Published:Updated:

" '#MeToo' சர்ச்சைகள் வேண்டாமே!" - லதா ரஜினிகாந்த்

" '#MeToo' சர்ச்சைகள் வேண்டாமே!" - லதா ரஜினிகாந்த்
" '#MeToo' சர்ச்சைகள் வேண்டாமே!" - லதா ரஜினிகாந்த்

குழந்தைகள் பாதுகாப்பு நலன் கருதி `தயா ஃபவுண்டேஷன்' எனும் அமைப்பை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவினார், லதா ரஜினிகாந்த். இந்த அமைப்பு குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதற்காக மீடூ, ரஜினி அரசியல், குடும்ப வாழ்க்கை பற்றி பல்வேறு கேள்விகளுடன் பத்திரிகையாளர்கள் லதா ரஜினிகாந்துக்காக காத்துக்கொண்டிருந்த வேளையில், சரியாக குறித்த நேரத்துக்கு அரங்கம் வந்தடைந்தார். அங்கே அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இவை.

``குழந்தைகளுக்கான `தயா பவுண்டேஷன்' மூலமா நலத்திட்டப் பணிகளை செய்துட்டு வர்றோம். இந்த அமைப்பு தொடங்கி கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆச்சு. குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளைக் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக நான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். எங்களுக்கு வந்த புகாரின்படி, தொலைந்துபோன குழந்தைகளைத் தேடிக்கிட்டு இருக்கோம். எங்களுக்கு அவங்க கிடைக்கும்வரை நாங்க முயற்சியைக் கைவிட மாட்டோம். `Safety and Security for Children' பிரிவுக்குக் கீழே, காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கிறதுக்கு நாடுதோறும் சென்டர்கள் அமைக்கப்படணும். அதற்கான ஏற்பாடுகளைப் பண்ணிக்கிட்டிருக்கோம்.  

ஆறு மாத, மூன்று மாத குழந்தைகளையெல்லாம் சின்னாபின்னமாக்குற காலகட்டத்துல நாம வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். குழந்தைகள் எப்போவுமே நம்பிக்கையை இழந்துடமாட்டாங்க. `அவங்க எப்போ நம்மளை வந்து மீட்பாங்க'னு காத்துக்கிட்டு இருப்பாங்க. அவங்களுக்குச் சண்டை போடத் தெரியாது. வாக்குவாதம் பண்ணத் தெரியாது. அழத் தெரியும். வலியை உள்ளேயே வெச்சுக்கிட்டு கஷ்டப்படத் தெரியும். நம்பிக்கையோட நமக்காக எத்தனை வருடமானாலும் காத்திருக்கும் குழந்தைகளைக் கண்டுபிடிக்கிறது அவசியம். 

சமுதாயத்துல இத்தனை ஆர்வலர்கள் இருந்தும் நம்மளைக் கண்டுபிடிக்க முடியலையேங்கிற ஆதங்கம் அவங்களுக்கு வந்துடக்கூடாது. ஒருவேளை, உங்க மாவட்டத்துல நீங்க இந்த விஷயத்தை முன்னெடுத்து செய்ய ஆர்வமா இருந்தீங்கனா, எங்களைத் தொடர்புகொள்ளுங்க. நீங்க உங்க இடத்துல நடக்குற பிரச்னைகளை எங்களுக்குத் தெரிவிக்கலாம். ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படலாம். இந்த முயற்சியை எல்லோரும் சேர்ந்து நிகழ்த்துறது முக்கியமானது. எங்கே என்ன நடந்தாலும் போலீஸ் மற்றும் என்.ஜி.ஓ-க்களுக்குத் தெரிவிக்கணும். 

தியேட்டர், மால், பஸ் ஸ்டாண்ட்னு பல இடங்கள்ல குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கிடையாது. பெற்றோர்கள் வேலை பார்க்கும் இடங்களுக்குக் குழந்தைகளைக் கூட்டிக்கிட்டுபோனா, அங்கே அவங்க குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்னு சட்டத்துல எழுதப்படணும். தெருவுல விளையாடிக்கிட்டு இருக்கிற பசங்களுக்கும் எந்த மாதிரியான பாதுகாப்பு கொடுக்கப்படணும்னு அரசாங்கம் யோசிக்கணும். இந்தக் காலத்துப் பசங்க வீட்டை விட்டு வெளியே வந்து விளையாடவே யோசிக்கிறாங்க. பெற்றோர்களும் அவங்களை வெளியே அனுப்ப பயப்படுறாங்க. காரணம், குழந்தைகள் தொலைந்து போறது அதிகமா நடக்குறதுதான். அதுக்காக, எங்களால முடித்த வேலைகளைச் செய்யலாம்னு யோசிச்சுதான் `தயா' அமைப்பைத் தொடங்கினோம். குழந்தைகளோட மனநிலை சரியா இருக்கிறது முக்கியம். அதுக்கு அவங்க விளையாடணும், கலை சார்ந்த நிகழ்ச்சிகள்ல அதிகமாப் பங்கெடுத்துக்கணும். 

அதுக்காக வருகிற நவம்பர் 2- ம் தேதி முதல் 4- ம் தேதி வரை குழந்தைகளுக்கான கார்னிவல் ஒன்றை ராமச்சந்திர கான்வென்ஷனல் சென்டரில் நடத்தவிருக்கிறோம். இதுல கிட்டத்தட்ட 1,500 குழந்தைகள் பாட்டுப் பாடப்போறாங்க. உங்க குடும்பத்தோட இந்த கார்னிவல்ல கலந்துக்கோங்க. உங்க நண்பர்களுக்கும் இது குறித்த செய்திகளைப் பகிருங்க. இதுல சிறப்பு விருந்தினராகக் குத்துச்சண்டை வீரர் மேரி கோம் வர்றாங்க" என்று இவரது உரையை முடித்த பின், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார், லதா ரஜினிகாந்த். 

``குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கணும்ங்கிற எண்ணம் எப்படி வந்துச்சு?

``குழந்தைகள்தான் உலகத்துல இருக்கிற உன்னதமான படைப்பு. அவங்களைப் பாதுகாத்து வளர்க்குறது முக்கியம். குழந்தைகள் தன்னைச் சுற்றி என்ன நடக்குதுனு கவனிப்பாங்க. நம்ம செயல்கள் மற்றும் பழக்க வழக்கங்களைப் பார்த்துதான் நிறைய விஷயங்களைக் கத்துக்குவாங்க. குழந்தைகள் மீது ஆதிக்கத்தைச் செலுத்துறோம். அந்த ஆதிக்கம் சரியா இருக்கணும், நாம நல்ல வழிகாட்டிகளா இருக்கணும். ஏன்னா, நாட்டின் எதிர்காலத் தூண்கள் அவங்கதான்."

``பெற்றோர்களுக்கு எந்த மாதிரியான பயிற்சிகள் இந்த அமைப்பு மூலமா கொடுக்கலாம்னு இருக்கீங்க?"

``பெற்றோர்களுக்கான விழிப்பு உணர்வையும், உளவியல் ரீதியான அறிவுரைகளையும் கொடுப்போம். குழந்தை வளர்ப்பு முறை பற்றிப் பயிற்சி கொடுப்போம். எல்லா ஊர்களிலும் பயிற்சிப் பட்டறைகள் நடக்கும். `முடிவெடுத்தல்', `பிரச்னையைச் சரி செய்தல்', `ஆளுமைத் திறன்' ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அந்தப் பயிற்சி இருக்கும்."

``இதுவரை நீங்க கண்டுபிடித்த குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு?" 

``நாங்க இன்னும் அதற்கான முயற்சிகளில்தான் இருக்கோம். எங்களுக்கு நிறைய குழந்தைகள் தொலைந்து போயிருக்காங்க என்கிற தகவல் வந்திருக்கு. அவங்களையெல்லாம் கண்டுபிடித்து எண்ணிக்கையைச் சொல்றோம்."

``பிரச்னையோட வர்ற குழந்தைகளுக்குத் தங்குறதுக்கான இடங்கள் ஏதும் இருக்கா?"

``அதையும் கூடிய சீக்கிரம் ஆரம்பிக்கணும். அவங்களுக்கான மருத்துவ வசதி, கல்வி வசதி, உணவு, தங்குமிடம் ஆகிய வசதிகளைச் செய்து தர்றதுக்கான முயற்சிகளையும் பண்ணிக்கிட்டு இருக்கோம். அதற்குரிய நபர்களையும் தேடிக்கிட்டு இருக்கோம். அதாவது, மருத்துவர்கள், உதவியாளர்கள், கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களோட உதவி எங்களுக்குத் தேவைப்படுது. மேலும், அரசாங்கத்தோட உதவியும் அவசியம். இவங்க எல்லோருடனும் கைக்கோத்து செயல்பட முனைப்பா இருக்கோம்."

``இப்போ இருக்கிற நியூக்ளியர் ஃபேமிலி அமைப்பு குழந்தை வளர்ப்புக்கு எதிரா இருக்குனு நினைக்கிறீங்களா?"

``கண்டிப்பா. 10 வருடத்துக்கு முன்னாடி நாம உற்றார் உறவினரோட ஒற்றுமையா வாழ்ந்தோம். இப்போ அப்படிக் கிடையாது. பாட்டி, தாத்தாவோட சேர்ந்து வாழ்றதில்லை. அக்கம் பக்கத்தினரிடம் பேசுறதுகூட இல்லை. இந்தக் காலத்துல நிறைய குழந்தைகள் சுயநலமா சிந்திக்கிறதுக்கான காரணம், இதுதான். நம்ம கலாசாரம் மாறி, வெஸ்டர்ன் கலாசாரம் வந்திருச்சு. தமிழ் கலாசாரம் முற்றிலுமா மாறுறதுக்கு முன்னாடி குழந்தைகளுக்கு வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்றுக்கொடுக்கணும். இல்லைனா அவங்க பெரியவர்களை மதிக்காமப் போகும் நிலைகூட வரலாம்." 

``மீடூ பத்தி என்ன நினைக்கிறீங்க?"

``கலாசாரத்துல பண்பாடுல உயர்ந்தவர்கள் தமிழர்கள். நாமதான் மத்தவங்களுக்கு நிறைய விஷயங்கள்ல முன்னோடியா இருக்கோம். நம்ம ஊர்ல இப்படியான விஷயங்கள் நடக்கக் கூடாதுனு நினைக்கிறேன். இந்த மாதிரியான விஷயங்களை தயவுசெஞ்சு தவிர்த்திடுங்க." 

``உங்களுக்கு இந்த அமைப்பு மூலமா ஏற்பட்ட வித்தியாசமான அனுபவத்தைப் பகிர்ந்துக்கோங்க..."

``இந்த அமைப்பை எப்படித் திறம்படச் செயல்படுத்துறதுனு தெரிஞ்சுக்கிறதுக்காக துறைசார் நபர்களைத் தொடர்பு கொள்ள ஆரம்பித்தேன். டான்சானியாவுல ஒரு மோசமான பழக்கம் இருக்கு. அங்கே ஒரு சில குழந்தைகளை `சைத்தானின் குழந்தைகள்'னு சொல்லி தெருவுல விட்டுட்டுப் போயிடுவங்களாம். அவங்களை யாரும் எடுத்து வளர்க்கமாட்டாங்க. சாப்பாடு, தண்ணிகூட கொடுக்கமாட்டாங்க. அந்த மாதிரியான குழந்தைகளை எடுத்து ஒருத்தர் வளர்க்கிறார். இப்போ அந்தக் குழந்தைகளோட நிலையைப் பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அந்த மாதிரி, `தயா' அமைப்பும் ஆதரவற்ற குழந்தைகளை அரவணைக்கும்" என்று நம்பிக்கையுடன் முடித்தார், லதா ரஜினிகாந்த்.