Published:Updated:

புதிய பறவை - நினைவோவியம்

புதிய பறவை -  நினைவோவியம்
பிரீமியம் ஸ்டோரி
புதிய பறவை - நினைவோவியம்

சந்தோஷ் - விக்னா, ஓவியம் : ஷண்முகவேல்

புதிய பறவை - நினைவோவியம்

சந்தோஷ் - விக்னா, ஓவியம் : ஷண்முகவேல்

Published:Updated:
புதிய பறவை -  நினைவோவியம்
பிரீமியம் ஸ்டோரி
புதிய பறவை - நினைவோவியம்

``watching sparrow... கேள்விப்பட்டிருக்கியா?’’ என்றான் சந்தோஷ்.

``ஏதாவது புதிய பறவை இனமா?” என்றேன் நான்.

சந்தோஷ் சிரித்தபடி, “watching sparrow detective agency” என்றான்.

``என்கிட்ட இருந்து சத்யஜித் ரேவோட `ஃபெலுடா’ வரிசைப் புத்தகங்களை வாங்கிட்டுப் போனப்பவே நெனச்சேன். புதுசா நீயே ஏதாவது துப்பறியும் நிறுவனம் ஆரம்பிக்கப்போறியா என்ன?” எனக் கிண்டலடித்தேன்.

``ஆமா, நானே துப்பறியும் நிபுணரா மாறிட்டேன்.

55 வருஷங்களுக்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவம். ஆனா, நான் கண்டுபிடிச்சதே ஒரு துப்பறியும் நிபுணரைத்தான்” என்றான்.

``என்ன குழப்புற?” என்றேன்.

சந்தோஷ் மொபைலை எடுத்து ஒரு வலைதளத்தைக் காட்டினான். `வாட்சிங் ஸ்பேரோ' துப்பறியும் நிறுவனம் பற்றிய செய்தி அதில் இருந்தது. அந்த நிறுவனரின் போட்டோவைப் பார்த்ததும் அசந்துபோனேன். 80 வயதில் ஒரு பெண்மணி.அந்த முகம் எனக்குத் துலக்கமாக ஞாபகம் வந்தது. லதா. மலேயா துப்பறியும் பிரிவில் இருந்தவர். மனைவியைக் கொலை செய்த தொழிலதிபர் கோபாலைக் கைதுசெய்யக் காரணமாக இருந்தவர். காதலின் பெயரால் ஒருவரை ஏமாற்றி உண்மையைக் கண்டறிந்தது அன்றைய பேசுபொருளாகவும் இருந்தது. 60-களில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு வழக்கு என்று, என் அப்பா சொல்லக்கேட்டிருக்கிறேன். பிற்காலத்தில் அதைத் தேடித் தேடிப் படிக்கவும் செய்திருந்தேன்.

``இந்த அம்மாவைச் சந்திக்க முடியுமா?’’ என்றேன் ஆர்வமாக நான்.

புதிய பறவை -  நினைவோவியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அப்பாயின்ட்மென்டே வாங்கியாச்சு” என்றான் சந்தோஷ்.

இந்த ஆண்களின் மூளை மட்டும் பிடித்தமானவற்றைச் செய்ய மறப்பதேயில்லை என்று வியந்தபடி ``என்னிக்கு?” என்றேன்.

``இன்னிக்கு சாயங்காலம்” என்றான் அவன்.

தனியார் துப்பறியும் நிறுவனங்களின் அலுவலகம் வழக்கமாக மவுன்ட்ரோடு எல்.ஐ.சி பக்கம் பாழடைந்த ஏதாவது ஒரு பில்டிங்கில் இருக்கும். தலையில் சங்கர்லால் தொப்பி குளிர்க்கண்ணாடி சகிதம் நிபுணர்கள் பார்க்க, கொஞ்சம் பரிதாபமாக இருப்பார்கள். இந்த வழக்கத்துக்கு மாறாக, கிரீன்வேஸ் சாலையின் நிழலில் அமைதியாக இருந்தது வாட்சிங் ஸ்பேரோ அலுவலகம். அழகு சாதனக் கடை போன்று கட்டடமே பளபளவென அன்றைய லதாவை ஞாபகப்படுத்தியது.

உள்ளே நுழைந்து காத்திருந்த போது, வரவேற்பறையில் பழைய பியானோ ஒன்று ஷோகேஸ் பீஸ் போல வைக்கப் பட்டிருந்தது. சந்தோஷ் ஆர்வமாக அதன் கீ ஒன்றை அழுத்தியபோது எழுந்த சத்தத்தில் வரவேற்பறைப் பெண் நிமிர்ந்து `நோ’ என்பதை புன்னகையால் சொன்னாள்.

``வொர்க்கிங் கண்டிஷன்தான்” என்றான் சந்தோஷ், என்னை நோக்கி. நான் முறைத்தேன்.

ஐந்து நிமிடக் காத்திருப்புக்குப் பிறகு ``உள்ளே போகலாம்” என்றாள் வரவேற்பறைப் பெண் புன்னகையுடன்.

பரந்த ஹாலில் சோபாவில் நளினமாக உட்கார்ந்திருந்தார் லதா. `உன்னை ஒன்று கேட்பேன்... உண்மை சொல்ல வேண்டும்...' என்று எனக்குள் வரிகள் எழுந்தன.

``கேளுங்கள்” என்றார் லதா. நான் திடுக்கிட்டுப்போனேன். மனதைப் படிக்கிறாரா என்ன!

``உங்க தொடர் பற்றிக் கேள்விப்பட்டேன். எங்களை மாதிரியானவங்களை ஞாபகம் வெச்சுக்கிட்டு சந்திச்சு எழுதுறீங்களாமே!” என்றார். உண்மையில் சிட்டுக்குருவிக்குப் பேசும் சக்தி வந்து, அது கொஞ்சியபடி பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது குரல். அதே கொஞ்சும் குரல்.

``உங்களை எல்லாம் மறந்தாதானே திரும்ப ஞாபகப்படுத்துறதுக்கு மேடம்” என்றான் சந்தோஷ் வழக்கம்போல.

அதே இமைகள் படபடக்க வெட்கப்பட்டுச் சிரித்தார். இவ்வளவு மென்மையானவரைத் துப்பறியும் நிபுணர் என்றால், அந்த ஜேம்ஸ்பாண்டே நம்ப மாட்டார்.

``மலேயா துப்பறியும் இலாகாவிலிருந்த நீங்கள், எப்போது சென்னை வந்தீர்கள்?” என்றேன்.

``ரிட்டையர்டான பிறகு மலேயாவில் வளர்ந்தாலும், எங்கள் பூர்வீகம் கோயம்புத்தூர்தான். சென்னையில் உறவினர்கள், நண்பர்கள் இருந்தார்கள். இங்கே துப்பறியும் இலாகாவில் பணியாற்றிய ரங்கன் சாரின் ஃபேமிலியும் எனக்குத் துணையாக இருந்தது. ரொம்ப காலம் ரிட்டையர்டு லைஃபைதான் எஞ்சாய் பண்ணிக் கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் போரடித்தது. தனிமை தான் காரணம். `தனியார் துப்பறியும் நிறுவனம் ஆரம்பித்தால் என்ன?’ எனத் தோன்றியது. நமது சேவை சமூகத்துக்குத் தேவை என்றும் தோன்றியது” என்று புன்னகைத்தார்.

``துப்பறியும் சேவையை எதற்கெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் மேடம்?”

``பொதுமக்கள் அதிகமா எங்ககிட்ட வர்றது மணமகன்/மணமகள் பற்றிய தகவல்களைச் சரிபார்க்கத்தான். உள்ளதில் அதுதான் சுலபமான வேலை. சில பணக்காரர்கள் தங்கள் பதின்வயது மகனையோ, மகளையோ கண்காணிக்கச் சொல்வதும் உண்டு. இவற்றைத் தாண்டி ஒரு நபரின் பிறப்பு, இறப்பு இன்ன பிற சான்றிதழ்கள் சரிபார்ப்பது, இன்ஷூரன்ஸ் க்ளைம், சொத்து மதிப்பைக் கணக்கிடுவது, திருமணத்துக்குப் பிறகு தம்பதிகளுக்கு ஏற்படும் சந்தேகம் தொடர்பான உளவு, காவல் துறை மற்றும் வழக்குரைஞர்களுக்கு உதவுவது என நிறைய பண்றோம்.”

``அடேங்கப்பா... '' சந்தோஷ் வாய்விட்டே கூவினான்.

``ஒவ்வொரு மனிதரும் உள்ளுக்குள் எத்தனை மனிதர்களாக இருக்கிறார்கள் என்று நானே பலமுறை ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். வெளியில் ஒருவராகக் காட்டிக்கொண்டாலும், உண்மையில் முற்றிலும் வேறொருவராக இயங்கும் ஆண்களும் பெண்களும் என் வேலையை சுவாரஸ்யப்படுத்தவும், சில நேரங்களில் வெறுக்கவும் செய்திருக்கிறார்கள்.”

``அன்றைக்கு `கோப்பாலை' உளவு பார்க்க இந்தியா வந்தீங்க. அதுக்கு காதலிச்சிருக்கத் தான் வேணுமா? அது அறம்னு நினைக்கிறீங்களா?” என்று  சந்தோஷ் கேட்க, லதா மென்மையாகப் புன்னகைத்தார்.
``இந்த அறம் என்பது, வாய்மை மாதிரிதான். புரைதீர்ந்த நன்மை பயக்கும் எதையும் உண்மைக்குள் கொண்டு வரலாம்னு சொன்ன நம்ம வள்ளுவனை விஞ்சி இங்கே யாரும் அறத்தைப் போதித்துவிடப் போவதில்லை. மலேயாவில் என் வேலை, காவல்துறை அதிகாரி. குற்றம் நடக்காமல் பார்த்துக்கொள்வதும், அப்படி நடந்தால் குற்றவாளியை நீதியின் முன் நிறுத்துவதும்தான் என் வேலையின் அறம், அதற்கான வழிகள் எவ்வாறாகினும். உங்களுக்கு ஒன்று தெரியுமா, சங்ககாலம் தொட்டே இருந்துவரும் வேலைகளில் ஒன்று, ஒற்றறிதல். அன்று மன்னர்களுக்காகச் செய்தார்கள். இன்று அரசாங்கத்துக்காகச் செய்கிறோம். அவ்வளவுதான்.”

``பிறகு, கோபாலைத் திருமணம் செய்து கொண்டீர்களா?” என்ற என் கேள்விக்கு, அவர் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

``தவறா கேட்டிருந்தா மன்னிச்சுடுங்க. அன்றைக்கு அவரை கைதுசெய்யவைத்ததும், `உங்களுக்காகக் காத்திருப்பேன்’னு சொன்னீங்க. உங்க காதல் மற்றவர்களுடையது போல இல்லாமல் வித்தியாசமானதா பார்த்தோம்.”

``உண்மைதான். குற்றவாளினு சந்தேகப்படுற ஒருவரோடு, அப்படி இருந்துடக் கூடாதேங்கிற பதைபதைப்போடுதான் பழகினேன். அப்போதான் நான் மிஸ்டர் கோப்பாலை நிஜமாகவே விரும்பத் தொடங்கியிருப்பது புரிஞ்சது. ஆனா, நாம் நினைப்பதுபோல நடந்துவிட்டால் கடவுளுக்கு வேலையில்லாமல் போய்விடுமே. கோப்பால்தான் அவர் மனைவியின் மரணத்துக்குக் காரணம் என்று ஒப்புக்கொண்டபோது துயர் என் நெஞ்சைப் பிளந்தது.”

``பிறகு என்னாச்சு மேடம்?”

``மலேயா சட்டங்கள் கடுமையானவை. நான் திறமையான வழக்குரைஞர்களை ஏற்பாடு செய்வதாகச் சொல்லியும் மிஸ்டர் கோப்பால் ஏற்கவில்லை. ஆகையால், மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப் பட்டது.”

நானும் சந்தோஷும் என்ன சொல்வ தென்று அறியாமல் விக்கித்துப் போனோம். லதாவே எங்களைப் புரிந்துகொண்டு தொடர்ந்தார்.

``எனக்கு அதன்பிறகு திருமணத்தில் நாட்டமில்லாமல் போய்விட்டது. அன்று, தமிழ்நாட்டில் நிறைய பேர் என்னைத் திட்டித் தீர்த்தார்கள். அந்த இழப்பும் இந்தத் தனிமையும்தான் எனக்கான தண்டனையாகவும் தீர்வாகவும் இருக்கிறது. நடந்தவற்றைப் பற்றி எனக்கு யாதொரு வருத்தமும் இல்லை, கோப்பால் இறந்ததைத் தவிர.”

அவரை இலகுவாக்க எண்ணி, சந்தோஷ் பேச்சை மாற்றினான்.

``பாடும்போதும் பேசும்போதும் உங்க குரல் பிரத்யேகமானது. எங்களுக்காக ரெண்டு வரி பாடுவீங்களா?”

லதா, அதே மெல்லிய குரலில் பாடினார்.

``பறந்து செல்ல நினைத்துவிட்டேன்
எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன்... தழுவ வந்தேன்...
பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும்
வார்த்தை வரவில்லையே
என்னென்னமோ நினைவிருந்தும்
நாணம் விடவில்லையே...''


திரும்பி வருகையில் சந்தோஷிடம் கேட்டேன், ``இந்தக் காதல் வேடிக்கையானதில்லே... காவல் அதிகாரிக்கு குற்றவாளிமேல் பிரியம் வர, அறிவுபூர்வமாக என்ன முகாந்திரம் இருக்க முடியும்?”

``எல்லா உணர்ச்சிகளும் அறிவுதளத்தில் இயங்குவதில்லையே விக்னா. மனமும் அறிவும் ஒன்றாக இயங்க, நாம் அனைவரும் ஞானிகளும் இல்லையே!”

``ஆமா சந்தோஷ். அறிவுதளத்தில் மட்டும் இயங்க நாம ரோபோக்களும் கிடையாது. உணர்ச்சிகளின் உந்துதலில் மட்டும் வாழ்ந்துவிட மிருகங்களும் கிடையாது. நாம் மனிதர்கள், செய்தொழில் எதுவாகினும்.”

புதிய பறவை... வெளியான ஆண்டு: 1964

நடிப்பு: சிவாஜி கணேசன், சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா இயக்கம்:
தாதா மிராசி

புதிய பறவை -  நினைவோவியம்

`புதிய பறவையின் நாயகி லதா இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்?' - பைங்கிளி சரோஜா தேவியையே லதாவாக மாறி கற்பனைச் சிறகுகளை விரிக்கச் சொன்னோம்.

“மலேயாவின் சட்டங்கள் கடுமையானவை. அதனால், இன்னும் அவரை சிறையில்தான் வைத்திருக்கிறார்கள். அந்தக் காலத்து மனிதர்களான நாங்கள் எப்போதும் நீதிக்கும் சட்டத்துக்கும் கட்டுப்பட்டே வாழ்ந்து வருகிறோம். இன்றைய அரசியல்வாதிகளைப்போல பல தவறுகளைச் செய்துவிட்டு, எளிதாகத் தப்பிக்கும் வழிமுறைகள் எல்லாம் எங்களுக்குத் தெரியாது. இப்போது நாங்கள்  அனைவரும் ஒரே குடும்பமாக ஊட்டியில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.”

``போலீஸ் அதிகாரி வேலை?''

“கோப்பாலைப் பிடித்துக் கொடுப்பது மட்டும்தான், ஓர் அதிகாரியாக எனது தலையாய கடமையாக இருந்தது. அந்தக் கடமையை நிறைவேற்றியதோடு, அந்த வேலையை விட்டுவிட்டேன்...''

``அண்மையில் என்ன படம் பார்த்தீர்கள்?''

“நான் பெரும்பாலும் படங்கள் பார்ப்பதில்லை. போலீஸ் கதை என்பதால், அஜித் - த்ரிஷா இணைந்து நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தைப் பார்த்தேன்...''

- அலாவுதீன் ஹுசைன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism