Published:Updated:

``குஷ்பு அக்கா சொன்னாங்க; வாபஸ் வாங்கிட்டேன்!" - நடிகை ராணி

``குஷ்பு அக்கா சொன்னாங்க; வாபஸ் வாங்கிட்டேன்!" -  நடிகை ராணி
``குஷ்பு அக்கா சொன்னாங்க; வாபஸ் வாங்கிட்டேன்!" - நடிகை ராணி

`ஓ போடு' ராணி `நந்தினி' சீரியலில் தான் நடிக்கும்போது நடிகர் சண்முகராஜன் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாக போலீஸில் புகார் கொடுத்துவிட்டு அதைத் திரும்பப் பெற்றிருக்கிறார். அது குறித்த விவரங்கள்...

பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து சமூக வலைதளங்களில் #Metoo என்ற ஹாஷ்டேக்கில் பலரும் எழுதித் தீர்த்து வருகிறார்கள். இதில், சினிமா உலகைச் சேர்ந்த சிலரது பெயர்கள் குறிப்பிட்டு வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, பின்னணிப் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாக ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த ட்வீட் சினிமா உலகைச் சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தவிர, அன்றாடம் வேலைக்குச் சென்றுவரும் பெண்களும் தங்களது வாழ்க்கையில் கடந்து வந்த பாலியல் தொல்லைகள் குறித்து, இந்த ஹாஷ்டேக்கில் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். இப்படிப் பலர் வெளிப்படையாகத் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பேசுவது ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும், ஒருதலைபட்சமாக இதற்குத் தீர்வு சொல்லமுடியாது என்றும் குறிப்பிடுகிறார்கள், சிலர்.  

இந்நிலையில், `வில்லுப் பாட்டுக்காரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ராணி, `நாட்டாமை' டீச்சராக நடித்து புகழ் பெற்றவர். திருமணத்துக்குப் பிறகு `ஜெமினி' படத்தின் `ஓ போடு' பாட்டில் இடம்பெற்றார். தற்போது தமிழ் சீரியல்களில் நடித்துவருகிறார். இந்நிலையில், ராணி தன்னுடன் இந்த சீரியலில் நடிக்கும் சக நடிகர் சண்முகராஜன் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாக சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். பின்னர், அதைத் திரும்பவும் பெற்றுவிட்டார். இதுகுறித்து ராணியிடம் பேசினேன். 

``என் கணவர் எனக்கு எப்போவும் சப்போர்ட். அவர் கொடுத்த நம்பிக்கையால்தான், திருமணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தேன். கிளாமர் நடிகையாக சில படங்களில் நடித்த என்னை, திருமணத்துக்குப் பிறகும் அதை கண்ணோட்டத்தில் திரை உலகம் பார்த்தது. சிலர் என்னை கிளாமர் ரோலில் நடிக்கும்படி கட்டாயப்படுத்தியிருக்காங்க. அவர்களுக்கெல்லாம் `நோ' சொல்லிட்டேன். முக்கியமாக, தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநர் கதை சொல்லும்போது நல்ல ரோல் என்று சொல்லிவிட்டு, ஷூட்டிங் ஸ்பாட்டில் கிளாமர் ரோலில் நடிக்கச் சொன்னார். பிடிவதமாக மறுக்கவே, என்னைக் கட்டாயப்படுத்தினார். அதனால், அவர் கன்னத்தில் அறைந்துவிட்டு வந்திருக்கேன். தெலுங்கில் `ooh la la'  படத்துல அம்மா கேரக்டரில் நடித்ததுக்காக எனக்கு நந்தி விருது கிடைத்தது. 

இப்படிக் குடும்பப் பாங்கான கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தால் மட்டுமே நடிக்கலாம்னு இருந்தேன். ஏன்னா, எனக்கு ஒரு பொண்ணு இருக்கா. குஷ்பு அக்கா அவங்க தயாரிக்கும் `நந்தினி' சீரியலில் நடிக்க என்கிட்ட கேட்டாங்க. குஷ்புவை பல வருடங்களாக எனக்குத் தெரியும். அதனால ஓகே சொன்னேன். இதில், எனக்கு நெகட்டிவ் கேரக்டர். இந்த சீரியலில் என் கணவராக நடிகர் சண்முகராஜன் நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக இதில் நடிச்சுக்கிட்டு இருக்கேன்.  

சீரியலில் நடிக்கும்போது சண்முகராஜன் என்கிட்ட ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்குவார். தேவையில்லாம என் கையைப் பிடிப்பார். இதெல்லாம் எனக்கு அருவருப்பைக் கொடுக்கும். இந்த மாதிரியெல்லாம் என்கிட்ட நடந்துக்கிற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்கனு கண்டிச்சிருக்கேன். ஆனா, அவர் திருந்தியபாடில்லை. 

அதனால, இதைப் பத்தி என் கணவர்கிட்ட சொன்னேன். அவர் சண்முகராஜன்கிட்ட பேசுறதுக்காக இன்னைக்கு `நந்தினி' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். அங்கே, மூணு பேரும் பேசிக்கிட்டு இருக்கும்போது, சண்முகராஜன் என்னைத் தாக்கினார். சண்முகராஜனின் இந்தச் செயலால் என் கணவர் ரொம்ப வருத்தப்பட்டார். உடனே, அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். 

சண்முகராஜன் மீது நடவடிக்கை எடுக்கிறதா எனக்கு உறுதியளித்தாங்க. சண்முகராஜன் மட்டுமல்ல, அந்த சீரியலின் இயக்குநர் ராஜ்கபூர் மீதும் புகார் கொடுத்திருந்தேன். ஏன்னா, இவர் சீரியலில் நடிக்கும் பெண்களைக் கேவலமா நடத்துவார். கொச்சையான வார்த்தைகளால் திட்டுவார். `நந்தினி' சீரியல் யூனிட்டில் இவங்க ரெண்டும்பேரும் வக்கிர புத்தி கொண்டவங்க. இவங்க ரெண்டுபேரும் சீரியலிலிருந்து விலகணும். இதுமாதிரி பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கிறவங்களுக்கு அரசு கடுமையான தண்டனையைக் கொடுக்கணும். இவங்களை மாதிரி ஆள்களால்தான் பெண்கள் பலரும் வெளியே வேலைக்குப் போக பயப்படுறாங்க. இந்தப் பிரச்னைக்காக `நந்தினி' சீரியலிருந்து நான் விலகமாட்டேன், தொடர்ந்து நடிப்பேன்'' என்று கூறிய ராணியிடம் புகாரை வாபஸ் பெற்றதற்கான காரணத்தைக் கேட்டால்,

`` `நந்தினி' சீரியலை நம்பி கிட்டதட்ட நூறு குடும்பங்களுக்கு மேலே இருக்கின்றன. நான் கொடுத்த புகார் காரணமா சீரியலில் வேலை  பார்க்கும் யாருக்கும் எந்தவொரு பிரச்னையும் வரக்கூடாது. இதைப் பற்றி குஷ்பு அக்காவே என்கிட்ட எடுத்துச் சொன்னாங்க. அதுமட்டுமல்லாம நடிகர் சங்கத்தில் இதுபற்றிப் புகார் கொடுக்கப் போவதாகவும் சொன்னாங்க. விஷால், நாசர் சார் எல்லோரும் சண்முகராஜன் செய்தது தவறுனு அவர் மேலே கோபமா இருக்காங்கனு குஷ்பு அக்கா சொன்னாங்க. அதனாலதான் புகாரை வாபஸ் வாங்கினேன். தவிர, சண்முகராஜன் என்னை மன்னித்து விடுங்கனு மன்னிப்புக் கேட்டார்'' என்று ராணி சொல்லி முடிக்க இதுகுறித்து சண்முகராஜனிடம் பேசினேன். 

``ராணி என்மீது பாலியல் குற்றச்சாட்டு கொடுத்தது ஏற்கவே முடியாது. ஏன்னா, இதொரு அடிதடி சண்டை பஞ்சாயத்துதான். அந்த அம்மா சீரியலில் நடிக்கும் போது என்னை உண்மையாகவே அடிச்சிருச்சு. இது சீரியலின் டைரக்டர் ராஜ்கபூருக்கும் தெரியும். இதுபற்றி விளக்கமாக பிரஸ் மீட்டில் பேசுவேன். அங்கே பார்க்கலாம்" என்று நம் தொடர்பைத் துண்டித்தார். 

இதுகுறித்து இயக்குநர் ராஜ்கபூரிடம் கேட்டபோது, `ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால், பேசமுடியாது' என மறுத்துவிட்டார்.  

பின் செல்ல