Election bannerElection banner
Published:Updated:

``ஃபாஸ்ட்டா சமைப்பா, அதைவிட ஃபாஸ்டா வீடியோ அனுப்புவா கீர்த்தி!" மேனகா சுரேஷ் #HBDKeerthiSuresh

``ஃபாஸ்ட்டா சமைப்பா, அதைவிட ஃபாஸ்டா வீடியோ அனுப்புவா கீர்த்தி!" மேனகா சுரேஷ் #HBDKeerthiSuresh
``ஃபாஸ்ட்டா சமைப்பா, அதைவிட ஃபாஸ்டா வீடியோ அனுப்புவா கீர்த்தி!" மேனகா சுரேஷ் #HBDKeerthiSuresh

``அதெல்லாம் சீக்ரெட். இப்போ சொன்னால், சஸ்பென்ஸ் போயிடும். `சர்கார்' படம் பத்தி உங்கிட்ட சொன்னால், யார்கிட்டயாச்சும் விளையாட்டா சொல்லி பரவிடும்'னு சொன்னாள்."

டிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் இன்று. அவரின் பிறந்தநாள் மற்றும் சினிமா பணிகள் பற்றி அம்மா மேனகா சுரேஷ் பகிர்கிறார்.

``பொண்ணுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொன்னீங்களா?"

``இரவு 12.30 மணிக்கே வாழ்த்து சொல்லிட்டேன். கீர்த்தி நடிச்ச `சண்டக்கோழி 2' படம் ரிலீஸாகும் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறாள். ஒன்றரை மாதத்துக்கு முன்னாடிதான் என் மாமனார் காலமானார். தாத்தா மேலே கீர்த்திக்கு அளவுகடந்த பாசம். அவர் ஐசியுவில் இருந்தப்போ வந்து பார்த்தாள். அவர் மறைவுக்குப் பிறகு ராமேஸ்வரத்தில் திதி கொடுக்கும் நிகழ்வில் கலந்துகிட்டாள். பிறகு, ஷூட்டிங்கில் பிஸியாகிட்டாள். இப்போவரை கீர்த்தியால் கேரளாவின் எங்க வீட்டுக்கு வரமுடியலை. மாமனார் இறப்பால் இந்த வருஷம் தீபாவளியைக் கொண்டாடலை. ஆனாலும், தீபாவளிக்கு வீட்டுக்கு வந்து சில நாள் ஓய்வெடுனு கீர்த்திக்கிட்ட சொல்லியிருக்கேன். ஆனால், `சர்கார்' படம் ரிலீஸாகுறது, புதிய படங்களுக்கான கதைகளைக் கேட்கிறதுன்னு பிஸியா இருக்கிறதால், ஊருக்கு வரும் வாய்ப்புகள் குறைவுதான்."

``மகளுடன் தினமும் போனில் பேசுவீங்களா?"

``கீர்த்தி ரொம்ப பிஸியா இருந்தாலும், தினமும் வீடியோ கால் மூலம் பேசுவோம். அவளுக்கு ஆயுர்வேதம் தொடர்பான ஆலோசனைகள் சொல்வேன். அழகுசாதனப் பொருள்கள், உணவுப் பொருள்கள், மருத்துவப் பொருள்களை அனுப்பிவைப்பேன். சென்னையிலிருந்த என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இப்போ என்னோடு வசிக்கிறாங்க. அதனால், சென்னையில் கீர்த்தி தனியா வசிக்கிறாள். சமையலில் ஆர்வம் அதிகம் என்பதால், அடிக்கடி சமைப்பாள். அப்போ சந்தேகம் வந்தால், எனக்கு போன் பண்ணிடுவாள். ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளைச் சமைச்சு, வீடியோவா எடுத்து வாட்ஸ்அப் அனுப்புவாள். கணவரும் நானும் கேரளாவிலும், கீர்த்தி சென்னையிலும், பெரிய பொண்ணு ரேவதி பெங்களூருவிலும் வசிக்கிறோம். எங்க குடும்பத்துக்கு பர்சனல் வாட்ஸ்அப் குரூப் இருக்கு. அதில் நிகழ்வுகளைப் பதிவு பண்ணிப்போம். அதனால், ஆளுக்கு ஒரு திசையில் இருந்தாலும், மனதளவில் ரொம்ப நெருக்கத்திலேயே இருக்கோம்."

``சீனியர் ஆர்டிஸ்டா, பொண்ணுக்கு அட்வைஸ் கொடுப்பீங்களா?"

``சினிமா குடும்பத்தில் பிறந்தவள் என்பதால், கீர்த்தி தனியாளாகவே சினிமா விஷயங்களைக் கவனிச்சுக்கிறாள். அதில் நானும் கணவரும் தலையிடமாட்டோம். சினிமா கரியர் எவ்வளவு காலம் தொடரும், அடுத்தகட்டம் பற்றி அவளே முடிவு செய்துப்பாள். `டைரக்டர்கிட்ட ஒருமாதிரி, புரொடக்‌ஷன் ஹெல்பர்கள்கிட்ட ஒருமாதிரி பழகக் கூடாது. எல்லோர்கிட்டயும் அன்போடு பழகணும்; நேர மேலாண்மையில் எப்போதும் சரியா செயல்படணும்'. இதுவே, கீர்த்தி ஹீரோயினா அறிமுகமானபோது நாங்க கொடுத்த அட்வைஸ். அதைக் கடைபிடிச்சு தனக்குனு ஓர் அடையாளத்தைப் பெற்றிருக்கிறாள். `கீர்த்தியின் பெற்றோர்'னு எங்களுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்திருக்கிறாள். பெற்றோராக இதுக்கு மேலே பெரிய சந்தோஷம் இருக்கமுடியுமா?".

`` `சர்கார்' படம் பற்றிப் பொண்ணுகிட்ட கேட்டீங்களா?"

``அந்தப் படம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதில் நடிக்கும்போது, `என்ன டிரஸ்? என்ன மாதிரியான சீன்ஸ்'னு கேட்பேன். `அதெல்லாம் சீக்ரெட். இப்போ சொன்னால், சஸ்பென்ஸ் போயிடும். உங்கிட்ட சொன்னால், யார்கிட்டயாச்சும் விளையாட்டா சொல்லிப் பரவிடும்'னு சொன்னாள். `அடப்பாவி!'னு சிரிச்சேன். `சர்கார்' படப் பேச்சு வரும்போது, `படம் பற்றி மட்டும் தயவுசெஞ்சு கேட்காதேம்மா'னு கோபப்படுவாள். சமீபத்தில் சென்னைக்கு வந்தபோது, `சண்டைக்கோழி 2' ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனேன். பாடல் காட்சிகளைக் காண்பித்த இயக்குநர் லிங்குசாமி, ஒரு லீடு சீன் காட்சியை எனக்குக் காண்பிக்க முயன்றார். `காட்டாதீங்க சார். சஸ்பென்ஸ் போயிடும். தியேட்டர்ல பார்த்தால்தான் நல்லாயிருக்கும்'னு சொன்னாள். தன் படங்கள் பற்றி என்கிட்டயே சொல்லாத அளவுக்கு, சின்சியர் ஹீரோயினா ஆகிட்டாள். அதில் எனக்கு மகிழ்ச்சியே" எனப் புன்னகைக்கிறார், மேனகா சுரேஷ்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு