Published:Updated:

அரக்கனுக்குள்ளும் உணர்வுகளைக் கடத்தும் வித்தைக்காரர்... ஆங் லீ! - #HBDAngLee

அரக்கனுக்குள்ளும் உணர்வுகளைக் கடத்தும் வித்தைக்காரர்... ஆங் லீ! - #HBDAngLee

இயக்குநர் ஆங் லீ பிறந்தநாள் கட்டுரை

அரக்கனுக்குள்ளும் உணர்வுகளைக் கடத்தும் வித்தைக்காரர்... ஆங் லீ! - #HBDAngLee

இயக்குநர் ஆங் லீ பிறந்தநாள் கட்டுரை

Published:Updated:
அரக்கனுக்குள்ளும் உணர்வுகளைக் கடத்தும் வித்தைக்காரர்... ஆங் லீ! - #HBDAngLee

மரத்திலிருந்து மண்ணை நோக்கிப் பயணப்படும் இலையின் பயணத்தை ரசிக்கும் மென்மை மனிதர்களைக் கவனித்ததுண்டா  அல்லது கொடூரக் கொலை செய்யும் மனிதனின் கோபத்தைப் பார்த்து பயப்படுவதுதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதற்கான காரணம், அதன் வக்கிர வெளிப்பாடு குறித்து யோசித்ததுண்டா... மனிதனின் ஒவ்வொரு செயல்களும் பல உணர்வுகளால் கடத்தப்படுகிறது. அந்த உணர்வுகளைத் தன் எழுத்தாற்றலால் உணரவைப்பதில் வெற்றிப்பெறுகிறான், எழுத்தாளர். அதேபோல, மனிதனின் அகநிலை சிந்தனைகளைக் காட்சிமொழியில் கடத்திவிடுவதில் உதயமாகிறார், நல்ல இயக்குநர். அப்படி மனிதனின் ஒவ்வோர் உணர்வு நிலைகளையும் தன் சினிமாவில் பிரதானமாக்கி வெற்றி கண்டவர், ஆங் லீ.

நோலன், காலத்தை வைத்து மேஜிக் செய்வதுபோல ஆங் லீ உணர்வுகளின் மூலம் தனது படங்களை உயிர்ப்புடன் கடத்திச் செல்கிறார். சீன பெற்றோர்களுக்கு தைவானில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்து சீனாவின் கலாசாரம், இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவராக இருந்ததால் என்னவோ, இவர் படங்களில் கலாசாரமும் இலக்கியமும் மோதிக்கொண்டன. அதற்கு, ஆங் லீயை உலகளவில் பிரபலமாக்கிய `க்ரோச்சிங் டைகர், ஹிட்டன் டிராகன்' படத்தை முதல் உதாரணமாகச் சொல்லலாம். தொலைந்த வாளைத் தேடி அலையும் கதையில் அந்த வாளுக்கான தேவையையும், அது சீனர்களின் தனிச்சிறப்பான அஸ்திரமாகக் கையாளப்படுவதையும் விளக்கியிருப்பார். உதாரணத்துக்கு, மூங்கிலின் மெல்லிய கிளைகளில் லாகவமாக ஆணும் பெண்ணும் சரிசமமாக சண்டையிடும் காட்சி, இன்றுவரை இப்படியெல்லாம் நடக்க வாய்ப்புண்டா, நிகழ்ந்திருக்கிறதா என்று பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஒன்று.

`லஸ்ட் காஷன்' பெயரே ஒரு நிமிடம் யோசிக்க வைக்கிறது.1940-களில் சீனாவில் நடந்த பொம்மை அரசாங்கத்தைக் கவிழ்க்க ஒரு மாணவர் குழு முடிவெடுக்கிறது. அதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் முக்கிய ஆயுதம், பெண். சர்வ அகிலத்தையும் அடக்கிய பெண்ணால் சாதாரண ஒரு ராஜாங்க அதிகாரியைக் கவிழ்க்க முடியாதா?! பெண்ணுக்கும் அந்த அதிகாரிக்குமான உணர்வு, உறவு அனைத்தும் பகிரப்படுகிறது. ஆண், பெண் உறவுகளுக்கிடையேயான சில வலிமையான 18+ காட்சிகளெல்லாம் ரொம்ப வெளிப்படையாகக் காட்சிப்படுத்தியிருப்பார், இயக்குநர். அவர்களுக்கிடையேயான அந்த நிபந்தனை உறவு யாரை யார் வழிக்குக் கொண்டு வந்தது, உறவுகளின் விளைவு என்ன எனச் சொன்ன, ஆங் லீயின் தனித்துவமான படைப்பு. 

ஆங் லீ தொட்ட சர்ச்சையான படங்கள் `வெட்டிங் பாங்க்விட்', `ப்ரோக்பேக் மவுன்டைன்'. இரண்டும் ஆண்களுக்குள்ளான தன் பாலின ஈர்ப்பை (Gay) வெளிப்படுத்தியது. தன் பாலால் ஈர்க்கப்படும் ஆண்கள், இந்தச் சமூகச் சூழலில் தன்னிலையை எப்படி வெளிப்படுத்துவது, சூழல் எவ்வாறு அவர்கள் வாழ்க்கையை மாற்றுகிறது, அந்தச் சூழ்நிலையிலிருந்து அவர்கள் எப்படி மீள்வது என்பதைப் பேசும் படங்கள் இவை. `இரண்டு படங்களிலும் தன் பால் ஈர்ப்பை மையப்படுத்த என்ன காரணம், நீங்கள் தன்பால் ஈர்ப்பாளரா?' என்று ஆங் லீயிடம் கேட்கப்பட்டுள்ளது. `நான் தன்பால் ஈர்ப்பாளனாக இருக்க அவசியம் இல்லை. அவர்களின் உணர்வுகளை மதிக்கக்கூடியவனாக, கற்கக்கூடியனாக இருப்பது போதுமானது' என்றார். 

மனிதர்களுக்குள் இருக்கும் பலவித உணர்வுகளை அறிவியல் ரீதியாக வெளிக்கொண்டுவர முயற்சி செய்தால் எப்படியிருக்கும்?! அப்படி யாரையாவது உருவாக்கினால், அதன் விளைவுகள் என்னவென்று நம் மார்வெல் நாயகர்களின் ஒருவரான `ஹல்க்'கையும் இவர் விட்டு வைக்கவில்லை. நாம் ஒவ்வொருவருக்குள்ளும் ஹல்க் இருக்கிறான். அவன் எங்கே எவ்வாறு வெளிப்படுகிறான் என்பது, நாம் நம்மை உணர்வதில்தான் உள்ளது என்று கூறியுள்ளார்.

ஆங் லீ யின் மாஸ்டர் பீஸ் `லைஃப் ஆஃப் பை’. உலக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த படம் என்றாலும், தமிழ் ரசிகர்கள் இன்னும் நெருக்கமாக உணரக்கூடிய படம். இம்ரான் கான், தபு என நமக்குப் பழக்கப்பட்ட நடிகர்கள், பாண்டிச்சேரி, மூணாறு, மதுரை என நம்மூரில் எடுத்த சினிமா, பாம்பே ஜெயஸ்ரீ பாடிய பாடல்... இவையெல்லாம்தாம் காரணம். கடவுள் என்பவர் யார், கடவுளை எவ்வாறு உணரலாம், அறிவியலின் நவீன உலகம் ஆன்மிக நம்பிக்கைகளை எவ்வாறு பார்க்கிறது, அதிலிருந்து தன் நிலையை தன் கடவுளை இவ்வுலகுக்குச் சிறு படகில் துணையிருக்கும் ஒற்றைப் புலியின் துணையோடு நமக்கு விளக்குகிறான், பை. அவன் பேசாத ஒவ்வொரு உணர்வுகளும், நம்பிக்கைகளும் பக்கம் பக்கமாகத் தத்துவங்கள் போதித்தாலும் புகட்ட முடியாத சமாதானங்கள். `ஒரே நேரத்தில் பல கடவுள்களை வணங்குகிறாய் என்றால், எந்தக் கடவுள் மீதும் உனக்கு நம்பிக்கை இல்லையென்றுதானே அர்த்தம்?', `உன் உள்ளுணர்வைத்தான் அதன் (புலி) கண்களில் நீ பார்க்கிறாய்!' என்று நடைமுறை எதார்த்தங்களைப் பேசியிருப்பார், இயக்குநர். அதையெல்லாம் தாண்டி பையின் நம்பிக்கை அவனை வெற்றிபெற வைக்கிறது. இல்லை வெற்றிபெற்றதைத் தன் நம்பிக்கையாகப் பார்க்கிறானா? என ஆன்மிகம் சார்ந்த ஆயிரம் குழப்பங்களுக்கு விடையளிக்கிறது பையின் வாழ்க்கை. இப்படம் இவருக்கு இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் பிறந்து மேற்கத்திய ஹாலிவுட்டில் முக்கியமான இயக்குநராக உள்ளார், ஆங் லீ. காரணம், `எதையும் பிறரிடத்தில் பேசுவதன் மூலமே உள்ளது. நாம் அவர்களுக்கு வெளிப்படுத்தும் தன்மையைப் பொறுத்து அவர்கள் பலவற்றை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர். அதன் அடிப்படையிலேயே கிழக்கத்திய கலாசார உணர்வுகளையும் என்னால், மேற்கத்திய சினிமாவோடு தொடர்புப்படுத்த முடிகிறது.' என்கிறார். அதில், அவர் வெற்றியும் பெற்றுள்ளார். `ப்ரோக்பேக் மவுன்டைன்' படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார். இயக்குநருக்கான ஆஸ்கர் பெற்ற முதல் ஆசியர், ஆங் லீதான். பெரும்பாலான படங்கள் நாவல், இலக்கியக்கியங்களின் தழுவலாகவே இயக்கியுள்ளார். மிகச் சொற்பமே இவர் எழுதியுள்ளார். `பிறர் கதையில் உங்களால் எப்படி இவ்வளவு பொருந்திப்போக முடிகிறது?' எனப் பலரும் ஆச்சர்யப்பட்டுள்ளனர். `அனைத்தும், பிறரைக் கற்பதிலும் புரிந்துகொள்வதிலுமே உள்ளது!' என மெல்லிய சிரிப்போடு கடந்து செல்கிறான், இந்தக் கலைஞன்.

ஆங் லீ சொல்வது இதுதான்... மனிதம் உணர்வோம். பிறந்தநாள் வாழ்த்துகள் ஆங் லீ!