தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

நம்பிக்கையால் வென்றிருக்கிறேன்! - இந்துஜா

நம்பிக்கையால் வென்றிருக்கிறேன்! - இந்துஜா
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பிக்கையால் வென்றிருக்கிறேன்! - இந்துஜா

எனக்குள் நான்ஆர்.வைதேகி

`மேயாத மானி'ல் சுடர்விழியாக சூப்பர் நடிப்பால் அசத்தியவர்... 'மெர்க்குரி'யில் மௌன மொழியில் மிரட்டியவர்... முன்னணி ஹீரோக்களுடன் வரிசையாகப் படங்கள், பெற்றோரின் பாராட்டு, ரஜினியால் சூட்டப்பட்ட `அழகி'ப் பட்டம் என இந்துஜா இப்போது ஹேப்பி... ஹேப்பி... ஹேப்பியோ ஹேப்பி!

``ரஜினி சாரைச் சந்தித்தது வாழ்வின் மிகச் சிறந்த தருணம். `சூப்பர் பர்ஃபாமன்ஸ்' என்றார்.  `இவ்ளோ அழகா இருக்காங்க... படத்துல ஏன் இவ்ளோ அழகா காட்டலை' என கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டார். இது ஆயிரம் விருதுகளுக்குச் சமம்...'' - மகிழ்ச்சியும் மிரட்சியும் கலந்த குரலில் தன் வாழ்க்கை பற்றிப் பகிர்கிறார் இந்துஜா.

நம்பிக்கையால் வென்றிருக்கிறேன்! - இந்துஜா

நீங்கள் இந்துஜாவானது எப்படி?

வேலூரைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பத்துப் பெண் நான். அம்மா, அப்பா, தங்கைகள், நான் எனச் சிறிய குடும்பம். அப்பா பிசினஸ் செய்கிறார். அம்மா ஸ்கூல் ஹெச்.எம். தங்கைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். தெருப் பிள்ளைகளோடு விளையாடிய நாள்கள் இன்னும் எனக்கு நினைவில் இருக்கின்றன. சிறு வயதிலிருந்தே பேச்சு, நடனம் என எனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களின் மூலமும் அடுத்தவர்களை மகிழ்விப்பது எனக்குப் பிடிக்கும். அதே நேரம் பயங்கரமான படிப்பாளியும்கூட.

விளையாட்டிலும் அதிக ஆர்வம்கொண்டவள் நான். ரன்னிங், லாங் ஜம்ப் என எல்லாவற்றிலும் முதல் ஆளாக நிற்பேன். ஆனாலும், குட்டி ட்ரவுசர் அணிந்து விளையாட வீட்டில் அனுமதி கிடைக்காது.

நான் முறைப்படி நடனம் கற்றவள் இல்லை. எனக்குத் தெரிந்த நடனத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்தவர்கள், `நீ நடிக்க ட்ரை பண்ணலாமே' என்று கேட்டார்கள். முதன்முதலில் ஒரு நண்பரின் மூலம் ஷார்ட் ஃபிலிம்மில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தது. `என்னது... நடிப்பா?!' என அலறி ஓடி ஒளிந்து கொண்டேன். அடுத்தடுத்த நாள்களிலும் அவர்கள் விடாமல் என்னை நடிக்கக் கேட்டு அணுகினார்கள். அப்போது வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங் படித்துக்கொண்டிருந்தேன். கேம்பஸில் எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். அவர்களும் சேர்ந்து என்னை நடிக்குமாறு கேட்டுக்கொண்டதால், ஒருமுறை மட்டும் முயற்சி செய்து பார்ப்போம் எனச் சம்மதித்தேன்.

எனக்கு நடிக்கவே வரவில்லை என்பதுதான் உண்மை.  ஆனால், அதைப் பார்த்த பிறகும் இன்னொருவரிடமிருந்து நடிக்க அழைப்பு வந்தது. கல்லூரி வாழ்க்கையின் முதல் இரண்டு வருடங்களை நடிப்புடன் ஜாலியாகக் கடந்தேன். நடிக்கத் தெரியாத நிலையிலும் அதன்மீது ஒரு காதல் வந்துவிட்டது. மூன்றாவது வருடப் படிப்பின்போது சினிமாவில் நடிக்கலாம் என நினைக்கிற அளவுக்கு அந்தக் காதல் வளர்ந்திருந்தது.

விளையாட்டின்போது குட்டை உடை அணியவே அனுமதிக்க மறுத்த குடும்ப மாயிற்றே... நடிக்க அனுமதிப்பார்களா? ஆனாலும், நான் அடங்குவதாக இல்லை. வேறு வழியின்றி ஒரு கட்டத்தில் வீட்டில் `ஓகே' சொன்னார்கள். மூன்றாவது வருடத்துக்கான ஃபீஸ் கட்டிய அடுத்த நாள் படிப்பை நிறுத்திவிட்டு வெளியே வந்துவிட்டேன். உடனடியாகச் சென்னைக்கு வந்தேன். `தொடரி' படத்தில் நடிக்க நெருங்கிவந்த வாய்ப்பு கடைசி நிமிடம் கைநழுவிப் போனது. அடுத்தடுத்து நிறைய முயற்சிகள்... அவற்றைவிட அதிகமான நிராகரிப்புகள்... அவமானங்கள்.  அப்போதுதான் `பில்லா பாண்டி' படத்தில் வாய்ப்பு வந்தது. நெஞ்சம் கொள்ளாத நம்பிக்கையுடன் இருந்த நிலையில் அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் தள்ளிப்போனது.

போர்ட்ஃபோலியோ தயாரிக்கக்கூடக் கையில் பணமில்லாத நிலை அது. வாய்ப்பு கேட்க நல்ல போட்டோக்கள் இல்லை.  போனில் எடுத்த படங்களைப் பார்த்துவிட்டு `மேயாத மான்' பட வாய்ப்பு வந்தது. `தங்கச்சி கேரக்டரா... அவ்வளவுதான். உன் லைஃப் டேக் ஆஃப் ஆக வாய்ப்பே இல்லை. தங்கச்சியா நடிச்சு யாரும் பெரியாளா ஆனதா சரித்திரமே இல்லை' என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். என் உள்மனது அந்தப் படம் பண்ணலாம் என்று சொன்னது; நல்லது நடக்கும் என நம்பியது. நடித்தேன். ஆனால், அந்தப் படம் எனக்கு மிகப் பெரிய பெயரையும் அங்கீகாரத்தையும் வாங்கித் தரும் என நினைக்கவில்லை. சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விகடன் விருது அந்த அங்கீகாரத்தின் உச்சம்.

நம்பிக்கையால் வென்றிருக்கிறேன்! - இந்துஜா

அடுத்து வந்த வாய்ப்புகள்?

`மேயாத மான்' படத்தில் என் கேரக் டரைப் பார்த்துவிட்டு வந்த வாய்ப்புதான் `மெர்க்குரி'. இந்தப் படத்திலும் வேறு நடிகை நடிப்பதாக இருந்து, பிறகு எனக்கு அந்த வாய்ப்பு வந்தது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அலுவலகத்திலிருந்து அழைப்பு. ஆடிஷன் முடிந்த இரண்டாவது நாள் ஷூட்டிங். உடன் நடித்தவர்கள் 25 நாள்கள் நடிப்புப் பயிற்சி எடுத்திருந்தார்கள். எனக்கு வெறும் நான்கு மணி நேரம்தான் பயிற்சி. என்னை நம்பித் தரப்பட்ட அந்த கேரக்டரைச் சரியாகச் செய்துவிடுவேனா என்கிற பயத்துடன்தான் நடித்தேன். வசனங்களற்ற படம்... வித்தியாசமான அனுபவம். சமாளித்துவிட்டேன்.

அடுத்து விக்ரம் பிரபு, அதர்வா, உதயநிதி ஸ்டாலின் படங்கள் என இப்போது பிஸியாக இருக்கிறேன். நம்பிக்கையால் நிராகரிப்புகளை வென்றிருக்கிறேன் என்றே தோன்றுகிறது. வாய்ப்பு தேடி அலைந்த நாள்களில் கையில் காசிருக்காது. கடன் வாங்கி வீட்டிலிருந்து எனக்குப் பணம் அனுப்புவார்கள். படிப்பைப் பாதியில் நிறுத்திய குற்ற உணர்வு ஒருபக்கம் என்றால், பணத்துக்காக அவர்களைக் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறோமே என்கிற உணர்வு இன்னொருபக்கம் வாட்டும். சினிமா இண்டஸ்ட் ரியைப் பற்றி ஆளாளுக்கு ஆயிரம் கதைகள் சொல்ல, எனக்கு அதைப் புரிந்துகொள்வதே சிரமமாக இருந்தது. சூப்பர் ஹீரோயின் தோற்றத்தையோ, இண்டஸ்ட்ரியைப் பற்றி நான் கேள்விப்பட்ட தகவல்களையோ நம்பாமல், என் திறமையை மட்டுமே நம்பினேன். நடக்குமா, நடக்காதா என்கிற அந்த சஸ்பென்ஸ் வலி நிறைந்தது.  தூங்காமல் தவித்த நாள்கள் அதிகம். எந்தச் சூழலிலும் நடிப்பு வேண்டாம் என்று மட்டும் நினைக்கவில்லை; உழைப்பை நம்பினேன்.

இதற்கெல்லாம் முன்பு புதுமுக இயக்குநர் சுரேந்தரின் படத்தில் கமிட் ஆகியிருந்தேன். சினிமாவின் அழகான பக்கங்களை அவர்தான் எனக்கு அறிமுகப் படுத்தினார். 24 மணி நேரமும் கண்ணாடி முன் நின்று பயிற்சி செய்தேன். ஷார்ட் ஃபிலிம்மில் நடித்தபோது வராத நடிப்பு, ஒரு கட்டத்தில் எனக்கு கைவந்தது.

வாழ்க்கை மாறியிருக்கிறதா?

பணக்கஷ்டம் ஓரளவு தீர்ந்திருக்கிறது.  மற்றபடி எங்கள் வீடு அதே மாதிரிதான் இருக்கிறது. வீட்டிலிருப்போரும் மாறவில்லை; நானும் மாறவில்லை. வெளியே போனால் ரசிகர்கள் மொய்க்கிற அளவுக்கெல்லாம் இன்னும் போகவில்லை. ஓரிடத்தில் என் அருகில் உட்கார்ந்திருந்த பெண் என்னைப் பார்த்துவிட்டு, `இந்தப் பொண்ணு `மேயாத மான்' படத்துல நடிச்ச இந்துஜா மாதிரியே இருக்காளே' என்றார். நடிகையாக இருக்க வேண்டும் என்றால் சில கட்டுப்பாடுகளும் ஒழுக்கங்களும் அவசியம். உணவு, உடற்பயிற்சி என அது பெரிய பட்டியல். என்னை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன்.

நம்பிக்கையால் வென்றிருக்கிறேன்! - இந்துஜா

படிப்பாளி இந்துஜா என்ன ஆனார்?

படிப்பை விட்டதில் எனக்குத் துளியும் வருத்தமில்லை. ஒருவேளை தொடர்ந்திருந்தாலும் முழுமனதுடன் படித்திருப்பேனா என்பது சந்தேகமே. அது எனக்கானதில்லை என்று அப்போதே புரிந்துவிட்டது. என்னுடன் படித்தவர்களுடன் இன்றும் தொடர்பில் இருக்கிறேன். எல்லோரும் படிப்புக்கேற்ற வேலைகளில் இருக்கிறார்கள். ஆனால், யாருமே பிடித்த மாதிரி வேலை பார்க்கவில்லை. ஸ்ட்ரெஸ், டார்ச்சர் என்கிற புலம்பல்களைத் தினமும் அவர்களிடமிருந்து கேட்கிறேன். விடிய விடிய ஷூட்டிங் வைத்தாலும் நான் அந்த வார்த்தைகளைச் சொல்ல மாட்டேன். நான் எனக்குப் பிடித்த வேலையைச் செய்கிறேன்.

மீ டூ?

சந்திக்கிற எல்லாப் பெண்களுக்கும் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்ட அனுபவம் இருப்பதாகச் சொல்வதைக் கேட்கிறேன். முதல் பொறுப்பு பெற்றோருடையது. உறவினரேதான் என்றாலும் அவர் மடியில் பெண் குழந்தையை உட்கார வைக்க யோசிக்க வேண்டும். ஏதோ தவறு நடக்கும்போது அதைப் பெற்றோரிடம் பயமின்றிச் சொல்லும் சுதந்திரத்துடன் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். பாடத்திட்டத்தில் இது பற்றிய விழிப்பு உணர்வை ஒரு பிரிவாகவே சேர்க்கலாம்.

எல்லாத் துறைகளிலும் அத்துமீறல்கள் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். வாய்ப்புக்காகவோ, வேறு சலுகைகளுக் காகவோ `அட்ஜஸ்ட்மென்ட்' என்கிற விஷயம் எதிராளியால் ஆயுதமாக எடுக்கப்படும்போது, சம்பந்தப்பட்ட பெண் அதைத் தைரியமாக மறுக்கலாம். அப்படிப் பெறுகிற வாய்ப்புகளும் சலுகைகளும் அவசியமில்லை எனத் தவிர்க்கலாம். அதற்கு அதீத தன்னம்பிக்கை தேவை.