Published:Updated:

கதையோடு சேர்த்து இதையும் அழுத்தமா சொன்னா நல்லா இருக்கும்!’ - 'சர்கார்' குறியீடுகள்

தார்மிக் லீ
கதையோடு சேர்த்து இதையும் அழுத்தமா சொன்னா நல்லா இருக்கும்!’ - 'சர்கார்' குறியீடுகள்
கதையோடு சேர்த்து இதையும் அழுத்தமா சொன்னா நல்லா இருக்கும்!’ - 'சர்கார்' குறியீடுகள்

'துப்பாக்கி', 'கத்தி' எனும் இரு ப்ளாக்பஸ்டர்களைத் தொடர்ந்து மூன்றாம் முறையாக மீண்டும் 'சர்கார்' மூலம் கூட்டு சேர்ந்திருக்கிறது விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி.  19 ஆம் தேதி சர்கார் படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து வியூஸ் விகிதத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்தது, இன்னும் படைத்துக்கொண்டிருக்கிறது.  

முதல் படமான 'துப்பாக்கி', முழுக்கவே கமர்ஷியல் கலந்த சோஷியல் மெசேஜ் படமாக வெளிவந்தது. விஜய் ஃபிலிமோகிராஃபியில் 'துப்பாக்கி' முக்கியமான படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து வெளியான 'கத்தி' படத்திற்கு, ஆரம்பத்தில் அரசியல் ரீதியான பல பிரச்னைகள் ஏற்பட்டாலும், படம் வெளிவந்த பிறகு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து, விஜய்யின் நன்மதிப்பையும் கூட்டியது. பின் மெல்ல மெல்ல இவரது படங்கள், அரசியல் பேசத் தொடங்கியது. அட்லி இயக்கத்தில் வெளியான 'மெர்சல்' திரைப்படத்திற்கு, எதிர்பார்த்தது போல் மீண்டும் அரசியல் ரீதியான சில நெருக்கடிகள் வந்தது. இருப்பினும் எதையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய ஸ்டைலில் படங்கள் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார் விஜய். அதற்கேற்ப இயக்குநர்களும் இவருக்கு தோதாக கிடைத்துவிடுகிறார்கள். இந்த வரிசையில், 'சர்கார்' படத்தின் எதிர்பார்ப்பு, டைட்டில் ரிலீஸில் இருந்தே ஆரம்பித்துவிட்டது. 

'அவன் ஒரு கார்பரேட் மான்ஸ்டர். எந்த நாட்டுக்குப் போனாலும் அவனை எதிர்க்கிறவங்களை அழிச்சிட்டுதான் வெளில போவான். இப்போ இந்தியாவுக்கு வந்திருக்கான்' என்ற வரலட்சுமியின் வாய்ஸ்ஓவரில்தான் விஜய் என்ட்ரி ஆகிறார். பொதுவாக அரசியலை பேசுவதற்கு முன்பும், அரசியல்வாதிகளைப் பற்றி பேசுவதற்கு முன்பும், ஓட்டிங் சிஸ்டம் என்ற ஒன்று இருக்கிறது. ஆனால், ஒரு சில தலைவர்கள் இப்படி வரலங்கிறதை விடுங்க பாஸ்! அதற்கு முன் நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அதே தலைவரின் மீதுதான் விமர்சனமும் வைக்கிறோம். 'போஸ்டர் ஒட்டி பந்தல் போட்டு, கூட்டம் கூட்டி ஓட்டு போட்டு, ஏமாற்றமே எங்க பண்பாடுதான்' என ரஞ்சித்தின் அரசியல் படமான 'மெட்ராஸ்' அன்றே சொல்லிவிட்டது. இருப்பினும், அரசியல்வாதிகள் சரியாக இருக்கிறார்களா, ஊழல் செய்கிறார்களா என்ற விமர்சனத்தை வைப்பதற்கு முன்பு, நம்முடைய ஓட்டுரிமையை நாம் சரியாகதான் பயன்படுத்துகிறோமா என்பதுதான் படத்தின் களமாக இருக்கும். பணம் வாங்கி ஓட்டுப்போடும் மக்கள் இருக்கும் வரை, அரசியல்வாதிகளை நாம் குற்றம் கூறி எதுவும் நடக்கப்போவதில்லை எனும் ஸ்ட்ராங் மெசேஜை பேசும் படமாகவும் ’சர்கார்’ இருக்குமென தெரிகிறது.  

பல்வேறு நாடாக சுற்றி வணிகம் செய்து வரும் தொழிலதிபர், இந்தியாவுக்கு வருகை தருகிறார் என்பது போல்தான் டீஸர் தொடங்குகிறது. 'நான் எந்த  கம்பெனியையும் விலைக்கு வாங்க வரலை. இன்னைக்கு என்ன நாள்... எலெக்‌ஷன் டே. நான் என்னுடைய ஓட்டைப் போடுறதுக்காக வந்திருக்கேன்' என்பதுதான் விஜய்யின் டயலாக். இதுதான் படத்தின் கதைத் துவக்கமாக இருக்க வேண்டும். பின் அரசியல் ரீதியாக பல்வேறு சிக்கல்களால் விஜய் பாதிக்கப்படுவார். அரசியலுக்குள் நடக்கும் ஊழலைக் கண்டும், அரசியல்வாதிகளால் ஏற்படும் நெருக்கடிகள் கண்டும் பொங்கும் சுந்தர் (விஜய்), க்ளீனிங் வேட்டையில் இறங்குவதோடு, மக்களிடையே புரட்சியும் செய்கிறார். 

புரட்சியை மெல்ல மெல்ல மக்கள் மனதில் திணித்து, மக்களை தன் பக்கம் இழுக்கிறார். கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சையை இதற்குள் கொண்டு வந்ததுதான் ஹைலைட். மதுரையில் பிறந்து தற்போது உலகமே தேடுதலுக்காக பயன்படுத்திக்கொண்டிருக்கும் கூகுளின் நிறுவனர், சுந்தர் பிச்சை. சாதாரண குடும்பத்தில் பிறந்து, தன்னைத் தானே செதுக்கி, தற்போது இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார். எதை எடுத்தாலும் அரசியல், எதற்கெடுத்தாலும் அரசியல் எனும் சவால் நிறைந்த உலகத்தில் சாதனை புரிந்தவர், சுந்தர் பிச்சை. கதையின் ஹீரோவான விஜய்க்கு 'சுந்தர்' என பெயர் வைத்ததில் தொடங்கி, பெரிய வணிகம் செய்யும் தொழிலதிபராக காட்டியது வரை சுந்தர் பிச்சையின் தாக்கம்தான் ,'சர்கார்' படத்தின் சுந்தர்.  

தற்போது நடக்கும் அரசியலின் சூழலை முடிச்சுப்போட்டு, ஒரு தொழிலதிபர் இதை எதிர்கொண்டால் என்ன நடக்கும், அவனது கோபம் எப்படி வெடிக்கும் என்பதுதான்  கதையாக இருக்கூடும். தொழிலதிபர் மூளையும், அரசியல்வாதிகளின் சூழ்ச்சியும் ஓர் இடத்தில் மோதும்போது வெடிக்கும் விஷயங்களில்தான் படத்தின் கதையாக பயணிக்கும். இதற்கு நடுவில் கந்துவட்டி பிரச்னையால் திருநெல்வேலியில் நடந்த தீக்குளிப்பு, திருப்பூரில் லாரியில் சிக்கிய 570 கோடி பணம் போன்ற உண்மைச் சம்பவங்களெல்லாம் சேர்க்கப்பட்டது தெரிகிறது. எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக இவரே புரட்சி செய்து மக்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்று, தன்னுடைய 'கார்ப்பரேட் க்ரிமினல் மைண்டை' வைத்து அரசியலில் நின்று வெல்வார் என்பதுதான் க்ளைமாக்ஸாகவும் இருக்கக்கூடும். ஒட்டுமொத்தமாக ஆக்‌ஷன் இதற்கு நடுவில் கீர்த்தியுடனான காதல், ராதாரவியுடனான மோதல், ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் என இப்படியாகத்தான் படம் நகரும். இப்படி தமிழ் நாட்டில் பேசுபொருளாக இருந்த பல்வேறு விஷயங்களைக் கையில் எடுத்திருக்கிறது, 'சர்கார்' படம். படத்திலும் இவை ஸ்ட்ராங்காக கூறினால் சிறப்போ சிறப்புதான்.  

'உங்க ஊர் தலைவனைத் தேடி பிடிங்க. இதுதான் நம்ம சர்கார்' - பொருத்திருந்து பார்ப்போம்!