Published:Updated:

``சினிமால விஜய் சேதுபதி நினைச்சது ஒண்ணு... நடந்தது ஒண்ணு... பாவம்!" - பக்ஸ்

``சினிமால விஜய் சேதுபதி நினைச்சது ஒண்ணு... நடந்தது ஒண்ணு... பாவம்!" - பக்ஸ்
News
``சினிமால விஜய் சேதுபதி நினைச்சது ஒண்ணு... நடந்தது ஒண்ணு... பாவம்!" - பக்ஸ்

நடிகர் பகவதி பெருமாள் பேட்டி. உதவி இயக்குநராக, நடிகராகப் பயணித்த அனுபவம், நடிகர் விஜய் சேதுபதியுடனான நட்பு எனப் பல விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

``என் சொந்த ஊர் நாகர்கோவில். எல்லோரையும் போல இன்ஜினீயரிங் படிச்ச பையன். சினிமா இயக்குநர் ஆகணும்ங்கிற ஆசையில, புரொடக்‌ஷன் டெக்னாலஜி (production technology) படிச்சேன். உதவி இயக்குநர் ஆகணும்னு சுத்துன காலத்துல என் நண்பன் ஒருத்தன் மூலமா, `96' இயக்குநர் பிரேம்குமார் நட்பு கிடைச்சது. அப்போ, பிரேம் காலேஜ் ஸ்டூடன்ட். `சினிமாவுக்கெல்லாம் வராத.. இது ரொம்ப கஷ்டமான ஃபீல்ட்'னு அட்வைஸ் பண்ணான்." - ஃபிளாஷ்பேக் ஸ்டோரியுடன் உரையாடலைத் தொடங்குகிறார், நடிகர் பகவதி பெருமாள் என்கிற பக்ஸ். 

``சினிமாமேல எனக்குப் பெரும் காதல்னு பிரேம் புரிஞ்சுக்கிட்டார். பல இயக்குநர்களை நான் சந்திக்கிறதுக்கு எனக்கு உதவி பண்ணினார். பாலுமகேந்திரா சார் முதல் பாலா சார் வரை... எல்லா இயக்குநர்களையும் பார்த்தேன். எல்லோருமே சொல்லி வெச்ச மாதிரி `அடுத்த படத்துல பார்ப்போம்'னு அனுப்பிட்டாங்க. அவங்கமேல எந்தத் தப்பும் இல்லை. ஏன்னா, நான் போன நேரத்துல எல்லோருமே ஒரு படத்தோட கமிட்மென்ட்ல ஓடிக்கிட்டு இருந்தாங்க. பாலுமகேந்திரா சார் நிறைய புத்தங்களைப் படிக்கச் சொன்னார். ஏன் அவர் அந்தப் புத்தகங்களையெல்லாம் படிக்கச் சொன்னார்னு இப்போதான் புரியுது. 

இப்படிப்பட்ட சூழலில், `மக்கள் என் பக்கம்', `சாவி' உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் ரகுநாத் சார் கன்னடத்தில் ஒரு படம் பண்றதா பிரேம் சொன்னான். அவரைப் பார்க்கப் போனேன். அவரும் வழக்கம்போல, `அடுத்த படத்துல பார்க்கலாம் தம்பி. இந்தப் படத்தோட பட்ஜெட் ரொம்பக் குறைவு. இந்த பட்ஜெட்ல எனக்கொரு உதவி இயக்குநரை வெச்சுக்கிட்டு அவருக்குச் சம்பளம் கொடுக்க என்னால முடியாது'னு சொல்லிட்டார். `சம்பளம் இல்லைனாலும் பரவாயில்ல சார். வேலை கத்துக்கிறேன்'னு சொன்னேன். சரினு உதவி இயக்குநரா சேர்த்துக்கிட்டார். ஆனா, என் வேலையைப் பார்த்துட்டு ரெண்டு மாசத்துக்குப் பிறகு குறைந்த சம்பளமா எனக்கொரு தொகையைக் கொடுத்தார். கார்த்திக் ரகுநாத் சாரோட மகள் சுபஶ்ரீதான், `96' படத்துக்கு காஸ்ட்டியூம் டிசைனர். பிரேம், சுபஶ்ரீ இவங்கெல்லாம் காலேஜ் ஃபிரெண்ட்ஸ். இப்படிச் சில வருடங்கள் கார்த்திக் ரகுநாத் சார்கிட்ட வேலை பார்த்துட்டு, கெளதம் மேனன் சாருடைய `காக்க காக்க' படத்துல வொர்க் பண்ணேன். அவர்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்த கடைக்குட்டி நான்தான். சுத்தியிருந்த சீனியர்ஸ் மகிழ் திருமேனி, மணிகண்டன் எல்லோருமே என்னை நல்லாப் பார்த்துக்குவாங்க. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கெளதம் சாரும், எங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுப்பார். காலையில 8 மணிக்கெல்லாம் ஆபீஸுக்கு வந்திடுவார். நாங்கெல்லாம் 10 மணிக்குத்தான் வருவோம், எதுவும் சொல்லமாட்டார். வேலையை முடிச்சா, எங்கே போனாலும் என்ன பண்ணாலும் எதுவும் சொல்லமாட்டார். அவர்கூட சில வருடங்கள் வேலை பார்த்த பிறகுதான், தனியா படம் பண்ணலாம்னு ஒரு ஸ்கிரிப்ட் எழுதினேன். அது பெரிய பட்ஜெட் கதை. பாலிவுட்ல பண்ணா பெஸ்ட்டா இருக்கும். `முதல் படமே பெரிய பட்ஜெட் படமா அமையுறது கஷ்டம், வேற ஸ்கிரிப்ட் பண்ணு'னு பிரேம் சொன்னான். அதுக்காக, எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி எழுதிய `மாயழகி' நாவலை திரைக்கதையா மாத்துற முயற்சியில இருந்தேன்.  

அப்போதான், `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பட வேலைகளைத் தொடங்கியிருந்தார், பாலாஜி தரணீதரன். பிரேம் வாழ்க்கையில நடந்த உண்மைச் சம்பவமாச்சே அது... `விஜய் சேதுபதி நடிச்சா நல்லா இருக்கும்'னு பிரேம்தான் சொன்னான். அப்போ, `வர்ணம்'ங்கிற படத்துல விஜய் சேதுபதி சின்ன ரோல் பண்ணியிருப்பார். அந்தப் படத்துக்கு பிரேம்தான் ஒளிப்பதிவாளர். பாலாஜி, விஜய் சேதுபதி போட்டோவைப் பார்த்துட்டு, `இந்தப் பையன் கொஞ்சம் வெயிட் போட்ருக்கான். பிரேம் மாதிரி இல்லை'னு தவிர்த்துட்டார். `ஒரு ஆடிஷன் பண்ணிப் பார்ப்போம்'னு பிரேம் சொல்ல, ஆடிஷனுக்கு வந்து, `என்னாச்சு' வசனத்தைப் பேசி நடிச்சுக் காட்டினார். நாங்க என்ன எதிர்பார்த்தோமோ, அதை அப்படியே விஜி செய்தார். `ரொம்ப நல்லா நடிக்குறீங்க. ஆனா, இந்த கேரக்டருக்கு உங்க உடம்பு செட்டாகாது. கொஞ்சம் வெயிட்டைக் குறைங்க'னு சொன்னார், பாலாஜி. வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டு, ஜிம்ல கொஞ்சம் வொர்க் அவுட் பண்ணி வெயிட்டைக் குறைச்சார், விஜி. ஷூட்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி 6 மாசம் வரை எங்களுக்கு பிராக்டீஸ்தான். அப்போ, தொடர்ந்து 23 நாளைக்கு விஜய் சேதுபதி `என்னாச்சு' வசனத்தை மட்டும் பேசிக் காட்டுவார். இதைத் தவிர வேற எந்த வசனத்தையும் அவருக்குக் கொடுக்கலை.  

24-வது நாள் ரூமுக்கு வெளியே நான் நின்னுக்கிட்டு இருந்தேன். சிரிச்சுக்கிட்டே வந்தார், விஜி. `என்ன ஓகே  சொல்லிட்டாரா'னு கேட்டேன். `ஆமா'னு சந்தோஷமா சொல்லிட்டுப் போனார். எனக்கு அந்த மொமென்ட் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்போ இருந்து விஜய் சேதுபதிகூட நான் டிராவல் பண்ணிக்கிட்டு இருக்கேன். படத்துல `என்னாச்சு' வசனம் மட்டும் 24 இடங்கள்ல வரும். விஜய் சேதுபதி படத்தைப் பத்தித் தெளிவாப் புரிஞ்சிக்கணும்னுதான் பாலாஜி அப்படி ஒரு பிராக்டீஸைக் கொடுத்தார். விஜய் சேதுபதியும் அதைப் புரிஞ்சுக்கிட்டு மெனக்கெட்டார். அதுதான், இன்னைக்கு அவரோட வளர்ச்சிக்கு முக்கியமான காரணம்னு நினைக்கிறேன். இப்படி ஒரு வளர்ச்சியை நான் மட்டுமல்ல, விஜய் சேதுபதியே எதிர்பார்க்கலை. ஏன்னா, அவர் ஹீரோ ஆகணும்னு என்னைக்கும் நினைச்சதில்லை. நல்ல துணை நடிகரா இருக்கணும்னுதான் நினைச்சார். சுருக்கமாச் சொல்லனும்னா அவர் நினைச்சது ஒண்ணு, இன்னைக்கு நடந்தது ஒண்ணு!

விஜய் சேதுபதி பேச்சுல ஒரு தெளிவிருக்கிறதா எல்லோரும் சொல்வாங்க. அவர் ஹீரோ ஆகிட்டதுனால அப்படிப் பேசலை. அவருடைய ஆரம்பகால வாழ்க்கையைப் பார்த்தவன் என்ற முறையில சொல்றேன்... விஜி எப்பவுமே அப்படித்தான். `மேற்குத் தொடர்ச்சி மலை' கதையை விஜி கேட்டப்போ, அவருக்கு கதையைப் பற்றிய புரிதல் இல்லை. ஆனா, படம் ஹிட் ஆனதுக்குப் பிறகு, `ஆடியன்ஸ்கிட்ட இருக்கிற புரிதல் என்கிட்ட இல்லை'னு ஒரு பேட்டியில சொல்றார். இப்படியெல்லாம் யாரும் சொல்லமாட்டாங்க. தன்னோட முட்டாள்தனத்தை ஒப்புக்கிறவர், விஜய் சேதுபதி. 

எப்போவுமே எங்களுடைய நண்பர்கள் படம் எடுத்தா, அந்தக் கதையைப் பற்றிச் சேர்ந்து விவாதிப்போம். `சீதக்காதி'க்கும் இப்படி ஒரு விவாதம் நடந்தது. இது பாலாஜியோட ரெண்டாவது படமா அமைய வேண்டியது. மூணாவது படமா மாறிடுச்சு. என் நண்பனோட படம்ங்கிறதால சொல்லலை... `சீதக்காதி' தமிழில் ஒரு மாஸ்டர் பீஸ் படமா இருக்கும்.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவைப் பார்த்து எங்க நண்பர்கள் கூட்டம் பிரமிக்கும். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, `ஆரண்ய காண்டம்' டிரெய்லர் ரிலீஸாகியிருந்தது. அந்த டிரெய்லரைப் பத்தி மட்டுமே நாங்க ஒரு வாரத்துக்குப் பேசிக்கிட்டிருந்தோம். அதுக்குப் பிறகு தியாகராஜன் சாருடைய நட்பு பாலாஜிக்குக் கிடைத்தது. அப்போ இருந்து நாங்களும் அவருடைய நட்புல இருக்கோம். என்னோட `cha' குறும்படத்தை தியாகராஜன் பார்த்துட்டு, `ரொம்ப நல்லாப் பண்ணியிருக்க. உன் நடிப்பு யுனிக்கா இருக்கு'னு பாராட்டினார். அப்புறம் திடீர்னு ஒருநாள், `சூப்பர் டீலக்ஸ்' படத்துல ஒரு கேரக்டர் பண்ணக் கூப்பிட்டார். `உங்க படத்துல ஒரு ஓரமா நான் வந்துட்டுப் போனாலே ஓகே சார்'னு சொன்னேன். இதுவும் மிக முக்கியமான படமா இருக்கும். இந்திய சினிமாவின் தற்போதைய முக்கியமான 10  இயக்குநர்கள் பட்டியலில் தியாகராஜன் குமாரராஜாவும், பாலாஜி தரணீதரனும் இடம்பெறுவாங்க" என்கிறார், பக்ஸ்.