Published:Updated:

துரோகம், வீரம், குரோதம்... எப்படி இருக்கிறான் கேரளத்து ராபின் ஹூட் காயங்குளம் கொச்சுண்ணி? #KayamkulamKochunni

கார்த்தி

இது எல்லா மலையாளிக்கும் தெரிஞ்ச கதா... எல்லா கேரளத்தவனும் அறிஞ்ச கதா... இது அவன்ட கதா...

துரோகம், வீரம், குரோதம்... எப்படி இருக்கிறான் கேரளத்து ராபின் ஹூட் காயங்குளம் கொச்சுண்ணி? #KayamkulamKochunni
துரோகம், வீரம், குரோதம்... எப்படி இருக்கிறான் கேரளத்து ராபின் ஹூட் காயங்குளம் கொச்சுண்ணி? #KayamkulamKochunni


காயங்குளத்தில் உணவு திருடியதற்காக ஆடை அவிழ்த்து அசிங்கப்படுத்தப்படுகிறார் கொச்சுண்ணியின் தந்தை. அங்கிருந்து வெளியேறி, பிழைக்க வேறு ஊருக்கு வருகிறான் கொச்சுண்ணி. தன் அடையாளங்களை அவன் மறைத்தாலும், அவன் குடும்பத் தொழிலைச் சொல்லி அவன் சில விஷயங்களுக்குப் புறக்கணிக்கப்படுகிறான். பின்பு வேறொரு சூழலில், அவன் விரும்பாததைச் செய்யச்சொல்லி நிர்பந்திக்கப்படுகிறான். அவன் வாழ்வு சிதைகிறது. இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் காயங்குளம் கொச்சுண்ணி படத்தின் கதை. இத்திக்கார பக்கி (மோகன்லால்) திருட்டை ராபின்ஹூட் தனமாக மட்டுமே பார்க்க, கொச்சுண்ணி அதனூடே ஏற்றத்தாழ்வுகளையும் களைய முயல்கிறான். அதில்தான் ஆரம்பிக்கிறது எல்லாப் பிரச்னையும்.

இது எல்லா மலையாளிக்கும் தெரிந்த கதைதான். செவிவழிப் பாடல்களாகவும், அமர் சித்ரா கதா காமிக் புத்தக வடிவத்திலும் ஏற்கெனவே 1950 களில் வெளியான படத்திலுமாக இந்தக் கதை மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

துரோகம், வீரம், குரோதம்... எப்படி இருக்கிறான் கேரளத்து ராபின் ஹூட் காயங்குளம் கொச்சுண்ணி? #KayamkulamKochunniகாயங்குளம் கொச்சுண்ணி ஒரு ராபின்ஹூட் என்பதைக் கடந்து, அவன் செய்யும் சமூக மாற்றங்கள்தாம் தற்போது பெரிதும் பேசப்பட வேண்டியன. அதை வசனங்களின் மூலமாகவும் , காட்சிகளின் மூலமாகவும் சிறப்பாகச் செய்திருக்கிறது இத்திரைப்படம். இங்கிருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு படிநிலைகளில் பிராமணர்களுக்கும் இடைநிலை சாதியினர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையிலான உறவுமுறையில் கொச்சுண்ணி மாதிரியான இஸ்லாமியரின் படிநிலை எங்கு இருக்கிறது; ஆங்கிலேயர்கள் இந்தப் படிநிலையை எப்படிப் பார்க்கிறார்கள். அவர்கள் இதைத் தங்களுக்கு ஏற்றவாறு எப்படி மாற்றிக்கொள்கிறார்கள் போன்றவற்றைப் பேசியிருக்கிறார்கள்.

கொச்சுண்ணியாக நிவின் பாலி. முதல் பாதி முழுக்கவே ஒரு அம்மாஞ்சியின் முகபாவணையில் நடிக்கச் சொல்லியிருப்பார்கள் போலும். அது அம்மாஞ்சி, தத்தி என்பதையெல்லாம் கடந்த ஒரு முகபாவனையில் கொண்டு முடிகிறது. நிவின்பாலியின் முகபாவணைகள் ஏன் இப்படி ஆயிற்று என யோசித்தால், மோகன்லால் இன்னும் அதிகமாக மிரள வைக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் செய்யும் மன்சூர் அலிகான் மேனரிசம் சிரிப்பைத்தான் வரவைக்கிறது. நிவினுக்காவது இரண்டாம் பாதியில், நடிக்க ஸ்கோப் என ஒன்று இருக்கிறது. அகங்காரமிக்க கண்கள், காட்டுமிருகம் போன்ற உடல் போன்ற அடைமொழிகளுக்கு எல்லாம் இரண்டாம் பாதியில் சிறிதளவு நியாயம் செய்திருக்கிறார் நிவின்பாலி. மோகன்லாலுக்கு அதுவும் பெரிதாக இல்லை. முகத்தை எவ்வளவு க்ளோசப்பில் கொண்டுவரமுடியுமோ கொண்டுவந்து, வந்து பயமுறுத்த வேண்டும். ஆனால், அம்மாஞ்சியாக இருக்கும் கொச்சுண்ணியை மூர்க்கமாக மாற்றும் பொறுப்பு இத்திக்கார பக்கிக்குத்தான் கொடுக்கப்படுகிறது. உடைந்த மரத்துண்டின் மேல் ஒற்றைக் காலை வைத்து நிற்கும் காட்சியாகட்டும், மரக்கிளையில் ஒய்யாரமாய் சாய்ந்திருக்கும் காட்சியாகட்டும், படத்தில் வரும் பூச்சாண்டித்தனங்களைக் காட்டிலும் லவ் யூ லாலேட்டன் சொல்ல வைக்கிறார்.  அறிமுகக்காட்சியிலிருந்து அழகாகவே இருக்கிறார் ப்ரியா ஆனந்த். ஆனால், அந்நியமாக இருக்கிறார். கேஷவனாக வரும் சன்னி வெய்னும், `வவ'வாக வரும் மணிகண்ட ஆசாரியும் நன்றாக நடித்திருக்கிறார்கள். தங்கலாக வரும் பாபு ஆன்டனி சிறப்பாக நடித்திருந்தாலும், பல ஆண்டுகளாக இளமையாகவே இருக்கிறார். (சினிமாவிலும் பல ஆண்டுகளாக பாபு ஆன்டனி அப்படியேதான் இருக்கிறார் என்பது வேறு).

யானைகளின் துணையோடு தங்கத்தை லாகவமாக சிலர் விற்க முயல, அதைக் குதிரையில் வரும் கொச்சுண்ணியும் அவரின் கூட்டாளிகளும் எப்படிக் களவாடுகிறார்கள் என்பதும், இறுதிக்காட்சியில் மழைச் சாரலினூடே அழகிய ஃபிரேம்களில் கொச்சுண்ணி எப்படி நகர்கிறான் என்பதும், திருமண நிகழ்வின் போது, மலையெனக் குவிந்திருக்கும் மனிதக் கோபுரத்தின் உள்ளே கேஷவனுக்கும் கொச்சுண்ணிக்கும் நடக்கும் சண்டைக் காட்சியில் கேமரா எப்படி நகர்கிறது என்பதும் ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. ஸ்டன்ட், ஒளிப்பதிவு, எடிட்டிங் மூன்று அணிகளின் அசாத்திய முயற்சியால் சாத்தியமானவை இவை.

துரோகம், வீரம், குரோதம்... எப்படி இருக்கிறான் கேரளத்து ராபின் ஹூட் காயங்குளம் கொச்சுண்ணி? #KayamkulamKochunniகளரி மாதிரியான பாரம்பர்யக்கலையின் பயிற்சியும் அதை அடிப்படையாகக் கொண்ட சண்டைக் காட்சிகளும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. திருவாங்கூர் சமஸ்தானத்தின் ராஜாவான ஸ்வாதி திருநாள் ரம வர்மா ஒரு காட்சியில் வந்துபோகிறார். கொச்சுண்ணிக்கும் ஸ்வாதி திருநாளுக்குமான சமூக உணர்வு சார்ந்த ஒற்றுமைகளை இன்னும் சற்று விரிவாகவே காட்டியிருக்கலாமோ. கொச்சுண்ணிக்குத் துரோகம் இழைக்கப்படும் தருணங்கள் கூட, அவன் அங்கு இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை களைய முற்படும் தருணங்களில்தாம்.

``அவங்ககிட்ட ஒரு புத்தகம் இருக்கு. அதுல யாருக்குக் கொடுக்கணும், யாருக்குக் கொடுக்கக் கூடாதுன்னு தெளிவா இருக்கு ". அதெல்லாம் யாரு எழுதினா?. ``பிராமணர்களேதான்" ; ``கீழ் சாதிக்காரனால கிணறு தீட்டு ஆயிடுச்சுன்னா, உங்க ஆள்ல ஒருத்தன் குதிச்சு அதைய நிவர்த்தி பண்ண வேண்டியதுதான" போன்ற வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன. சூத்திரப் பெண்ணைக் காதலிக்கும் முஸ்லிம், தீட்டுப்பட்ட கிணற்றை மூடுவது, கசையடி, புத்தகங்களை வைத்து தண்டனை கொடுப்பது போன்ற பல அடக்குமுறைகளை படம் தோலுரித்துக்காட்டுகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினால், அவர்களைக் காக்கும் கடவுள் வருவான் என கொச்சுண்ணியைப் பிடிக்கும் வியூகமும், அவர்களுக்கான கொச்சுண்ணியின் செயல்களும் அடைக்கப்பட்ட கிணற்றை உடைப்பவனுமாகவே கொச்சுண்ணி வருகிறான். இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாகச் செல்லும் கதை, இறுதி கட்டத்தில் பார்வையாளனுக்குள்ளும் அவ்வீரத்தைக் கடத்துகிறது.

துரோகம், வீரம், குரோதம்... எப்படி இருக்கிறான் கேரளத்து ராபின் ஹூட் காயங்குளம் கொச்சுண்ணி? #KayamkulamKochunni
கொச்சுண்ணி சிறையில் இருக்க ஃபிளாஷ்பேக்கில் ஆரம்பிக்கும் கதை, பின்பு எந்தவிதமான, திரைக்கதை நுணுக்கங்களும் அற்று, ஒரே நேர்க்கோட்டில் சொல்லப்படுகிறது. 19ம் நூற்றாண்டில் நிகழ்ந்த கேரளத்து ராபின்ஹூட் கதைதான் காயம்குளம் கொச்சுண்ணி. வழிவழியாகச் சொல்லப்பட்டு வந்த கொச்சுண்ணியின் கதைகள் மீண்டும் ஒருமுறை திரைவடிவம் பெற்றிருக்கின்றன. இதை மையமாக வைத்து பாபி சஞ்சய் எழுதியிருக்கும் கதையை, வழக்கம் போல் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியிருக்கிறார். சற்றே புனைவு கலந்து வரலாற்றைச் சொல்லியிருப்பதால், அது பல இடங்களில் ஈர்க்கவே செய்கிறது. முதல் பாதியில் வரும் சில நெட்டி முறிக்கும் காட்சிகளைத் தாராளமாகவே ஸ்ரீகர் பிரசாத் கத்திரி போட்டிருந்தால், இன்னும் சுவாரஸ்யமாகவே படம் இருந்து இருக்கும். படத்தின் இசை கோபி சுந்தர். படத்தில் வரும் ஆங்கிலேயர்களுக்குப் படத்தில் பெரிய வேலை இல்லாதது போல், இவரது இசைக்கும் பெரிய வேலை இல்லை. ஒரு 19ம் நூற்றாண்டு கதைக்கு எதற்கு அத்தனை வெஸ்டர்ன் ட்யூன்கள் (கௌபாய்த்தனமான இசை ) கோபி சுந்தர். படத்தின் இறுதியில் வரும் காயங்குளம் கொச்சுண்ணியின் பெருமை சொல்லும் நாட்டுப்புறப் பாடல் மட்டும் ஈர்க்கிறது. அதே போல் பீரியட் ஃபிலிம் என்றாலே ஐட்டம்  நம்பர் வைக்கும் பழக்கம் மாறினாலும் தகும். 


ஆலன் அமின், திலிப் சுப்பு, ராஜசேகர் ஆகியோரின் சண்டைக் காட்சிகளை சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸ் காட்சிகளில் வரும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், படத்தின் பெரும்பகுதியில் வரும் பினோத் பிரதானின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக கேஷவனும், கொச்சுண்ணியும் மோதிக்கொள்ளும் அக்காட்சி, சிறப்பான ஒன்று.

கேரளத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம், இன்னும் சற்றுச் சிரத்தையுடன் எடுத்திருந்தால் இன்னும் அதிகமாகவே பேசப்பட்டிருப்பான் காயங்குளம் கொச்சுண்ணி. 

`மனுசங்கடா' படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்