Published:Updated:

நவரசப் பட்டம் வேண்டாமே!

நவரசப் பட்டம் வேண்டாமே!
பிரீமியம் ஸ்டோரி
நவரசப் பட்டம் வேண்டாமே!

ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

நவரசப் பட்டம் வேண்டாமே!

ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
நவரசப் பட்டம் வேண்டாமே!
பிரீமியம் ஸ்டோரி
நவரசப் பட்டம் வேண்டாமே!

‘`நான் ஏ டு இசட் வரை சொல்வேன். உன் கேர்ள் ஃப்ரெண்ட் பெயர் எந்த எழுத்துல ஆரம்பிக்குதோ, அந்த எழுத்து வந்ததும் ‘ஸ்டாப்’னு சொல்லணும்” என்றபடி ஏ, பி, சி, டி சொல்லத் தொடங்குகிறார் கார்த்திக். ஆனால் ஏபிசிடி-யே முடிந்தபோதும் ‘ஸ்டாப்’ சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறார் கௌதம். ‘ஏய்... யாருமே இல்லையா? இல்ல... எல்லா எழுத்துலயும் கேர்ள் ஃப்ரெண்ட் இருக்காங்களா?’ என்று கொஞ்சம் அதிர்ச்சி, கொஞ்சம் சிரிப்புடன் கேட்கிறார் கார்த்திக்.

சில சந்திப்புகள்தான் இன்னும் கொஞ்ச நேரம் தொடராதா என்று தோன்றவைக்கும். ஒரு ஞாயிறு மாலை ‘ஃபோப்தா’வில் நடந்த கார்த்திக்-கௌதம் சந்திப்பு அந்த வகையான சந்திப்புதான். ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில் சேர்ந்து நடிக்கும் இந்த அப்பா-மகன் இணையைச் சந்தித்தேன்.

“இன்றுவரை அதே விளையாட்டு, குறும்புடன்தான் இருக்கேன். ஆனால் குறும்பு, சுட்டித்தனம் கௌதமிடமும் இருந்தாலும் அது இன்னும் மெச்சூர்டா வெளிப்படுதுனு நினைக்கிறேன். சினிமாவை ஒரு தொழிலா எடுத்துக்க எனக்கு இரண்டு மூன்று வருஷங்கள் டைம் இருந்துச்சு. ஆனால், கௌதமுக்கு ‘கடல்’லயே அந்த கமிட்மென்ட் வந்திடுச்சு. ஒரு அப்பாவுக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் வேணும்?” - தன் கையை இறுக்கிப் பிடித்தபடி பேசும் அப்பா கார்த்திக்கைக் கட்டியணைத்துக் கொள்கிறார் கௌதம்.

நவரசப் பட்டம் வேண்டாமே!

“உண்மையைச் சொல்லணும்னா, சின்ன வயசுல அப்பாவோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ரெண்டுமுறைதான் போயிருக்கேன்னு நினைக்கிறேன். அதுவும் ஷூட்டிங் பார்க்கப் போனது கிடையாது. ‘கேமரா என்ன பண்ணுது, ட்ராலியில ரைட் கூட்டிட்டுப் போவாங்களா’னு நினைச்சுதான் போவேன்” என்கிற கௌதமை, “ஆமாம், ஆமாம்’ என்று ஆமோதித்துத் தொடர்கிறார் கார்த்திக். “எங்கடா காணோம்னு தேடினால், ‘டாட்’ என்று கிரேனில் இருந்து கௌதம் கைகாட்டினது இன்னும் நல்லா நினைவில் இருக்கு” என்ற கார்த்திக் எதையோ யோசித்தவராக, “விட்டா நானே பேசிட்டிருப்பேன். கௌதமும் பேசட்டும்” என்கிறார்.

“டாட், நீங்க பேசுறதைக் கேட்கத்தான் வந்திருக்காங்க, பேசுங்க” என்று உற்சாகப் படுத்துகிறார் கௌதம். “யெஸ்.  38 வருஷ நடிப்புப் பயணம். திரும்பிப் பார்த்தால் அவ்வளவு சந்தோஷமா இருக்கு. காலேஜ் படிச்சிட்டிருந்த நான் திடீர்னு எந்த பிளானும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தேன். ‘அலைகள் ஓய்வதில்லை’, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ரீமேக் ஆச்சு. அப்ப சினிமாதான் என் வாழ்க்கையா மாறும்னு நான் நினைக்கலை. அதனால நிறைய போராட்டம். ஆனால், இதுதான் என் தொழில்னு முடிவு பண்ணினபிறகுதான் எனக்கான அடையாளம் கிடைச்சதுனு சொல்லணும்.

தமிழ் சினிமாவில் நான் கற்ற பாடங்கள் நிறைய. அதுக்கு ஒருசோறு உதாரணம் சொல்றேன். இதெல்லாம் பாடமானுகூட நீங்க நினைக்கலாம். ஆனா, எனக்கு அதுவும் முக்கியமான பாடம்தான். 

‘நினைவெல்லாம் நித்யா’. பாடல் காட்சி. ரகுராம் மாஸ்டர்தான் கோரியோகிராபர். அவர் எனக்கு பிரதர் மாதிரி. ரெண்டாவது நாள் ஷூட்டிங்கில் கண்ணை மூடிட்டு நிதானமா நிற்கிறார். ‘என்ன மாஸ்டர் மனசுக்குள்ளேயே கோரியோகிராப் பண்றீங்களா?’ என்றேன். ‘ஆமாம், விஷுவலைஸ் பண்றேன்’ என்றார். அந்தத் தருணம் அடித்த ஸ்பார்க்தான் பின்னாளில் நான் சிரமமின்றி நடிக்க ஒரு காரணம். கதை, காட்சி, வசனம்னு எல்லாத்தையும் அப்படியே மனதுக்குள் ஓட்டிப்பார்த்து ஷாட்டுக்கு முன் கற்பனையில் நான்கைந்து முறை நடித்து முடித்து தெளிவோட கேமரா முன் வந்து நிற்பேன். பிரதர் ரகுராம் மனசுக்குள் விதைத்த அந்த டெக்னிக்தான் அதுக்குக் காரணம்” என்கிற கார்த்திக்கே தொடர்கிறார்.

 “‘அக்னி நட்சத்திரம்’ ‘ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா’ பாடல் படப்பிடிப்பு நாள் நினைவுக்கு வருது. அந்தப் பாட்டுக்குதான் முதல்முறையா கொஞ்சமாவது ரிகர்சல் பண்ணினேன்னு நினைக்கிறேன். சுந்தரம் மாஸ்டர்தான் கோரியோகிராபர். ஸ்ட்ராங்மேன். பூனை மாதிரி வருவார். டும்னு நடு முதுகில் குத்துவார். திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேன், ‘வாங்க மாஸ்டர்’ம்பேன். அந்தக் குத்துதான் அவரின் ‘ஹலோ’. அவர் எங்க அப்பாவுடன் சேர்ந்து, `காதலிக்க நேரமில்லை’ படத்துல வொர்க் பண்ணியுள்ளார்.

இதேபோல, கவுண்டமணி அண்ணனுடன் நான் நடித்த காட்சிகளைப் பார்த்தீங்கன்னா, சிரிப்பை அடக்கிக்கிட்டு நடிக்கிறது தெரியும். ‘ஏம்பா, இப்படிச் சிரிச்சிட்டிருந்தா நான் எப்படி நடிக்கிறது?’ம்பார். அண்ணனை கன்ட்ரோல் பண்ணவே முடியாது. ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தை மறக்க முடியுமா?” என்கிற கார்த்திக்கை இடைமறித்துத் தொடர்கிறார் கௌதம். ``அப்பா நடிச்ச படங்கள்ல ரீமேக் பண்ணி நடிக்கணும்னா, ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம்தான் என் முதல் சாய்ஸ். ஆனால், ஒரே ஒரு கண்டிஷன், அதில் கவுண்டமணி சார்தான் திரும்ப நடிக்கணும்” என்கிறார்.

நவரசப் பட்டம் வேண்டாமே!

“அப்பாவைப் பற்றி ஒரு ஃபன்னான விஷயம் சொல்லணும்னா என்ன சொல்லுவீங்க?” இது கௌதமுக்கான கேள்வி. “அப்பா வீட்லதான் இருப்பார். திடீர்னு காணாமல் போயிடுவார். `அப்பா எங்க’னு கேட்பாங்க. ‘ஐயோ இங்கதானே இருந்தார், எனக்குத் தெரியாதே’ம்பேன். இப்படி எத்தனை வாட்டி காணாமல் போயிருக்கார் தெரியுமா? ஆனால், ஷூட்டிங்ல சரியா இருப்பார்” என்கிறார் கௌதம்.

 “எங்கே எவ்வளவு நேரம் தேவையோ, அவ்வளவு நேரம் இருப்பேன். அடுத்த செகண்டு காணாமப்போயிடுவேன். ஷூட்டிங் நடுவுல ஒருநாள் பிரேக் கிடைச்சாலும் புதுப்புது இடங்கள், காடுகள் பார்க்கணும்னு விரும்புவேன். தனியா காரை எடுத்துட்டுக் கிளம்பிடுவேன். ரோடு, ட்ராக் எதுவும் இருக்காது. ஆனால், என் கார் அங்கெல்லாம் ஓடும். ஒருமுறை அப்படிப் போனப்ப, அழகான புல்வெளி, காரை விட்டுட்டேன். பார்த்தா, அது பாசி படர்ந்த குளம். கார் மூழ்கிட்டிருக்கு. எப்படியோ ஆக்ஸிலேட்டரை அழுத்திக் கரையேறி, தப்பிச்சேன்.

இன்னைக்கும் ஊட்டி போனா ஹெட்லைட் போட்டுக்கிட்டுக் காட்டுக்குள்ள நடப்பேன். ஊட்டியில பலர் பார்க்காத இடங்களுக்கு நான் போயிருக்கேன். இந்த லொகேஷன்களை, கூடிய சீக்கிரம் நான் டைரக்ட் பண்ணப்போற படங்கள்ல நீங்க பார்க்கலாம்” என்கிறார் கார்த்திக்.

“சூப்பர். அதுக்கு முன் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்க. ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை ரீமேக் பண்றோம். அதில் உங்க அப்பா நடிச்ச கேரக்டரில் நீங்க நடிக்கிறீங்க. ரவிச்சந்திரன் கேரக்டரில் கௌதம். உங்க இருவருக்கும் ஜோடியா இப்ப உள்ள ஹீரோயின்கள்ல யார் சரியா இருப்பாங்க?” என்றோம்.

யோசிக்காமல் டக்கென்று சொன்னார், “அதுதான் கஷ்டம். இப்ப எனக்கு 18 வயசு ஆகுது. அப்ப ஹீரோயினை ஸ்கூல்ல போய்த்தான் தேடணும்” என்றவர், “யெஸ் ப்ரோ, ‘சந்திரமௌலி’யில நடிக்கிறது என் எல்டர் பிரதர்” என்று கௌதமைக் கட்டியணைத்துக்கொண்டு சிரிக்கிறார்.

“உங்க அப்பா நவரசத் திலகம், நீங்க நவரச நாயகன்? அப்படி 'நவரச’த்தில் தொடங்குறமாதிரி கௌதமுக்கு என்ன டைட்டில் கொடுக்கலாம்” என்றால் “அந்தப் பட்டம் வேணாமே” என்கிறார். “ஆமாம். அதை வெச்சப்ப எனக்கே கூச்சமா இருக்கும். அந்தக் காலத்தில் அவங்க வெச்சுக்கிட்டாங்க. தவிர எனக்கு வெச்சது அப்ப வேறொருத்தருக்கு இருந்த பட்டம். அதைத்திருடி எனக்கு வெச்சமாதிரி இருந்தது. எனக்கு வெறும் கார்த்திக் போதும். இந்த டைட்டில் வேண்டாம். அதை மக்கள் முடிவு பண்ணட்டும்” என்கிறார். அதை வழிமொழிந்த கௌதம், “ஆமாம், கௌதம் என் பெயர். என் டைட்டில் கார்த்திக். அது போதும்” என்று பவ்யம் காட்டுகிறார்.