Published:Updated:

"எங்க கஷ்டத்துக்கு உதவிய இரண்டு பிரபலங்கள்!" - மனம் திறக்கிறார் மாலினி மாஸ்டர்

"எங்க கஷ்டத்துக்கு உதவிய இரண்டு பிரபலங்கள்!" - மனம் திறக்கிறார் மாலினி மாஸ்டர்
"எங்க கஷ்டத்துக்கு உதவிய இரண்டு பிரபலங்கள்!" - மனம் திறக்கிறார் மாலினி மாஸ்டர்

"சினிமா துறையினரிடம் கேட்டால் சங்கடம்னு வெளிநபர்கள்கிட்ட கடன் வாங்கித்தான் பிள்ளைகளைப் படிக்கவெச்சோம். ஒரு கட்டத்தில், குடும்ப நண்பரான இசையமைப்பாளர் தேவா சாரிடம் கடன் வாங்கினேன்."

"லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளை என் அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களைப்போல தனக்கும் மூன்று மகள்கள், ஒரு மகன் பிறக்கணும்னு ஆசைப்பட்டாங்களாம். அப்படியே நடந்துச்சு. என்னையும் தங்கைகளான சோனி, சுப்பியையும் சின்ன வயசிலேயே டான்ஸ் கத்துக்க அனுப்பினாங்க. பிற்காலத்தில் மூன்று பேருமே சினிமாவில் டான்ஸரா வளர்ந்தோம்.

பாரதிராஜா சாரின் நாடகங்களில் நான் நடிச்சுட்டிருந்தேன். சினிமா டான்ஸ் மாஸ்டர் மூர்த்தியின் மனைவியுடன் நட்பு உண்டாச்சு. மூர்த்தி மாஸ்டரிடம் அசிஸ்டென்ட்டா பல வருஷம் வேலை செஞ்சேன். பிறகு, புலியூர் சரோஜா, தருண் உள்பட பல மாஸ்டர்களிடம் அசிஸ்டென்டா இருந்தேன். பாரதிராஜா சாரின் படங்களின் நிறைய பாடல்களில் டான்ஸ் ஆடியிருக்கேன். குரூப் டான்ஸர், சோலோ டான்ஸரா வொர்க் பண்ணிட்டிருந்தேன். என்னைப் போலவே படிப்படியாக வளர்ந்து வந்தவர் வாமதேவன். காதலிச்சு 1986-ம் ஆண்டு கல்யாணம் செய்துகிட்டோம். அப்போ, 'கோடை மழை' படத்தில் வரும் 'துப்பாக்கி கையில் எடுத்து' பாடலின் ஷூட்டிங் ஊட்டியில் நடந்துச்சு. 'நீங்க ஹனிமூனுக்கு போறதா நினைச்சுக்கிட்டு அந்தப் பாட்டுக்கு கோரியோகிராபி பண்ணிடுங்க'னு எங்க இருவரையும் மாஸ்டர் புலியூர் சரோஜா அக்கா அனுப்பிவெச்சாங்க. அப்படி கோரியோகிராபர்கள் ஆனோம். 'தஞ்சாவூரு மண்ணை எடுத்து (பொற்காலம்)', 'எங்கே அந்த வெண்ணிலா (வருஷமெல்லாம் வசந்தம்)', 'கம்மாங்கரை ஓரமா (சொர்ணமுகி)' எனப் பல பாடல்களுக்கு கணவரும் நானும் சேர்ந்து கோரியோகிராபி பண்ணியிருக்கோம். அதுக்கு முன்னாடி, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்னு முன்னணி நடிகர்களின் படங்களில் டான்ஸ் சொல்லிக்கொடுத்திருக்கோம். பல படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடிச்சேன். இப்படி எங்க வாழ்க்கை நல்லா போயிட்டு இருந்துச்சு" என்கிற மாலினி, வறுமையை எதிர்கொண்டு வாழ்ந்த காலங்கள் பற்றியும் பகிர்கிறார்.

"சினிமா துறையில் ஆஃப் ஸ்கீர்ன்ல வேலை செய்யும் பலரும் கடும் சிரமங்களுக்கு இடையேதான் வாழ்ந்துட்டிருக்காங்க. ஆரம்பக் காலத்தில் டான்ஸ் வாய்ப்புகள் நிறைய வந்து, பல மொழிகளிலும் வேலை செய்தோம். குடும்பத்தை நல்லபடியா கொண்டுபோனோம். 1990-களுக்குப் பிறகு எங்களுக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பிச்சது. அதனால், நான் சீரியல் நடிப்புக்குப் போயிட்டேன். என் கணவருக்கு டான்ஸ்லதான் ஆர்வம். மாசத்துல ஒரு சில பாடல்களுக்கு கோரியோகிராபி கிடைச்சாலே பெரிய விஷயம் என்கிற அளவுக்கு இருந்துச்சு. அப்போ குடும்பத்தை வழிநடத்தறது பெரிய சிக்கலா இருந்துச்சு. சினிமா துறையினரிடம் கேட்டால் சங்கடம்னு வெளிநபர்கள்கிட்ட கடன் வாங்கித்தான் பிள்ளைகளைப் படிக்கவெச்சோம். ஒரு கட்டத்தில், குடும்ப நண்பரான இசையமைப்பாளர் தேவா சாரிடம் கடன் வாங்கினேன். 'மெளன ராகம்' படத்தின், 'பனிவிழும் இரவு' பாடலில் நான் சோலோ டான்ஸர். அதே பாடலில்தான் பிரபுதேவாவும் டான்ஸரா அறிமுகமானார். 

அவர் எனக்கும் கணவருக்கும் ரொம்ப பரிட்சையமாகி சகோதரர் மாதிரி மாறினார். எங்க நிலையை தெரிஞ்சுகிட்டவர், ஒருநாள் நேரில் அழைச்சார். நாங்க மறுத்தும் கட்டாயப்படுத்தி பண உதவி செய்தார். இந்த விஷயங்களை இதுவரை யார்கிட்டேயும் சொன்னதில்லை. இந்நிலையில மஞ்சள் காமாலை பாதிப்பு உண்டாகி, 2007-ம் ஆண்டு என் கணவர் இறந்துட்டார். தொடர்ந்து சீரியல் நடிச்சு குடும்பக் கஷ்டத்தைச் சமாளிச்சேன். பிறகு, என் பொண்ணு நீபாவும் சினிமா மற்றும் சின்னத்திரையில் டான்ஸராகவும் நடிகையாகவும் வேலை செய்ய ஆரம்பிச்சாங்க. பையன் ஐடி நிறுவன வேலைக்குப் போறான். பொண்ணுக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. இப்போ எனக்கு நடிக்க ஆசைதான். 'நீ கஷ்டப்பட்டது போதும். நடிக்க வேண்டாம். குடும்பத்தை நான் பார்த்துக்கிறேன்'னு பையன் சொல்லிட்டான். சினிமாவில் என்னால் முடிஞ்ச அளவுக்கு உழைச்சிருக்கேன். இது போதும். நிறைய கஷ்டங்களைக் கடந்தாலும், குழந்தைகள் இருவரும் என்னை நல்லா பார்த்துக்கிறாங்க" என மகிழ்கிறார் மாலினி. 

அடுத்த கட்டுரைக்கு