பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“சிவாஜி வருத்தத்தைப் பார்த்து மாறினேன்!”

“சிவாஜி வருத்தத்தைப் பார்த்து மாறினேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சிவாஜி வருத்தத்தைப் பார்த்து மாறினேன்!”

உ.சுதர்சன் காந்தி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

“நான் இப்ப விஜய் சார் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அப்பா.  விஜய்க்கு என் ரெண்டு மகள்களையும் சின்ன வயசில இருந்தே தெரியும். ஒரு பேப்பர் நியூஸைப் படிச்சுட்டு, ‘நம்ம ஜோ ஹீரோயினா நடிக்கிறாங்களா? சூப்பர் சார். போன் பண்ணிக் கொடுங்க. பேசுறேன்’னு ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து கால் பண்ணி என் பொண்ணுகிட்ட பேசினார். இவ விஜய் ரசிகை. அவர் பேசினதும் எதிர்முனையில சந்தோஷமாகிக் கத்துறா. அவர்கூட பேசினதில் ஜோவுக்கு அவ்வளவு சந்தோஷம்.” - வில்லத்தனம், குணச்சித்திரம், நகைச்சுவை, கதை, இயக்கம்... இப்படி சினிமாவுக்கும் லிவிங்ஸ்டனுக்குமான உறவு 30 ஆண்டுகள். தற்போது தன் மகளையும் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி அந்த உறவை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறார் லிவி.

“சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடிப் பல இடங்கள்ல ஏறி இறங்கினேன். ‘ஏற்கெனவே ஏகப்பட்ட ஆள் இருக்காங்க...’, ‘சொல்லியனுப்புறோம்...’னு தினம்தினம் வெவ்வேறு வகையான பதில்கள். ஒரு கட்டத்துல விரக்தியாகிட்டேன். ‘ஓ.கே. கடைசியா இவர்கிட்ட சேர முயற்சி பண்ணுவோம். கிடைக்கலைனா என்ன பண்றதுனு முடிவு பண்ணிக்கலாம்’னு நினைச்சு அவர்கிட்டபோய் என் கதையைச் சொல்லி, ‘நீங்களும் வாய்ப்பு கொடுக்கலைனா தற்கொலை பண்ணிக்கிறதைத்தவிர வேற வழியில்லை’னு சொன்னேன். அவர் என்ன நினைச்சாரோ தெரியலை, ‘நான் உன்னை அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்த்துக்கிறேன்’னு சொல்லி என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டார். அவர்தான் பாக்யராஜ் சார்.

அப்படி உதவி இயக்குநரா இருந்த என்னை ஒரு நடிகரா அடையாளம் காட்டினது, விஜய்காந்த் சார். நிறைய படங்கள்ல சின்னச்சின்ன கதாபாத்திரங்கள்ல நடிச்சுட்டிருந்தப்ப, நாமளே ஒருகதை எழுதி நடிக்கலாம்னு முடிவு பண்ணி எழுதுனதுதான் ‘சுந்தர புருஷன்’. ஒருமுறை செளத்ரி சாரைச் சந்திச்சு, ‘என்கிட்ட ஒரு கதை இருக்கு. நான்தான் ஹீரோ’னு சொன்னேன். அதைக் கேட்டுட்டு அவர் விழுந்து விழுந்து சிரிச்சார். பிறகு ஒருநாள், நான் கதை சொன்ன விதத்தைப் பார்த்துட்டுக் கைதட்டி ரசிச்சவர், ‘சூப்பர். நீயே பண்ணு’னு சொல்லி அட்வான்ஸ் கொடுத்தார். இப்படி பாக்யராஜ் சார், விஜயகாந்த் சார், சௌத்ரி சார் இவங்க மூணு பேருக்கும் நான் எப்பவும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” என்றபடி தன் மனைவியையும் மகள்களையும்  அறிமுகப்படுத்தி வைத்தார்.

“சிவாஜி வருத்தத்தைப் பார்த்து மாறினேன்!”

குடும்பத்துடன் நடிகர் லிவிங்ஸ்டன்

மனைவி ஜெஸ்னிதா, “இவர் அடிக்கடி கோபப்படுவார். பெரும்பாலும் அந்தக் கோபத்தில நியாயம் இருக்கும். எப்படியிருந்தாலும் அவர் கோபத்தின் வேலிடிட்டி அஞ்சே அஞ்சு நிமிஷம்தான்.  அப்புறம் அவரே கூலாகி ஜாலியா பேச ஆரம்பிச்சுடுவார்” என்று தன் கணவரை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார்.

“நான் இப்ப ட்ராவலிங் அண்டு டூரிஸம் படிக்கிறேன். சினிமாவுல நடிக்கணும் என்பது என் சின்ன வயசு ஆசை. பயந்துபயந்து, ‘நான் நடிக்கணும்’னு அப்பாகிட்ட சொன்னேன். ‘உனக்குப் பிடிச்சதை நீ தாராளமா பண்ணு’னு சொன்னார். அதுமட்டுமில்லாம ‘போஃப்டா’ ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல சேர்த்தும்விட்டார். அங்க நான் குறும்படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். நண்பர் ஒருவர் மூலம் பாரதிராஜா சார்கிட்ட என் போட்டோஸ் போயிருக்கு. ‘ஒரு படம் பண்ணப்போறேன். நீ நடிக்கிறியா’னு கேட்டார். ஆனா இப்ப அந்தப் பட ஷூட்டிங் தள்ளிப்போயிருக்கு. அதுக்கிடையில் ‘கலாசல்’னு ஒரு படத்துல அம்பிகா மேடம் பையன் ராம் கேசவ்க்கு ஜோடியா கமிட்டாகியிருக்கேன்” என்று உற்சாகமாய்ப் பேசுகிறார் லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதா.

“ரெண்டாவது பொண்ணு ஜெம்மா, பிளஸ் ஒன் படிக்கிறாங்க. பெயின்டிங், பாட்டு, பியானோனு அவங்க வேற ட்ராக்ல போயிட்டிருக்காங்க. என்னைப் பேட்டி எடுக்கும் பலர், ‘ஏன் நீங்க ஹீரோவா தொடர்ச்சியா நடிக்கிறதில்லை’னு கேட்பாங்க. ராஜ்கிரண், பாண்டியராஜன் இவங்கதான் நான் ஹீரோவாக முன்னுதாரணங்கள். ஏன்னா, இவங்க ஸ்கிரிப்ட் ஹீரோஸ். நான் ஹீரோவா நடிச்ச நாலு படமும் நூறு நாள்கள் ஓடுச்சு. ஆனா, ஒரு கட்டத்துக்குமேல வீட்ல இருக்கக்கூடிய சூழலே இல்லாமல் போயிடுச்சு. 

சிவாஜி சார் ஒருமுறை, ‘ஹீரோவா நடிச்சிட்டே இருந்ததால என் குடும்பம், குழந்தைகளைப் பார்க்க முடியலை. என்னைப் பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாங்க. அவங்களோட நேரம் செலவழிக்க முடியாமலேயே போயிடுச்சு. சினிமா சினிமானு இல்லாம குடும்பத்தையும் பாருங்கப்பா’னு சொன்னார். அந்த வார்த்தை என்னை யோசிக்க வெச்சுது. அதனாலதான் ஹீரோனு இல்லாம கேரக்டர் ரோல்லயும் நடிக்க ஆரம்பிச்சேன்.

“சிவாஜி வருத்தத்தைப் பார்த்து மாறினேன்!”

இப்போ  வருஷத்துக்கு முப்பது படங்கள் நடிக்கிறேன். குடும்பம், ஃப்ரண்ட்ஸோட நேரம் செலவழிக்கிறேன். கார்த்திக் சுப்பராஜ், அருண்பிரபுன்னு இளம் இயக்குநர்கள் பலரும் என் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்காங்க. ரொம்ப பிஸியாவும் இல்லை; ரொம்ப ஃப்ரீயாவும் இல்லை. இப்ப விஜய் படம், எஸ்.ஏ.சி சார் படம்னு நிறைய படங்கள்ல வொர்க் பண்ணிட்டிருக்கேன்.

இதையேதான், ‘ஹீரோயினா மட்டும்தான் நடிக்கணும்னு நினைக்காதே. எந்த ரோல் கொடுத்தாலும் அதுல உன்னை நிரூபிக்கப் பார்’னு அறிவுரையா ஜோகிட்டயும் சொல்வேன்” என்று லிவிங்ஸ்டன் சொல்ல, அழகாய்த் தலையாட்டி ஆமோதிக்கிறார் ஜோவிதா.

“ஓ.கே. குரூப் போட்டோ எடுத்துக்கலாம்” என்ற என்னிடம், “ஒரு நிமிஷம், தக்காளி வந்துடட்டும்” என்கிறார். நான் ஆச்சர்யமாகப் பார்ப்பதைக் கவனித்தவர், “என்ன பார்க்குறீங்க? அது, எங்க வீட்டு நாய். அதுக்கு என் பொண்ணு ‘டொமேட்டோ’னு பேர் வெச்சா. நான்தான் தமிழ்ல இருந்தா நல்லா இருக்குமேன்னு ‘தக்காளி’னு பேர் வெச்சிட்டேன். டேய் தக்காளி... கமான்” என்றவுடன் ‘தக்காளி’ வாலாட்டியபடி லிவிங்ஸ்டன் பக்கத்தில் வந்து அமர்ந்துகொள்ள, எல்லோரும் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ சொல்லாமலே சிரிக்க ஆரம்பித்தார்கள்.