Published:Updated:

பா.ஜ.க-வின் தாமரை... `மெர்சல்’ விஜய்... அந்த ரூட்லயே போயிருக்கலாமோ! - `ஜருகண்டி' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
பா.ஜ.க-வின் தாமரை... `மெர்சல்’ விஜய்... அந்த ரூட்லயே போயிருக்கலாமோ! - `ஜருகண்டி' விமர்சனம்
பா.ஜ.க-வின் தாமரை... `மெர்சல்’ விஜய்... அந்த ரூட்லயே போயிருக்கலாமோ! - `ஜருகண்டி' விமர்சனம்

டிராவல்ஸ் வைக்கக் குறுக்கு வழியில் செல்லும் நடுத்தர குடும்ப இளைஞனை, பிரச்னைகள் 'ஜருகண்டி, ஜருகண்டி' எனத் துரத்தியடித்து ஓடவிடுகிறது. படமாக எல்லாவற்றையும் ஓவர்டேக் செய்து ஃபினிஷிங் கோட்டைக் வெற்றிகரமாகக் கடக்கிறதா இந்த 'ஜருகண்டி?'

எப்படியாவது வசதி வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டுமென ஆசைப்படும் நடுத்தர குடும்ப இளைஞனாக சத்யா (ஜெய்). தன் நண்பன் பாரியின் (டேனியல்) உதவியால் வங்கியில் பொய் சொல்லி கடன் பெற்று 'ஜில் ஜில்' டிராவல்ஸ் என்ற ஒன்றை ஆரம்பிக்கிறார். இவர்களின் பித்தலாட்ட வேலையைத் தெரிந்துகொண்ட போலீஸ் அதிகாரி போஸ் வெங்கட், தன்னுடைய பங்காக 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டுகிறார். இந்தச் சமயத்தில் இவர்களுக்கு 'கோடீஸ்வரன்' கஜேந்திரனின் (ரோபோ சங்கர்) நட்பு கிடைக்கிறது. தன்னுடைய காதலி ரெபா மோனிகா ஜானுடன் சேர்த்துவைத்தால் பணம் தருவதாக வாக்குக் கொடுக்கிறார், ரோபோ சங்கர். இதைத் தொடர்ந்து, ரெபாவின் கடத்தலில் ஈடுபடும் இந்த இருவரும், பல இக்கட்டான சூழலில் சிக்குகிறார்கள். சிக்கிய பிறகுதான், அது சிலந்தி வலையென இவர்களுக்குத் தெரிய வருகிறது. அதற்குப் பின் அடுக்கடுக்காக ஏற்படும் பிரச்னைகளிலிருந்து எப்படி வெளியே வருகிறார்கள் என்பதே 'ஜருகண்டி'யின் மீதிக் கதை. 

கடன் பெறும்போது காட்டும் பாவமான நடிப்பு, பிரச்னைகளில் சிக்கும்போது வெளிப்படுத்தும் பரபர நடிப்பு, அடிதடி சண்டைகளில் வெளிப்படுத்தும் மாஸ் நடிப்பு... இப்படித் தனித் தனியே ஜெய்யின் நடிப்பை குறிப்பிட்டுச் சொல்ல ஆசைதான். ஆனால், வழக்கம்போல் அதே பாவமான முக ரியாக்‌ஷனோடு நடித்திருக்கிறார் ஜெய். ஆக்‌ஷன் காட்சிகளில் இவரின் கண்கள் மட்டுமே மிரட்டுகிறது. ஆனால், ஜெய்க்கு இது பக்கா கமர்ஷியல் பேக்கேஜ். ரோபோ சங்கருக்கும் டேனியலுக்கும் இது முக்கியமான படம். முதல் பாதி முழுவதும் இடம்பெறும் டேனிக்கு, காமெடியில் பல இடங்களில் ஸ்கோப் இருந்தும் அதை முழுமையாகச் செய்ய தவறவிட்டார். ஆனால், இரண்டாம் பாதியில் பல சீரியஸான காட்சிகளை ஈஸியாகக் கடத்த டேனியின் எக்ஸ்ப்ரஷன்களே போதும். ரோபோ சங்கர் அதே வழக்கமான பாணியில் வந்து காமெடி செய்கிறார். சில இடங்களில் சிரிப்பு வந்தாலும், பல இடங்களில் அது 'வருவேனா' என அடம்பிடிக்கிறது. 

அறிமுக நடிகையாக, ரெபா மோனிகா ஜான். முதல் படம் என்கிற பதற்றம் இல்லாமல், கதைக்கேற்ற நடிப்பை அளவெடுத்து நடித்திருக்கிறார். இவர்களைத் தவிர கடன் பெற்றுத் தருபவராக வரும் இளவரசு, போலீஸ் அதிகாரியாக நடித்த போஸ் வெங்கட், ட்ரஸ்ட் உரிமையாளராக நடித்த ஜி.எம்.குமார், அடியாளாக நடித்த ஜெயகுமார், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அமித் திவாரி என அனைவரும் அவர்கள் வரும் இடங்களில் திகட்டாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 

பா.ஜ.க-வின் 'தாமரை மலர்ந்தே தீரும்', எல்லாவற்றுக்கும் ஆதார் கார்டை இணைப்பது, 'மெர்சல்' விஜய்யா, 'தெறி' விஜய்யா... என டாப்பிக்கலாக ஆங்காங்கே திணித்த காமெடிகளை, படம் முழுவதும் இடம்பெறச் செய்து ஃபுல் காமெடி படமாக எடுத்திருந்தால், இந்தப் படம் வேறொரு பரிமாணமாக இருந்திருக்கும். போலி ஆவணங்களை வைத்து பணப் பரிமாற்றம் நடப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதை அரங்கேற்ற மிடில் கிளாஸ் என்ற ஆயுதம்தான் இயக்குநருக்குத் தேவைப்பட்டதா? 'மிடில் கிளாஸ் மக்கள் பணத்துக்காக இப்படியெல்லாம் செய்வார்கள்' என இன்னும் எத்தனை படங்களில்தான் சொல்வார்கள் எனத் தெரியவில்லை. கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்புங்க பாஸ்! 

BoBo சஷியின் இசை குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டிய ஒன்று. தெளிவாகப் பயணிக்கும் திரைக்கதைக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி ஏற்றி, அதை மேலும் விறுவிறுப்பாக்குகிறது. குறிப்பாக, ஓப்பனிங் பாடலிலும் பின்னணி இசையிலும் விளையாடியிருக்கிறார், மனிதர். இப்படித் தெளிவாகப் பின்னப்பட்ட திரைக்கதையையும், எக்ஸ்ட்ரா எனர்ஜி கொடுக்கும் இசையையும் எடிட்டர் பிரவீன் சரிவரப் பயன்படுத்தாமல் போனதால், படத்தில் பல இடங்களில் தொய்வை ஏற்படுத்துகிறது. அதே சமயம், கதை செல்லும் பாதையை காமெடியாக அணுகுவதா, சீரியஸாக அணுகுவதா எனக் குழப்பமடைந்திருக்கிறார், இயக்குநர் பிச்சுமணி. தமிழ் சினிமாவில் ஒரு சென்டிமென்ட் இருக்கிறது. பணத்தைச் சுற்றி நகரும் திரைக்கதை படத்தில் இருந்தால், அது நிச்சயம் காலை வாராது. படத்தைப் பற்றி ஒரு விஷயம் நிறையாகக் கூறினால், அதற்கு ஈடாக ஒரு விஷயம் குறையாக அமைந்ததிருப்பதுதான் 'ஜருகண்டி'யின் மைனஸ்!

குட்டி ஒன்லைன், அதில் ஒரு பரமபத டைப் திரைக்கதை... இதைப் பல படங்களில் பார்த்தாகிவிட்டது என்றாலும், இதைக் கொஞ்சம் அலுப்பு தட்டாமல் சொல்லியிருந்தால் 'ஜருகண்டி' நான்ஸ்டாப் என்டர்டெயினராகப் பட்டையைக் கிளப்பியிருக்கும். 

'ஜீனியஸ்' படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு