Published:Updated:

``நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதிக்கும் அந்தத் தருணம், ஓர் அனுபவம்!" - `ஃபர்ஸ்ட் மேன்' எப்படி? #FirstMan

``நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதிக்கும் அந்தத் தருணம், ஓர் அனுபவம்!" - `ஃபர்ஸ்ட் மேன்' எப்படி? #FirstMan
``நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதிக்கும் அந்தத் தருணம், ஓர் அனுபவம்!" - `ஃபர்ஸ்ட் மேன்' எப்படி? #FirstMan

கடந்த ஆண்டு `லா லா லேண்ட்' படத்துக்காக, சிறந்த இயக்குநர் பிரிவில் ஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் டேமியன் சேஸல் இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். `லா லா லேண்ட்' திரைப்படத்தின் நாயகனாக நடித்த ரயான் கோஸ்லிங் இதில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்காக நடித்திருக்கிறார்.

`ஒரு மனிதன் சின்னதாக ஒரு அடி கால் வைத்தது போல் தெரியலாம்; ஆனால், அது ஒட்டுமொத்த மனித இனத்தின் மிகப்பெரிய பாய்ச்சல்..!' இது நிலாவில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் தனது காலை பதித்தவுடன் சொன்னது. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவில் கால் பதித்த நிகழ்வு அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இதற்காக அவர் எப்படித் தயாரானார்... அவரது வாழ்க்கை எப்படி இருந்தது... போன்ற விஷயங்களைக் கொண்டு பயோபிக்காக வெளிவந்திருக்கிறது ஃபர்ஸ்ட் மேன். 

1961ல் ஆரம்பித்து 1969ம் ஆண்டு நிலாவுக்குச் சென்று திரும்பியது வரை ஆர்ம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையில் என்னென்ன நடந்தது என்பதே இத்திரைப்படம். 1961ம் ஆண்டு ஆரம்பிக்கும் கதையில், நோய்வாய்ப்பட்டிருக்கும் தனது மகளைப் பற்றியே எந்நேரமும் சிந்தித்துக்கொண்டிருக்கிறார், ஆம்ஸ்ட்ராங். பின் ஒரு சமயத்தில் தனது மகளை இழக்கவும் நேரிடுகிறது. இதற்குப் பிறகு நாசாவில் பணியாற்ற விண்ணப்பிப்பதில் ஆரம்பித்து, கால் பதித்து சாதனை புரிவது வரை கதை நகர்ந்து முடிகிறது.  

`விண்வெளியில் முதலில் கால் வைப்பது யார்?' என்ற சவால் நிறைந்த சாதனையை நிகழ்த்திக்காட்ட, அமெரிக்காவும், சோவியத் ரஷ்யாவும் மிகுந்த ஈடுபாட்டோடு போராடிக்கொண்டிருக்க, தனது வாழ்க்கையைப் பயிற்சியிலும், முயற்சியிலும்  நுழைத்துக்கொண்டிருக்கிறார், ஆம்ஸ்ட்ராங். கடும் உழைப்புக்குப் பிறகு, நிலாவில் கால் பதிக்கும் அத்தருணம், இத்திரைப்படத்தின் ஆகச்சிறந்த அனுபவமாகக் கொண்டு வந்திருக்கும் இயக்குநர் சேஸலுக்கு வாழ்த்துகள். 

கடந்த ஆண்டு `லாலா லேண்ட்' படத்துக்காக ஆஸ்கர் பெற்ற பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அதே படத்தின் நாயகன், ரயான் கோஸ்லிங்தான் இந்தப் படத்தில் ஆர்ம்ஸ்ட்ராங்காக நடித்திருக்கிறார். 

சாதனை செய்யத் துடிக்கும் ஒருவனது கதையைப் படமாக எடுப்பதுதான் இயக்குநர் டேமியன் சேஸலின் ஸ்டைல். இதற்கு முந்தைய படங்களான `விப்லாஷ்' மற்றும் `லா லா லேண்ட்' இதை உணர்த்தியிருக்கும். நீல் ஆம்ஸ்ட்ராங்கும் அப்படியானவரே என்பதை `ஃபர்ஸ்ட் மேன்' படத்தின் மூலம் மீண்டும் இதை நமக்கு உறுதிப்படுத்தியிருக்கிறார், டேமியன். 

ரயான் கோஸ்லிங், ஒவ்வொரு காட்சியிலும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் தன்னை ஒரு நல்ல நடிகன் என்பதை பதிய வைத்திருக்கிறார். இழந்த மகளை நினைத்துக்கொள்ளும் தனிமை விரும்பி தகப்பனாகவும் சரி, நிலாவைக் கைபற்ற வேண்டுமென்ற லட்சியத்தின் மீது வெறிகொண்டு திரியும் ஆம்ஸ்ட்ராங்காகவும் சரி... இரண்டையுமே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவியாக, க்ளேர் பாய். உயிரைப் பணயம் வைத்து விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப்போகும் கணவனைத் தடுக்க முடியாமல் தவிப்பதாகட்டும், குழந்தைகளுடன் பேசத் தயங்கும் ஆம்ர்ஸ்ட்ராங்கை மிரட்டிப் பேச வைப்பதாகட்டும், இவரது பெர்ஃபாமன்ஸ் பாராட்டத்தக்கது. 

படத்தொகுப்பையும், ரயான் கோஸ்லிங்கின் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்தும், படம் எடுத்திருத்திருப்பது சவாலான விஷயம்தான். ஆனால், இது போன்ற விண்வெளிப்படங்களுக்கு, விஷுவல் எஃபெக்ட்ஸும் முக்கியம். 

இதற்கு முன் டேனியல் படங்களில் வொர்க் செய்த ஜஸ்டின்தான் இந்தப் படத்துக்கும் இசையமைப்பாளர். அதேபோல் இசையமைக்காமல், இம்முறை ஜாஸ் மியூசிக்கிற்கு பை பை சொல்லியிருக்கிறார். ஆர்ம்ஸ்ட்ராங்கின் தனிமையிலும், விண்வெளியின் பிரமாண்டத்திலும் கீழிருந்து மேல் கோத்து, தனது கை வண்ணத்தைக் காட்டி அசரடித்திருக்கிறார், ஜஸ்டின்.

கடைசியாக, நிலவில் அமெரிக்கக் கொடியை ஆம்ஸ்ட்ராங் நடுவதுபோல் காட்சிப்படுத்தவில்லை. அமெரிக்காவில் இதற்காகப் பலரும் போர்க்கொடியைத் தூக்கியிருப்பார்கள். `அமெரிக்கக் கொடி, நிலாவில் நடப்படுவதை அவமானமாகக் கருதியிருக்கிறார், இயக்குநர். ஆனால், நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கையும், நிலாவையும் நினைத்துப் பார்த்தால், அமெரிக்கக் கொடியும் நிச்சயம் மக்கள் மனதில் வந்து நிற்கும். அது மறைக்கப்பட்டதாலும், மறுக்கப்பட்டதாலும், இந்தத் திரைப்படத்தை நான் பார்க்கப்போவதில்லை' எனக் கூறியிருக்கிறார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப். 

`ஃபர்ஸ்ட் மேன்' திரைப்படத்தின் இயக்குநர் டேமியன் சேஸல் இதை மறுத்து, ``அமெரிக்காவை இழிவுப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல; நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கின் அப்போதைய மனநிலையைப் படமாக்குவதே என் நோக்கமாக இருந்தது" என்று விளக்கமளித்திருக்கிறார். 

`விப்லாஷ்', `லா லா லேண்ட்' போன்ற திரைப்படங்களை எதிர்பார்க்காமல், வேறொரு டேமியன் சேஸலைப் பார்க்க விரும்பினால், நிச்சயம் `ஃபர்ஸ்ட் மேன்' ஈர்ப்பான். 

வெனம் படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு