Published:Updated:

‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்!

‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்!
பிரீமியம் ஸ்டோரி
‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்!

நினைத்தாலே இனிக்கும்கு.ஆனந்தராஜ்

‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்!

நினைத்தாலே இனிக்கும்கு.ஆனந்தராஜ்

Published:Updated:
‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்!
பிரீமியம் ஸ்டோரி
‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்!

“ஆந்திராவில் பேரும் புகழுமா இருந்தாலும், என்னிக்குமே நான் தமிழ்ப் பொண்ணுதான். அதில் எனக்கு அளவில்லா பெருமையும் சந்தோஷமும்’’ என்று இனிமையான தமிழில் பேசுகிறார் ஜெயசுதா. 1970, 80-களில் தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க நாயகி. நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி எனப் பன்முகங்களுடன் மிளிர்பவர். மணிரத்னம் இயக்கிவரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்புக்கு சென்னை வந்திருந்தவரைச் சந்தித்துப் பேசிய இனிமையான தருணத்திலிருந்து...

திரையுலக அறிமுகம்!

``பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை தான். என் அத்தை விஜயநிர்மலா பிரபல தெலுங்கு நடிகை. என் 12 வயசுல, மாமா தயாரிச்ச ‘பண்டன்டிக புரம்’ படத்தில் என்னை நடிக்க வெச்சாங்க. ஜமுனா, சரோஜாதேவி, தேவிகா, விஜயநிர்மலானு அப்போ பீக்ல இருந்த நாலு சீனியர் நடிகைகளோடு சேர்ந்து அந்தப் படத்துல நடிச்சேன். அடுத்து ‘பெத்த மனம் பித்து’ படத்தின் மூலமாக தமிழ்ல அறிமுகமானேன். அப்போ தமிழ்ல ஏற்கெனவே நடிகை சுஜாதா இருந்ததால, என் இயற்பெயரான சுஜாதாவை, ஜெயசுதானு தயாரிப்பாளர் மாத்தினார். என் 16 வயசுல ‘ஜோதி’ங்கிற தெலுங்குப் படத்தில் கதாநாயகியானேன். ‘அரங்கேற்றம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘தீர்க்கசுமங்கலி’ உட்பட 35-க்கும் அதிகமான தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறேன்.

விளையாட்டு வீராங்கனையாகியிருப்பேன்!

சின்ன வயசுல படிப்பில் பெரிசா நாட்டமில்லை. விளையாட்டில்தான் அதிக ஆர்வம். அப்புறம் நடிக்க வந்துட்டதால, எட்டாவதுக்குப் பிறகு ஸ்கூல் போக முடியலை. நடிச்சுகிட்டே கரஸ்ல ப்ளஸ் டூ முடிச்சுட்டேன்; காலேஜ் படிக்கலை. சென்னை சேப்பாக்கம் மைதானம் பக்கத்துல தான் எங்க வீடு இருந்தது. அப்போ எங்க வீட்டு மாடியிலேயிருந்து கிரிக்கெட் மேட்சஸ் பார்த்து ரசிப்பேன். ஸ்டேடியத்துக்குள் போயும் பார்ப்பேன். 2004-ம் வருஷம் வரை சென்னையில இருந்தோம். அப்புறமாதான் ஹைதராபாத் ஷிஃப்ட் ஆனோம். இப்போ வரை, இரவு எத்தனை மணி ஆனாலும் தவறாம கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகளையும் டி.வி-யில் பார்த்துடுவேன். இதனால், என் மற்ற பிரச்னைகளின் தாக்கத்திலிருந்து என்னை ரிலாக்ஸ் பண்ணிக்க முடியுது. சினிமா ஃபீல்டுக்கு வரலைனா, நிச்சயம் விளையாட்டு வீராங்கனையாகியிருப்பேன்.

‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்!

ஒரே வருஷத்தில் 24 படங்கள்!

திரையுலகுக்கு வந்த சில வருஷங்கள்லயே எனக்கு நடிப்பில் சலிப்பு ஏற்பட்டுடுச்சு. ‘நோ கிளாமர் ரோல்; ஆறு மணிக்கு மேலயும், மே மாதமும் நடிக்க மாட்டேன்’னு கட்டுப்பாடுகள் விதிச்சேன். ஆனாலும், வாய்ப்புகள் குறையலை.

1980-களில், ஒரே வருஷத்துல 24 படத்துல நடிச்சது சாதனையாச்சு. எங்க பார்த்தாலும் என் போஸ்ட்டர்களா இருக்கும். ‘எங்க திரும்பினாலும் உன் முகத்தைப் பார்த்துப் போரடிக்குது’னு சினி ஃபீல்டுல பலரும் கிண்டலா சொல்லுவாங்க. நாகேஸ்வர ராவ் சாருடன் 28 படங்கள் மற்றும் சோபன் பாபு சாருடன் 32 படங்கள் உட்பட அப்போதைய தெலுங்கு சூப்பர் ஸ்டார்களுடன் நிறைய படங்கள்ல ஜோடியா நடிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

300-க்கும் அதிகமான தெலுங்குப் படங்களில் நடிச்சிருக்கேன். நான், ஜெயப்ரதா, ஸ்ரீதேவி மூவரும் 1980-களில் தெலுங்கில் நிறைய ஹிட்ஸ் கொடுத்துட்டிருந்தோம். அப்போ, ஆந்திராவில் என்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’னு கொண்டாடினாங்க. இப்படி மக்கள், என்மீது காட்டிய அன்பினால் சினிமா மேல பெரிய மதிப்பும் மரியாதையும் வந்திடுச்சு. ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்குப் பிறகு 13 ஆண்டுகள் கழித்து ‘பாண்டியன்’ படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தேன்.

இது சஸ்பென்ஸ்!

தமிழ்ப் பொண்ணுங்கிறதால, தமிழ் சினிமாவுல இன்னும் அதிகப் படங்கள்ல நடிச்சிருக்கலாமேனு நினைச்சதுண்டு. கல்யாணத்துக்குப் பிறகு செலக்டிவ்வாகத்தான் நடிச்சேன். ‘பாண்டியன்’ படத்துக்குப் பிறகு, ‘ராஜதுரை’, ‘அந்திமந்தாரை’, ‘அலைபாயுதே’, ‘தவசி’, ‘தோழா’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களின் வரிசையில... இப்போ ‘செக்கச் சிவந்த வானம்’. இதில், நான் யாருக்கு அம்மாவா நடிக்கிறேன் என்பது பெரிய சஸ்பென்ஸ்.

அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மம்முட்டி உள்ளிட்ட இந்தியாவின் டாப் மோஸ்ட் சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடியா நடிச்சுட்டேன். தெலுங்கில் பவர்ஃபுல் ரோல்கள்லதான் அதிகமா நடிச்சேன். 1995-க்குப் பிறகு கேரக்டர் ரோல்கள்ல நடிச்சாலும், அவை என் முந்தைய ஹீரோயின் இமேஜுக்கு இணையாகவும் பெரிய படங்களாகவும்தான் இருக்கும். நான் நடிச்சு தெலுங்கில் மெகா ஹிட்டான நிறைய படங்கள் தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டிருக்கு. அப்படி ‘எம்.குமரன் S/O மகாலட்சுமி’ (அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி) உள்ளிட்ட பல தமிழ்ப் படங்கள்ல நடிக்கும் வாய்ப்பு வந்தும் சில காரணங்களால என்னால நடிக்க முடியலை. சினிமாவுக்கு வந்து 46 வருஷங்கள் ஆகிடுச்சு. கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்க்கிறபோது மகிழ்ச்சியும் எதிர்கொண்ட சவால்களும் நிறைய நினைவுகளைக் கண்முன்னே கொண்டுவருது.

ரஜினிக்கு மகளும் நானே... அக்காவும் நானே!

‘அபூர்வ ராகங்கள்’ல ரஜினி எனக்கு அப்பா. ‘பாண்டியன்’ல போலீஸ் ஆபீஸரா நடிச்ச நான், அவருக்கு அக்கா. இப்படி ரஜினியுடன் பல படங்கள்ல சேர்ந்து நடிச்சிருந்தாலும், ஒரே ஒரு தெலுங்குப் படத்துலதான் ஜோடியா நடிச்சேன். ‘நல்லவனுக்கு நல்லவன்’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் அவர்கூட ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. தெலுங்குப் படங்கள்ல ரொம்ப பிஸியா இருந்ததால, அவர்கூட நடிக்க முடியலை. அதனால, ‘மேடம் என்கூட நடிக்க மாட்டாங்க, அவ்ளோ பிஸி’னு ரஜினி சார் என்னைக் கிண்டல் பண்ணுவார். ஆனா, எங்களுக்குள் நல்ல நட்பு உண்டு.

கமல் - 16 வயதினிலே ஃப்ரெண்ட்!

என் 16 வயசுலே இருந்து நானும் கமலும் ஃப்ரெண்ட்ஸ். பாலசந்தர் சார் என்ற இன்ஸ்டிட்யூட்ல நாங்க சினிமா பாடம் படிச்சோம். நாங்க 20 படங்கள்ல ஜோடியா நடிச்சிருப்போம். எங்க நட்பும் தொடருது.
அரசியலில் வெளிப்படை!

மக்கள் பிரச்னைகளுக்கு வெளிப்படையா குரல் கொடுத்திட்டு இருந்தாலும், எனக்கு அரசியல் ஆர்வம் இருந்ததில்லை. ஆந்திராவில் முக்கியமான செகந்திராபாத் தொகுதியில் தொடர்ந்து வேற கட்சியினரே ஜெயித்து வந்தாங்க. `எப்படியாச்சும் இம்முறை அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறணும்'னு அப்போதைய காங்கிரஸ் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி விருப்பப்பட்டார். அதுக்குப் பிரபலமான ஒருவரைத் தேர்வு செய்யணும்னு என்னை அணுகினார். அப்படி நான் அரசியல் கட்சியில சேர்ந்து 2009-ம் ஆண்டு எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றேன். மக்கள் பணியை நிறைவா செய்தேன். அப்புறம் ஒய்.எஸ்.ஆர் மறைவு மற்றும் ஆந்திரா - தெலங்கானா பிரிவுக்குப் பிறகு சந்திரபாபு நாயுடுவின் `தெலுங்கு தேசம்' கட்சியில் இணைந்தேன். இப்போ வரை அரசியலில் இருக்கேன்.

சினிமாவிலும் அரசியலிலும் யாருக்கும் பயந்ததில்லை. மனசுல தோணுறதை மிக வெளிப்படையா பேசிடுவேன். அதனாலதான் மக்கள் எனக்கு ‘சஹஜ நட்டி’ னு (சகஜமான நடிகை) செல்லப் பெயர் வெச்சிருக்காங்க.

வாழ்க்கை இன்னும் இருக்கிறது!

நிதின் கபூருடன் 32 வருஷத் திருமண வாழ்க்கை. உற்ற தோழனாகயிருந்து, அவர் என் சினிமா பயணத்துக்கு முழு சப்போர்ட் கொடுத்தார். 2001-ல் சில பிரச்னைகளால், அவர் ரொம்ப மன அழுத்தத்துல இருந்தார். பிறகு இயல்பு நிலைக்கு மீண்டாலும், அவ்வப்போது மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுவந்தார். என்னால் இயன்ற அளவுக்கு அவருக்கு நல்ல ஆலோசனைகள் கொடுத்து வழி நடத்தினேன். ஆனாலும், போன வருஷம் எங்களை தவிக்கவிட்டுட்டுப் போயிட்டார். நிலைகுலைந்து போனேன். ‘நீங்க விரும்பின அமைதி உங்களுக்கு இனியாவது கிடைக்கட்டும்’னு அப்போ மிக உருக்கமா ஒரு ட்வீட் போட்டேன். எங்களுக்கு நிஹார், ஸ்ரேயான்னு ரெண்டு பசங்க இருக்காங்க. அதனால, இன்னும் வாழ்க்கை இருக்கு!”

விடைபெறுதலின் துளியைப் புன்னகையிலும் வெளிபடுத்துகிறார் ‘சஹஜ நட்டி’ ஜெயசுதா!

நாங்கள் தோழிகள்!

“ஸ்ரீப்ரியா, ராதிகா, ஜெயப்ரதா மூவரும்தான் என் நெருங்கிய சினிமா ஃப்ரெண்ட்ஸ். சினிமா, குடும்ப வாழ்க்கை உட்பட எல்லாவற்றைப் பத்தியும் மனம்விட்டு ஷேர் பண்ணிப் போம். அடிக்கடி வெளியூர் ட்ரிப் போவோம். தைரியமும் மனசுலபட்டதை வெளிப்படையா சொல்றதும் எங்களுக்குள் இருக்கிற ஒற்றுமை. ஸ்ரீதேவி, ஹைதராபாத் வரும்போதெல்லாம் நாங்கள் சந்திப்பேன். அவங்க மறைவுச் செய்தியைக் கேட்டு, ரெண்டு நாளா என்னால் நியூஸ் பார்க்கக்கூட முடியலை...”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism