Published:Updated:

``என்ன தப்பு? கங்கிராட்ஸ் சொல்லலாமே?” முற்போக்கு காமெடி டிராமா #BadhaaiHo

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``என்ன தப்பு? கங்கிராட்ஸ் சொல்லலாமே?” முற்போக்கு காமெடி டிராமா #BadhaaiHo
``என்ன தப்பு? கங்கிராட்ஸ் சொல்லலாமே?” முற்போக்கு காமெடி டிராமா #BadhaaiHo

``என்ன தப்பு? கங்கிராட்ஸ் சொல்லலாமே?” முற்போக்கு காமெடி டிராமா #BadhaaiHo

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆக்ஷன், த்ரில்லர், ஹாரர் வகை படங்கள் வழக்கமாக எடுக்கப்படும் டெம்ப்ளேட்களில் தொடர்ந்து எடுக்கப்பட்டால், க்ளீஷே காட்சிகள் எட்டிப்பார்க்கும்போது நம் கண்கள் நம்மையே அறியாமல் நம்முடைய செல்போன் திரைக்குச் சென்றுவிடும். இதிலிருந்து தப்பிப் பிழைக்கும் ஜானர் என்றால் அது காமெடிதான். அதிலும் ஒரு குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் காமெடி படங்கள் எவர்கிரீன் ஸ்கிர்ப்டுகள் எனலாம். இப்படிப்பட்ட கதைக்களத்தைக் கொண்டு நாம் குறைந்தது 100 படங்களாவது பார்த்திருப்போம். ஆனாலும், புதிதாக இத்தகைய படங்கள் வந்தால் அதை வரவேற்போம். அதுனுள் இருக்கும் அந்த நாடகத் தன்மை, செயற்கையான நடிப்பு இவற்றைப் புறந்தள்ளிவிட்டு நகைச்சுவைக்கு மட்டும் நான் காதுகளை கொடுப்போம். அப்படிப்பட்ட ஒரு குடும்ப(?) நகைச்சுவைப் படம்தான் இந்த #BadhaaiHo.

டெல்லியில் வசிக்கும் ஒரு நடுத்தரக் குடும்பம். பெற்றோருடன் இரண்டு மகன்கள். ஒரு பாட்டி. ஒரு மகனின் (ஆயுஷ்மான் குரானா) காதல் வாழ்க்கை செல்ஃப் எடுக்கும் தருணத்தில் 50 வயதைக் கடந்துவிட்ட அவனின் தாய் கருவுற்றிருப்பதாக ஒரு குண்டை போடுகிறார் அவனின் தந்தை. இந்தச் செய்தியை அந்தக் குடும்ப உறுப்பினர்களும் சுற்றமும் நட்பும் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள், காதலியும் அவளின் தாயும் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள், குழந்தை பிறந்ததா இதற்கான பதில்களை கொஞ்சம் சென்டிமென்ட், நிறைய காமெடி எனக் கலந்துகட்டி கொடுத்து நம்மையும் #BadhaaiHo (வாழ்த்துகள்) எனச் சொல்ல வைத்திருக்கிறார்கள்.

ஸ்பாய்லர் என்று பதறவேண்டாம். மேலே சொன்ன அனைத்தையும் படத்தின் ட்ரெய்லரை வைத்தே புரிந்துகொள்ளலாம். அது மட்டுமன்றி, இதில் சஸ்பென்ஸ் என்று எதுவும் இல்லை. கிட்டத்தட்ட அடுத்தடுத்து விரியும் காட்சிகளையும் படத்தின் முடிவையும்கூட நாம் முன்கூட்டியே கணித்து விடலாம். அந்த முடிவை நோக்கி நகரும் காட்சிகள்தாம் இங்கே சுவாரஸ்யமாக விரிகின்றன. அதனாலேயே இது ஒரு ரிப்பீட் ஆடியன்ஸ் நகைச்சுவைப் படமாக இருக்கும்.

சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் இந்திய இளைஞன் ஒருவனுக்கு `அவன் தாய் புனிதமானவள்; அவள் ஒரு பெண்ணல்ல. கடவுள்; நானே இளைஞனாகி விட்ட பிறகு, அவளுக்கு எதற்குக் காதல்? அவளுக்கு எதற்குத் தந்தையுடன் இல்லற வாழ்வு?' போன்ற சிந்தனைகள் இல்லாமல் இருக்காது. அதை ஜஸ்ட் லைக்தட் காமெடியாகக் கையாண்டு மாற்றுச் சிந்தனை ஒன்றை விதைக்கிறது இந்த `பதாய் ஹோ'. படம் முழுவதும் மொத்தக் குடும்பமும் ஒரு விதச் சங்கடமான சூழலோடு இந்தச் சமூகத்தை அணுகுகிறார்கள். வயதான தம்பதியின் முகத்துக்கு நேராக `வாழ்த்துகள்!' சொல்லிவிட்டு, முதுகுக்குப் பின் சிரிக்கிறது சமூகம். அந்தக் குடும்பமே அதை அறிந்தும், அறியாதது போல, குழந்தை பிறப்புக்கு மெதுவாகத் தயாராகிறார்கள்.

ஆயுஷ்மான் குரானாவுக்கு இந்த மாதத்தில் இது இரண்டாவது திரைப்படம். இரண்டுமே வெவ்வேறு தளத்தில், வித்தியாசமான களத்தில் பயணிக்க, செம கூலாக நடித்து இருக்கிறார். `எங்க அம்மா கர்ப்பமா இருக்காங்க' என்று ஓர் இளைஞன் தன் காதலியிடம் சொல்வது ரொம்ப கஷ்டம். அத்தகைய தருணங்களை முதலில் சங்கடத்துடன் கடந்துவிட்டு, பின்பு தெளிவு பிறந்து குடும்பத்தின் மூத்த பிள்ளையாக தன் கடமையைச் செய்கிறார் குரானா. அவரின் காதலியாக சான்யா மல்ஹோத்ரா. அப்படியே டெல்லியின் அல்ட்ரா மாடர்ன் யுவதியாக மாறியிருக்கிறார். தன் தாய் கர்ப்பமாக இருக்கிறார் என்பதைக் கூறும் காதலனைப் பார்த்துச் சிரித்துவிட்டு, பின்னர் `இதில் என்ன இருக்கிறது?’ என்கிற ரீதியில் முற்போக்காகப் பேசுபவர், பின்பு ஒரு சிறிய விஷயத்துக்குக் காதலனிடமே சண்டை போடுகிறார். இது அவரின் கதாபாத்திரத்தின் தன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது.

படத்தின் ஹீரோ ஆயுஷ்மான் குரானாதான் என்றாலும் நடிப்பில் ஸ்கோர் செய்வது என்னவோ அவரின் தந்தையாக வரும் கஜராஜ் ராவும், பாட்டியாக வரும் சுரேகா சிக்ரியும்தான். செய்த காரியத்துக்கு மனைவியின் இடி, தாயின் திட்டு, மகன்களின் கோபம் எனப் பலவற்றையும் சமாளிக்க வேண்டிய வேலை கஜராஜ் ராவிற்கு. மனிதர் எல்லாவற்றுக்கும் அந்த ஒரேயொரு அப்பாவி முகபாவத்தை வைத்தே சமாளிக்கிறார். முதலில் அது பாவமாகத் தோன்றினாலும், பின்பு விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. கர்ப்பமான விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன், தன் மருமகளை இஷ்டத்துக்கு வசைப்பாடிவிட்டு, பின்னர் படத்தின் பிற்பாதியில் சொந்தங்களுக்கு மத்தியில் அவரையே விட்டுக்கொடுக்காமல் பேசி இரண்டு இடங்களிலும் ஸ்கோர்செய்து கைதட்டல் பெறுகிறார் பாட்டி சுரேகா சிக்ரி. படத்தின் ஆணிவேர்... அந்த நடுத்தர வயதில் கர்ப்பமாகும் பாத்திரத்தைத் தூக்கி `சுமந்திருக்கும்’ நீனா குப்தா. ஆங்காங்கே சீரியல் அம்மாக்களை ஞாபகப்படுத்தினாலும் அளவான வசனங்களே பேசினாலும் தன் கதாபாத்திரம் கேட்டதை மிகச் சரியாகச் செய்திருக்கிறார்.

``உங்க அம்மா கர்ப்பமானா தெரியும்!” என்று காதலி சானியாவிடம் ஆயுஷ்மான் குரானா சொல்ல, ``எங்க அம்மா கர்ப்பமானா இன்னும் பெரிய பிரச்னை ஆகிடும்” என்று பதில் வருகிறது. `இப்போ தெரியுதா என் கஷ்டம்?' என்று ஆயுஷ்மான் குரானா கேட்க, ``அப்படியில்ல, எனக்குதான் அப்பாவே கிடையாதே!” என்று அந்த சீரியஸான இடத்திலும் இப்படியொரு பதில் வருகிறது. படம் முழுவதும் இப்படியான உரையாடல்கள் நிறைந்துகிடக்கின்றன. ஆனால், இப்படியொரு முற்போக்கான கதைக்களம் கொண்ட படத்தில் பெண்மைத்தனத்துடன் கூடிய ஒருவரை மேடையேற்றி அவரை அவரின் தந்தையே அவமானமாகக் கருதுவதுபோல காட்டியது எல்லாம் எதற்கு பாஸ்? குழந்தைப் பிறப்பது நல்ல விஷயம்தான். ஆனால், அதை ஒரு மகத்தான சாதனை போலவும், அந்த வாய்ப்பு அமையாதவர்கள் ஒருபடி கீழே என்பது போலவும் திரை மறைவாகக் கூறுவது இன்னும் சற்றே நெருடலான விஷயம்.

படத்தின் ஒளிப்பதிவாளர் `விஸ்வரூபம்' இரண்டு பாகங்கள், `டேக் ஆஃப்' (மலையாளம்), `டேவிட்', `வாஸிர்' (இந்தி) போன்ற குறிப்பிடத் தகுந்த படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சனு வர்க்கீஸ். நடுத்தர வயது குடும்பத்தின் வீடு, திருமண நிகழ்வு என்று சவாலான விஷயங்கள் இங்கே குறைவுதான் என்றாலும், கதைக்குத் தேவையானதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். நான்கு இசையமைப்பாளர்கள் இருந்தும் பாடல்களும் பின்னணி இசையும் பெரிதாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எல்லா வேலைகளையும் வசனங்களே செய்து இருக்கின்றன. கொஞ்சம் தப்பியிருந்தாலும், அடல்ட் காமெடி ஆகியிருக்க வேண்டிய படம். ஆனால், அந்த எல்லைக்கே போகாமல், மொத்தக் குடும்பமும் அமர்ந்து பார்க்குமாறு ஒரு ஜனரஞ்சகமான படமாக இதைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் கதையும் நாம் கேட்டிராத ஒன்றாக இல்லை என்றாலும், எதைச் செய்தாலும் குறைசொல்லும் சமூகத்துக்குக் கொடுக்கவேண்டிய சாட்டையடியைக் கொடுத்து அதன் வாயாலேயே `கங்கிராட்ஸ்’ வாங்கியதற்காக #BadhaaiHo-வை நிச்சயம் கொண்டாடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு