வில்லேஜ் சப்ஜெக்ட், ஹாரர், த்ரில்லர், ஹியூமர் என எல்லா ஜானரிலும் சைலன்ட்டாக ஸ்கோர் செய்யும் அருள்நிதி, இப்போது எதிர்பார்த்துக் காத்திருப்பது ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை.
“நியூஸ் பேப்பர்ல வந்த உண்மைச் செய்திகளை மையப்படுத்திதான் இந்தக் கதையை எழுதி, கூடவே கொஞ்சம் கற்பனையும் சேர்த்திருக்கார் இயக்குநர் மாறன். இந்தப் படத்துல எனக்கு கால் டாக்ஸி டிரைவர் ரோல். அஜ்மல்தான் வில்லன். ‘கோ’ படத்துல வாங்குன பேர் இந்தப் படத்திலும் அவருக்குக் கிடைக்கும்” என்றவரிடம் வெவ்வேறு விஷயங்கள் பற்றியும் பேசினோம்.

“ஹாரர், ஹியூமர், த்ரில்லர் என்று விதவிதமான கதைகளை எப்படித் தேர்ந்தெடுக்கிறீங்க?”
“என் படத்தைப் பொறுத்தவரைக்கும், எனக்காகப் படத்துக்கு வர்றதைவிட, கதைக்காகத்தான் வர்றாங்க. அடுத்து நான் பண்ற, கரு.பழனியப்பன் சார் படம் அரசியல் நையாண்டி பேசக்கூடிய படம். இதுவரை வந்த அரசியல் படங்களைக் காட்டிலும் இது வித்தியாசமா இருக்கும். கதையைத் தேர்வு செய்றதில் நிறைய நேரம் தேவைப்படுது. ஒண்ணு பண்ணாலும் கரெக்டா பண்ணணும்ங்கிறதுல தெளிவா இருக்கணும். நான் நீடிக்கணும்னா நல்ல கதைகளைக் கொடுத்தே ஆகணும்’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இயக்குநர் மகேந்திரன் சார் கூட நடிச்ச அனுபவம்...?”
“‘புகழேந்தி என்னும் நான்’ படத்தில் அவருடன் நடிக்கிறேன். மகேந்திரன் சார்கிட்ட இருந்து நான் கத்துக்க வேண்டியது எக்கச்சக்கமா இருக்கு. ரெண்டு நாள் முழுக்க எனக்கு ஃபைட் சீன் இருந்தது. நல்லா ப்ரேக் எடுத்துக்கிட்டு திடீர்னு ஃபைட் சீன் பண்றதுனால உடம்பு செட் ஆகலை. நான் டைரக்டர் கிட்ட சொல்லி, கொஞ்சம் ரெஸ்ட் வேணும்னு கேட்டு வாங்கிட்டேன். ஒரு நாள் மகேந்திரன் சாருக்கு உடம்பு முடியாமப்போய் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருந்தார். அங்கே அவரைப் பார்க்கப் போனா, ‘எனக்காக ஷூட்டிங் தள்ளிப் போடாதிங்க. உடனே வைங்க. நான் நல்லாதான் இருக்கேன்’னு அவர் சொன்னதைக் கேட்டு அசந்துபோய்ட்டேன். அவர்கூட நடிக்கிறதே பாக்கியமா நினைக்கிறேன். “


“எல்லா ஜானரையும் டச் பண்ணிப் படம் பண்ணிட்டிருக்கீங்க. எந்த ஜானர்ல நடிக்க உங்களுக்கு ஈஸியா இருக்கு?”
“நான் இந்த சினிமா இன்டஸ்ட்ரிக்குள்ள வந்து சர்வைவ் ஆகுறதுக்கு முக்கியக் காரணம் என் எல்லாப் படத்தோட டெக்னிஷீயன்ஸ்தான். பாண்டிராஜ் சார்தான் எனக்கு நடிப்பைப் புரிய வெச்சார். சாந்தகுமார் சார் ‘மெளனகுரு’ படத்துல ‘இவனால் நடிக்க முடியும். நல்ல கதை அமைஞ்சா நல்லா பண்ணுவான்’கிறதை உணர்த்தினார். அந்த மாதிரி கணேஷ், சிம்புதேவன் சார், அறிவழகன் சார்னு எல்லோருமே எனக்கு அவ்ளோ சப்போர்ட் பண்ணிருக்காங்க. முதல் ரெண்டு நாள்தான் ஒரு மாதிரியா இருக்கும். மூணாவது நாள்ல இருந்து ஆட்டோமெட்டிக்கா அந்த கேரக்டரா மாறிடுவேன். அந்த கெட்டப்பே மாத்திடும். என்னால நல்லா பண்ண முடியும்னு எனக்குள்ள நம்பிக்கை வரக் காரணமே இயக்குநர்கள்தான். இந்த மாதிரியான இயக்குநர்கள் இருக்கிற வரைக்கும் என்னால் எந்த ஜானர்லயும் நல்லா நடிக்க முடியும். அவங்கதான் என் பலமே.”

“சினிமா பத்தி உதயநிதி - அருள்நிதிக்கான உரையாடல் எப்படி இருக்கும்?”
“நிறைய பேசிக்குவோம். அவருக்கு வர்ற விஷயங்களை அவர் பண்ணிட்டிருக்கார். எனக்கு எது வருமோ அதை நான் பண்ணிட்டிருக்கேன். என் படங்களைப் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணி, படம் எப்படி இருந்ததுனு சொல்வார். நானும் அவர் படத்துல எனக்குப் பிடிச்ச விஷயங்களை அவர்கிட்ட சொல்லுவேன். உதாரணத்துக்கு, ‘அண்ணன் இப்போ சூப்பரா டான்ஸ் ஆடுது’னு அம்மாகிட்ட சொல்லுவேன். ரெண்டு பேரும் அவங்கவங்களை நல்லாப் புரிஞ்சு வெச்சிருக்கோம். ரெண்டு பேரும் நல்ல படங்கள் தரணும்னுதான் முயற்சி செய்யறோம்.”