Published:Updated:

``இப்படி வெட்டாதீங்க... இப்படிக் குத்தாதீங்க!" - தெலுங்கில் ஒரு மெட்டா சினிமா #AravindaSametha

``இப்படி வெட்டாதீங்க... இப்படிக் குத்தாதீங்க!" - தெலுங்கில் ஒரு மெட்டா சினிமா #AravindaSametha
``இப்படி வெட்டாதீங்க... இப்படிக் குத்தாதீங்க!" - தெலுங்கில் ஒரு மெட்டா சினிமா #AravindaSametha

அடுத்த சில மாதங்களுக்குத் தெலுங்கில் சூப்பர் ஸ்டார்கள் படங்கள் எதுவும் வெளியாகும் தொலைவில் இல்லை. இன்று வெளியாகியிருக்கும் அரவிந்த சமேதாதான் பெரிய பட்ஜெட் மாஸ் என்டெர்டெய்னர். இந்த 2 மாத இடைவெளிக்குத் தேவையான தீனியைத் தந்திருக்கிறாரா என்.டி.ஆர்?

இரண்டு கிராமங்கள். இரண்டு பெரிய குடும்பங்கள். ஒரு சீட்டுக்கட்டு ஆட்டத்தால் ஏற்பட்ட பகை தலைமுறைகள் தாண்டி நீள்கிறது. பல உயிர்களைக் காவு வாங்குகிறது. அதன் இன்றைய தலைமுறை பகையைத் தொடர்கிறார்களா இல்லையா என்பதே கதை.


தெலுங்கு ஆக்‌ஷன் படங்கள் எப்படி இருக்கும் என்ற ஒரு பிம்பம் உங்கள் மனதுக்குள் இருக்குமில்லையா. அதை பத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். அப்படியொரு சண்டைக் காட்சியுடன் தொடங்குகிறது படம். பல வருடங்கள் கழித்து வெளிநாட்டிலிருந்து வரும் என்.டி.ஆரை பிக்கப் பண்ண, அவர் தந்தையும் மற்றவர்களும் போக, கூண்டோடு அவர்களைப் போட்டுத் தள்ள எதிர்முகாம் வருகிறது. சண்டையில் என்.டி.ஆரின் தந்தையைச் சுட்டுவிட, வெகுண்டெழுகிறார் என்.டி.ஆர். ``ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு ஆக்‌ஷன்” என்பார்களே... அதை நிஜமாகவே விஷுவலாகப் பார்க்கலாம். 15 நிமிடங்கள் நீளும் அந்தச் சண்டைக்காட்சி வேற லெவல் கொரியோகிராபிதான். ஆனால், தெறிக்கும் ரத்தம் ஆந்திராவே இதுவரை காணாத சிவப்பு. இடைவேளையில் சாண்ட்விச்சுக்கு சாஸ் வாங்கக்கூட யோசிக்க வைக்கும் ரத்தம். அந்த ஆயுதங்களும், சண்டையும், ரத்தமும், குரோதமும்... தேவையே இல்லாதவை என நினைக்குமிடத்தில் படம் தொடங்குகிறது. ஆம், என்.டி.ஆருக்கும் அதே யோசனைதான். இந்த நவீன `அசோகர்' இந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார். ``ஊர்ல இருந்தாதாண்டா கொல்வீங்க.. நான் எஸ் ஆகிறேன்” எனத் தலைமறைவு ஆகிறார். அதன் பின் என்ன ஆகிறது என்பதை... கொஞ்சம் பேண்டேஜ், கொஞ்சம் பாப்கார்னோடு திரையரங்கில் பார்க்க.

என்.டி.ஆருக்கு மிக முக்கியமான படம். எப்போதும் அவர் நடிக்கும் கேரக்டர் என்றாலும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா உழைத்திருப்பது தெரிகிறது. ரொமான்ஸ், காமெடியில் ஒருவர், ஆக்‌ஷனில் இன்னொருவர் என வழக்கமான வித்தியாசம் என்றாலும், வசீகரிக்கிறார். இயக்குநர் திரிவிக்ரமுக்கும் முந்தைய படம் பெரிய தோல்வி என்பதால் ஆசிட் டெஸ்ட்தான். ``காலம் மாறிடுச்சு... இன்னமுமா சண்டை போட்டு திரியுறீங்க?” என மாற்றத்துக்காக யோசித்தவரை சரி. ஆனால், அதையும் அதே வழக்கமான ஃபார்முலாவில் தந்ததுதான் சிக்கல். படத்தின் டைட்டில் கூட நாயகியின் பெயரை மையமாக வைத்து யோசித்தவர், திரைக்கதைக்கும் அப்படி மெனக்கெட்டிருக்கலாம். ஃபைட்டு, பாட்டு, காமெடி என அதே ஆர்டர். பூஜா ஹெக்டேவுக்குத்தான் இது ஜாக்பாட் படம். சொந்தக் குரலில் டப்பிங் என்பது பவுண்டரி என்றால், நடிப்பில் சிக்ஸர். நல்ல நல்ல ரோல்கள் கிடைக்க வாழ்த்துகள் முகமூடிப் பெண்ணே...


torch bearer, factionist போன்ற வார்த்தைகளை எல்லாம் வைத்து ஹீரோவைப் புகழ்கிறார்கள். எத்தனை பேருக்குப் புரியும் எனத் தெரியவில்லை. ஆனால், அவற்றைத் தவிர மற்ற வசனங்கள் எல்லாம் டெம்போவைச் சுர்ரென ஏற்றும் வேலையைக் கச்சிதமாகச் செய்கின்றன. ``எம்.எல்.ஏ சீட், ஜெயிச்சதும் அமைச்சர் பதவி, அப்புறம் எனக்கு பெயில் கிடைச்சிடும்... அந்த ஆப்ஷன் எனக்கும் இருக்கு” என்னும்போது சத்யம் திரையரங்கமே சற்று அதிர்ந்துதான் போகிறது. ஆந்திராவில் ரிக்டர் லெவல்தான் என்பது புரிகிறது. ஆனால், மற்ற நேரமெல்லாம் ``அலாரம் வைச்சுட்டுப் படும்மா” ரீதியில் போவதுதான் சிக்கல். காலம் மாறிடுச்சு மக்களே என்பதை பழைய கால ஸ்டைலிலே சொல்லியிருப்பதால் இதை மெட்டா வகை படமாகவும் பார்த்துக்கொள்ளலாம்.

ஓப்பனிங் பாடல் கிடையாது, இரண்டே இரண்டு டூயட்தான். அதற்கெல்லாம் சேர்த்து பின்னணி இசையில் அடி வெளுத்திருக்கிறார் தமன். பார்க்கிங் வரும்வரை அந்த பி.ஜி.எம்மைதான் உதடுகள் முணுமுணுக்க முயல்கின்றன. இரண்டு வெவ்வேறு விதமான களங்களையும் உயிர்ப்போடு படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.எஸ். வினோத். பொறுமையைச் சோதிக்கும் நீளமான, மெதுவான காட்சிகளை ரசிக்க வைப்பதே அவர்தான்.


``அவன் மெதுவாத்தான் வருவான்... மெதுவாத்தான் வருவான்” எனத் தேவர் மகனில் சிவாஜி சொல்வாரே... அந்த வரிசையில் கடைசியாக வந்து சேர்ந்திருக்கிறது அரவிந்த சமேதா. தேவர்மகன் வெளியாகி 25 ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கும் அரவிந்த சமேதாவும் அதைத்தான் சொல்ல வருகிறது. லேட்டாகச் சொல்வதைவிட ஸ்லோ மோசனில் மெதுவாகச் சொல்வதால், அலறல் சத்தத்தையும் குருவி சுடும் துப்பாக்கிகளின் யுத்தத்தையும் ஆந்திர சினிமா விடுமா என்பது சந்தேகமே.  இவையெல்லாம் எப்போதோ யோசித்திருக்க வேண்டிய மாற்றமில்லையா டோலிவுட். இனியாவது பிள்ளை குட்டிகளை படிக்க வைத்தால் உள்ளமட்டிலும் மகிழ்ச்சி. 

அடுத்த கட்டுரைக்கு