Published:Updated:

`ராம் எனும் ராமன், ஜானகி எனும் சீதா..!' `96` சொல்லும் ராமாயணம் கதை

`ராம் எனும் ராமன், ஜானகி எனும் சீதா..!' `96` சொல்லும் ராமாயணம் கதை
`ராம் எனும் ராமன், ஜானகி எனும் சீதா..!' `96` சொல்லும் ராமாயணம் கதை

`96 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, தமிழ்த் திரை ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது. சமூக வலைதளங்களில் பரவலாக நேர்மறை விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தின்மூலம், பலரும் தங்கள் நினைவலைகளின் வாயில்களை மீண்டும் திறந்து வைத்திருக்கின்றனர். ஆழ்கடலின் அமைதியைப் போல தன் ஆழ்மனதில் படிந்த பலநாள்களின் சோகங்களை வடித்தெடுத்த மகிழ்ச்சியைப் பகிரத் துடிக்கும் அந்த வெள்ளந்தி மனிதர்களாக நாம் இருந்திருக்கிறோம் என்ற உணர்வை, அதே சூழலில் இருக்கும் பலருக்கும் ஏற்படுத்திச் சென்ற படம். 

`96 படத்தின் திரைக்கதையை நோக்குகையில், அது ராமாயணத்தின் கதையமைப்போடு வெகுவாகப் பொருந்திப்போவதைக் காணமுடிகிறது. 

`ராமச்சந்திரன் – ஜானகி தேவி' இந்த இரண்டுமே இந்தியப் பாரம்பர்யத்தின் புராணத் தொடர்புடைய ராமாயணத்தின் பெயரிணைகள். 

`ராமச்சந்திரன்' என்பது ராமனின் பெயர் - `ஜானகி தேவி' என்பது சீதையின் பெயர்.

ராமாயணத்தில் தந்தை தன் மனைவிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக தன் மகனை, அவன் பிறந்து வளர்ந்த இடத்திலிருந்து பெயர்த்து கானகத்துக்கு அனுப்பிவிடுவார். 96ல், தந்தை தான் வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாத சூழலில், மகன் பிறந்து வளர்ந்த இடத்திலிருந்து பெயர்த்து வேற ஊர்க்கு அவனை அழைத்துச்செல்கிறார்.

சீதை, ராமனுக்காகவும் ஜானு ராமுக்காகவும் காத்துக்கொண்டிருந்தனர். ராமாயணத்தில் ராமன்-சீதை காதல் வலுவாக இருக்கும். ராமனைப் பிரிந்தாலும் சீதை கடுமையாக தவமிருப்பதாய், ராமனின் வரவை எதிர்பார்த்திருப்பதாய் கதையமைந்திருக்கும். சீதை நினைத்திருந்தால், தானாக மாற்றான் இடம் நீங்கி ராமனை அடைந்திருக்க முடியும். ஆனால்,

``என் சொல்லினால் சுடுவேன் ; அது, தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.” என ராமனுக்காக் காத்திருப்பதைப் பகர்கிறாள். இங்கே, `ராம் எப்போது வருவான், தன்னை அழைத்துச் செல்லமாட்டானா?' எனும் ஏக்கத்தை தனக்குத் திருமணமாகும் அந்த நொடி வரை வைத்திருக்கிறாள் ஜானு. 

தன்மேல் உயிராக இருக்கும் ராமனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறாள், சீதை. தன்னால் நேரடியாக சீதையின் இடத்துக்குச் செல்ல முடியாமையால், அனுமனை தூதாக அனுப்புகிறான் ராமன்.  இங்கே, ராமுக்காகக் காத்திருக்கும் ஜானுவை மகளிர் கல்லூரி என்பதால் அவளை கல்லூரிக்குள் சென்று நேரில் சந்திக்க இயலாத சூழலில், வசந்தி என்ற பெண்ணைத் தன் காதல் தேடலுக்குத் தூதாக அனுப்புகிறான் ராம்.

கம்பராமாயணத்தில் அனுமனைச் சொல்லின் செல்வர் என்பர். தான் தூதாக வந்த நோக்கத்தை அவன் துளியும் குறைபாட்டுக்கு இடமின்றி நிறைவேற்றிக்காட்டுவான். சீதை அசோகவனத்தில் துயருற்றுத் தற்கொலைசெய்துகொள்ள முனையும் அந்நேரத்தில், ``ராமா” என்று முதலில் உரைத்து,  முறையாக சீதையிடம் தான் ராமனின் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதையும் வெளிப்படுத்தி, ராமனின் கணையாழியைக் கொடுப்பான். ஆனால், `96ல், யார் கொடுக்கச் சொன்னார்கள், அழைத்துவரச் சொன்னார்கள் என்பதைக்கூட சரியாகச் சொல்ல முடியாத வசந்தி, `சொல்லின் வில்லி'யாகச் சித்திரிக்கப்பட்டிருப்பாள். ஒரு வேளை, ``ராமா” என்பதையே இங்கு சொல்லியிருந்தால் ஜானுவின் காத்திருப்புக்குப் பலன் கிடைத்திருக்கலாம். 

ராமாயணத்தில், ராமனை விட்டு அவரது சீதை சந்தர்ப்பச் சூழலில் மாற்றானின் இடத்துக்கு (இலங்கை) விருப்பின்றி இடம்பெயர்கிறாள்.    96-லும், ஜானு சந்தர்ப்பச் சூழலினால் சிங்கப்பூருக்கு இடம்பெயர்கிறாள். 

சீதை-ஜானு இவ்விருவரும் இடப்பெயர்ச்சி அடைந்தாலும் அவர்களின் மனதில் ராமன்-ராம் மீதான தீராக் காதல் இருக்கிறதென்பதைக் காணலாம். 

`96 படத்தின் ராமும் ஜானுவும் தஞ்சையைத் தன் இளமைப் பருவத்தில் கொண்டவர்கள். ஜானு இடம்பெயர்ந்து வேறு நாடு சென்றுவிடுவதால், அதன் வழக்கத்திற்கேற்ப மாறிடுகிறாள்.  அதனாலே, ``நீ இன்னும் விர்ஜின்னா டா” என அவள் கேட்பதை தமிழகத்தில் இன்னும் வசிக்கும் தஞ்சை வள நாட்டின் மரபுவழிவந்த ராமினால் ஏற்கமுடியவில்லை. அவள் மீண்டும் கேட்கையிலும் தடுக்கிறான். 

ஆண்களே ஆசைகொள்ளும் பேரழகன் ராமன் எனக் காட்சிப்படுத்துவார் கம்பர். அதேபோல, ஜானு ``நீ ஆம்பள நாட்டுக்கட்டைடா” எனப் புகழ்கையில், எதிர்கொள்ள முடியாது வெட்கித்துப் போகிறான் ராம்.

பாத்திரப்படைப்பைப் பொறுத்தவரை, ராமாயணத்தில் ராமனைக் கற்புக்கரசனாகக் காட்சிப்படுத்தியிருப்பர். தனது கற்பு நெறியிலிருந்து  சற்றும் குறையாத உத்தமனாக எல்லா ஆண்களுக்கும் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டிய ஆண்மகனாக ராமனை நெறிப்படுத்தியிருப்பர். 96-லும் அப்படியேதான், ஜானு தன்னுடைய காதலியாக இருந்தபோதும் இன்னொருவன் மனைவியான பிறகும், அவளிடம் இடைவெளி பாராட்டுகிறான். அவன் கொண்ட காதல் உண்மையானது. அதனால், ஜானுவைத் தவிர இன்னொரு பெண்ணை அவளிடத்தில் வைத்துப் பார்க்க முடிவதில்லை. ``மேனகா, ரம்பை, ஊர்வசி இவர்களை அதே ஆடையில் உன்னிடத்தில்  ஓர் இரவு விட்டுட்டுப்போகலாம், பெரிசா ஒண்ணும் பண்ணிட மாட்ட பத்திரமா பாத்துப்பே” என ஜானுவே ராமின் உத்தமத் தன்மைக்குச் சான்று கொடுக்கிறாள். 

இவ்வாறு, சீதை-ராமனின் காதல் வலுவாக இருந்து, ராமயணத்தின் இறுதியில் இணைகிறார்கள். ஆனால் 96ல், ஜானகிதேவி-ராமச்சந்திரனின் காதல் வலுவாக இருந்தும் இணையாமலே போகிறார்கள். அனுமனாக யாரேனும் ராமுக்கு  உதவியிருந்தால், ஜானு-ராம் காதல் சேர்ந்திருக்கக்கூடும்.