தொடர்கள்
Published:Updated:

“ஹீரோயினே இல்லாத படத்தில் நடிக்கணும்!”

“ஹீரோயினே இல்லாத படத்தில் நடிக்கணும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஹீரோயினே இல்லாத படத்தில் நடிக்கணும்!”

மா.பாண்டியராஜன், படங்கள்: ப.பிரியங்கா

``அரேஞ்சுடு மேரேஜ்தான். கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு இவரைத் தெரியாது. வீட்டுல போட்டோ காட்டினாங்க; பிடிச்சிருந்தது. பேசிப் பார்த்தோம்; ரொம்பப் பிடிச்சிருந்தது’’ என்று கல்யாணக்கதையை ‘ட்வீட்டர் போஸ்ட்’ போல மதினா  சுருக்கமாகச் சொல்ல, “மதினா எப்பவும் இப்படித்தான். ரொம்பப் பேசமாட்டா’’  என்று டீட்டெய்ல் ஸ்டோரி சொல்லத் தொடங்கினார் டான்ஸ் மாஸ்டர் ஷெரிப்.

“கோயம்புத்தூரில் நடனப்பள்ளி நடத்திட்டிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் எனக்குக் கல்யாணம் ஏற்பாடு பண்ணினாங்க. அப்போ நான் ஈவென்ட் மேனேஜ்மென்டும் பண்ணிக்கிட்டிருந்தேன். பையன் டான்ஸர்னு சொன்னா பொண்ணு தரமாட்டாங்கனு, ‘பையன் ஈவென்ட் மேனேஜ்மென்ட் பண்றான்’னு சொல்லி எங்க வீட்டுல பொண்ணு பார்த்தாங்க. கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் டான்ஸை விட்டுட்டு ஈவென்ட் மேனேஜ்மென்ட் மேல அதிக கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன். ஒரு கட்டத்துல அதிகமா பணம் சம்பாதிச்சிட்டுத் திரும்பிப் பார்த்தா, டான்ஸை விட்டு நான் தூர வந்திட்டேன். அந்தச் சமயத்தில்தான் விஜய் டி.வி-யில் ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’ ஆரம்பிச்சாங்க. மறுபடியும் முழுமூச்சா டான்ஸில் கவனம் செலுத்தி, டைட்டில் ஜெயிச்சேன். அதுக்கப்புறம் ஆட்டம் நிக்கவேயில்லையே!’’ என்று புன்னகைத்தபடியே தொடர்கிறார் ஷெரிப்.

“மூத்த பையன் ஆரியனுக்கு எட்டு வயசு, ஸ்கேட்டிங், ஜிம்னாஸ்டிக், சைக்கிளிங்னு ஸ்போர்ட்ஸ்ல கிங். அல்மனுக்கு மூணு வயசு. மூத்தவர் வேலைக்காரன்னா, இவரு மூளைக்காரன். எல்லா விஷயத்தையும் நல்லா கவனமா பார்ப்பான். ஒரு தடவை சொல்லிக்கொடுத்தா போதும், டக்னு புரிஞ்சுப்பான். இவங்க ரெண்டு பேரும்தான் எங்க சொத்து’’ என ஷெரிப் சொல்ல, ``எனக்கு அப்பா பண்ணுன பாட்டுலேயே `தெறி’ சாங்ஸ்  ரொம்பப் பிடிக்கும். நான் `தெறி’ பாட்டுக்கு அப்பா முன்னாடி டான்ஸ் ஆடிக்காட்டுவேனே...’’ என மழலைப் பேச்சு மாறாமல் சொல்கிறான் ஆரியன்.

“ஹீரோயினே இல்லாத படத்தில் நடிக்கணும்!”

“120 பாட்டுக்கு மேல இவர் கோரியோகிராபி பண்ணியிருக்கார். அதுல எனக்குப் பிடிச்சது `காக்கிசட்டை’யும் ‘ராஜா ராணி’யும். `காக்கிசட்டை’யில `காதல் கண் கட்டுதே...’ பாட்டுதான் என் ஃபேவரைட். அது மெலடி பாட்டுங்கிறதால, டான்ஸ் கம்மியாதான் இருக்கும். ஆனாலும் சின்னச் சின்ன மொமன்ட்ஸ் அவ்ளோ அழகா இருக்கும். ‘ராஜா ராணி’ படத்துல `ஓட ஓட...’ பாட்டுல நிறைய யுனிக்கான விஷயங்கள் பண்ணியிருப்பார்’’ என மதினா சொல்ல, “பிரதர், நான் 120 பாட்டு பண்ணியிருக்கேன்னு சொல்றாங்கில்ல, ஆனா நான் என்னென்ன பாட்டு கோரி யோகிராபி பண்ணியிருக்கேன்னு கேட்டா  இவங்களுக்கு  முழுசா தெரியாது. ஒரு நாள் வீட்டுல டி.வி பார்த்துட்டிருக்கும்போது, நான் நடனம் அமைச்ச ஒரு பாட்டு வந்தது. ‘இந்தப் பாட்டு நல்லா இருக்கில்ல? டான்ஸும் நல்லா பண்ணியிருக்காங்க’னு சொன்னாங்க. `அதை நான்தான் பண்ணேன்’னு சொன்னதும், லேசா அசடு வழிஞ்சுக்கிட்டே, ‘சூப்பரா பண்ணியிருக்கீங்க’னு சொல்லிட்டு, சிரிச்சாங்க” என்று ஷெரிப் வார, செல்லமாய் முறைக்கிறார் மதினா.

“ஹீரோயினே இல்லாத படத்தில் நடிக்கணும்!”

“இவர் விஜய் சாருக்கு கோரியோகிராபி பண்ணணும்னு ஆசைப்பட்டேன். ‘தெறி’ படத்துல நிறைவேறிடுச்சு. `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யா சார்கூட வொர்க் பண்ண வேண்டியது மிஸ் ஆகிடுச்சு. எதிர்காலத்தில் அஜித் சார், சூர்யா சார் படங்களில் இவர் வொர்க் பண்ணணும்ங்கிறதுதான் என் ஆசை’’ என மதினா சொல்ல, “டான்ஸைப் போலவே நடிப்பிலேயும் எனக்கு ஆர்வம் அதிகம். ஒரு படத்துல சின்னதா ஒரு ரோல்கூடப் பண்ணியிருக்கேன். ஆனா முழுசா ஒரு படத்தில் ஹீரோவா நடிக்கணும்” என ஷெரிப் வார்த்தைகளை இழுக்க, “எல்லா மனைவிகளைப் போலத்தான் நானும். படத்தில இவர் வேற ஒரு பொண்ணுகூட ரொமான்ஸ் பண்றதை என்னால பார்க்க முடியாது. ஆனா, என்னோட கணவரும் ஹீரோ ஆகணும்தான். ஹீரோயினே இல்லாத ஒரு படத்தில் நடிக்கிறார்னா எனக்கு ஓகே’’ என்று மதினா சொல்ல, ஒட்டுமொத்தக் குடும்பமும் சிரிப்பில் கரைந்தது.