Published:Updated:

சுசீந்திரன்... நீங்க அந்த `பிரேக்' எடுத்துக்கலாமே ப்ளீஸ்!? - `ஜீனியஸ்’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
சுசீந்திரன்... நீங்க அந்த `பிரேக்' எடுத்துக்கலாமே ப்ளீஸ்!? - `ஜீனியஸ்’ விமர்சனம்
சுசீந்திரன்... நீங்க அந்த `பிரேக்' எடுத்துக்கலாமே ப்ளீஸ்!? - `ஜீனியஸ்’ விமர்சனம்

ஒருகாலத்தில் சிக்ஸும் பவுண்டரியுமாக அடித்த பேட்ஸ்மேன் எதிர்பார்ப்புகளுக்கிடையில் ஃபார்ம் அவுட் ஆகி ஏமாற்றுவாரே... சுசீந்திரனின் `ஜீனியஸ்' படம் அப்படி ஒரு எண்ணத்தைத்தான் கொடுக்கிறது.

சிறு வயதிலிருந்தே நன்றாகப் படிக்கும் ரோஷனை பள்ளி ஆண்டுவிழாவில் மேடையேற்றிக் கௌரவிக்கிறார்கள். கூடவே, ரோஷனின் அப்பா ஆடுகளம் நரேனையும்! அந்தக் கைதட்டல்கள் தந்த போதையில் மகனை இன்னும் இன்னும் படிக்கச் சொல்லி விரட்டுகிறார், நரேன். ஆண்டுகள் ஓடுகின்றன. ரோஷன் இப்போது ஒரு ஐ.டி நிறுவனத்தின் முக்கியப் புள்ளி. தனியாளாக பெரிய புராஜெக்ட்களைச் செய்து முடிக்கும் திறமைசாலி. ஆனால், திடீரென வித்தியாசமாக நடந்துகொள்ளத் தொடங்குகிறார். அவரின் இந்த மனநிலை மாற்றம் சுற்றியிருப்பவர்களை ஆபத்தில் தள்ளுகிறது. ரோஷனுக்கு என்ன ஆனது, அதற்கு என்ன முடிவு என்ற உளவியல் சிக்கல்களைச் சொல்லும் படம்தான், `ஜீனியஸ்'.

ஹீரோவாக தயாரிப்பாளர் ரோஷனே நடித்திருக்கிறார். சினிமா மீதான அவரின் காதல் புரிகிறது. ஆனால், அந்தக் காதல் கொஞ்சம் அதிகமான மெனக்கெடலை அவருக்குக் கொடுத்திருக்கலாம். பல இடங்களில் சீரியல் கேரக்டர்கள்போல ஒட்டாத நடிப்பு. சுசீந்திரன் படங்களில் ஹீரோயின்களுக்கென சில துறுதுறு காட்சிகள் இருக்கும். அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங். ஹீரோயின் பிரியா லால் சும்மா வந்துபோகிறார்.

ஆடுகளம் நரேனை இதே போன்ற ரோலில் `நண்பன்' படத்தில் ஏற்கெனவே பார்த்துவிட்டதால், இதில் பெரிதாக ஈர்க்கவில்லை. ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்ற தேர்ந்த நடிகர்களே ஒன்றிரண்டு காட்சிகள்தாம் வந்துபோகிறார்கள். ஈரோடு மகேஷும், தாடி பாலாஜியும் காமெடி என ஏதோ முயற்சி செய்தாலும் ஒன்றிரண்டு இடங்களில் சிரிக்க வைப்பதென்னவோ சிங்கம்புலிதான்.

இசை என யுவன் ஷங்கர் ராஜா பெயர் வருகிறது. படத்தில் அதற்கான அறிகுறி சுத்தமாக இல்லை. கிராமத்துக் காட்சிகளில் கண்களை குளுகுளுவாக்குகிறது குருதேவ்வின் கேமரா. இழுத்தடிக்காமல் படம் சட்டென முடிந்துவிடுகிறது. அதற்காக எடிட்டர் தியாகுவைப் பாராட்டலாம். 

சுசீந்திரன் படங்களின் பெரும் பலமே எழுத்துதான். ஆனால், `ஜீனியஸி'ல் கதை, திரைக்கதை இரண்டுமே அலட்சியமாக எழுதப்பட்டவைபோல இருக்கின்றன. முதல் பாதி ஒரு திசையில் செல்ல, மறுபாதி இன்னொரு திசையில் செல்கிறது. ஒரு காட்சியில்கூட அழுத்தமில்லாத பிளாஸ்டிக் தன்மைதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம். ஏற்கெனவே முதல் ரேங்க் எடுக்கும் பையனை மெனக்கெட்டு டியூஷனில் சேர்த்து ஏன் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்க வைக்கவேண்டும்? மேலும், ஸ்பா காட்சிகள், `ஏய்ய்ய்ய்' என வரும் வில்லன்... ஒய் சுசீந்திரன்... என்னாச்சு உங்களுக்கு?

"என் ஆபீஸ்ல நிறைய பொண்ணுங்க பசங்களோட செக்ஸுவல் ரிலேஷன்ஷிப் வெச்சுக்கிட்டு, அதுக்கப்புறம் வேற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இருக்காங்க" போன்ற வசனங்கள் எல்லாம் முற்போக்கானவை என யாரோ சொல்லியிருப்பார்கள்போல. அதுவும் அதை ஹீரோ சொல்லும் இடமும் தொனியும்... ப்ச். தவிர, மன அழுத்தத்தின் வீரியத்தைக் கொஞ்சமும் சிரத்தையில்லாமல் இவ்வளவு அசால்ட்டாகவா படம் முழுக்க டீல் செய்யவேண்டும்?

இன்றைய சூழல் அளிக்கும் மன அழுத்தம் பற்றிப் பேச நினைத்திருப்பது நல்ல எண்ணம்தான். ஆனால், மன அழுத்தத்துக்கு மருந்துகளாகப் படத்தில் முன் வைக்கப்பட்டிருப்பவை எல்லாம் அபத்தமாக உள்ளன. கிராம வாழ்க்கையில் மன அழுத்தமில்லை எனச் சொல்ல வருகிறாரா, செக்ஸ் மன அழுத்தத்துக்குத் தீர்வு என முடிவு எழுதுகிறாரா, திருமணமே தனிப் பெருந்துணை எனக் கருத்து சொல்கிறாரா என்பது இயக்குநருக்கே வெளிச்சம். இந்தத் தெளிவின்மை நம்மையும் ஏகத்துக்கும் குழப்புகிறது.

படத்தில் வேலை வேலை என ஓடிக்கொண்டே இருக்காமல் ஒரு பிரேக் எடுக்கச் சொல்கிறார்கள். சுசீந்திரனின் சமீபகால படங்களைப் பார்க்கும்போது, நமக்கும் அதுதான் தோன்றுகிறது. ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு பழைய பன்னீர்செல்வமாக வாருங்கள் சுசீந்திரன்!  

அடுத்த கட்டுரைக்கு