Published:Updated:

`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை!

`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை!
`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை!

`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க கட்டுரையாளரின் பார்வையே தவிர விகடனின் பார்வை அல்ல.

`வடசென்னை' பற்றிய பாராட்டுகளையும், தூற்றல்களையும் மாறிமாறிப் படித்து மூளைக்காய்ச்சல் வராத குறை. ஒரு பக்கம் `குப்பையில் கூட டீட்டெயிலிங் காட்டியிருக்காரு' என்றும், இன்னொருபுறம் `குப்பையைவிட தரங்கெட்ட படைப்பு' என்றும் டைப்பி தீர்க்கிறார்கள். `ஏன் இப்படி' என நாலைந்து இடியாப்பத்தை கொசகொசவென பிசைந்து கையில் கொடுத்ததுபோல் ஏற்பட்ட பெரும் குழப்பத்திற்குப் பின், ஒரு முடிவுக்கு வரமுடிந்தது. `வடசென்னை'யில் என்ன பிரச்னை?!

" `வடசென்னை என்பது ரௌடிகளின் சரணாலயம். அங்கு, குழாயைத் திறந்தால் தண்ணீர் வராது ரத்தம்தான் வரும்' என்கிற அளவுக்கு வன்முறையையும் வன்முறையாளர்களையும் மட்டுமே வெற்றிமாறன் காட்டியிருக்கிறார். ஒரு பக்கத்தை மட்டும்தானே காட்னீங்க, இன்னொரு பக்கத்தையும் காட்டலாமே" எனப் பலரும் கொடுங்கோபம் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஒருவர், வடசென்னையில் அவர்கள் எங்கே, இவர்கள் எங்கே என பெரும் பட்டியலே போட்டிருக்கிறார். ஒரு ஆளைக்கூட விடாமல் காட்ட இதுவொன்றும் கல்யாண வீடியோவும் இல்லைதான். இப்படி மிளகு தூக்கலாய் பொங்கல் வைப்பவர்கள் எல்லோரும் `மெட்ராஸ்'ஸை கொண்டாடித் தீர்க்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். `வடசென்னை'யில் இல்லாதது அப்படியென்ன `மெட்ராஸ்'ல `இருக்கு' எனக் கேட்டால், அப்படியொன்று `மெட்ராஸ்'ல் இருக்கு என்பதுதான் பதில். என்ன இருக்கு?

`வடசென்னை'யின் அன்பு மட்டுமல்ல, `மெட்ராஸ்' காளியும்தான் ஆயுதத்தைக் கையிலெடுக்கிறான், கொலை செய்கிறான். இருவரின் கேரக்டர் ஆர்க்கும் கிட்டத்தட்ட ஒன்றுதான். காளிக்கு ஃபுட்பால் என்றால், அன்புக்கு கேரம். காளி படித்து முடித்து ஐ.டி வேலைக்குச் செல்கிறான். அன்புக்கு படிப்பு ஏறவில்லை, கேரம் திறமையால் ஹார்பரில் அரசு உத்தியோகம் பெற முயல்கிறான். காளி-கலை,          அன்பு-பத்மா. ஆட்டம், பாட்டம், காதல், கொண்டாட்டமெனச் செல்லும் வாழ்க்கை, ஓர் இடத்தில் தடம் மாறுகிறது. தடுமாறுகிறது எனும் வார்த்தை இன்னும் பொருத்தம். காளி தன் நண்பன் அன்புக்காக முதலில் ஆயுதத்தை எடுக்கிறான். அன்போ, தன் காதலி பத்மாவுக்காக எடுக்கிறான். கொலைகளும் திட்டமிட்டு நிகழ்த்தியதில்லை. கடைசியாக, இருவரும் தங்கள் நிலத்துக்காக, தங்கள் மக்களுக்காக ஆயுதம் தூக்குகிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு பாத்திரங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், இவர்களுக்குள் இருக்கும் சிற்சில வித்தியாசங்கள்தான் `மெட்ராஸையும் `வடசென்னையையும் `5E பஸ்' வருமா எனப் பிரித்துவிடுகின்றன. என்ன  வித்தியாசங்கள் அவை?

`மெட்ராஸ்' காளி கதாபாத்திரத்தின் ஆர்க்கில் அவன் தன் வாழ்க்கையைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் என்பதை, நண்பர்களோடு சேர்ந்து ஃபுட்பால், கேரம் விளையாடுவது, சட்டிமேளத்துக்கு ஆட்டம் போடுவது, ஏரியாவுக்குள் ஓடியாடி விளையாடுவதெனக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அவனை வைத்தே அந்த நிலத்தின் பொதுவான கொண்டாட்டங்களைக் காண்பித்திருப்பார்கள். அது அந்த நிலத்தில் வாழும் மற்றவர்களோடும் அவனை இணைப்பதாய் இருக்கும். காளியின் ஆரம்பக்காலத்து ஆர்க்கில், அவன் ஒரு சர்வசாதாரண வியாசர்பாடிவாசி. சிம்பிள்! `வடசென்னை' அன்பின் வாழ்க்கையில் காட்டப்பட்டிருக்கும் கொண்டாட்டம் என்பது கடை புகுந்து டி.வி திருடுவது, பந்தயத்துக்கு கேரம் விளையாடுவது, பைனாக்குலர் வழியாக ஐஸ்வர்யா ராஜேஷை பார்ப்பது, சண்டைபோடுவது எனச் சுருங்குகிறது. அவனுக்கு நண்பனெனச் சொல்லிக்கொள்ள ஒரேயொருவன் மட்டும். அன்பு எந்த இடத்தில் அந்த ஊரோடு கலக்கிறான்? கலக்கிறானா? 

கலந்திருப்பான், `பேலன்ஸ்' செய்திருந்தால். கதையின் தேவைக்கேற்ற பாத்திரங்களையும் வாழ்வியலையும் மட்டுமே பதிவிட முனைவது, நிச்சயம் எதிர்விளைவுகளைத் தரும். அதிலும், ஒரு கேங்ஸ்டர் சினிமாவில், விளிம்பு நிலை மக்கள் வாழும் பகுதியைக் களமாக எடுத்துக்கொண்டு கதைக்குத் தேவையான சூழலை மட்டும் காட்டுவேன் என்பது கண்ணிவெடியில் காலை வைப்பதற்குச் சமம். கேங்ஸ்டர்கள் அல்லாதோர்தான் அங்கு பெரும்பான்மை. சிகரெட், மது, பவுடர் இல்லாத கொண்டாட்டங்களும் அங்கு இருக்கின்றன. பாக்கெட்டில் பேனா வைத்திருப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதை படத்தினுள்ளேயே ஆங்காங்கே அழுத்தமாய்ப் பதிந்து `பேலன்ஸ்' செய்வது மிகமிக அவசியமாகிறது.

ஒருவேளை அப்படிச் செய்வது மையக்கதைக்கு இடையூறாக இருக்கிறது, திரைக்கதையின் பயணத்துக்கு `டேக் டைவர்ஷன்' காட்டுகிறது எனும் நேரத்தில், `மெட்ராஸ்' மற்றும் `அங்கமாலி டைரீஸ்' பயன்படுத்திய யுக்தி சிறப்பானது. ஒரேயொரு பாட்டில் அந்த நிலத்தின் ஒட்டுமொத்த வாழ்வியல் சூழலையும் குணாதிசயங்களையும் பதிந்துவிடுவது. `மெட்ராஸ்'-ன் `எங்க ஊர் மெட்ராஸ்' மற்றும் `அங்கமாலி டைரீஸ்'-ன் `எட்டு நாடும் கீர்த்தி பெட்டூர்' பார்க்கும்போதே அந்தப் பகுதிக்குள் சென்று சந்துபொந்தெல்லாம் சுற்றிவந்த உணர்வு கிடைக்கும். `மெட்ராஸ்'-ன் கதைக்கு அரசியல்வாதிகளும் அவர்களின் வலது, இடது கைகளும் அவற்றில் ஆறு டஜன் சாமான்களைக் காட்டுவதே போதுமானதுதான். அதையும் தாண்டி வேறொரு தளத்தில் நடந்துகொண்டிருக்கும் விஷயங்களையும் காட்டுதல் என்பது மிக அவசியமான ஒன்று.

நிலம்தான் கதைமாந்தர்களின் அடையாளம். கதை மாந்தர்கள்தான் நிலத்தின் அடையாளம்! நிலம்தான், கதைக்கும் கதை மாந்தர்களுக்குமான ஆதாரங்களைத் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள உதவும். `சிட்டி ஆஃப் காட்ஸ்'-ல்  ஒருவனைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே துப்பாக்கியோடு திரிகிறார்கள், சிறுவர்களும்கூட. அவன் மட்டும்தான் அங்கிருந்து கையில் கத்திக்குப் பதில் கேமராவை எடுத்திருக்கிறான். அவன்தான் கதையின் நாயகன். அவனை சுற்றித்தான் கதையே நகர்கிறது என்பது எப்படிப்பட்ட ஒரு `பேலன்ஸ்'!

கதையின் களம் ஒரு ஜெயில்தான் என்றாலும், நான்கைந்து அப்பாவிகளையும் காட்டுகிறோம் அல்லவா. அப்படியிருக்க, ஊரில் இருப்பவர்களையெல்லாம் குற்றவாளிகளாகவே காட்சிப்படுத்துவது எப்படி நிறைவைத் தரும்? குறைந்தபட்சம், `தி ரியல் மெட்ராஸ்' என யூ-டியூபில் வெளியிட்ட வீடியோவின் தரத்திலாவது காட்சிகள் ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நில அரசியலைப் பேசியிருக்கும் `வடசென்னை' நிச்சயம் நிலத்தை முடிந்த அளவுக்கு முழுமையாகப் பதிவுசெய்திருக்க வேண்டும். `அன்பு, ராஜன் & ஊர்' அத்தியாயத்திலாவது அதைச் செய்திருக்க வேண்டும். 

ஆம், நாங்கள் குற்றவாளிகள்தான். எங்கள் பலரின் கைகளில் ரத்தக்கறை படிந்திருக்கிறது. ஆனால், ஏன் இப்படி, இதற்கு என்ன காரணம்? நீங்கள்தான், உங்களின் அதிகாரம்தான், உங்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக்கொள்ள கைக்கு வந்த ஆயுதங்களே இவை. இதுதான் `வடசென்னை' பேசும் அரசியல். எத்தனை பேருக்கு இது சென்று சேர்ந்தது. `குடிசையோ, குப்பைமேடோ என் ஊர், இதை நான்தான் காப்பாற்ற வேண்டும். அப்படி பண்றதுக்குப்பெயர்  ரவுடியிஸம்னா, ரவுடியிஸம் பண்ணலாம் தப்பில்லை’ என்கிறான் அன்பு. படத்தின் மையக்கதையே இதுதான். இதைப் பற்றிய டீட்டெயிலிங்குகள்தானே அதிகம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஏன் அந்த நிலம் அவர்களுக்கு முக்கியமென்றால், அதுதான் அவர்களுக்கு வாழ்வாதாரமாய் இருக்கும். அங்கு இருப்பவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் காட்சி எத்தனை இருக்கிறது? படகில் சென்று கொள்ளைதான் அடிக்கிறார்கள். `கம்மட்டிபாடம்' பேசுவதும் இதே அரசியல்தான், அதிகார மையம் எப்படி நம் கையை வைத்து நம் கண்ணையே குத்தும் என்பதை வெளிப்படையான வசனங்களின்றி காட்சிகளால் அவ்வளவு நுணுக்கமாகச் சொல்லியிருப்பார்கள். அதிகார மையங்களால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை சுக்குநூறாய் நொறுங்கிப்போவதாய் நம்மால் உளமார உணரமுடியும். `வடசென்னை'யில் அப்படி உணரமுடியவில்லை.

`தமிழ்நாடு' என்ற பெயரில் படம் ஒன்றை எடுத்துவிட்டு, அதில் மதுரையின் வாழ்வியலை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தால் மற்ற மாவட்டத்தினர்கள் கொந்தளித்துவிடுவார்கள் இல்லையா? அல்லது `மதுரை' எனப் பெயர் வைத்துவிட்டு செல்லூர் ராஜு மற்றும் கிரம்மர் சுரேஷின் அட்ராசிட்டிகளை மட்டும் காட்டிக்கொண்டிருந்தால் மற்றவர்கள் சிரிப்பார்கள், `ஏன்டா யானையிடம் எவ்ளோ ஹைலைட்ஸ் இருக்கு' என மதுரைக்காரர்கள் கடுப்பாவோம்தானே! அவ்வளவு கலர்ஃபுல்லான மதுரைக்குள்ளேதான் இப்படியும் சிலர் எனக் காட்டுவதுதானே சரியாக, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்தக் காரணிதான் `வடசென்னை'யை உயரப் பறக்கவிடாமல் பிடித்து இழுக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு