Published:Updated:

``சின்மயி... இந்தக் கேள்விக்கு தெளிவான பதில் சொல்லுங்க!" - மகராஜன்

``சின்மயி... இந்தக் கேள்விக்கு தெளிவான பதில் சொல்லுங்க!" - மகராஜன்
``சின்மயி... இந்தக் கேள்விக்கு தெளிவான பதில் சொல்லுங்க!" - மகராஜன்

சின்மயி மீது அவதூறு வழக்கு தொடுக்க உள்ளதாகச் சொல்கிறார் இசை நிகழ்ச்சி அமைப்பாளர் மகராஜன்

``தாத்தா மகராஜன், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி. `தமிழ்நாடு சட்ட மொழிபெயர்ப்பு ஆணைய'த்தின் தலைவராகவும் இருந்தார். அப்போ, கவிஞர் வைரமுத்து தாத்தாகிட்ட சில ஆண்டுகள் வேலை பார்த்தார். அதாவது, அவர் பாடலாசிரியர் ஆகறதுக்கு முன்பு. இந்தத் தொடர்புல வைரமுத்து எங்களுக்குக் குடும்ப நண்பர். ஒரு பிசினஸா இசைக் கச்சேரிகள் நடத்திட்டு வர்ற கம்பெனியை நிர்வகிச்சுக்கிட்டு வர்றேன். `வைரமுத்து சார்பா மகராஜன் (என் பெயரும் மகராஜனே) பேசுவார். அவர் கன்வின்ஸ் பண்றதுல கில்லாடி'னு என்னைக் குறிப்பிட்டு, லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக்கிட்டு இருக்கிற டிவியில சொல்லியிருக்கார், சின்மயி அம்மா. தப்பான அர்த்தம் தர்ற அந்த வார்த்தைக்காகவே சின்மயி மீதும், அவர் அம்மா மீதும் வழக்கு தொடர முடிவு செய்திருக்கேன்!. சின்மயி... இந்தக் கேள்விக்கு தெளிவான பதில் சொல்லுங்க . நான் எப்போ அப்படி பேசினேன்'' என்கிறார், இசை நிகழ்ச்சி அமைப்பாளர் மகராஜன்.  

வைரமுத்துவுக்கும் சின்மயிக்கும் முதன் முதலாக மோதல் வந்த சென்னை உயர்நீதிமன்ற 150-வது ஆண்டு விழா நிகழ்ச்சியின் இசைக் கச்சேரியை ஒருங்கிணைத்தவர் இவர். வைரமுத்து - சின்மயி விவகாரம் தொடர்பாக இவரிடம் பேசினோம்.

``உயர்நீதிமன்ற 150 ஆண்டு விழாவுக்கு சின்மயி வர்றதா சம்மதிச்சுட்டு கடைசி நேரத்துல வராமப் போனதும், அதுக்கு வைரமுத்து அவரைக் கண்டிச்சதும், அந்த நாள்ல இருந்து சின்மயிகூட பேசறதையே விட்டுட்டார் என்பதும் எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். நான் அதைப் பத்திப் பேச வரலை. இந்த விவகாரத்துல என்னை எப்படி அவதூறாகப் பேசலாம்கிறதுதான் என்னோட கேள்வி. 2008-ல்தான் கம்பெனியைத் தொடங்கி இந்த ஃபீல்டுக்குள்ளேயே வர்றேன். ஆனா 2004- ம் வருடம் சுவிட்சர்லாந்துல நடந்த விவகாரத்துல என் பெயரை இழுத்து விடுறாங்க. அந்தச் சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பே இல்லை.

உண்மையைச் சொல்லணும்னா, பி.சுசிலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், சித்ரா. இப்படிப் பல சீனியர் பாடகர்களையெல்லாம் அழைத்து வந்து நிகழ்ச்சிகளைப் பண்ணியிருக்கிற எங்க கம்பெனி, இதுவரை ஒரு ஷோவுக்குக்கூட சின்மயியைக் கூப்பிட்டதே இல்லை. காரணம், `இந்த ஆர்கெஸ்ட்ரா வேண்டாம்', `அந்தப் பாட்டைப் பாடமாட்டேன்' என்ற ரீதியில் ஏகப்பட்ட கண்டிஷனைப் போடுவாங்க சின்மயி. சென்னை உயர்நீதிமன்ற நிகழ்ச்சியையே உதாரணமா சொல்லலாம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் கலந்துக்கிறதால, அந்த நிகழ்ச்சியில இந்திப் பாடல்கள் பாடலாம்னு முடிவெடுத்தாங்க. லதா மங்கேஷ்கர் பாடிய ஒரு பாடலை சின்மயியைப் பாடச் சொன்னோம். `தமிழ்நாட்டுல எதுக்கு இந்திப் பாட்டு பாடணும்'னு சொன்னாங்க. பிறகு, `எதுக்கு லதா மங்கேஷகர் பாட்டைப் பாடணும்?'னும் கேட்டாங்க. நீதிமன்றம் ஒரு உயர்வான அமைப்பு, அதனால அதை மனசுல வெச்சாவது சம்மதிச்சுப் பாடிக்கொடுங்கனு கேட்டோம். `நீதிமன்றம் அது இதுன்னு எல்லாம் என்கிட்ட பேசாதீங்க. என் முடிவு இதுதான்'னு சொல்லி, நாங்க கன்வின்ஸ் பண்ணதைக் காதுலேயே வாங்கிக்கலை. இந்த மாதிரி குடைச்சல் தர்றவங்களை எப்படிப் பாடக் கூப்பிடுறது?

இப்படி இருக்க, `வைரமுத்துவுக்காக கன்வின்ஸ் பண்ணிப் பேசுவார்'னு சொன்னா என்ன அர்த்தம்?! டிவியில என் பெயரைச் சொன்ன நாள்ல இருந்து எனக்குத் தூக்கமே இல்லை. இப்போவரைக்கும் என் குடும்பத்துல எல்லோருக்குமே மன உளைச்சல். இதுக்கு சின்மயி, அவங்க அம்மா ரெண்டுபேருமே பதில் சொல்லணும். அவங்க பேசின ஆதாரங்களைத் திரட்டி வழக்கறிஞர்கிட்ட பேசியிருக்கேன். ஒண்ணு, இப்படிப் பேசுனதுக்கு அவங்க மன்னிப்புக் கேட்கணும். இல்லையா, அவங்கமேல அவதூறு வழக்கு தொடுக்கப்போறேன். நீதிமன்றத்துல வந்து பதில் சொல்லட்டும்'' என்கிறார் இவர்.

சின்மயி அம்மாவிடம் இது குறித்து கேட்டபோது `தொடர்ச்சியான இந்த `மீ டு' பேச்சுகளால ஏற்கெனவே வெறுப்புல இருக்கோம். ஆமா ஹைகோர்ட் நிகழ்ச்சியில பாடலை... ஆனா வைரமுத்துகிட்ட போய் ஒரு கேள்வி கேட்காத மீடியாகிட்ட, நான் எதுக்கு இந்தக் கேள்விக்கு பதில் சொல்லணும்?' எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்கள்.

அடுத்த கட்டுரைக்கு