
மிஸ்டர் மியாவ்
• ‘

பாகுபலி 2’ படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படம், ‘சாஹோ’. இதன் படப்பிடிப்பு துபாயில் பரபரப்பாக நடந்துவருகிறது. 50 நாள்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்த ஷெட்யூலில் சண்டைக்காட்சியை ரூ.90 கோடி செலவில் படமாக்கி வருகிறார்களாம். இக்காட்சியைப் பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் கென்னி பேட்ஸ் இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடி, ஷ்ரதா கபூர்.
• அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இதை, கே.வி.ஆனந்த் தன் ட்வீட்டில் உறுதிப்படுத்தியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கே.வி.ஆனந்த் - சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணிக்கு இது மூன்றாவது படம்.
• ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் தன் போர்ஷனை நடித்து முடித்துவிட்டார் ஜோதிகா. இதைத் தொடர்ந்து ராதாமோகன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள ‘காற்றின் மொழி’ படத்தின் படப்பிடிப்பு ஜூனில் துவங்குகிறது.

• நடிகை ரெஜினா கஸான்ட்ரா, இதுவரை தன் சொந்தக்குரலில் டப்பிங் பேசியதில்லை. கார்த்திக், கெளதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் ‘மிஸ்டர். சந்திரமெளலி’ படத்தில் முதல்முறையாக டப்பிங் பேசியிருக்கிறார்.
• சீமராஜா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. ஹீரோயினாக யாரை நடிக்க வைக்கலாம் என வலைவீசி வருகிறது படக்குழு.

ஹாட் டாபிக்
ஓவியா நடிக்கும் ‘90 எம்.எல்’ படத்துக்கு சிம்பு இசையமைத்து வருகிறார். அந்தப் படத்தின் நான்கு பாடல்களை முடித்துவிட்ட சிம்பு, அந்தப் படத்தில் பாடியும் இருக்கிறார். ‘காதல் கடிக்குதே’ என்ற அந்தப் பாடலை சிம்பு பாடும் வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.
வைரல்
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கலிஃபோர்னியாவுக்கு ட்ரிப் அடித்துள்ளனர். அப்போது, லாஸ் ஏஞ்சல்ஸில் அவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படம் இணையத்தில் செம வைரல்.

ஹைலைட்
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளில் த்ரிஷா, நயன்தாரா ஆகியோர் நடித்து வருகின்றனர். இன்னொரு சீனியர் நடிகையான ஹன்சிகாவும் இந்த ரூட்டுக்கு வந்துவிட்டார். ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக இருந்த ஜமீல் இயக்கும் க்ரைம் த்ரில்லரில் ஹன்சிகாவுக்கு வெயிட்டான ரோல்.