Published:Updated:

வெர்ஷன் 2.0 மிரட்டுகிறதா... விரட்டுகிறதா?! - சண்டக்கோழி 2 விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
வெர்ஷன் 2.0 மிரட்டுகிறதா... விரட்டுகிறதா?! - சண்டக்கோழி 2 விமர்சனம்
வெர்ஷன் 2.0 மிரட்டுகிறதா... விரட்டுகிறதா?! - சண்டக்கோழி 2 விமர்சனம்

துறுதுறு விஷாலை 'புரட்சித் தளபதி' என்ற உயரத்திற்கு தூக்கி வைத்த முதல் படி 2005-ல் வெளியான சண்டக்கோழி. அதன்பின் விஷால், சங்கத் தேர்தல், அரசியல் என நிறைய வளர்ந்துவிட்டார். இப்போது அவருக்குத் தேவைப்படும் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு உதவுகிறதா இந்த சண்டக்கோழி 2?

கோயில் திருவிழாவில் இருகோஷ்டிகளுக்கிடையே மூள்கிறது தகராறு. விளைவு, இருபக்கமும் அரிவாள்கள் உயர்கின்றன, ரத்தம் பார்க்கின்றன. அதில் ஒரு தரப்பின் எஞ்சியிருக்கும் வாரிசுக்கு அடைக்கலம் தருகிறார் பெரியவர் ராஜ்கிரண். அந்த வாரிசை போட்டுத் தள்ளும் வெறியோடு கழுகாய் சுற்றி வருகிறது எதிர்த்தரப்பு. இதற்கிடையே ஏழாண்டுகள் வெளிநாட்டிலிருந்துவிட்டு சொந்த ஊருக்கு வருகிறார் விஷால். அப்புறமென்ன? அப்பா கொடுத்த வாக்கை காப்பாற்ற மகன் என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் மீதிக்கதை.

வெர்ஷன் 2.0 மிரட்டுகிறதா... விரட்டுகிறதா?! - சண்டக்கோழி 2 விமர்சனம்

நெடுநெடு சண்டக்கோழியாக விஷால். தோற்றத்தில் 13 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது போலவே இருக்கிறார். ஆனால் முதல் பாகத்தின் பெரிய பிளஸ் வளர்ந்து வரும் ஹீரோவான அவரிடம் அப்போது இருந்த வெகுளித்தனம்தான். அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங். ஆனால் தன் ஹோம்கிரவுண்டான ஆக்‌ஷன் படமென்பதால் அடித்து ஆடி ஸ்கோர் செய்கிறார். நல்லி எலும்பை நறுக் மொறுக்கென கடித்து நொறுக்கும் ராஜ்கிரண் தான் முந்தைய பாகத்தைப் போலவே இந்தப் பாகத்திற்கும் முதுகெலும்பு. பி.ஜி.எம் அலற அவர் நடந்து வருவதை.. கால் தூக்கி அடிப்பதை இன்னும் பல ஆண்டுகளுக்கு சலிக்காமல் பார்க்கலாம் போல! 

தேனியின் வட்டார மொழியை அனாயசமாக பேசி அசத்துகிறார் கீர்த்தி சுரேஷ். வெக்கை பூமியில் சட் சட்டென வெட்டி மறையும் மின்னல். காதல் காட்சிகள் கொஞ்சம் பழைய ஸ்டைலில் இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது. 'ஹேய்ய்ய்ய்' என அலறும் வில்லியாக வரலட்சுமி. முதல் சில ஃப்ரேம்களில் அவரைப் பார்க்க நிஜமாகவே பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் அடுத்தடுத்து வெறுமனே டயலாக்குகளாக அவரின் போர்ஷன் கடந்து செல்வதால் நம்மையும் பெரிதாக பாதிக்கவில்லை.

வெர்ஷன் 2.0 மிரட்டுகிறதா... விரட்டுகிறதா?! - சண்டக்கோழி 2 விமர்சனம்

இவர்கள் போக எல்லா ஃப்ரேமிலும் குறைந்தது பத்து குணசித்திர நடிகர்களாவது வந்துபோகிறார்கள். முனீஸ்காந்த், ஹரீஷ் பெராடி, சண்முகராஜன், அப்பாணி சரத், மாரிமுத்து, 'மெட்ராஸ் ஜானி' ஹரி என நிறைய நல்ல நடிகர்கள் இருந்தும் கதையில் அவர்களுக்கு இடமே இல்லை. பின்னணி இசையில் தான் ராஜா என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறார் யுவன். ஆனால், பாடல்களும் சரி, அவை வரும் இடங்களும் சரி ஈர்க்கவில்லை.

முதல் பாகத்தையும் இதையும் ஆங்காங்கே தொடர்புபடுத்தியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. இதனாலேயே ஏழாண்டுகள் கழித்து நடக்கும் கதை என்பதை உறுத்தலில்லாமல் ஏற்றுக்கொள்ளமுடிகிறது. இதற்கு இன்னொரு முக்கிய காரணம் சக்திவேலின் ஒளிப்பதிவு. முழுக்க முழுக்க திருவிழாவில் நடக்கும் கதையென்பதால் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான காட்சிகள் வருவது போன்ற உணர்வு. எடிட்டர் பிரவீனின் கத்திரி இன்னும் கொஞ்சம் விளையாடியிருந்தால் நம் சலிப்பை குறைத்திருக்கலாம்.

பிருந்தா சாரதி, எஸ்.ரா இருவரும் இணைந்து எழுதியுள்ள வசனங்கள் ஒருசில இடங்களில் 'செம' சொல்லவைக்கின்றன. ஒருசில இடங்களில் பில்டப் வசனங்களை அவர்களே கலாய்த்து காலி செய்துகொள்கிறார்கள். ஆனாலும்.. 'அவர் புலி மாதிரி', 'நான் பொம்பள சிங்கம்' போன்ற வீராப்பு வசனங்கள் எல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு? 

வெர்ஷன் 2.0 மிரட்டுகிறதா... விரட்டுகிறதா?! - சண்டக்கோழி 2 விமர்சனம்

படத்தில் சண்டைக்காட்சிகள் மட்டும் பாதி படத்திற்கு வரும் போல. யாராவது யாரையாவது அடித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதுவும் வழக்கமான புழுதி பறக்கும், ஆட்கள் பறக்கும் சண்டைகள் என்பதால் 'ப்ச்' சத்தமே எழுகிறது. ராஜ்கிரண் வரும் இடங்களில் எல்லாம் சூடுபிடிக்கிறது திரைக்கதை. மற்ற இடங்களில் அநியாய நிதானத்தோடு நகர்கிறது. முதல் பாகத்தின் பெரிய பலம் ஆங்காங்கே விரியும் குட்டி குட்டி சஸ்பென்ஸ்கள்தான். அது இந்தப் படத்தில் இல்லவே இல்லை.     

சாதியைப் பற்றி வெளிப்படையாக பேசாவிட்டாலும் சில குறியீடுகள் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள். அதுவும் அந்த 'ஆடு-புலி' உதாரணம் அபத்தம். போக, ஏதோ சண்டே மதிய சாப்பாட்டிற்கு கறி வெட்டப்போவது போல 'மொத்தமா முடிச்சுடுவோம்' என ஆளாளுக்கு கிளம்புவதெல்லாம்... ஸ்ஸ்ஸ்ஸ்! நியாயப்படி ரவுடிகள் அல்ல, கதாசிரியர்கள்தான் தங்களின் கற்பனையில் எந்நேரமும் பிடித்துக்கொண்டிருக்கும் கத்தியை கீழே போடவேண்டும்!

முதல் பாகத்தில் சிலிர்த்துத் திமிறிப் பாய்ந்த சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் அடக்கியே வாசித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு