Published:Updated:

`` `சின்ன மச்சா'னை விடுங்க...`ஆத்தா உன் சேலை' பாட்டுதான், அத்தனை நட்பு கிடைச்சது!"- செந்தில் கணேஷ்

`` `சின்ன மச்சா'னை விடுங்க...`ஆத்தா உன் சேலை' பாட்டுதான், அத்தனை நட்பு கிடைச்சது!"- செந்தில் கணேஷ்
`` `சின்ன மச்சா'னை விடுங்க...`ஆத்தா உன் சேலை' பாட்டுதான், அத்தனை நட்பு கிடைச்சது!"- செந்தில் கணேஷ்

ஹீரோவாக தன் முதல் படம், மக்களிசையிலிருந்து சினிமா பாடகர், ரஹ்மான் கொடுக்கும் வாய்ப்பு எனப் பலவற்றை சுவாரஸ்யமாகப் பேசியிருக்கிறார், `சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்

``2014-ம் ஆண்டு `திருடு போகாத மனசு'ன்னு ஒரு படம் பண்ணினேன். அதுக்குச் செல்ல.தங்கையாதான் இயக்குநர். `இந்தப் பையன் நல்லா பாடுறான். நான் பாட்டு எழுதித் தர்றேன்'னு எங்க வீட்ல சொல்லிட்டு, `மண்ணுக்கு ஏத்த ராகம்'னு ஒரு கலைக்குழு ஆரம்பிச்சோம். எங்களுக்குப் பாட்டுச் சொல்லிக்கொடுக்கிறது, எழுதுறதுனு இருந்தார் அவர். அவருக்கு சினிமா எடுக்கணும்னு ரொம்ப ஆசை. சின்னச் சின்ன மேடை நிகழ்ச்சிகள்ல பாடுற கிராமியக் கலைஞன் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்குப் போறான். அங்கே அவன் ஜெயிச்சானா இல்லையாங்கிறதுதான் அந்தப் படத்தின் கதை. எல்லோரும் புதுமுகங்கள். அதனால, மக்கள் மத்தியில பெரிய அளவுல ரீச் ஆகலை. எங்களுடைய அடுத்த முயற்சிதான், இந்தக் `கரிமுகன்'. 2016-ல ஆரம்பிச்சு முக்கால்வாசி படத்தை முடிச்சிருந்தோம். மீதியை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முடிஞ்சதும் பண்ணிக்கலாம்னு இருந்தோம். இப்போ முழுப் படமும் முடிஞ்சு ரெடி!" - உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார், செந்தில் கணேஷ்.
 

``பாடுறதைத் தாண்டி நடிக்கிறதுல எப்படி ஆர்வம் வந்தது?" 

``சின்ன வயசுல இருந்தே நடிக்கிற ஆர்வமும் உண்டு. மேடைகள்ல நடிப்போடு சேர்ந்துதான் பாட்டுப் பாடுவேன். வாய்ப்பு கிடைச்சா சினிமாவுல ஏதாவது கேரக்டர் ரோல் பண்ணலாம்னுதான் இருந்தேன். சென்னைக்கு வந்தெல்லாம் முயற்சி பண்ணலை. செல்ல.தங்கையா என் அக்கா கணவர்தான். அவர் ஆரம்பத்துல இருந்து படம் பண்ணுவோம்னு என்கிட்ட சொல்லிட்டே இருப்பார். அவர் படம் பண்ணா கண்டிப்பா நமக்கு வாய்ப்பு கொடுப்பார்னு நினைச்சுக்கிட்டு இருந்ததுனால, தனியா முயற்சி பண்ணலை. அதேமாதிரி அவர்தான் வாய்ப்பு கொடுத்தார்"

``முதல் படத்தின்போது உங்களை யாருக்கும் தெரியாது. இந்தப் படத்துல எல்லோருக்கும் உங்களைத் தெரியும். இந்த மாற்றத்தை எப்படி உணர்றீங்க?"

``அதுக்கு நான் ஊடகங்களுக்குத்தான் நன்றி சொல்லணும். `கரிமுகன்' படத்துடைய நிகழ்ச்சியில யாரும் ஹீரோ புதுமுகமானு கேட்கலை. காரணம், சூப்பர் சிங்கர் கொடுத்த அறிமுகம்தான். வெளியூருக்குப் போனா, `படம் பண்றீங்களாமே! எப்போ வருது?'னு விசாரிக்கிறாங்க. இதையெல்லாம் பார்க்கும்போது, சந்தோஷமா இருக்கு."

``வேட்டி - சட்டையில இருந்து, பேன்ட் - சட்டைக்கு மாறிட்டீங்கபோல?!"  

``இதுக்கு முன்னாடிகூட மேடைகள்ல பேன்ட் - சட்டையில பாடியிருக்கேன். மக்கள் மனசுல இடம் பிடிக்கணும்ங்கிறதுக்காக மேடையில அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டும் ஆடிக்கிட்டும் இருப்பேன். அதுக்கு வேட்டி - சட்டை செளகரியமா இருக்காது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் பிறகு, வேட்டி சட்டை என் அடையாளமாகிடுச்சு. எந்த நாட்டுக்குப் போனாலும் இப்போ வேட்டி சட்டையிலதான் போறேன். இதுக்குப் பிறகு நான் நடிக்கக்கூடிய படங்கள்ல முடிஞ்சவரை வேட்டி - சட்டையில  வர முயற்சி பண்ணுவேன், அதைக் கோரிக்கையாவும் வைப்பேன்."
 

``நாட்டுப்புற இசையில இருந்து சினிமா பாடகர். இந்த மாற்றம் எப்படி இருக்கு?"

``மக்களிசைதான் எனக்கான அடையாளம். சினிமா அடுத்தகட்டம்னு நினைக்கிறேன். சினிமாவுல நாம ஏதாவது சாதிச்சாதான் அது காலத்துக்கும் நிற்கும். நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுற நாங்க என்ன மாதிரி டியூன் போட்டாலும், சினிமாவுல இசை அமைக்கிற டியூன் அதை வேற வடிவத்துக்கு மாத்திடும். `சின்ன மச்சான்' பாடலைப் பல இடங்கள்ல பலமுறை பாடியிருக்கோம். அதை 'சார்லி சாப்ளின் 2' படத்துக்காகக் கேட்கும்போதுகூட, `இதையே இன்னும் எத்தனை வருடத்துக்குப் பாடுவாங்கன்னு மக்கள் நினைச்சிடுவாங்களோ'னு தயக்கம் இருந்தது. ஆனா, சினிமா பாடலா அது வேற மாதிரி இருக்கு. பெரியளவுல ரீச் ஆகியிருக்கு. சினிமாவுக்குள்ளே மக்களிசையைப் புகுத்தி, அதுக்கான அங்கீகாரத்தை வாங்கித் தரணும்னு ஆசை, அதுக்கான வாய்ப்பும் பிரகாசமா இருக்கு."

``எந்தெந்த இசையமைப்பாளர்களுடைய இசையில பாடியிருக்கீங்க?"

``இமான் சார் மியூசிக்ல `சீமராஜா', அம்ரீஷ் சார் இசையில `சார்லி சாப்ளின் 2' படத்துல பாடியிருக்கேன். தொடர்ந்து, ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி, கிரிஷ்னு முன்னணி இசையமைப்பாளர் இசையில பாடி முடிச்சிருக்கேன். ரஹ்மான் சார் அழைப்புக்காக வெயிட்டிங்." 

``ஹீரோ செந்தில் கணேஷுக்கு ராஜலட்சுமி எந்தளவுக்கு சப்போர்ட் பண்றாங்க?" 

``கணவரோட கனவு நிறைவேறப் போகுதுனு சந்தோஷத்துல இருக்காங்க. இது எல்லோருடைய கூட்டு முயற்சிதான். எந்த ஒரு நிலைக்கு உயர்ந்தாலும் மேடை நிகழ்ச்சியில மக்களிசையைப் பாடுறதை நாங்க விடமாட்டோம்."
 

``சினிமா வட்டாரங்கள்ல உங்க நட்பு எந்தளவுக்கு வளர்ந்திருக்கு?"

``இசையமைப்பாளர்கள் எல்லோரும் `சின்ன மச்சான்...' பாடலைப் பாராட்டிப் பேசுறாங்க. `ஆத்தா உன் சேலை'னு ஒரு பாட்டு பாடியிருந்தேன். அந்தப் பாட்டு மூலமா சமுத்திரக்கனி அண்ணன், தம்பி ராமையா அண்ணன், டி.சிவா சார்.. இப்படிப் பலருடைய நட்பு கிடைச்சது. சிவகார்த்திகேயன் அண்ணன்தான் என் ரோல் மாடல். அவர்கூட நல்ல நட்புல இருக்கேன். என் குடும்பத்துல எல்லோருக்கும் சிவகார்த்திகேயன் அண்ணனை ரொம்பப் பிடிக்கும். அவங்க எல்லோரும் ஒருமுறை சிவா அண்ணனைப் பார்க்கணும்னு சொல்லியிருக்காங்க. நானும் அவர்கிட்ட சொல்லியிருக்கேன். சீக்கிரம் குடும்பத்தோடு போய் சிவா அண்ணனைப் பார்த்துட்டு வரணும்."  என்றார், `கரிமுகன்' நாயகன் செந்தில் கணேஷ். 


 

அடுத்த கட்டுரைக்கு