Published:Updated:

சோகமோ... தோல்வியோ... பீல் பண்ணாதீங்க; இந்தப் பாடல்களைக் கேளுங்க பாஸ்!

சோகமோ... தோல்வியோ... பீல் பண்ணாதீங்க; இந்தப் பாடல்களைக் கேளுங்க பாஸ்!
சோகமோ... தோல்வியோ... பீல் பண்ணாதீங்க; இந்தப் பாடல்களைக் கேளுங்க பாஸ்!

எம்.ஜி.ஆரிலிருந்து விஜய் வரை, தனது படங்களின் அறிமுகப் பாடலில் மக்களுக்கு நற்கருத்துகளையும் தன்னம்பிக்கையையும் போதிப்பது போல வரிகளை அமைத்து வருகின்றனர். ஆனால், அந்த முதல் பாடல் மற்றும் கதாநாயகனை தூக்கிப் பிடிக்கும் பாடல்கள் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, கதைக்குத் தேவையான இடங்களில் தன்னம்பிக்கை தரும் விதத்தில் அமைக்கப்படும் பாடல்களை தமிழ் சினிமா நிறையவே தந்திருக்கிறது. சோகமோ... தோல்வியோ... பீல் பண்ணாம இருக்க, ஓர் உத்வேகம் பிறக்க இந்தப் பாடல்களைக் கேட்கலாம்.

`வெற்றிக் கொடி கட்டு' - `படையப்பா':

`வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
வெற்றிக் கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா...'

தனது சித்தப்பாவுக்குச் சொத்துகள் அனைத்தையும் எழுதிக் கொடுத்துவிட்டு தந்தை இறந்துவிட, அதைத் தொடர்ந்து ஏழ்மைக்குச் சென்றுவிடும் ஆறுபடையப்பன் எப்படித் தனது கிரானைட் மலைகளைக் கொண்டு உழைப்பால் உயர்கிறான் என்பதை `வெற்றிக் கொடி கட்டு' பாடலில் சொல்லியிருப்பார் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார். ரஜினியின் மாஸை சிட்டியிலிருந்து பட்டிதொட்டி வரை கொண்டு சேர்த்த `படையப்பா'வில் இடம்பெற்ற இப்பாடலை வைரமுத்து எழுத, ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

`வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்' - `அண்ணாமலை':

`மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்...’

ரஜினியின் ஆதர்சமான `ஒரே பாடலில் பணக்காரன்' ஆகும் பார்முலாவைக் கொண்ட பாடல். தனது நண்பன் அஷோக் தனது வீட்டை இடித்து துரோகம் செய்துவிட, அவனுக்கு எதிராகச் சவால் விட்டு அவனை வெல்ல அயராது உழைத்து முன்னுக்கு வருகிறார் அண்ணாமலை. அப்படி, அவர் முன்னுக்கு வரும்போது ஒலிப்பதுதான் இந்த `வெற்றி நிச்சயம் ' பாடல். தேவாவின் இசையில், வைரமுத்துவின் வரியில் `அண்ணாமலை' திரைப்படத்தில் இடம்பெற்றது இப்பாடல். 

`எதிர்த்து நில் எதிரியே இல்லை’ - `பிரியாணி’:

`உன்னிலே ரத்தம்
அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம்
அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை
நீ அப்பனுக்குப் பிள்ளை...'

தன் மீது விழுந்த கொலைப்பழியை போக்குவதற்காக கார்த்தி ஓடும் ஓட்டமே இந்த 'எதிர்த்து நில்' பாடல்.  கங்கை அமரனின் வரிகளில் ஜி. வி. பிரகாஷ், இமான், விஜய் ஆண்டனி, தமன் பாட தனது நூறாவது படமான `பிரியாணி' யில் அழகான தன்னம்பிக்கை பாடலைப் பதிவு செய்தார் யுவன்ஷங்கர் ராஜா. 

`நிமிர்ந்து நில் துணிந்து செல்’ - `சரோஜா’:

`காலம் ஒருநாளும் 
உனக்காக மாறாது
காலத்தை நீ மாற்றிக்
கரையேறி முன்னேறு...’

கடத்தல்காரர் சம்பத் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் சரோஜாவும் சரண் அண்ட் கோவும் தங்களது சாமர்த்தியத்தால் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதே இந்த `நிமிர்ந்து நில்' பாடல். கங்கை அமரனின் வரிகளில் யுவனின் இசையில் உருவான இப்பாடல் `சரோஜா' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. 

`எதிர்நீச்சல் அடி’ - `எதிர்நீச்சல்’:

`நாளை என்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே
என்றால் கூட போராடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே...’

சென்னையில் நடக்கும் மாரத்தானில் கலந்துகொண்டு வெற்றிபெறுவதற்காக வள்ளியின் மேற்பார்வையில் பயிற்சி எடுத்துக்கொள்கிறார் ஹரிஷ். அந்தப் பயிற்சிகளின்போதுதான் இந்த `எதிர்நீச்சல் அடி' பாடல் வரும். வாலிபக் கவிஞர் வாலி, ஹிப்ஹாப் ஆதி, ஹிர்தேஷ் சிங் ஆகியோரின் வரிகளில் அனிருத் இசையில் உருவான இப்பாடல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான `எதிர்நீச்சல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. 

`வேலையில்லா பட்டதாரி’ - `வேலையில்லா பட்டதாரி’:

`இன்று முதல் காலர்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்
வேகம் எல்லை மீறட்டும்
முன்னோக்கி நீ ஓடடா...’

பொறியாளர் ரகுவரனின் மேற்பார்வையில் உருவாகும் கட்டடங்களின் கட்டுமான பணிகளுக்குத் தனது செல்வாக்கு மூலம் ஆட்களை வர விடாமல் செய்கிறார் தொழிலதிபர் சுப்ரமணியத்தின் மகன் அருண். அதையெல்லாம் மீறி ரகுவரன் எப்படி இந்தக் கட்டுமான பணியை முடிக்கிறார் என்பதே இந்த 'வேலையில்லா பட்டதாரி' பாடல். அனிருத்தின் இசையில் `போயட்டு' தனுஷ் நடிப்பில் வெளிவந்த `வேலையில்லா பட்டதாரி'யில் இடம்பெற்றது இப்பாடல். 

`நட்சத்திர ஜன்னலில் வானம்’ - `சூர்யவம்சம்’ 

`மேகத்தில் வீடு கட்டி வாழலாம் வாழலாம்
மின்னலில் கூரை பின்னிப் போடலாமா
ஓங்கும் உந்தன் கைகளால்
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு...’

தனது குடும்பங்களின் எதிர்ப்பை மீறி சின்ராசும் நந்தினியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். வறுமையில் வாடும் அவர்கள் மெள்ள மெள்ள தங்களது உழைப்பால் எப்படி உயர்கிறார்கள் என்பதை மிகவும் இன்ஸ்ப்ரேஷனாக 90'ஸ் கிட்ஸ்க்குச் சொல்லியது இந்த நட்சத்திர ஜன்னலில் பாடல். கவிஞர் மு. மேத்தாவின் வரிகளில் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் உருவான இப்பாடல் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த `சூர்யவம்சம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. 

`ஒரு துளி மழையினில்’ - `ஈட்டி’:

`தடுக்கி நீ விழு
திரும்ப நீ எழு
அதிலொன்றும் பிழை
இங்கு கிடையாது...’

ஓட்டப்பந்தய வீரரான புகழ், கொல்கத்தாவில் நடக்கும் ஓட்டப்பந்தய போட்டிக்காக தனது பயிற்சியாளர் தேவராஜ் மேற்பார்வையில் நண்பர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடும் போதுதான் இந்த `ஒரு துளி மழையினில்’ பாடல் வரும். மறைந்த கவிஞர் அண்ணாமலையின் வரிகளில், ஜீ. வி. பிரகாஷ் இசையில் உருவான இப்பாடல் அதர்வா நடித்த `ஈட்டி' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. 

`கடவுள் தந்த அழகிய வாழ்வு’ - `மாயாவி’:

`எதை நாம் இங்குக் கொண்டு வந்தோம் 
எதை நாம் அங்குக் கொண்டு செல்வோம்
அழகே பூமியின்
வாழ்க்கையே நம்பி வாழ்ந்து விடைபெறுவோம்...’

நடிகை ஜோதிகாவால் 3 மாதங்கள் ஜெயில் தண்டனைக்கு ஆளான அபேஸ் பாலையா, அந்த வெறுப்பில் ஜோதிகாவைக் கடத்திவிடுகிறார். கடத்தப்பட்டு வீட்டில் இருந்தாலும் பாலையாவும் ஜோதிகாவும் நட்பாகப் பழகுகின்றனர். ஜோதிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, மாற்றுத்திறனாளி பெண் `கடவுள் தந்த அழகிய வாழ்வு' பாடலைப் பாடுகிறார். பாடலைக் கேட்டு ஜோதிகா நெகிழ்ந்து போகிறார். கலைப்புலி தாணுவுடன் இணைந்து முதல் முறையாக பாலா தயாரித்த `மாயாவி' திரைப்படத்தில்தான் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. பழநிபாரதியின் வரிகளுக்குத் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க அப்போது காதலர்களாக இருந்த சூர்யா-ஜோதிகாவின் நடிப்பில் வெளியானது மாயாவி திரைப்படம். 

`ஒவ்வொரு பூக்களுமே’ - `ஆட்டோகிராஃப்’:

`உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்...’

கல்லூரி வாழ்வில் தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியினால் மனமுடைந்த செந்தில், வாழ்க்கையின் மீது நாட்டமில்லாமல் நாள்கள் கழித்துக் கொண்டிருக்கிறார். அதன்பிறகு, ஓர் இன்னிசை கச்சேரியில் திவ்யாவின் `ஒவ்வொரு பூக்களுமே' பாடலை கேட்க, அந்தப் பாடலும் அதன்பிறகான திவ்யாவின் நட்பும் அவரது வாழ்க்கையேயே நல்லவிதமாக மாற்றிவிடுகிறது. தன்னம்பிக்கையோடு வாழ ஆரம்பிக்கிறார் செந்தில். 2004-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமான `ஆட்டோகிராப்' தந்த அற்புதம் இப்பாடல். கவிஞர் பா. விஜய்யின் வரிகளில் சித்ரா அவர்களின் இன்னிசை குரலில் உருவான இப்பாடல் எப்பொழுது கேட்டாலும் மனதில் தன்னம்பிக்கையை விதைக்கத் தவறுவதில்லை. 

`சந்தோஷம் சந்தோஷம்’ - `யூத்’:

`கண்ணீர்த் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்,
காலுக்குச் செருப்பு எப்படி வந்தது? முள்ளுக்கு நன்றி சொல்...’

ஒரு சமைய‌ல்காரரை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று அருணா ஓடிவிட, பின்னாளில் தனது காதலனாலேயே ஏமாற்றப்படுகிறாள். இதனால், மனமுடைந்து போன அருணா தற்கொலைக்கு முயற்சி செய்ய, அவளை மீட்டு வந்து `சந்தோஷம் சந்தோஷம்' பாடல் மூலம் தன்னம்பிக்கை விதைக்கிறார் சிவா. வைரமுத்துவின் தன்னம்பிக்கை வரிகளாலும் மணிசர்மாவின் மெல்லிய இசைகளாலும் உருவான இப்பாடல் விஜய் நடித்த `யூத்' திரைப்படத்தில் இடம்பெற்றது.

மேற்குறிப்பிட்ட பாடல்கள் மட்டுமல்லாது, `ஒரு சூறாவளி கிளம்பியதே', `சிங்கம் ஒன்று புறப்பட்டதே', `அர்ஜூனரு வில்லு' , `வாழ்க்கை ஒரு போர்க்களம்', `முன் செல்லடா' , `உன்னால் முடியும் தம்பி தம்பி' , `அச்சம் அச்சம் இல்லை', `எழு வேலைக்காரா இன்றே' எனப் பல பாடல்கள் நமக்கு அன்றாடம் தன்னம்பிக்கையை விதைத்துச் செல்கின்றன.

இதுபோல உங்களுக்குத் தெரிந்த தன்னம்பிக்கை பாடல்களை கமென்ட் செய்யுங்கள் ஃப்ரெண்ட்ஸ்.