Published:Updated:

`காரணமே இல்லாமல் சென்சார் சான்றிதழ் மறுக்கப்படுகிறது!’ - `மெரினா புரட்சி’ பட இயக்குநர் ராஜ்

`காரணமே இல்லாமல் சென்சார் சான்றிதழ் மறுக்கப்படுகிறது!’ - `மெரினா புரட்சி’ பட இயக்குநர் ராஜ்
`காரணமே இல்லாமல் சென்சார் சான்றிதழ் மறுக்கப்படுகிறது!’ - `மெரினா புரட்சி’ பட இயக்குநர் ராஜ்

எந்தக் காரணமும் சொல்லாமல் தனது படத்துக்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டிருப்பதாக, ஜல்லிக்கட்டு போராட்டங்களை மையமாக வைத்து 'மெரினா புரட்சி' படத்தை இயக்கியுள்ள ராஜ் குற்றம் சாட்டியிருக்கிறார்.

2017- ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையும், அதற்கு உலகமே கண்டு பிரமித்த மக்கள் எழுச்சியையும் மையமாக வைத்து `மெரினா புரட்சி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார், இயக்குநர் ராஜ். அதில், தமிழர் உணர்வுக்காக உலகம் முழுக்க நடந்த போராட்டத்துக்குக் காரணமான சிலரை அடையாளம் காட்டியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் நடந்த நிஜ காட்சிகளைப் பயன்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியிருக்கிறது படக்குழு. அங்கு படத்தைப் பார்த்த தணிக்கை குழு, இப்படத்துக்குத் தடை விதித்து, ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியுள்ளது. இதுகுறித்து அப்படத்தின் இயக்குநர் ராஜிடம் பேசினோம்.

"படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பும் முன்னரே, எனக்கு பீட்டாவிடம் இருந்து நோட்டீஸ் வந்தது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவிடமிருந்து, 'உங்கள் திரைப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பியிருக்கிறோம்' என்ற அறிவிப்பு வந்ததே தவிர, எந்த ஒரு காரணமும் சொல்லவில்லை. ரிவைஸிங் கமிட்டியிடம் இருந்து நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் " என்றார்.  சில காட்சிகளை நீக்கச் சொல்லியோ, சில வசனங்களை மியூட் செய்யச் சொல்லியோதான் சென்சார் போர்டால் பரிந்துரைக்கப்படும். அதற்குத் தகுந்தாற்போல மாற்றங்கள் செய்யப்பட்டால், படத்துக்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்படும்.

ஆனால், 'மெரினா புரட்சி' படத்துக்கு எந்த ஒரு காரணத்தையும் குறிப்பிடாமல், படத்துக்குத் தடை விதித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது, முக்கியமான அரசியல் பிரமுகர்களை விமர்சிக்கும் காட்சிகள், குறிப்பிட்ட விலங்கு நல அமைப்புக்கு எதிராகக் கோஷமிடும் காட்சிகள், போராட்டத்தின் இறுதியில் நடந்த வன்முறைக்குக் காரணமான காட்சிகள் உள்ளிட்டவை படத்தில் பதிவுசெய்யப்பட்டிருப்பதால்தான் இப்படத்துக்குத் தடை விதித்திருக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டுவருகிறது. மேலும், பீட்டாவின் அதிகாரபூர்வ பக்கத்தில் இயக்குநர் ராஜ் பொய் சொல்வதாகவும், அவரிடம் ஆதாரம் இல்லை என்றும் கடுமையாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இவரோ, எல்லா ஆதாரத்தையும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.