Published:Updated:

``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே!’’ #metoo பற்றி விஜயலக்ஷ்மி

``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே!’’ #metoo பற்றி விஜயலக்ஷ்மி
``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே!’’ #metoo பற்றி விஜயலக்ஷ்மி

#meetoo குறித்துப் பேசியிருக்கிறார், நடிகை விஜயலக்ஷ்மி

``எனக்கும் வுமன் சென்ட்ரிக் கதைகள்ல நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனா, உடனடியா இந்த மாதிரியான படங்கள்ல கமிட்டாக விரும்பலை. அடுத்ததா, வெங்கட் பிரபு சார் படம் மற்றும் ஒரு வெப்சீரீஸ்ல நடிக்கிறேன். பிக் பாஸுக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்துக்கிட்டே இருக்கு!" - தன்னுடைய பிக் பாஸ் அனுபவங்களையும், சினிமா திட்டங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், விஜயலக்ஷ்மி.

``பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மக்கள் உங்களை எப்படிப் பார்க்கிறாங்க?"

``ஒருத்தவங்களை பிடிச்சிருந்ததுனா மக்கள் எப்படி அவங்களைக் கொண்டாடுவாங்கனு இந்த நிகழ்ச்சி மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு நிறைய பாராட்டுகள் பெண்கள்கிட்ட இருந்து வந்தது. குறிப்பா, `எங்க வீட்டுப் பொண்ணு மாதிரியே இருக்க'னு சொல்லும்போது கிடைச்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. `கல்யாணத்துக்குப் பிறகு பெண்களுக்கு வாழ்க்கையே முடிஞ்சுபோகும்னு நினைச்சோம். நீங்க அதை முறியடிச்சுட்டீங்க!'னு சிலபேர் சொன்னாங்க."

``வீட்டுல என்ன ரெஸ்பான்ஸ்?" 

``நான் என் வீட்டுல எப்படி இருப்பேனோ, அப்படிதான் பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயும் இருந்தேன். ஸோ, குடும்பத்துல உள்ள எல்லோரும் செம ஹேப்பி! இத்தனை நாள் மகன் நிலனை பிரிஞ்சு இருந்ததுல, அவனுக்கு அம்மா யாருன்னே மறந்து போயிருச்சு. 40 நாள் கழிச்சு என்னைப் பார்க்கும்போது அவனுக்கு அடையாளமே தெரியலை. என் கணவர் சின்ன விஷயத்துக்குகூட என்னைத்தான் தேடுவார். நான் இல்லாம அவருக்கு நாளே ஓடாது. அதுவும் உடம்பு சரியில்லாமப் போச்சுனா, அவ்ளோதான்! டீகூட நான்தான் போட்டுத் தரணும். வீட்டுல மத்தவங்க பேச்சைக் கேட்க மாட்டார். என்னோட ஜிம் டிரெயினர் அவர். பாவம் நான் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டிருக்கார்." 

``உங்களுக்கு சப்போர்ட் பண்ணவங்களுக்கும், ட்ரோல் பண்ணவங்களுக்கும் என்ன சொல்ல விரும்புறீங்க?"

``ட்ரோல் பண்ண விரும்புறவங்களுக்கு நான் சொல்றது ஒண்ணுதான். உங்களுக்கு ஒருத்தரைப் பிடிக்கலைனா, அவங்களை எதிர்த்துக் குரல் கொடுக்குறீங்க. நல்ல விஷயம். ஆனா, உங்க முகம் எங்கே?! உங்க முகத்தைக் காட்டி ஒரு வீடியோ போடுங்க. தன்னுடைய அடையாளத்தை மறைச்சு ஒருத்தவங்க பேசுறதை நான் பெருசா எடுத்துக்கமாட்டேன். அவங்களுக்கு எந்தப் பதிலும் சொல்லமாட்டேன். கத்திகிட்டே கெடங்க... அந்தக் கரடியே காறித்துப்புன மொமென்ட்னு நினைச்சு விட்ருவேன்." 

``யாருடைய எலிமினேஷன் உங்களுக்கு அதிர்ச்சியா இருந்தது?" 

``சென்றாயன் மற்றும் யாஷிகா எலிமினேட் ஆனது அதிர்ச்சியா இருந்துச்சு. ஏன்னா, அவங்க ரெண்டுபேருமே நேர்மையான போட்டியாளர்கள். விஜய் டிவி பிளான் பண்ணி வெளியே அனுப்புன மாதிரி எனக்குத் தெரியலை. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!"

``இந்தந்த செலிபிரிட்டிகளுடன் உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்துக்கோங்க..."

விஜய்:

``பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கும்போது விஜய் பாட்டுப் போட்டு, அவர் மாதிரியே டான்ஸ் ஆடுறது ஒரு டாஸ்க். அப்போ, எனக்கு ரொம்ப பயம். தேவையில்லாம என்னை ஏன் விஜய் ஃபேன்ஸ்கிட்ட மாட்டிவிடுறீங்களே பிக் பாஸ்னு நினைச்சேன். தப்பா ஏதாவது பண்ணிட்டா, விஜய் ஃபேன்ஸ் ட்விட்டர்ல நம்மளைக் காலி பண்ணிடுவாங்களேனு பதற்றம் ஒரு பக்கம், டாஸ்க் நல்லா பண்ணணும்ங்கிற எண்ணம் இன்னொரு பக்கம்!" 

அஜித்:

`` `வான்மதி', `காதல் கோட்டை' படங்கள் அப்பா இயக்கியது. அப்போ, அப்பா எங்களை ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போவார். அப்போ, அஜித் சாரை பார்த்து பிரமிச்சுப் போயிருக்கேன். ஷூட்டிங் டைம்ல  நல்லா பேசுவார். சிலசமயம் அங்கே இருக்கிற லைட் மேன் மடியில படுத்துத் தூங்குவார். அவர்கூட ஒருநாள் 4 மணிநேரம் பிரியாணி சாப்பிட்டுக்கிட்டே பேசுனதை மறக்கவே முடியாது. ரொம்ப ஃப்ரெண்ட்லியான ஆள்!"  

மிர்ச்சி சிவா:

``எனக்கு சிரிச்சுக்கிட்டே இருக்கிறது ரொம்பப் பிடிக்கும், சிரிக்க வைக்கிறவங்களையும் ரொம்பப் பிடிக்கும். அதனால, சிவா என் ஆல் டைம் ஃபேவரைட்." 

வெங்கட் பிரபு: 

``ஸ்வீட் ஹார்ட்! எனக்குப் பிடிச்ச இயக்குநர். இப்போ நான் நடிச்சுக்கிட்டிருக்கிற படத்தோட தயாரிப்பாளர். அவருக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. அவங்களை அவர் பார்த்துகிற விதம் ரொம்பப் பிடிக்கும்." 

பிரேம்ஜி: 

``பிரேம்ஜிகூட இருந்தா ஒரே கலாட்டாதான்! இவர் பார்ட்டிக்குப் போயிட்டு வீட்டுக்கு வரும்போது, மஹாலக்ஷ்மி மாதிரி ஒரு பொண்ணு வீட்டுல இருக்கணும்னு வெறித்தனமா பொண்ணு தேடிக்கிட்டு இருக்கார். இவருக்காக நானும் தேடிக்கிட்டு இருக்கேன்."  

`` #MeToo பத்தி உங்க கருத்து?"

``ட்விட்டர்ல இது குறித்துப் பலரும் குரல் எழுப்புறது தப்பில்லை. சமூக வலைதளத்துல பிரச்னையை வெளிப்படுத்துறது மூலமா நமக்கு ஆதரவு கிடைக்கும். மேலும், புகாரை போலீஸுக்கு எடுத்துக்கிட்டு போறது இன்னும் சரியான முடிவா இருக்கும். தவிர, இந்த விஷயம் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் நடந்துக்கிட்டுதான் இருக்கு. கேட்கிற இடத்துல இருக்கிறவங்க தப்புனா, அதுக்கு ஒப்புக்கிட்டு கொடுக்குற இடத்துல இருக்குறவங்ககிட்டேயும் தவறு இருக்கத்தான் செய்யுது. எனக்கும் இந்த விஷயம் நடந்திருக்கு. யாரும் கழுத்துல கத்தி வெச்சு, `நீ இதைப் பண்ணியே ஆகணும்'னு வற்புறுத்தப் போறதில்லை. எல்லாம் நம்ம கையிலதான் இருக்கு!" 

அடுத்த கட்டுரைக்கு