Published:Updated:

பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் ஆகிவிட முடியாது! - அதிதி பாலன்

பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் ஆகிவிட முடியாது! - அதிதி பாலன்
பிரீமியம் ஸ்டோரி
பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் ஆகிவிட முடியாது! - அதிதி பாலன்

எனக்குள் நான்ஆர்.வைதேகி - படங்கள் : பா.காளிமுத்து

பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் ஆகிவிட முடியாது! - அதிதி பாலன்

எனக்குள் நான்ஆர்.வைதேகி - படங்கள் : பா.காளிமுத்து

Published:Updated:
பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் ஆகிவிட முடியாது! - அதிதி பாலன்
பிரீமியம் ஸ்டோரி
பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் ஆகிவிட முடியாது! - அதிதி பாலன்

மிழ் சினிமாவின் அபூர்வ ராகம். அறிமுக நாயகிக்கான அடையாளங்கள் தவிர்த்த அசாதாரண திறமையாளர். தொடர்ந்து நடிப்பாரா... தெரியவில்லை. ஆனால் ‘அருவி’ என்கிற ஒரு படம் போதும்... காலத்துக்கும்! அதிதியின் நடிப்பைப் போலவே அவரது பேச்சிலும் அலட்டலும் ஆரவாரமும் இல்லை. அட்வகேட் அதிதி, ஆக்டரான கதையில், அருவியாக நனைக்கின்றன அனுபவங்கள்.  

பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் ஆகிவிட முடியாது! - அதிதி பாலன்

‘அருவி’க்கு முன் அதிதி யார்?

வயதுக்கேற்ப மாறும் லட்சியங்களைக் கொண்டு வளர்ந்த சராசரிப் பெண். பத்தாவது படிக்கும்போது என் ஆர்வம் சட்டம் படிப்பது. அதற்குக் காரணம் நான் அறிந்த, நான் பார்த்து வளர்ந்த என் குடும்பத்துப் பெண்கள்.

பாட்டி, அதாவது என் அப்பாவின் அம்மா ரொம்பவும் உறுதியான பெண்மணி. இப்போது அவர் உயிருடன் இல்லை. ஊரில் ஏதாவது பிரச்னை என்றால் பாட்டியே பஞ்சாயத்து செய்து தீர்த்து வைப்பாராம். அம்மாவின் அம்மா, அம்மா என எல்லோரும் உறுதியான பெண்மணிகள். அவர்களிடம் நான் பார்த்த அந்தத் தைரியம்தான் சட்டப்படிப்புக்கான அடிப்படையாக இருக்க வேண்டும்.

சின்ன வயதிலிருந்தே நிறைய பேசுவேன். என் பேச்சைப் பார்த்து ‘நீ பேசற பேச்சுக்கு வக்கீல் ஆயிடு’ என்பார்கள். அது மனதில் பதிந்துவிட்டது. காலேஜ் போன பிறகுதான் தெரிந்தது... பேச்சுக்கும், சட்டப்படிப்புக்கும் சம்பந்தமில்லை; பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்களாகிவிட முடியாது என்பது. பெங்களூரில் சட்டம் படித்தேன். சிவில், கிரிமினல் என எல்லாப் பிரிவுகளிலும் இன்டெர்ன்ஷிப் செய்தேன். சென்னை வந்து பார் எக்ஸாமுக்கு என்ரோல் செய்து, தேர்வு எழுதிவிட்டு வக்கீல் கனவுகளுடன் காத்திருந்தேன்.

அட்வகேட் அதிதி, ஆக்டரானது எப்படி?

என் ஃப்ரெண்ட் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். புதுமுகங்களுக்கான வொர்க்‌ஷாப் ஒன்றை நடத்தினார். பார் எக்ஸாம் ரிசல்ட்டுக்காகக் காத்திருந்த வேளையில் எனக்கொரு பிரேக் தேவைப்படவே நானும் அதில் சேர்ந்தேன். அங்கே சந்தித்த ஒருவர் மூலம்தான் ‘அருவி’ படத்துக்கான ஆடிஷன் பற்றித் தெரியவந்தது.  சினிமா ஆடிஷன் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில்தான் போனேன். அடுத்த நாள் டெஸ்ட் ஷூட். பிறகு ஸ்கிரிப்ட் கொடுத்தார்கள். கதையைக் கேட்டதும் பிடித்து விட்டது.  ‘இந்தப் படத்தில் நடித்து முடிக்கிற வரை நீங்கள் வேறு எதையும் செய்ய முடியாது’ என்று சொன்னார்கள். அப்படியே படம் முடிகிறவரை வேறு சிந்தனைகளைத் தவிர்த்து `அருவி’யாகவே வாழ்ந்தேன்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் ஆகிவிட முடியாது! - அதிதி பாலன்

2015-ல் படம் முடிந்துவிட்டது. அந்தப் படம் முடிந்து ரிலீஸுக்குக் காத்திருந்த நேரம். சட்டத் துறை வேலையையும் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தேன். கையில் சட்டப்படிப்பு இருக்கிறது; எப்போது வேண்டுமானாலும் தொடர முடியும். படம் ரிலீஸாகி, ஆடியன்ஸ் ரியாக்‌ஷன் எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் இரண்டு வருடங்கள் காத்திருந்தேன். படம் வெற்றியடைந்து, அடுத்தடுத்து எனக்கு நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிப்பைத் தொடர்வது என்றும், ஒருவேளை பட வாய்ப்புகளே இல்லை என்றாலும் எனக்கு ஆர்வமுள்ள பிற துறைகளில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்திருந்தேன். பொதுவாகவே எனக்குக் குழந்தைகளைப் பிடிக்கும். அவர்களுடன் இருப்பதும் அவர்களைப் பார்த்துக் கொள்வதும் பிடித்த விஷயங்கள். என் ஃப்ரெண்ட், சிறப்புக் குழந்தைகளுக்கான ஸ்பெஷல் எஜுகேட்டராக இருக்கிறார்.  இடைப்பட்ட நாள்களில் அவருடன் சேர்ந்து நானும் வாலன்டியராக அந்தக் குழந்தைகளுடன் வேலை பார்த்திருக்கிறேன். டான்ஸ் கற்றுக்கொண்டேன். நிறைய டிராவல் பண்ணினேன். சட்டத் துறையில் என்ன நடக்கிறது எனத் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன்.

நடிகையாக இருப்பதில் சிரமங்கள்?

வெளியே போகும்போது செல்ஃபிக்கு போஸ் கொடுப்பது. ஒருவகையில், அது சந்தோஷம்தான். அது ஒரு படத்தோடு நின்றால் `ஓகே’. பத்து செல்ஃபிக்களாக மாறும்போதுதான் கஷ்டமாகத் தெரியும். நான் நடிக்க வருவதற்கு முன்பு எங்கேயாவது பிரபலங்களைச் சந்திக்கும்போது, அவர் களின் அந்தரங்கத்தைத் தொந்தரவு செய்யக் கூடாது என்றே நினைப்பேன். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. ரசிகர்களின் அன்பை மறுப்பதாக அர்த்தமில்லை, அந்தரங்கம் மதிக்கப்பட வேண்டும் என்பதற்கான வேண்டுகோள்.

நேர நிர்வாகத்தில் அதிதி எப்படி?

நடிக்க ஆரம்பித்தபோது அது எனக்குப் பிடிபடாமல் இருந்தது. இப்போது எந்தெந்த வேலைகளுக்கு எப்போது, எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் எனப் புரிந்து கொண்டிருக்கிறேன். உடற்பயிற்சிக்கு, வாசிப்புக்கு என நேரம் ஒதுக்க முடிகிறது. காலையில் எழுந்ததும் யோகா, பிறகு நியூஸ் பேப்பர் வாசிப்பு, ஒவ்வொரு நாளும் ஒரு படம் பார்ப்பது எனத் திட்டமிட்டபடி போய்க் கொண்டிருக்கிறது. படம் ரிலீஸான பிறகு யோகாவுக்கான நேரம் அவசியமாகியிருக்கிறது.

நெகிழவைத்த பாராட்டு..?

பிரபலங்கள் பலரும் பாராட்டியிருக் கிறார்கள். அவையெல்லாம் பெருமையாக உணரச்செய்தாலும் நெகிழவைத்த பாராட்டு ஒன்று உண்டு. சில நாள்களுக்கு முன் கல்லூரி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். 1,500 மாணவிகள் சூழ இருந்த அந்த அரங்கில் முதலில் பேச வந்தார் ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.  ‘நான் எம்.காம் ஸ்டூடன்ட். என் ஆசிரியர்களும் சக மாணவிகளும் என்னை வேற மாதிரிதான் பார்த்தாங்க. இந்தப் படம் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கு’ என்றார். அத்தனை பேர் முன்னிலையில் அந்தப் பெண்ணின் தைரியமான அந்த ஸ்டேட்மென்ட் என்னை அழவைத்தது.  

பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் ஆகிவிட முடியாது! - அதிதி பாலன்

‘என் அக்கா லவ் மேரேஜ் பண்ணிட்டுப் போயிட்டாங்க. அதனால அவங்ககூட நான் பேசாம இருந்தேன். இந்தப் படம் பார்த்ததும் தப்பு பண்ணிட்டேன்னு புரிஞ்சது. பாசமா இருந்திருக்கலாமோனு தோணுது’ என்றார் இன்னொரு பெண். சாதாரண ஆட்களின் இதுபோன்ற வார்த்தைகள் பிரபலங்களின் பாராட்டுகளைவிடவும் பெரிய விஷயம்.

மீ டூ?

எந்தப் பெண்ணுக்கு இல்லை? சிறு வயதில் தெருவில் நடந்துபோகும்போது உரசிய ஆண்களை, தட்டிச்சென்றவர்களை, திருவிழாவின்போது கைவைத்தவர்களை எல்லாம் நானும் பார்த்திருக்கிறேன்.  

பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் ஆகிவிட முடியாது! - அதிதி பாலன்

காலேஜில் படிக்கும்போது எதிரில் ஒரு ஜூஸ் கடை இருந்தது. நாடோடி சமூகப் பெண் ஒருவர், தன் குழந்தையுடனும் ஜெயந்தி என்கிற 13 வயது சிறுமியுடனும் அங்கே பிச்சை எடுப்பார். ஜெயந்திக்குத் தமிழ் தெரியும். என்னிடம் நன்றாகப் பேசுவாள். அவளுக்குப் பெற்றோர் கிடையாது. பாட்டியுடனும் தம்பியுடனும் வசித்து வந்தாள். நானும் அவளும் ரொம்பவே நெருக்கமாக இருந்தோம். பிச்சை எடுத்துத் தன் தம்பியைப் படிக்க வைக்கிற ஜெயந்தியைப் படிக்க வைக்க வேண்டும் என எனக்கு ஆசை. என் அம்மா அப்பாவிடம் சொல்லி சம்மதமும் வாங்கினேன். திரும்ப பெங்களூரு போனபோது அவளைக் காணவில்லை. எனக்குப் பயம். கொஞ்ச நாள் கழித்து ஜெயந்தியைச் சந்தித்தேன். ‘வயசுக்கு வந்துட்டேன்க்கா. அதான் ஊருக்குப் போயிருந்தேன்’ என்றாள். அவசரமாகச் சென்னைக்கு வந்து என் பெற்றோரிடம் பேசி, உடனடியாக அவளைப் படிக்க வைப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றேன். திரும்பவும் ஊருக்குப் போன எனக்கு அதிர்ச்சி. ஜெயந்தியை யாரோ அழைத்துச்சென்று பலாத்காரம் செய்து கொன்ற விஷயம் எனக்கு அந்த நாடோடி சமூகப் பெண் மூலம் தெரியவந்தது. அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிட்டேன். பிறகு, யார் காரணம் என விசாரித்தேன். ஆட்டோகாரர் ஒருவரின் வேலை என்று சொன்னார். அந்தப் பகுதி ஆட்டோகாரர்களிடம் நியாயம் கேட்கலாம் எனக் கிளம்பிய என்னை அந்தப் பெண் தடுத்தார். ‘நீங்க போனீங்கன்னா உங்களுக்கும் ஆபத்து வரலாம். வேண்டாம்’ எனக் கெஞ்சினார்.  அதற்கடுத்த சில நாள்கள்,  நடைப்பிணம் மாதிரி காலேஜுக்குப் போய் வந்துகொண்டிருந்தேன். அதிலிருந்து இன்றளவும் என்னால் முழுமையாக மீண்டு வர முடியவில்லை.

இன்று என்னால் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச முடிகிறது. பேச முடியாத எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். நம் உடலின் மீது நமக்கு மட்டுமே உரிமை உண்டு. கணவருக்குக்கூட உரிமை கிடையாது. இதுவரை நான் சந்தித்த பெண்கள் நிறையப் பேருக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் இருப்பதைக் கேட்டிருக்கிறேன். ‘எல்லாப் பொண்ணுங்களுக்கும் நடக்கிறது தானே...’ எனப் போகிறபோக்கில் சொல்லிவிடுகிறார்கள். அதை எப்படி நடக்கவிடலாம்? பேசுவோம்.’’

நீண்ட நாள் ஆசைகள்?

`லா' பிராக்டீஸ் பண்ண வேண்டும். இப்போதைக்கு முழுநேரமாக அதில் ஈடுபட முடியாது. நடிக்கவே தெரியாமல் படத்தில் அறிமுகமாகி, அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. சட்டம் எனக்குத் தெரிந்த துறை. அதில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.

அட்வகேட் அதிதியையும் வரவேற்போம்!