Published:Updated:

``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி!" - தனுஷ்

``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி!" - தனுஷ்
News
``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி!" - தனுஷ்

`வடசென்னை' படம் குறித்துப் பேசியிருக்கிறார், நடிகர் தனுஷ்

``வடசென்னை படம் சினிமாவுல என்னோட அடுத்த இன்னிங்ஸ். மேலும், தயாரிப்பாளராகவும் என்னை நான் நிலைநிறுத்திக்கணும்னு நினைக்கிறேன். இந்தப் படத்தை மொத்தம் மூன்று பாகங்களா எடுக்கலாம்னு இருக்கோம். தவிர, வேறு சில சீக்குவல் படங்களும் வரிசையில இருக்கு..." - தனது அடுத்தகட்ட திட்டங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார், தனுஷ். 

```புதுப்பேட்டை'க்கும், `வடசென்னை'க்குமான வித்தியாசங்கள் என்னவாக இருக்கும்?"

``ரெண்டு படத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இந்த இரண்டு கதைகளையும் தொடர்புப்படுத்திப் பார்க்கவேண்டிய அவசியமும் இல்லை. எந்த கேங்ஸ்டர் படமாக இருந்தாலும், அதை `புதுப்பேட்டை' படத்தோட கம்பேர் பண்ணிப் பார்ப்பதுதான், அந்தப் படத்தோட வெற்றி. செல்வராகவனோட அற்புதமான படைப்புகள்ல அதுவும் ஒண்ணு. `வடசென்னை' இன்னும் எதார்த்தம் மிக்க ஒரு கதையாக இருக்கும். 

`வடசென்னை'க்கு இருக்கிற பிரத்தியேக அரசியல், எதார்த்தம், அழகியல் மூன்றையும் பேசக்கூடிய படமாக இருக்கும். `வடசென்னை'னு சொன்னா என்னவெல்லாம் உங்க மனசுல தோன்றுமோ, அதெல்லாம் இதுல இருக்கும். குறிப்பா, அதோட வழிமுறை, கலாசாரம், பண்பாடு. இந்தப் படத்துக்கான இசைத் தேடலைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகணும். ஒரு சாதாரண படம் மாதிரி எந்தவிதமான இசைக் கருவியை வைத்து வேண்டுமானாலும் இசை அமைச்சிடலாம்ங்கிற சுதந்திரம் `வடசென்னை'க்குக் கொடுக்கப்படலை. அதுக்குனு பிரத்தியேகமான இசைக்கருவிகள் மட்டும்தான் பயன்படுத்தப்படணும். அது குறித்து சந்தோஷ் நிறைய ஆராய்ச்சிகள் பண்ணியதா என்கிட்ட சொன்னார். இசையும், பின்னணி இசையும் தனியாகப் பேசப்படும் அளவுக்கு இந்தப் படத்துல இருக்கும்."

``படத்துல `அன்பு' கதாபாத்திரம் அரசியல் பேசியிருக்கா?"

``அரசியல் இல்லாம படம் எப்படிச் சாத்தியம்?! அடித்தட்டு மக்களின் உரிமைக் குரலை வெளிக்கொண்டு வந்திருக்கோம். ராஜன் - அமீர் அண்ணன் கதாபாத்திரம், அவரைச் சுற்றி நடக்கிற கதைதான் `வடசென்னை'. 30 வருடக் கதையை ஒரு படத்துல பேச முற்பட்டோம். ஆனா, எங்களால அதைப் பண்ண முடியலை. அதனால படம் 3 பாகங்களா வெளிவரவிருக்கு."  

``படத்துல இரு பெண் கதாபாத்திரங்கள் எப்படி இருக்கும்?" 

``ஆண்ட்ரியாவுக்கு `சந்திரா' கதாபாத்திரம் மிகப்பெரிய சவாலாகத்தான் இருந்துச்சு. `வடசென்னை'யின் வாழ்க்கை முறையும் சரி, தமிழ்ப் பேசும் விதமும் சரி... அவங்களுக்கு ரொம்பப் புதுசு. இந்தப் படத்துக்காக நிறைய கத்துக்கிட்டாங்க. `பத்மா'வாக நடிச்சிருக்கிற ஐஸ்வர்யாவுக்கு வடசென்னை குறித்து சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த மாதிரியான படங்கள்ல நடிக்கிறதுல அவங்க என்னைவிட திறமைசாலி. அவங்ககூட நடிக்கிறப்போ நானும் நிறைய கத்துக்கிட்டேன். கேமராவை ஒளிச்சு வெச்சு எடுத்த மாதிரியான எதார்த்தம் ஐஸ்வர்யாவின் நடிப்பு."

``ஐந்து மணி ஷோ தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருவது பற்றி ஒரு தயாரிப்பாளரா என்ன சொல்ல விரும்புறீங்க?"

``தயாரிப்பாளர் பணி சவால்கள் நிறைந்ததுதான். இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்... இப்படி எல்லோரையும் தயாரிப்பாளர்கள் திருப்திப்படுத்தணும். அதே சமயம், படத்தை வெற்றியடையவும் வைக்கணும். படம் எடுப்பது இந்தக் காலகட்டத்துல பெரிய விஷயம் இல்லை, அதை ரிலீஸ் பண்றதுதான் பிரச்னையே! இதுக்கு மீடியாகிட்ட இருந்து நிறைய உதவிகள் தேவைப்படுது. படத்தை புரமோட் பண்றது தொடங்கி, எங்களுக்கு சப்போர்ட் பண்றது வரை, மீடியாவுக்கு சினிமாவுல பெரும் பங்கு இருக்கு. `பைரஸி'யை  ஒழித்துக்கட்டணும். அதுக்கு அரசாங்கத்திடமிருந்து உதவிகள் வரணும். தவிர, சினிமாவைக் கொண்டாடுற காலகட்டத்துல நாம இல்லை. ஒரு படத்தின் ஆயுள்காலம் அதிகபட்சம் 15 நாள்தான். முந்தைய காலம் மாதிரி மாசக்கணக்குல படம் ஓடப்போறதும் கிடையாது. இப்போ சினிமா ஒரு சரிவு நிலையிலதான் இருக்கு."

`` `வுண்டர் பார்' தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தது எதற்காக?" 

``சிலருக்கு சினிமாவுல படம் பண்ணணும்ங்கிற ஆர்வமும், ஆசையும் அதிகமா இருக்கும். ஆனா, அதற்கான பண வசதி, யாரை அணுகணும், எப்படி நடைமுறைப்படுத்தணும்... இதெல்லாம் தெரியாது. அந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு உதவி செய்யணும்ங்கிற நோக்கத்துல ஆரம்பிக்கப்பட்டதுதான், `வுண்டர் பார்' நிறுவனம். பலரோட கனவுகளை நனவாக்குற பயணத்தை நோக்கித்தான் நாங்க ஓடிக்கிட்டு இருக்கோம்."