Published:Updated:

"நான் #Metoo-வை எதிர்க்கலை... ஆனா, வைரமுத்துவை ஆதரிக்கிறேன். ஏன்னா..?!’’ - விஜய் மில்டன்

"நான் #Metoo-வை எதிர்க்கலை... ஆனா,   வைரமுத்துவை ஆதரிக்கிறேன். ஏன்னா..?!’’ - விஜய் மில்டன்
"நான் #Metoo-வை எதிர்க்கலை... ஆனா, வைரமுத்துவை ஆதரிக்கிறேன். ஏன்னா..?!’’ - விஜய் மில்டன்

இயக்குநர் விஜய் மில்டன், கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக சில கருத்துகளை சொல்லியிருக்கிறார்.

கோலிவுட் உலகில் தற்போதைய விவாதம் வைரமுத்து மீது சின்மயி வைத்திருக்கும் பாலியல் புகார். இதுகுறித்து  #Metoo ஹாஷ்டேக்குடன் ட்விட்டரில் அடுக்கு அடுக்கான புகார்களைக் கூறிவருகிறார், சின்மயி. பல வருடங்களுக்கு முன் சின்மயி மற்றும் வைரமுத்து கலந்துகொண்ட `வீழ மாட்டோம்' நிகழ்ச்சியில் வைரமுத்து தங்கியிருந்த அறைக்குத் தன்னைத் தனியாக அழைத்தாகக் குற்றம் சாட்டியிருக்கிறார், சின்மயி. வைரமுத்து பற்றி சின்மயி இவ்வாறு கூறியது சினிமா உலகில் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. இந்நிலையில், முன்னணி நடிகைகள் சிலர் சின்மயிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன், வைரமுத்துவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருக்கிறார், அவரிடம் பேசினேன். 

``இன்றைய டிஜிட்டல் உலகில் யாரும் யாரைப் பற்றியும் கருத்து கூறலாம் என்ற நிலை இருக்கு. இது ஒரு வகையான கருத்துச் சுதந்திரம்தான். ஆனா, சில நேரங்களில் சமூக வலைதளங்களின் வழியாக சில விஷயங்களைப் பற்றிப் பேசுறது கஷ்டமா இருக்கு. குறிப்பாக, சமீப நாள்களில் கவிஞர் வைரமுத்து சாரைப் பற்றி வரக்கூடிய விஷயங்கள். இதைப் பற்றியே பலரும் பேசிப் பேசி பிரச்னையை இன்னும் பெருசாக்குறாங்க. `வைரமுத்து யார்? அவரை நமக்கு எத்தனை வருடங்களாகத் தெரியும். சினிமா துறையில் அவர் செய்த பணிகள், அவருடைய மேதமைகள், திறமைகள்... எல்லாம் நமக்குத் தெரியும். அவருக்கான மரியாதையை நாம் கொடுக்கணும். இந்தச் சமுதாயத்தில் பெரியவங்கனு நாம நினைக்கிற ஆள்கள் சாதாரணமா அந்த இடத்துக்கு வந்துடல. நிறைய உழைச்சு, தியாகம் பண்ணித்தான் மேலே வந்திருக்காங்க. அவங்களுக்கான மரியாதையை நாம கொடுக்கணும். யாரோ ஒருத்தர் அவரைப் பற்றி ஒரு வார்த்தை தப்பா சொல்றாங்க அப்படீங்கிறதுக்காக, வைரமுத்துவைத் தூக்கிப்போட்டுப் பேசுறதும், கொச்சைப்படுத்துறதும் ரொம்பக் கஷ்டமா இருக்கு. இப்படி நான் பேசுறதுனால, #Metoo ஹாஷ்டேக்கு எதிரானவன்னு அர்த்தம் இல்லை. 

இவ்வளவு நாள்கள் எதுவும் சொல்லமா, பேசாமா, அமைதியா இருந்துட்டோம். ஆனா, இனிமேலும் நாங்க இப்படி இருக்கமாட்டோம்னு சொல்றது நல்ல விஷயம்தான். ஆனா, அடிப்படை ஆதாரம்கூட இல்லாம யாரும் யாரைப் பற்றியும் ட்வீட் போடுவோம், பேசுவோம், கமென்ட் பண்ணுவோம்னு இருக்காதீங்க.  

`செக்கச்சிவந்த வானம்' ரிலீஸான நேரத்தில் அது ஒரு கொரியன் படம்னு ஒருத்தர் விமர்சனம் பண்றார். அதைப் பற்றி ஆமா, இல்லைனு ட்விட்டர்ல பேசுறாங்க; கமென்ட் பண்றாங்க. என்ன நினைச்சுக்கிட்டு இப்படிப் பேசுறாங்கனுதான் தெரியலை. கொரியன் படம்னு சொல்ற படத்தையும் நான் பாத்திருக்கேன், இந்தப் படத்தையும் பார்த்தேன். ரெண்டுமே வேற. 

மணிரத்னம் சார் யார்? தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டுப் போன இயக்குநர்களில் ஒருவர். இத்தனை வருடமா மக்கள் ரசிக்கக்கூடிய நல்ல படங்களைக் கொடுத்திருக்கார். அப்படிப்பட்ட,  மணி சாருக்கு நாம பண்ற மரியாதையா இது?! அதுவும், அவரைக் குறித்துப் பேசுற தொனி ரொம்ப அபத்தம். நமக்கு பேச்சுச் சுதந்திரம் இருக்குங்கிறதுக்காக, நம்ம அம்மா, அப்பாவைப் பற்றித் தப்பா பேசுவோமா என்ன?! 

ஒருவேளை அவங்கமேல தப்பு இருந்தா, அதை நாம் எவ்ளோ கவனமா ஹேண்டில் பண்ணுவோம். தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னைகளுக்கு மட்டும்தான் அப்படி இருப்பாங்களா?! பொதுவாழ்க்கையில் இருக்கிற வைரமுத்து சாரை தவறாகப் பேசுறது கஷ்டமா இருக்கு. சினிமாவுக்குள்ளேயே இருந்துக்கிட்டு, அது மூலமா கிடைக்கிற வருமானத்துல சாப்பிட்டு, நம்மளைப் பத்தியே தப்பாப் பேசிக்கிறது நல்லாவா இருக்கு?! 

வைரமுத்து மேல குற்றம் இல்லனா, இதை எப்படிக் கையாளுவாங்க?! அவரை டேமேஜ் பண்ணதுக்கு என்ன சொல்வாங்க?! இந்த செய்தியைப் படிக்கிற எல்லோரும் `இப்படி நடந்திருக்கும்'ங்கிற மனநிலையில்தானே இருப்பாங்க. நமக்குக் கிடைச்சிருக்கிற கருத்துச் சுதந்திரத்தைத் தயவுசெய்து எல்லோரும் பொறுப்பா பயன்படுத்துனா, நல்லா இருக்கும். இந்தச் சூழல்ல, ஒரு வருடத்துக்கு முன்னாடி நான் படிச்ச சில வரிகள் ஞாபகத்துக்கு வருது. `இப்போதெல்லாம் யாரும் பாத்ரூம் சுவரில் எழுதுவதில்லை. ட்விட்டர், ஃபேஸ்புக்குல எழுதுறாங்க'. இது, உண்மைதான். நம்ம கையில கிடைச்சிருக்கிற கூர்வாளை நாமதான் சரியாப் பயன்படுத்தணும்னு நினைக்கிறேன்.  

இதைப் படிச்சிட்டு சிலர், `இவன் ஏதாவது தப்புப் பண்ணியிருப்பான். அதனாலதான் அட்வான்ஸா இப்படிப் பேசுறானுகூட சொல்வாங்க. அவங்களுக்கெல்லாம் என்னோட நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்" என்று முடித்தார், விஜய் மில்டன். 

அடுத்த கட்டுரைக்கு