Published:Updated:

கட்டபொம்மன் வரலாறு இருக்கிறவரை சிவாஜி நிலைப்பார், ஜாக்சன் துரையான நானும்! - சி.ஆர்.பார்த்திபன்

`வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சி.ஆர்.பார்த்திபன் பேட்டி

கட்டபொம்மன் வரலாறு இருக்கிறவரை சிவாஜி நிலைப்பார், ஜாக்சன் துரையான நானும்! - சி.ஆர்.பார்த்திபன்
கட்டபொம்மன் வரலாறு இருக்கிறவரை சிவாஜி நிலைப்பார், ஜாக்சன் துரையான நானும்! - சி.ஆர்.பார்த்திபன்

``கிஸ்தி, திரை, வரி, வட்டி, வேடிக்கை... வானம் பொழிகிறது; பூமி விளைகிறது... உனக்கேன் கிஸ்தி?" - முதல் இந்திய விடுதலைப் போர் வட இந்தியாவில் 1857-ல் தொடங்கியதாக புத்தகங்களில் புகுத்தப்பட்ட வரலாற்றைப் பொய்யாக்க உதவிய ஓர் ஆவணம், இந்த வசனம். 1857-ல் இருந்து சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்து இப்படி அழகுத் தமிழில் பேசியிருப்பானா எனத் தெரியாது. ஆனால், ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து அவன் வாழ்ந்து மடிந்தது நடந்த வரலாறு. 1799- ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட, பின்னாளில் அவனது வரலாற்றை எல்லோருக்கும் எளிதாகப் புரியவைத்தது, சிவாஜி கணேசன் நடித்த `வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படம். படத்தில் `என்ன மீசையை முறுக்குகிறாயா... அது ஆபத்துக்கு அறிகுறி' என்றபடி, கட்டபொம்மனை சிறைபிடிக்க உத்தரவிட்ட ஆங்கிலத் தளபதி ஜாக்சன் துரையாக நடித்த சி.ஆர்.பார்த்திபன் தற்போது சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வருகிறார். " நீர் தான் ஜாக்சன் துரையா ? " என கட்ட்பொம்மன் சொல்லும் காட்சி சட்டென நினைவில் வர, அவரைச் சந்தித்தோம்.

``வயசு 90-ஐ நெருங்கிடுச்சு. 100 படங்களுக்கு மேல் நடிச்சுட்டேன். `ஏன், அண்ணே அண்ணே சிப்பாயண்ணே'னு சிவாஜி புள்ளகூடயே பாடினேன். ஆனாலும், ஜாக்சன் துரை பாத்திரம்தான் மக்கள் மனசுல பதிஞ்சிடுச்சு. ஒரு வருடத்துக்குமேல ஓடின படமாச்சே...'' - நடக்க வாக்கர் உதவி தேவைப்படுகிற போதும், பார்த்திபனிடமிருந்து நடுக்கமின்றி வருகின்றன வார்த்தைகள்.

``என் பூர்வீகம் வேலூர் பக்கம். மூதறிஞர் ராஜாஜியின் பங்காளிங்க நாங்க. பள்ளி நாள்களிலேயே நடிப்பு எங்கிட்ட வந்திடுச்சு. காலேஜ் படிக்க அப்போவே லயோலாவுக்கு வந்தேன். அங்கே படிச்சப்போவும் நடிச்சேன். பிறகு தலைமைச் செயலகத்துல வேலை. அங்கே இருந்த நாடகக்குழு கூப்பிட்டுச்சு. ரெண்டு மூணு வருடத்துல வேலையை விட்டுட்டு நடிக்கக் கிளம்பிட்டேன். அப்போதான் `பராசக்தி' ரிலீஸ் ஆகியிருந்தது. அதுவரைக்கும் நடிப்பு வருதுனு நடிச்சுக்கிட்டு இருந்தவன், சிவாஜி நடிப்பைப் பார்த்துட்டு ஒரு ஆசையோட நடிக்கத் தொடங்கினேன். நாடகம், சினிமானு எடுத்துக்கிட்டா ராஜாஜி, அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, என்.டி.ஆர்னு ஆறு முதலமைச்சர்கள்கூட வேலை பார்த்துட்டேன்.

`ஜெமினி' ஸ்டுடியோஸ் எஸ்.எஸ்.வாசன், ராமண்ணா, பி.ஆர்.பந்துலு, ஶ்ரீதர் தொடங்கி... கங்கை அமரன், பாக்யராஜ் வரைக்குமான இயக்குநர்கள் எனக்கு வாய்ப்பு தந்தாங்க. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரவிச்சந்திரன், சிவக்குமார், ஜெய்சங்கர். பிறகு, ரஜினி, கமல் பிரபு, விஜய்காந்த், கார்த்திக், சத்யராஜ் இவங்க எல்லோருடனும் நடிச்சுட்டேன். சிவாஜியுடன் நடிச்ச படங்கள்தான் அதிகம். ஒரு படத்துல..." என நிறுத்தினார்.

எதையோ நினைவுகூர விரும்புகிறார் என நினைத்தோம்.

``ஒரு படம் என்ன சார்.. எல்லாப் படத்திலேயும் அவரோட அந்தக் குரல் இன்னொரு சிவாஜி. `சிம்மக் குரலோன்'னு சும்மா சொல்லலை. அந்தக் குரலால் நானே ஈர்க்கப்பட்டேன். என்னை அவரோட ரசிகன்னு சொல்லவும் தயங்கமாட்டேன்'' என்றவரிடம், `வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் குறித்துக் கேட்டோம்.

``நம்மள்ல யாரு கட்டபொம்மனை நேர்ல பார்த்தது?! இப்போ உள்ள தலைமுறைக்கு சிவாஜிதான் கட்டபொம்மன். வசதி வாய்ப்பு இல்லாததாலேயே மண்ணுக்காகப் போராடிய எத்தனையோ பேரை மறந்துட்டோம். கட்டபொம்மனை அப்படி மறந்துடக்கூடாதுனு அவர் நினைச்சிருக்கார். நான் கேள்விப்பட்டவரை, அவர் கட்டபொம்மன்மேல அவ்வளவு பிரியமுள்ளவரா இருந்திருக்கார். அந்தப் பிரியமே அப்படியொரு வரலாற்றுக் காவியம் உருவாகக் காரணமாச்சு. எனக்கு என்னோட படிச்ச ஒருத்தர் மூலமா அந்தப் படத்துல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அப்போ நாடகங்கள்ல பொதுவா எனக்கு போலீஸ் ஐ.ஜி கேரக்டரா கிடைச்சுக்கிட்டு இருந்தது. எனக்கே லேசா சலிப்பு தட்டியிருந்துச்சு. ரெண்டொரு சமயம் சிவாஜிகிட்ட இதைச் சொல்லி ஆதங்கப்பட்டிருந்தேன். இந்தப் படத்துல கமிட் ஆனப்போ, `என்ன பார்த்திபா... போலீஸ் கேரக்டரா கிடைக்குதேன்னு சொன்னியே, இப்போ வெள்ளக்கார துரை கேரக்டர் கிடைச்சிருக்கு சந்தோஷமானு கேட்டார். `அதுவும் போலீஸ் வேலைதானே'னு சொன்னேன். `அடப் படவா'னு சிரிச்சார். 

படம் ரிலீஸாகி அப்படியொரு வெற்றி. எனக்கும் அதுவரை இல்லாத ஒரு புகழ். `கிஸ்தி, திரை..' வசனமும், `துடிக்கிறது மீசை' வசனமும் பிரபலமாகி இன்னைக்குவரைக்கும் பள்ளிப் பிள்ளைங்க இந்த வசனத்தைப் பேசிக்கிட்டிருக்காங்க. கட்டபொம்மன் மறைஞ்சாச்சு. சிவாஜி போயிட்டார். ஆனாலும், அந்தப் படத்தைப் பத்தி நாம பேசுறோம். வருங்காலத்திலும் பேசுவாங்க. கட்டபொம்மன் வரலாறு நிலைச்சிருக்கிற வரை, தமிழ் மக்கள் சிவாஜி கணேசனையும் மறக்கமாட்டாங்க. கூடவே இந்த ஜாக்சன் துரையையும் மறக்கமாட்டாங்க!'' என்றவர்,

``எனக்கு என்னன்னா, வேலூர் பக்கம் பிறந்தவன் நான். கிட்டத்தட்ட கட்டபொம்மன் காலத்திலேயே எங்க ஊர்லேயும் வெள்ளைக்காரங்களுக்கு எதிராப் புரட்சி செஞ்சாங்க. ஆனா பாருங்க, வெள்ளைக்காரன் கேரக்டர்தான் எனக்குப் புகழ் தந்தது. `வீரபாண்டிய கட்டபொம்மன்' ரிலீஸாகி ரெண்டு வருடத்துல `கப்பலோட்டிய தமிழ'னுக்குக் கூப்பிட்டு வெள்ளைக்கார ஜட்ஜா நடிக்கச் சொன்னாங்க. அதுலயும் இந்திய சுதந்திரத்துக்காகப் போராடினவங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கிறதுதான் என் வேலை. ஒரு படத்துலயாச்சும் சுதந்திரத்துக்காகப் போராடுறவனா நடிக்க முடியாம போச்சே!'னு யோசிச்சுப் பார்த்திருக்கேன். அந்த ஆசை நிறைவேறாமலேயே போயிட்டதுல வருத்தம்தான்" என்கிறார்.

`இப்போ சினிமா பார்ப்பதுண்டா' என்றோம்.

``நடிக்கிறதை நிறுத்தி 20 வருடமாச்சு. ஒருசிலர் இன்னைக்கும் நான் ஒருத்தன் இருக்கிறதை ஞாபகம்வெச்சு சினிமா விழாக்களுக்குக் கூப்பிடுறாங்க. முடிஞ்சா போயிட்டு வர்றேன். முன்னாடி சினிமாவுல நடிக்கணும்னா, அழகா கலரா இருந்தா மட்டுமே முடிஞ்சது. இன்னைக்கு அப்படியில்லைனு தெரியுது. என்னைக் கேட்டா, சினிமாவுக்குனு ஒரு அழகு இருக்கணும். எப்போவாச்சும் பையன் சில படங்களைப் போட்டுக் காட்டுனா, பார்ப்பேன். அதுல, அந்த சேதுபதி (விஜய் சேதுபதி) நடிக்கிறது நல்லா இருக்கு. `நல்லா நடிக்கிறப்பா'னு பேசி வீடியோ அனுப்பினேன். மறுநாள் வீட்டுக்கு வந்துட்டான். ரொம்ப நேரம் உட்கார்ந்து பேசிட்டுப் போனான். இப்போ நீங்க கட்டபொம்மன் நாள்களைப் பத்திப் பேசறீங்க. சினிமா பத்தி என்ன பேசினாலும் எனக்கு ஆர்வம்தான். ஆனா, உடம்பு தொடர்ந்து உட்கார்ந்து பேச ஒத்துழைக்கிறது இல்ல தம்பி." என்றார். அவரது உடல் சின்ன ஓய்வைத் தேட, பேட்டியை முடித்து விடை பெற்றோம்.