Published:Updated:

``உடம்புல நோய் இருந்தா, கவலைப்படுவீங்கதானே?! சமூகம் உடம்பு; சாதி நோய்..." - பா.இரஞ்சித்

`கூகை' குறித்துப் பேசியிருக்கிறார், இயக்குநர் பா.இரஞ்சித்

``உடம்புல நோய் இருந்தா, கவலைப்படுவீங்கதானே?! சமூகம் உடம்பு; சாதி நோய்..." - பா.இரஞ்சித்
``உடம்புல நோய் இருந்தா, கவலைப்படுவீங்கதானே?! சமூகம் உடம்பு; சாதி நோய்..." - பா.இரஞ்சித்

``நான் உதவி இயக்குநரா இருக்கும்போது எல்லா உதவி இயக்குநர்களும் கூடுவதற்கு ஒரு இடம் இருந்தா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. ஏன்னா, எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து புத்தகம் படிக்கிறதுக்கும், படம் பார்க்கிறதுக்கும் இங்கே இடமே இல்லை. பொதுவாக இப்போ இருக்கிற சூழலில் உதவி இயக்குநர்கள் நிறைய புத்தங்களைப் படிச்சுதான் ஆகணும். வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்தவும், திரைப்படம் சார்ந்த விஷயங்களைப் பேசவும், `கூகை' ஏற்புடைய இடமாக இருக்கும்.'' என்கிறார், இயக்குநர் பா.இரஞ்சித். 

``உலக சினிமாவிலிருந்து, உள்ளூர் சினிமா வரைக்கும் பார்க்க வேண்டிய சூழலில் இருக்காங்க, உதவி இயக்குநர்கள். பல்வேறு நாடுகளில் பல்வேறு இயக்கங்கள் இருக்கு. இந்தியா போன்ற நாடுகளிலேயே வங்காளம் மற்றும் கேரளாவில் பெரிய இயக்கங்கள் இருக்கு. ஆனா, தமிழ்நாட்டில் இப்படி எதுவும் இல்லை. கலைஞர்களிடையே விவாதங்கள் இருக்கணும். அதுக்குக் `கூகை' மாதிரியான அமைப்பு தேவை. எழுத்தாளர்களுக்கான இடம் இங்கே இல்லை. இந்த வெற்றிடத்தை நிரப்பணும்னு தோணுச்சு, அதுக்குத்தான் `கூகை'யைத் தொடங்கியிருக்கோம். 

உதவி இயக்குநர்கள் எல்லோரும் இங்கே ஒண்ணா சேரும்போது, அவர்களிடையே நட்பு மலரும். அவர்களின் லைஃப் ஸ்டைல் மாறும். நான் புத்தகம் படித்ததுனாலதான், `இரஞ்சித் யார்'னு எனக்குத் தெரிந்தது. நான் இருக்கிற அரசியல் சூழல் புரிந்தது. 

``எத்தனை வயசுல இருந்து புத்தங்கள் படிக்கிறீங்க?" 

``காலேஜ் படிச்ச காலத்திலிருந்துதான் புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். அதுதான் என் சிந்தனைகளுக்குக் காரணம். `கூகை'யில் புத்தகங்கள் மட்டுமல்ல, படம் பார்க்கவும் வசதிகள் பண்ணப்போறோம். திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள்.. எல்லாம் இங்கே திரையிடப்படும். உதவி இயக்குநர்கள், சினிமாவைச் சீர்படுத்த நினைப்பவர் என யாரும் இங்கே வரலாம்."

`` `கூகை'ங்கிற பெயரைத் தேர்ந்தெடுத்த காரணம்?" 

``தம்பி மாரி செல்வராஜ்தான் `கூகை'ங்கிற பெயரைச் சொன்னான். `பறவை இனத்துல இதை யாரும் சேர்த்துக்கமாட்டாங்க, அதனால, இதுதான் சரியா இருக்கும்'னு சொன்னார். கூகைன்னா, ஆந்தை. எல்லோரும் அபசகுணமா பார்க்கிற பறவை. அப்பவே, இதைத்தான் பெயரா வைக்கணும்னு நினைச்சுட்டேன்.  

எங்க குடும்பத்துல மத நம்பிக்கைகள் கிடையாது. அப்பா ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டாலும், எங்க வீட்டுல நான்வெஜ் சமைப்போம். வெள்ளிக்கிழமை அசைவம் சாப்பிடக் கூடாதுனு சொல்வாங்க. அன்னைக்கு எங்க வீட்டுல கட்டாயம் அசைவ சாப்பாடு இருக்கும். கோயில்கள், மசூதி, தேவாலயம்னு எல்லாத்துக்கும் குடும்பமாப் போவோம்."  

`` `கூகை'யில் இருக்கும் புத்தகங்கள் பற்றி?"

``சில செலக்ட்டிவான புத்தகங்கள்தான் இங்கே இருக்கும். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸிசம், கம்யூனிஸம்... எல்லாம் இங்கே படிக்கலாம். நிறைய பேர் புத்தகங்களை இங்கே பரிசாக் கொடுக்கிறாங்க. எல்லோர்கிட்டேயும் புத்தகங்கள் தரச்சொல்லிக் கேட்டேன். சிலர், `இரஞ்சித்கிட்ட இல்லாத பணமா'னு கேட்டாங்க. எல்லோருடைய பங்கும் இதில் இருக்கணும்னு நினைச்சேன். யார்கிட்டேயும் இதுவரைக்கும் டொனேஷன் கேட்டதில்லை, புத்தகங்கள் கேட்கிறதுக்கே இப்படிப் பேசுறாங்க."    

``உங்க வாழ்க்கையில் `பரியேறும் பெருமாள்' ஆனந்த் மாதிரியான நண்பர்கள் யாராவது இருக்காங்களா?"

``இருக்காங்க... என் நெருங்கிய நண்பன், தினகரன். என்கூட வொர்க் பண்ணியிருக்கான். அரசியலை உணர்வுபூர்வமாக உணர்ந்து, இதுவரைக்கும் எனக்குப் பெரிய சப்போர்ட் பண்றவன். நான் என்ன யோசிக்கிறேனோ, அதே மனநிலைமையில் அவனும் இருப்பான். அவன் வேறு சாதியைச் சேர்ந்தவன்தான். ஆனா, என்னை நம்புவான்; தொடர்ந்து என்னிடம் விவாதிப்பான். என் கவலைகளை அவனுடைய கவலைகளாக நினைப்பான்."  

``ஒரு குறிப்பிட்ட சாதியை மையமா வெச்சு ரஞ்சித் படம் எடுக்கிறார்னு இருக்கிற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்குறீங்க?" 

``உங்க உடம்புல நோய் இருக்கு. அதைப் பற்றி நீங்க கவலைப்படுவீங்களா, மாட்டீங்களா?! உங்க உடம்பு என்பது, தமிழ்ச் சமூகம். தமிழ்ச் சமூகத்தில் ஒரு நோய் இருக்கு. அதை தீர்க்கணும்னு நீங்க கவலைப்படுவீங்களா, மாட்டீங்களா?! அப்போ, இந்த நோயைப் பற்றிக் கவலைப்படுவது எப்படித் தப்பாகும்? நம்ம உடம்புல அடிபட்டா, அதைத் தீர்க்கணும்னு நினைப்போம்ல... அதைத்தான் நான் பண்றேன்."