Published:Updated:

நல்ல விஷயம்ப்பா... இன்னும் நல்லாப் பண்ணியிருக்கலாம்ப்பா! - `எழுமின்' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு

குழந்தைகளுக்கான படங்கள் என்பது சுத்தமாக நின்றுவிட்ட கோலிவுட் சூழ்நிலையில் குழந்தைகளுக்குத் தற்காப்புக்கலை மிகவும் அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி வெளியாகியுள்ளது `எழுமின்'.

நல்ல விஷயம்ப்பா... இன்னும் நல்லாப் பண்ணியிருக்கலாம்ப்பா! - `எழுமின்' விமர்சனம்
நல்ல விஷயம்ப்பா... இன்னும் நல்லாப் பண்ணியிருக்கலாம்ப்பா! - `எழுமின்' விமர்சனம்

கோடிகளில் புரளும் தொழிலதிபரான விவேக்கிற்கு தன் மகனை பாக்ஸிங் சாம்பியனாக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். அவரின் மகனும் அதற்கேற்றார்போல நிறைய போட்டிகளில் வெற்றி பெறுகிறார். அவரின் நண்பர்களும் சிலம்பாட்டம், கராத்தே, குங்ஃபூ போன்றவற்றில் பயிற்சி பெற்று வருகிறார்கள். மகனுக்காக, அவனின் நண்பர்களுக்காக ஒரு பயிற்சி மையமும் தொடங்குகிறார் விவேக். இங்கேதான் ஒரு ட்விஸ்ட். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

தனக்கு குணசித்திர கதாபாத்திரமும் மிக நன்றாக வருமென்பதை மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறார் விவேக். மருத்துவமனைக் காட்சியில் அவரின் நடிப்பு க்ளாஸ். தேவயானி சிரிக்கச் சிரிக்க வந்தாலும் வழக்கமான அம்மா ரோலைத் தாண்டி பெரிதாக சோபிக்கவில்லை. குட்டீஸ்களாக வரும் பிரவீன், ஶ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா ஆகியோர் உண்மையிலேயே தற்காப்புக் கலை சாம்பியன்கள் என்பதால் சண்டைக்காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஸ்போர்ட்ஸ் சங்கங்களில் நடக்கும் அரசியலைப் போகிற போக்கில் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் தெளிவாகவே சொல்லியிருக்கலாம்.  

ஒளிப்பதிவும் இசையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இரண்டாம் பாதியை த்ரில்லர் பாணியில் சொல்ல முயன்றிருந்தாலும் இசையும் ஒளிப்பதிவும் திரைக்கதையுமே வீக்காக இருப்பதால் படம் எந்தவித பதற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. வசனங்கள் எல்லாம் அரதப்பழசு. குழந்தைகள் படத்தில் ஆங்காங்கே வரும் டபுள் மீனிங் வசனங்கள் நெருடல். மைக்கேல் ராஜின் சண்டை வடிவமைப்பு க்ளைமாக்ஸை சுவாரஸ்யமாக்குகிறது. ஒரு துப்பறியும் கதை எவ்வளவு விறுவிறுப்பாக இருக்கவேண்டும். ஆனால், இரண்டாம் பாதியில் போலீஸ் விசாரணைக் காட்சிகள் எல்லாம் சோகையாக இருக்கின்றன. அதுவும் புறாவை வைத்துத் துப்பறிவதும் அதைக் கண்டுபிடிப்பதும் எல்லாம் ஜெய்சங்கர் காலத்து டெக்னிக். சரி அதைக்கூட விட்டுவிடலாம். 5 கோடி ரூபாய் பணயத்தொகை கேட்கும் கிரிமினல் எதற்காக அதைக் கொண்டு வரும் ஆளைச் சுடவேண்டும். அப்புறம் எப்படி பணம் வரும்? லாஜிக்கை கொஞ்சமாவது கவனித்திருக்கலாம். 

படம் ஒரு முக்கியமான மெசேஜ் சொல்லவருகிறதுதான். ஆனால், சொல்லப்பட்டவிதம் பழைய ஸ்டைலில் இருப்பதால் ரீச்சும் குறைவாக இருக்கிறது. ஆனால், படம் வெளியான அதே நேரத்தில் தமிழக அரசும் பள்ளிக்கூட மாணவிகளுக்குக் கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகள் கற்றுத்தரப்படும் என அறிவித்திருப்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும். அதற்கு ஒருவகையில் இந்தப் படமும் காரணமென்றால் அதற்காக வாழ்த்துகள்!

முழுக்க முழுக்க `ஏ' ஆகிவிட்ட சினிமாவில் குழந்தைகளுக்கான படங்கள் என்பது மிகவும் அரிதாகிவிட்டது. கதையிலும் திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் எழுமின் அந்தக் குறையைப் போக்கியிருக்கக் கூடும். 

`வடசென்னை' விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.