Published:Updated:

``கூத்தன்டானு குணமாச் சொல்லணும், இப்படிக் கத்தக் கூடாது!" - `கூத்தன்' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு

கூத்தன் திரை விமர்சனம்

``கூத்தன்டானு குணமாச் சொல்லணும், இப்படிக் கத்தக் கூடாது!" - `கூத்தன்' விமர்சனம்
``கூத்தன்டானு குணமாச் சொல்லணும், இப்படிக் கத்தக் கூடாது!" - `கூத்தன்' விமர்சனம்

இழந்த இடத்தை மீட்கத் துடிக்கும் நடனக் கலைஞர், இருக்கும் வீட்டைக் காப்பாற்றத் துடிக்கும் நடனக் கலைஞி... இந்த இருவரையும் ஒன்றிணைத்து என்ன சொல்ல வருகிறது `கூத்தன்'. 

``கூத்தன்டானு குணமாச் சொல்லணும், இப்படிக் கத்தக் கூடாது!" - `கூத்தன்' விமர்சனம்

ஃபிலிம் நகரில் வாழ்ந்து வரும் `பேட்டரி பாய்ஸ்' டான்ஸ் ட்ரூப்பின் தலைவராக, ரானா (ராஜ்குமார்). பெரிய நடிகராக வேண்டுமென்று போராடிக்கொண்டிருக்கும் இளைஞர். அம்மாவாக கலையரசி (ஊர்வசி). பெரிய நடிகையாக வேண்டுமென்ற எண்ணத்தில் சினிமாவுக்குள் வந்து, ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துக்கொண்டிருப்பவர். பல காலமாக தான் வசித்து வரும் ஃபிலிம் நகருக்கு ஆபத்து ஏற்பட, சிங்கப்பூரில் நடக்கும் டான்ஸ் போட்டியில் வென்று, அதில் வரும் பணத்தை வைத்து ஃபிலிம் நகரை விலைக்கு வாங்கிவிடலாம் என ஓவர் நைட்டில் ஒரு டஸன் டான்ஸ் மூவ்மென்ட்களை கற்றுக்கொள்கிறார் ரானா. இன்னொரு பக்கம், பரதக் கலைஞர் தேவியின் (கீரா) தங்கை ஶ்ரீ லட்சுமி (ஶ்ரீஜிதா கோஷ்) வெஸ்டர்ன் டான்ஸில் சகல வித்தைகளையும் கற்று, கிருஷ்ணாவின் (நாகேந்திர பிரசாத்) முகத்தில் கரியைப் பூச வேண்டுமென்ற நோக்கில் அவர் பங்கேற்கும் எல்லாப் போட்டியிலும் இவரும் கலந்துகொள்கிறார் ; ஒரு கட்டத்தில் பேட்டரி பாய்ஸுடன் சேர்ந்து சிங்கப்பூர் வரை போக ஸ்கெட்ச் போடுகிறார். அந்த ஸ்கெட்ச்சுக்குப் பின்னால் இருக்கும் பின்கதை என்ன, பேட்டரி பாய்ஸ் சிங்கப்பூர் டான்ஸ் போட்டியில் வென்றார்களா ; நகரை மீட்டார்களா என்பதை மீதிக் கதையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.வெங்கி.

தலையை 360 டிகிரியில் சொரிந்து யோசித்தாலும் எங்கிருந்து ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. ஹான்... அறிமுக நடிகர், நடனம் ஆடுபவர், நாயகனாக ராஜ்குமார். நன்றாக நடனமாடுகிறார். ஆனால் நடிப்பில் நிறைய முன்னேற்றம் தேவை. இவர் சிரித்த முகம் என்பதால் பல சீரியஸ் இடங்களில் சோகம் இவர் முகத்தில் குடியேறப் போராடுகிறது. இரண்டையும் மிக்ஸ் செய்து, ஏதோ ஒரு புது ரக முயற்சியைக் கையாண்டிருக்கிறார். ஆனால், அது குழைந்துபோய் புது ரக எக்ஸ்ப்ரஷனாக வெளிவந்திருக்கிறது. இருப்பினும் நடனத்தில் வெளுத்துக்கட்டியிருக்கிறார். நடனத்தில் ஆர்வம் காட்டி, நடிப்பில் கோட்டைவிட்டுவிட்டார். அடுத்த படத்தில் பார்க்கலாம் பாஸ். ஶ்ரீஜிதா, கீரா, சோனல் சிங் எனப் படத்தில் மூன்று கதாநாயகிகள். ஹீரோவுக்கு இணையான நடனத்தை வெளிப்படுத்தி சக்கைபோடு போட்டிருக்கிறார்கள். இந்த த்ரீ ரோசஸில், கீரா மட்டும் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை சில இடங்களில் கவர்கிறார். 

மனோபாலாவின் டைரக்‌ஷன் காமெடிகள், பாக்யராஜின் முருங்கைக்காய் காமெடிகள் (இன்னுமா அந்த மரத்தை வெட்டலை) எல்லாம் வலிந்து திணித்தது போல் இருந்தது. காமெடி என்ற பெயரில் எல்லோரும் நம்மை சோதனை எலியாக நினைத்து பரிசோதித்துப் பார்த்தாலும், ஊர்வசி மட்டும் நம்மை மனிதனாக நினைத்து சில இடங்களில் காமெடி செய்து ஆறுதல்படுத்துகிறார். 

``கூத்தன்டானு குணமாச் சொல்லணும், இப்படிக் கத்தக் கூடாது!" - `கூத்தன்' விமர்சனம்

வில்லனாக நாகேந்திர பிரசாத். `வேலையில்லா பட்டதாரி'யில் நடித்த அமிதாஷ் ப்ரதன் மற்றும் `7ஜி ரெயின்போ காலனி' ரவி கிருஷ்ணா என இந்த இருவரின் மாடுலேஷன்களை கோத்து ஏதோ ஒன்று பேசியிருக்கிறார். கொஞ்சும் கூக்குரலில் வில்லத்தனங்கள் செய்வது சுத்தமாக ஒட்டவே இல்லை. இந்தப் படத்துக்கு, இந்தக் கதைக்கு, இந்தக் கதாபாத்திரத்துக்கு இது செட் ஆகலை நாகு ஜி.  இப்படி எல்லோருமே கலந்துகட்டி ஏதோ கலவையை உருவாக்க முயற்சி செய்திருந்தாலும், அது அனேக இடங்களில் சொதப்பலாக மட்டுமே முடிந்திருக்கிறது. நடனப் போட்டிகளை மையமாக வைத்த படங்களின் அதே வழக்கமான கதைதான். ஆனால், திரைக்கதை வடிவமைப்பில் சறுக்கல் ஏற்பட்டு, இது வழக்கமான படமாகக்கூட இல்லாமல் போய்விட்டது. அதிலும் லிப் சிங்க் பல இடங்களில் கடுகளவும் ஒட்டவில்லை. தாம்பரத்தில் இடம்பெறும் வசனத்தை, தர்மபுரியில் ஒருவர் பேசுவதுபோல் இருந்தது. அடுத்த படத்திலாவது சரி செய்யுங்கள் இயக்குநர் சாரே!

ஆறுதலான ஒரே விஷயம் பாடல்கள். டி.ஆரின் ரகளையான குரலில் பால்ஸ் ஜியின் இசையில் `மங்கிஸ்தா கிங்கிஸ்தா' பாடலைக் கேட்கும்போது நமக்கே எழுந்து ஆட வேண்டும் போல் இருந்தது. மற்ற பாடல்களும் ஓகே ரகம். `அப்டியா! வெயிட், நானும் உங்களுக்கு ஒரு கலவையைப் போடுறேன்!' எனப் பழைய நாடகங்களில் வரும் பிஜிஎம், காட்சிகளுக்கு ஒட்டவே ஒட்டாத ட்யூன்கள், காதைக் கவ்வும் `தட தட' எஃபெக்ட்ஸ்... எனப் பின்னணி இசையில் நம்மைப் பதம் பார்த்திருக்கிறார். 

``கூத்தன்டானு குணமாச் சொல்லணும், இப்படிக் கத்தக் கூடாது!" - `கூத்தன்' விமர்சனம்

`கூத்தன்டாஆஆஆஆ...' என்று ஆக்ரோஷமாக சவுண்ட்விட்டிருக்காமல், `கூத்தன்டா' என்று குணமாகச் சொல்லியிருந்தால் படத்தை அமைதியாகப் பார்த்துவிட்டு வந்திருக்கலாம்.

மனுசங்கடா படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.