும்படம் இங்கே...

ஆஸ்கர் விருது இன்னும் பலருக்கு எட்டாத கனவாக இருக்கும் போது, அதை சிறு வயதிலேயே சாதித்த இம்மாணவியை நாமும் வாழ்த்தலாமே. 

அடுத்த கட்டுரைக்கு