Published:Updated:

``ரெண்டு பேரும் சேர்ந்தா, விஜய் சாரை கலாய் கலாய்னு கலாய்ச்சுருவோம்!" - வரலட்சுமி

``ரெண்டு பேரும் சேர்ந்தா, விஜய் சாரை கலாய் கலாய்னு கலாய்ச்சுருவோம்!" - வரலட்சுமி
``ரெண்டு பேரும் சேர்ந்தா, விஜய் சாரை கலாய் கலாய்னு கலாய்ச்சுருவோம்!" - வரலட்சுமி

"விஷாலோட எந்த முடிவுகளிலும் நான் தலையிடமாட்டேன். ஆனா, அவருக்கு எப்போ சப்போர்ட் வேணுமோ, அப்போ அவர்கூட இருந்திருக்கேன்."

``அரசியல் ரொம்ப சீரியஸான விஷயம். பலபேர் தப்புப் பண்ணி அரசியலுக்குள்ள வந்துட்டாங்க. பதவிக்காக மட்டும் ஒருத்தர் அரசியலைத் தேர்ந்தெடுக்க முடியாது. பேச்சு மட்டுமல்லாம, செயலிலும் வீரியம் இருக்கணும். அந்த வகையில், எனக்கு ஜெயலலிதா அம்மாவை ரொம்பப் பிடிக்கும். அவங்க பயோபிக்ல நடிக்கிறதுக்கான பேச்சு வார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு. அப்படியே அதில் நடிச்சாலும், ஜெயலலிதா அம்மாவாக நடிப்பேனே தவிர, மற்ற கேரக்டர்களுக்கு `நோ' சொல்லிடுவேன்" - என்கிறார், நடிகை வரலட்சுமி. 

`` `சண்டக்கோழி 2' படத்துல `பேச்சி' கதாபாத்திரத்துல நடிச்ச அனுபவம்?" 

``இந்தப் படத்தோட ஆடிஷன்லேயே சேலையெல்லாம் கட்டி முழுசா `பேச்சி' கேரக்டராவே மாறிட்டேன். அந்த டெடிகேஷன் லிங்குசாமி சாருக்குப் பிடிச்சிருந்தது. தவிர, இது விஷால் படம். காட்சிப்படி, நானும் விஷாலும் சண்டை போட்டுக்கிட்டு இருப்போம். கட் சொன்னவுடனே சிரிச்சிடுவோம். இந்தப் படத்துல, `ஆம்பள வீசுனாதான் அரிவாள் வீசுமா.. பொம்பளைங்க வீசுனாலும் வீசும்'னு படத்துல நான் பேசுன வசனத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். எழுத்தாளர் பிருந்தா சாரதிக்கு நன்றி சொல்லிக்கிறேன். பொதுவாகவே எனக்கு ஹோம் வொர்க் பண்ற பழக்கம் கிடையாது. ஸ்பாட்டுக்குப் போனதும் அந்தக் கதாபாத்திரமாக மாறிடுவேன். ஆனா, `பேச்சி' கதாபாத்திரத்தை உள்வாங்கிக்க எனக்கு ரெண்டு நாளாச்சு!"

``இந்தக் கதாபாத்திரத்துக்காக என்னென்ன கஷ்டப்பட்டீங்க?"

``வசனம்தான் ரொம்பக் கஷ்டமா இருந்தது. லிங்கு சார் படம்னாலே பெரிய பெரிய வசனங்கள் இருக்கும். ஷூட்டிங்குக்கு வந்தவுடனே டயலாக் பேப்பரை முதல்ல வாங்கிக்குவேன். அதை மனப்பாடம் பண்றது பெரிய சவாலா இருந்துச்சு. இதுல மதுரை தமிழ்ப் பேசி நடிச்சது இன்னும் சவால். தமிழ் டப்பிங்கைவிட தெலுங்கு டப்பிங் டோட்டல் சொதப்பலா போச்சு."

``விஜய்கூட `சர்கார்' படத்துல நடிச்ச அனுபவம்?"   

``அமைதிக்கு மறுபெயர் விஜய் சார். நான் அதுக்கு நேரெதிர். ஸ்பாட்ல எல்லோரிடமும் பேசி சிரிச்சுக்கிட்டு இருப்பேன். மாறாக, `சர்கார்' ஆடியோ லான்ச்லதான் அமைதியா இருந்தேன். நாம பேசுறது அங்கே இருக்கிற பெரிய ஆள்களுக்கெல்லாம் புரியணும்ங்கிறதுக்காக பொறுமையாப் பேசினேன். விஜய் சார், என்னோட கதாபாத்திரத்துல வேறு யாரும் இவ்வளவு திறம்பட நடிச்சிருக்க முடியாதுனு மேடையில சொன்ன பாராட்டை வாழ்நாள்ல மறக்க முடியாது. 

லாஸ் வேகாஸ்ல `சர்கார்' ஷூட்டிங்ல இருந்தப்போ, நான் இங்கே இருந்து தனியாதான் டிராவல் பண்ணிப் போனேன். முருகதாஸ் சார் என்கிட்ட, `எப்போ பார்த்தாலும் பேசிக்கிட்டே இருப்பியேம்மா; இப்போ எப்படித் தனியா வந்த; டிராவல்ல யார்கிட்ட பேசிக்கிட்டிருந்த?'னு கேட்டார். `விமானத்துல பக்கத்துக்கு சீட்ல இருந்தவரோட பேசிக்கிட்டிருந்தேன் சார்'னு சொன்னேன். முருகதாஸ் சார் செம ஜாலி டைப்.  ஸ்பாட்ல அவரும் நானும் விஜய் சாரை கலாய்ச்சுக்கிட்டே இருப்போம்." 

``விஷால் எடுக்கிற முடிவுகள்ல எந்தளவுக்கு நீங்க உறுதுணையா இருக்கீங்க?"

``விஷாலோட எந்த முடிவுகளிலும் நான் தலையிடமாட்டேன். ஆனா, அவருக்கு எப்போ சப்போர்ட் வேணுமோ, அப்போ அவர்கூட இருந்திருக்கேன். இனிமேலும், இருப்பேன். விஷாலுக்குச் சொந்தமா யோசிச்சு முடிவெடுக்கத் தெரியும். அவர் மத்தவங்கக்கிட்ட கருத்துக் கேட்பார். ஆனா, கடைசி முடிவு அவருடையதாகத்தான் இருக்கும். என்ன பிரச்னை வந்தாலும், அதை ஏத்துக்க அவர் ரெடியா இருப்பார்." 

``#MeToo பத்தி நீங்க நிறைய பேசியிருக்கீங்க. இப்போ மறுபடியும் அதைப் பத்திப் பேச ஆரம்பிச்சிருக்கோம். இப்போ என்ன சொல்ல விரும்புறீங்க?"

``ஏற்கெனவே சினிமாத் துறையில எனக்கு என்னென்ன பிரச்னைகள் நடந்திருக்குனு வெளிப்படையாப் பேசியிருக்கேன். எனக்குப் பாலியல் தொல்லைகள் குறித்துப் பேச தயக்கமில்லை. பல பெண்கள் `#MeToo' மூலமா நிறைய விஷயங்களை வெளிக்கொண்டு வர்றது மகிழ்ச்சியா இருக்கு. இன்னொரு பக்கம் இன்னும் சமூகத்துல இதெல்லாம் நடந்துகிட்டு இருக்கேனு வருத்தமாவும் இருக்கு. இதுதான் பாலியல் வன்கொடுமை குறித்துப் பேச சரியான நேரம். பாதிக்கப்பட்ட பெண்களின் கதைகளைக் கேட்டாவது, பலரும் திருந்தணும். சமூகம் ரொம்பக் கேவலமா இருக்கு. ஆனா, திரைத்துறையில இருந்து ஒருத்தர்கூட இதுக்குக் குரல் எழுப்பலைனு நினைக்கும்போது, இன்னும் கஷ்டமா இருக்கு. நானும் சித்தார்த் மட்டும்தான் இதுகுறித்து ட்வீட் பண்ணிக்கிட்டு இருக்கோம்." 

``நிகழ்ச்சித் தொகுப்பாளரா புது அவதாரம் எடுத்திருக்கீங்க?" 

``சமூகப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கிறது என்னோட பழக்கம். `உன்னை அறிந்தால்' நிகழ்ச்சி அப்படியான ஒரு நிகழ்ச்சி. நிறைய சேனல்கள்ல இந்த மாதிரி நிகழ்ச்சிகளை வணிகப்படுத்துறாங்க. ஆனா, ஜெயா டிவிக்கு வணிக நோக்கம் பெருசா இல்லை. சமீபத்துல என்னை பிக் பாஸ் வீட்டுக்குள்ளே போகச் சொன்னாங்க. ஆனா, நான் அந்த நிகழ்ச்சிக்குப் போனேனா, ரெண்டுநாள்ல வெளியே வந்துருவேன்னு தெரியும். எந்தவொரு காலகட்டத்திலேயும் `விழிப்பு உணர்வு'ங்கிறது ரொம்பவே முக்கியம். இந்தச் சமூகமே இப்படித்தான்னு குறை சொல்றதை விட்டுட்டு, சமூகச் சீர்திருத்தப் பணிகளை நாம செய்யணும். செலிபிரிட்டீஸ் மட்டும்தான் விழிப்பு உணர்வு ஏற்படுத்தணும்னு இல்லை. மனுசனாப் பொறந்த எல்லோருமே சமூகத்துக்கு நல்லது செய்யணும். இந்த நிகழ்ச்சி அதுக்கு வழிவகுக்கும்." 

அடுத்த கட்டுரைக்கு