Published:Updated:

``சாதிக் குரூரம் பிணங்களைக்கூட விட்டுவைக்காது!" - `மனுசங்கடா' படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு

சாதிக்கு எதிரான முக்கியமான பதிவாக உருவாகியிருக்கிறது, தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமாரின் `மனுசங்கடா' படம்.

``சாதிக் குரூரம் பிணங்களைக்கூட விட்டுவைக்காது!" - `மனுசங்கடா' படம் எப்படி?
``சாதிக் குரூரம் பிணங்களைக்கூட விட்டுவைக்காது!" - `மனுசங்கடா' படம் எப்படி?

சாதியைச் சிதைக்கும் சினிமாக்களின் காலம் இது. குறிப்பாக, தமிழ் சினிமாவில் சாதிக்கு எதிரான படைப்புகள் ஆர்ப்பாட்டமான வரவேற்பைக் கண்டுகொண்டிருக்கிறது. அந்த வகையில், `மனுசங்கடா' ஒரு புது முயற்சி. ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கு ஒருமுறை தலித்துகளுக்கு எதிரான வன்முறை இங்கே நடைபெறுகிறது என்ற விபரீதத்தை, ஒரு பிணத்தை வைத்துப் பேசியிருக்கும் படம்.

சிதம்பரம் அருகேயுள்ள குக்கிராமம் ஒன்றிலிருந்து வந்து, சென்னையில் இருக்கும் ஸ்டீல் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறார், கோலப்பன். ஓர் இரவு, அப்பாவின் மரணத்தை அவருக்கு அறிவிக்கிறது. கண்ணீருடன் பயணத்தைத் தொடங்கும் கோலப்பனுக்கு, அப்பாவின் பிணத்தை ஊருக்குப் பொதுவான பாதையில் எடுத்துச் சென்று புதைப்பதுதான் இலக்கு. ஆனால், ஆதிக்கச் சாதியின் சதி, காவல் துறையின் குறுக்கீடு, அரசியல், சாதியத்தில் சிக்கிச் சுழலும் அரசு இயந்திரம்... அந்தப் பிணத்தின் குறுக்கே நின்று, பொதுப்பாதை வழியே எடுத்துச்செல்லக் கூடாது எனக் குறுக்கே நிற்கிறது. நியாயமாக நடக்கவேண்டிய, சக மனிதர்களாக எளிமையாகக் கடக்கவேண்டிய விஷயங்களுக்குக்கூட நீதிமன்றத்தை நாடவேண்டிய சூழல்.

`பொதுப்பாதையில்தான் பிணத்தை எடுத்துச்செல்ல வேண்டும்' என நீதிமன்றமே சொன்னாலும், சாதியம் என்னென்ன பாடு படுத்தும்... என்பதே, படம் கடத்தும் வலி. இங்கே நிலவும் சாதிப் பாகுபாட்டுக்கு, கோலப்பன் அப்பாவின் பிணத்தைப் பொதுப்பாதையில் எடுத்துச் சென்றாரா, இல்லையா... என்ற முடிவு அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால், அத்தனை வலிகளையும் கடத்திய பிறகு, அந்தப் பிணம் என்ன ஆனது என்பதில் இருக்கிறது, சாதித் தீயின் கோரப் பிழம்பு.

தற்போதைய சூழலில் இல்லை... சாதியின் கோரப்பற்கள் இளிக்கும் வரை, மிகவும் அவசியமான ஒரு படத்தை இயக்கியிருக்கிறார், தேசிய விருது பெற்ற அம்ஷன் குமார். சமரசமற்ற ஒரு முயற்சி. `ஒரு மனிதனுக்கு அவனது உரிமையை மறுப்பதென்பது மனித நேயத்துக்கு எதிரானது' என்ற நெல்சன் மண்டேலாவின் வாசகத்தோடு தொடங்குகிறது படம். இப்படியாக, `எனக்குத் தேவை வணிக நோக்கமல்ல' என்பது படத்தின் முதல் நொடியில் தொடங்கி, கடைசி நொடிவரை உழைத்திருக்கிறார், அம்ஷன் குமார். ஆனால், அந்த வீரியத்தைப் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களும், அமெச்சூர் நடிகர்களும் வீணடித்திருக்கிறார்கள். `மனுசங்கடா' என்ற வீரியமிக்க தலைப்பை விழலுக்கு இரைத்த நீராக்கிவிட்டீர்கள், அம்ஷன் குமார்.

படத்தின் ஒரு காட்சியில் இடம்பெரும் கவிஞர் இன்குலாப்பின் `மனுசங்கடா..' பாடல், படம் பேசவேண்டிய அத்தனை அரசியலையும் பேசிவிடுகிறது. நடிகர்களிடம் இருக்கும் செயற்கைத்தனம் உச்சம். ரேவதி கேரக்டரில் நடித்திருக்கும் ஷீலா ராஜ்குமார் மட்டுமே ஆறுதலாக இருக்கிறார். கோலப்பன் கேரக்டரில் வரும் ராஜிவ் ஆனந்தனுக்கு இது பாஸ் மார்க் படம். அப்பாவின் பிணத்தைப் பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியாத சூழலில், `உங்க வீட்ட நாங்கதானடா கட்டுனோம்; உங்க பீய நாங்கதானேடா அள்ளுனோம்' என யாருமற்ற ஆதிக்கச் சாதித் தெருவில் கத்தும்போது, வெறுத்துப்போய் பறைக்கு ஆடும்போது... கவனிக்க வைக்கிறார்.

படத்துக்குப் பாடல்கள் தேவைப்படவில்லை. பின்னணி இசைக்கும் மயான அமைதியைக் கொடுத்து, படத்தின் இயல்புக்குத் தேவையானதைச் செய்துகொடுத்திருக்கிறார்கள், அரவிந்த் - ஷங்கர். கேமராதான் ஆடாத ஆட்டம் ஆடுகிறது. லைவ் ஃபீல் கொடுக்க மெனக்கெட்ட ஒளிப்பதிவாளர் பி.எஸ்.தரன், அதன் அழகியலைக் காட்சி மொழியாகக் கடத்துவதில் நிறையவே சிரமப்பட்டிருக்கிறார். படத்தின் நீளம் குறைவு. அதை இன்னும் குறைத்திருக்கலாம், தனசேகர்.

காலம் காலமாக நடந்துவரும் வன்கொடுமைதான் என்றாலும் உண்மைச் சம்பவம் ஒன்றைக் கையிலெடுத்து, அதை நேர்த்தியாகத் திரைக்கதை அமைத்த விதத்தில்,  `மனுசங்கடா' ஒரு முக்கியமான முயற்சி. அதனால், அத்தனை பிழைகளையும் கடந்து மனதில் நிற்கிறது, களம். இறந்துபோன உடலைப் புதைக்க முடியாத எதார்த்தம் இன்னமும் நிலவும் சூழலில், இந்தப் படம் ஒரு முக்கியமான ஆவணம். முழுமையான ஒரு சினிமாவாக இது இல்லாவிட்டாலும், அந்தப் பிணம் பேசும் அரசியல் உங்கள் உறக்கத்தைக் கெடுக்கலாம். 

ஆம், சாதியக் குரூரம்.. பிணங்களைக்கூட விட்டு வைக்காது.