Published:Updated:

`சர்கார்' முன்வைக்கப் போகும் `ஒரு விரல் புரட்சி' என்னவாக இருக்கும்? #VikatanInfographics

`சர்கார்' முன்வைக்கப் போகும் `ஒரு விரல் புரட்சி' என்னவாக இருக்கும்? #VikatanInfographics
`சர்கார்' முன்வைக்கப் போகும் `ஒரு விரல் புரட்சி' என்னவாக இருக்கும்? #VikatanInfographics

ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியில், ஓட்டுக்கு பணம் தருவது உட்படத் தேர்தல் முறைகேடுகளைப் பற்றியது தான் 'சர்கார்' என்று உறுதிசெய்துள்ளார்.

கையில் சிகரெட்டோடும் `தளபதி' விஜய் என்ற பெயரோடும் `ஃபஸ்ட் லுக்', அடுத்தடுத்த போஸ்டர்களில் வெற்றிபெறும் கார்ப்பரேட் முதலாளியின் மிடுக்கு, `சிம்டாங்காரன்' சிங்கிள், முதலமைச்சர் ஆவதைப் பற்றிய சிக்னல்களோடு பிரமாண்டமான ஆடியோ லான்ச், டீசர் வெளியீடு, தீபாவளிக்குப் படம் ரிலீஸ் எனத் தொடர்ந்து அப்டேட்களுடன் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது ஏ.ஆர்.முருகதாஸின் `சர்கார்'.

டீசர், `ஒரு விரல் புரட்சி' பாடல் வரிகள் ஆகியவை தரும் `க்ளூ' இந்தப் படத்தின் கதை, தமிழ்நாட்டுத் தேர்தலில் நடைபெறும் முறைகேடுகள், விஜய் தலைமையில் இளைஞர்கள் உதவியுடன் ஆட்சி மாற்றம் போன்றவை இடம்பெறும் என்பதைக் கணிக்கலாம். ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய பேட்டியில், ஓட்டுக்குப் பணம் தருவது உட்படத் தேர்தல் முறைகேடுகளைப் பற்றியதுதான் `சர்கார்' என்று உறுதிசெய்துள்ளார். 

இந்தியத் தேர்தல் ஆணையம் எவ்வளவுதான் தடுத்தாலும், அதிகாரத்தை நோக்கிய போட்டியில் கட்சிகள் செய்யும் முறைகேடுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. கள்ள ஓட்டு, பூத் கைப்பற்றல், பணப் பட்டுவாடா, போலியான கருத்துக்கணிப்புகள் போன்றவற்றை அரசியல் கட்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றன. இதை எதிர்ப்பது, தூய்மையான தேர்தல் அரசியல் களத்தை உருவாக்குவதற்கு இளைஞர்களோடு கைகோப்பது ஆகியன இந்தப் படத்தின் டீசர் க்ளூக்களாக முன்வைக்கப்பட்டுள்ளன. 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2016-ம் ஆண்டு நடைபெற்றது. அந்தத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வெற்றிபெற்று, ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனார். அந்தத் தேர்தலுக்கு முன் திருப்பூர் அருகே கன்டெய்னர்  லாரி ஒன்றில் 570 கோடி ரூபாய் சிக்கியது. மொத்தமாக அவ்வளவு பணம் சிக்கியதோடு, இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவல்களின்படி, தேர்தலின்போது சுமார் 113 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. `சர்கார்' டீசரில் அதைப் பற்றிய க்ளூ இடம்பெற்றிருக்கிறது. 

ஓட்டுக்குப் பணம் தருவதை `திருமங்கலம் பார்முலா' என வெளிப்படையாகவே சொல்லும் அளவுக்குத் தேர்தலில் பணம் புழக்கத்தில் விடப்படுகிறது. திருமங்கலம் இடைத்தேர்தலைப் பற்றி அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குத் தகவல்கள் அனுப்பப்பட்டதை `விக்கி லீக்ஸ்' நிறுவனம் கசிய விட்டிருந்த ரகசியங்கள் அம்பலப்படுத்தின. ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்ததாக வெளியான சர்ச்சைகளைக்கூட சமீபத்தில் கண்டோம். இந்தியா முழுவதுமான சட்டமன்றத் தேர்தல்களில் பணப்பட்டுவாடா ரேஸில், 2016-ம் ஆண்டு தேர்தல் தமிழகத்தை முதலிடத்தில் நிறுத்தியிருக்கிறது.   

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் இதற்குமுன் வெளிவந்த `துப்பாக்கி', `கத்தி' இரண்டுமே ஆயுதங்களின் பெயர்களையுடையவை. `சர்கார்' என்ற தலைப்பு சூட்டியதன் மூலம், அரசை ஆயுதமாக முருகதாஸ் கருதுகிறாரோ எனத் தோன்றாமல் இல்லை. மேலும், இந்தப் படத்துக்கு முதலில் `வில்லாதி வில்லன்' என்று பெயர் சூட்டியதாகவும், அது மாற்றப்பட்டதாகவும் தெரிய வருகிறது. கார்ப்பரேட்களை வில்லன்களாகக் காட்டியதன் மூலம், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பெரும் முன்னுதாரணமாகவும் விளங்கியது `கத்தி' திரைப்படம். சிறையிலிருந்து தப்பிய கைதி, மக்களுக்காக நல்லவனாக மாறிப் போராடுவது அதன் கதை. அதே பார்முலா சர்கார் படத்திலும் நிகழும் என யூகிக்க முடிகிறது.   

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல்கள் திருவிழாக்களைப் போல நடத்தப்படுகின்றன. இப்படி நிகழும் தேர்தல்களில் நடைபெறும் முறைகேடுகளைக் களைய இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு சீர்திருத்தங்களை முன்வைத்துள்ளது. கட்சிகள் பெறும் நிதிகளில் தொடங்கி, வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் சொத்துக்கணக்கு வரை, தேர்தல் சீர்திருத்தங்களை வழிமொழியும் தேர்தல் ஆணையத்திடம், கள்ள ஓட்டுகள் தொடர்பான தகவல்கள் பெரிய அளவில் இல்லை. கள்ள ஓட்டுகள் மிகச் சாதாரணமாக, கண்டுபிடிக்க இயலாதவாறு மட்டுமே அறியப்பட்டுப் பின்னர் விட்டுவிடப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய சி.இ.ஓ என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்க்க தீபாவளிவரை பொறுத்திருக்க வேண்டும். 

தேர்தல், அரசியல்வாதிகள் முதலான சப்ஜெக்டில் நேரடியாக விஜய் நடிப்பதால் இந்தப் படம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆடியோ வெளியீட்டின்போது அவர் பேசியதும், அவரின் அரசியல் வருகைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளது. 

எது எப்படியோ, `சர்கார்' சுந்தராக விஜய் மக்களை `ஒரு விரல் புரட்சி' என அழைத்தாலும், ஒரு விரலால் ஆட்சி மாற்றம் வேண்டுமானால் ஏற்படலாம்; புரட்சியெல்லாம் சான்ஸே இல்லை பாஸ்!  

அடுத்த கட்டுரைக்கு