Published:Updated:

``லண்டனுக்கு அழகா வெச்சீங்களே, இங்கிலாந்துக்கு வைக்கிறப்போ ஏன் இத்தனை சொதப்பல்?’’ - 'Namaste England' படம் எப்படி?

``லண்டனுக்கு அழகா வெச்சீங்களே, இங்கிலாந்துக்கு வைக்கிறப்போ ஏன் இத்தனை சொதப்பல்?’’ - 'Namaste England' படம் எப்படி?
``லண்டனுக்கு அழகா வெச்சீங்களே, இங்கிலாந்துக்கு வைக்கிறப்போ ஏன் இத்தனை சொதப்பல்?’’ - 'Namaste England' படம் எப்படி?

``லண்டனுக்கு அழகா வெச்சீங்களே, இங்கிலாந்துக்கு வைக்கிறப்போ ஏன் இத்தனை சொதப்பல்?’’ - 'Namaste England' படம் எப்படி?

பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த பரம் (அர்ஜுன் கபூர்), ஜஸ்மீத் (பரினீத்தி சோப்ரா) இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். ஜஸ்மீத் திருமணத்துக்கு முன்பே தான் லண்டனுக்குச் சென்று வேலை செய்ய விரும்புவதாகவும், அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே திருமணம் செய்துகொள்வதாகவும் கூறுகிறாள். ஒருகட்டத்தில் லண்டனுக்குச் செல்லும் இவர்கள், ஒரு பிரச்னையில் சிக்கிக்கொள்கிறார்கள். அது அவர்களை எமோஷனலான பல முடிவுகளை எடுக்கச் செய்கிறது. அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான் `நமஸ்தே இங்கிலாந்து' படத்தின் கதை. #NamasteEngland

எப்போதுமே நக்கல் நய்யாண்டி செய்துகொண்டு, காதலியிடம் ஒரண்டை இழுத்துக்கொண்டு கிராமத்தில் வலம் வரும் `வருத்தப்படாத வாலிபர் சங்கம்' போஸ் பாண்டியை நினைவுபடுத்துகிறார், பஞ்சாபி பரம். குறிப்பாக, எருமை மாட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சியில்! கலர்ஃபுல் ஃபாரின் கனவுகளோடு துடிப்பாக இருக்கும் பஞ்சாபிப் பெண்ணாக, ஜஸ்மீத். திருமணமாகி கிட்டத்தட்ட ஒரு வருடம், இவர்களது கலாசார குடும்பத்தைத் தாண்டி எந்த முடிவையும் சுயமாக இவர்களால் எடுக்க முடியாத சூழ்நிலை. அப்போது, லண்டனில் வசிக்கும் தனது பள்ளித் தோழியை திடீரெனக் காணும் ஜஸ்மீத்துக்கு, அவள் மனம் விரும்பும்படியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைகிறது. லண்டனில் வேலை கிடைக்கிறது; வீட்டிலும் அனுமதி கிடைக்கிறது. மேலும், தன் கணவன் பரமை விட்டுச் செல்லும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. இருந்தும் அதைப் பொறுத்துக்கொண்டு கண்ணீரும் கம்பலையுமாகத் தன் மனைவியை வழியனுப்பி வைக்கிறான் பரம். அப்போது, ஜஸ்மீத் எந்த வழியை தேர்ந்தெடுத்து லண்டன் செல்கிறாள் என்பதுதான் சற்றே தலை சுற்றவைக்கிறது. வீசா வாங்க காலங்காலமாக இந்த ஐடியாவைத் தவிர வேற இல்லவே இல்லையா பாஸ்? ஓர் அரைகுறை வேலைக்காக இத்தனையும் செய்ய வேண்டுமா என்றால், `அது அவசியமில்லை' என்றுதான் தோன்றுகிறது. குறைந்தபட்சம் அந்தக் காட்சியில் ஜஸ்மீத் தரப்பு செயல்களுக்கு இயக்குநர் விபுல் அம்ருத்லால் ஷா கொஞ்சமாவது காரணம் கூறியிருக்கலாம். 

பொதுவாக படங்களில் ஃபாரின் மாப்பிள்ளை கதாபாத்திரங்களைப் பாவம்போல் காட்டியிருந்தாலும், இதில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடித்தும் துவைத்திருக்கிறார்கள். கல்யாணம் என்பதை இவர்கள் சாதாரணமாகக் கையாண்டிருப்பினும், இதற்காக குடும்பத்தில் உள்ள மற்றவர்களை ஏமாற்றுவது என்பது அந்த கேரக்டர் மீது பார்ப்பவர்களுக்கு ஒருவித வெறுப்பைத் தருகிறது. ஜஸ்மீத்தின் வேடிக்கை செயல்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் பரமின் ஆக்ஷன் காட்சிகள். `லண்டன் செல்வதற்கு எதற்கு எல்லையைத் திருட்டுத்தனமா தாண்டணும், அதுல குண்டடி படாம தப்பிச்சு வேற போறார், ஹீரோ என்ன தீவிரவாதியா?' என்று அருகிலிருப்பவர்கள் முணுமுணுப்பதை தியேட்டரில் கேட்க முடிந்தது.  

சரி, லண்டனிலாவது இவர்களது வாழ்க்கை யதார்த்தமாக இருக்கும் என்றால், `இப்படியெல்லாம் தப்பா நினைக்காதீங்க. நாங்க எப்போவுமே இப்படித்தான்' என ஆறாவது கியர் போட்டு தூக்குகிறார் இயக்குநர். இவர்களின் செயல்களால் நல்ல காமெடிகூட செயற்கையாகத் தெரிகிறது. படத்தில் வரும் அலிஷா (அலங்க்ரித்தா சஹாய்), சாம் (ஆதித்யா சீல்) ஆகியோரின் கதாபாத்திரங்கள் தூய்மையாக வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, தன் வாழ்க்கையை அடமானம் வைத்தாவது உடன் இருப்பவர்களைக் காப்பாற்றும் மீட்பர்கள்போல! படம் ஆரம்பித்து 10 நிமிடத்துக்குள் கதை மொத்தத்தையும் கணித்துவிடும் அளவுக்கு தொய்வான திரைக்கதை மற்றும் பலவீனமான கேரக்டர்கள். இயக்குநர் விபுன் அம்ருத்லால் ஷாவின் முந்தைய படங்கள் என்று பார்த்தால் `நமஸ்தே லண்டன்', `லண்டன் ட்ரீம்ஸ்', `ஆக்ஷன் ரீப்ளே' போன்ற ரோம்-காம் படங்கள்தான். இப்படத்தில் ஏனோ திரைக்கதை மற்றும் பாத்திரப் படைப்பில் முற்றிலுமாகத் தவறவிட்டிருக்கிறார். சற்று ஈர்க்கும்படியான பாடல்கள் அவ்வப்போது இளைப்பாறலைத் தருவதுதான், படத்திலிருக்கும் ஒரே பாசிட்டிவ் விஷயம். காஸ்டியூம் தேர்வுகள் ஃப்ரேம்களை கலர்ஃபுல்லாக்கியிருக்கிறது. ஒரு 10 வருடங்களுக்கு முன்பு இது போன்ற கதை பாலிவுட்டில் வெளிவந்திருந்தால் ஒருவேளை ஹிட் ஆகியிருக்கும்!  

லண்டனுக்கு அவ்வளவு அழகாக 'நமஸ்தே' வைத்த அம்ருத்லால் ஷா, அதே நமஸ்தேவை ஒட்டுமொத்த இங்கிலாந்துக்கும் வைக்கையில் தாறுமாறாகச் சொதப்பிவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு